2022 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் அமைச்சகம் கிரேட் நிக்கோபார் மேம்பாட்டு திட்டத்திற்காக 130.75 சதுர கிலோ மீட்டர் காடுகளை அழித்து சர்வதேச டிரான்ஸ்ஷிப்மெண்ட் துறைமுகம், டவுன்ஷிப், மின் உற்பத்தி நிலையம் மற்றும் தீவில் ஒரு விமான நிலையத்தை உருவாக்க அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வனப்பகுதியின் சுமார் 50% அதாவது 6,500 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்படும் என்றும், சுமார் 8.5 லட்சம் மரங்கள் வெட்டப்படும் என்றும் மோடி அரசாங்கம் கூறியுள்ளது.

30 வருட அனுபவமுள்ள மழைக்காடு சூழலியல் வல்லுனர் கணக்கீடுகளின் படி இந்த காடழிப்பு புள்ளி விவரங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறுகிறார். நிக்கோபார் மழைகாடுகளில் உள்ள மரங்களின் அடர்த்தி குறித்த அரசின் மதிப்பீடும், இப்பகுதியில் உள்ள காடுகளின் அடர்த்தி குறித்த புகழ்பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவன்ங்களின் மதிப்பீடுகளுக்கும் இடையே பொருந்தாத தன்மை இருப்பதாக வாதிடுகிறார்.

6500 ஏக்கரில் 8.5 லட்சம் மரங்கள் வெட்டப்பட வேண்டும் என்று அரசு கூறினால் 1 ஹெக்டேருக்கு130 மரங்கள் இருப்பதாக அர்த்தம். இந்த மதிப்பீடு கேள்விக்குரியதாக தெரிகிறது என வாதிடும் சூழலியலாளர் “குஜராத் அல்லது ராஜஸ்தான் போன்ற இடங்களில் காய்ந்த முள் காடுகள் புல் மற்றும் புதர்கள் நிறைந்த மரங்கள் இருக்கும் இடங்களில் இது போன்ற அடர்த்தியை நீங்கள் காண்பீர்கள்” என்கிறார். நிக்கோபார் காடுகள் கிட்டத்தட்ட ஒரு ஆதிகால காடு என்கிறார்.

அரசாங்கத்தின் மதிப்பீட்டிற்கு மாறாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அறிஞர்கள் மேற்கொண்ட அறிவியல் ஆராய்ச்சியில் சதுப்பு நிலங்கள், கடற்பகுதி காடுகள், அடர்ந்த வெப்ப மண்டல மழைக்காடுகள் அடங்கிய காடுகளில் உள்ள மரங்களின் அடர்த்தி ஹெக்டேருக்கு 500 முதல் 900 மரங்கள் வரை இருக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.

இந்த மதிப்பீட்டின் படி பார்க்கையில் 6500 ஹெக்டேர் காடுகளை அழிப்பது என்பது 32 லட்சம் மரங்களிலிருந்து 58 லட்சம் மரங்களை வெட்டுவதாகும். அரசு அனுமதித்துள்ள 13,000 ஹெக்டேர் காடுகளை வெட்டினால் வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை 1 கோடியாக இருக்கலாம்.

2023 ஆம் ஆண்டு ப்ரைமாட்டாலஜிஸ்டுகள் கோவிந்தசாமி மற்றும் மேவாசிங் ஆகியோரின் ஆய்வறிக்கையில் கிரேட் நிக்கோபாரில் ஒரு ஹெக்டேருக்கு 996.9 மரங்கள் அடர்த்தி இருப்பதாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். பல்வேறு ஆய்வுகளும் அரசு கொடுத்த மதிப்பீட்டை விட 4 முதல் 8 மடங்கு அதிகமாக இருக்கும் என்கிறார்கள். இது வெப்ப மண்டல மழைக்காடுகள் அல்லது வெப்பமண்டல ஈரமான பசுமையான காடுகளுக்கு நன்றாகவே பொருந்தும் என்று கூறுகிறார்கள்.

கார்பனை வெளியேற்றும் அமேசான் காடுகள் உலகின் நுரையீரல் திணறுகிறது!

‘தீவுகளின் முழுமையான வளர்ச்சி’ என்ற பெயரில் இந்த மெகா திட்டத்திற்காக 72,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் சுற்றுலா மையமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என அரசாங்கத்தின் செய்திகள் கூறுகின்றன.

இந்த திட்டத்தினால் கிரேட் நிக்கோபார் தீவுகளில் வாழக்கூடிய ஷோம்பென் பழங்குடி சமூகம் அழிந்து விடும் அபாயம் உள்ளதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 39 நிபுணர்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ‘கிரேட் நிக்கோபார் திட்டத்தினால் ஷோம்பென் பழங்குடியினர் ஒரு இனப்படுகொலையை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது” என எச்சரித்துள்ளனர்.

இதனைப் பற்றி சிறிதும் கவலைக் கொள்ளாத குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் கடிதம் கொடுத்த பின்னர் அந்த திட்டத்தினை உறுதிப் படுத்தும் விதமாக நிக்கோபார் தீவுக்கு வருகை புரிந்துள்ளார். இது குறித்து சர்வைவல் இண்டர்நேசனல் என்ற மனித உரிமை அமைப்பின் செய்தி தொடர்பாளர் கேலம் ரஸ்ஸல் “குடியரசு தலைவரின் வருகையை ஷோம்பென் பழங்குடி மக்களுக்கான சாவு மணியாகத்தான் பார்க்க வேண்டும்” என்று எச்சரித்துள்ளனர்.

கிரேட் நிக்கோபார் திட்டம் நிறைவேற்றப்பட்டால் அந்த தீவிற்கு 6,50,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்களுடன் தொடர்பில்லாத நோய் எதிர்ப்பு சக்தி குறைவாயுள்ள ஷோம்பென் பழங்குடி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மனிதர்களிடம் இருந்து பரவும் சாதாரண நோய்கள் கூட மிகப்பெரிய ஆபத்தாக மாறும் என்று சவுத்தாம்டன் பல்கலைகழகத்தின் டாக்டர் லெவன் தலைமையிலான வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள்.

காடு : குறுக்குவழியில் பறிக்கப்படும் காடுகள்!

நிக்கோபார் தீவில் வெட்டப்படும் மரங்களுக்கு ஈடுசெய்யும் விதமாக அரியானா 263.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவை காடு வளர்ப்புக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தது. 2047 வரை நீடிக்கும் இந்த திட்டத்தில் குறிப்பிட்ட எல்லையை விட அதிக அளவில் காடுகள் அழிக்கப்படவும் வாய்ப்புண்டு.

நிக்கோபார் தீவில் உள்ள வெப்ப மண்டல மழை காடும் ஹரியானாவில் உருவாக்க இருக்கும் காடும் ஒன்று கிடையாது. பல நூற்றாண்டுகள் கடந்து சுனாமி போன்ற பேரழிவுகளை தாங்கி நிற்கும் மரங்களும் காடுகளும் அவற்றை சார்ந்து வாழும் உயிரினங்களும் ஏகாதிபத்திய நலனுக்கு பலியிடப்படுகிறது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றுலா மையமாக மாற்ற இருக்கும் அந்தமான் நிக்கோபார் தீவுகளை கண்டு ரசிக்கும் அளவுக்கு உழைக்கும் வர்க்கத்தின் வாழ்நிலை உயரவில்லை. மேட்டுக்குடி மக்களுக்காக உருவாக்கப்படும் சுற்றுலா தளமாக தான் இது அமையும். சரக்குகளைக்  கையாளும் வகையில் உருவாக்கப்படும் துறைமுகங்களும், இராணுவ தளங்களும் ஏகாதிபத்தியம் கொள்ளையிட மக்கள் வரிப்பணத்தில் இயற்கையை அழித்து உருவாக்கப்படும் திட்டம் தான் ‘தி கிரேட் நிக்கோபார்’.

ஏகாதிபத்தியம் தனது சுரண்டலை விரிவுபடுத்த அமேசான், போர்னியோ உள்ளிட்ட காடுகளை அழித்தது. தற்போது நிக்கோபார் வெப்ப மண்டல மழைக்காடு. இயற்கையின் சமநிலையை சீர்குலைக்கும் இந்த திட்டத்தினால் அதீத மழை, அதீத வெப்பம், வறட்சி உள்ளிட்ட காலநிலை மாற்றத்தின் மூலம் உலகம் முழுக்க இருக்கும் மக்கள் பாதிக்கப்படுவது உறுதி. இயற்கையை சூறையாடும் ஏகாதிபத்திய கும்பலையும் அதற்கு சேவை செய்யும் கார்ப்பரேட் அரசையும் வீழ்த்தாமல் இயற்கையையும் மக்களையும் பாதுகாக்க முடியாது.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here