காடு : குறுக்குவழியில் பறிக்கப்படும் காடுகள்!

" FRA 2006 சட்டம் எல்லா காட்டு நிலங்களுக்கும் உரியதே; கிராமசபைகளின் அனுமதி இல்லாமல் காட்டு உற்பத்தி சாராத வேறு எந்தத் தொழிலுக்கும் காட்டுநிலம் கொடுக்கப்படக் கூடாது "

0
191

காடு பராமரிப்புவிதிகளில் ஒன்றிய அரசு கொண்டுவரும் திருத்தங்கள் ஆதிகுடிகளின் பூர்வீக நிலங்களைக் கொள்ளையடித்து அழிப்பதற்கே!

” இந்திய வரலாற்றில் பழங்குடிப்பெண்களை நாங்களே பிரதிநிதித்துவப் படுத்துகிறோம். குடியரசுத்தலைவர் பதவிக்கு திரௌபதி முர்மு அவர்களை முன்மொழிந்துள்ளோம்,” என்று பாஜக ( ஆர்எஸ்எஸ் ) மோடி சுட்டுவிரலை ஆட்டி ஆட்டிப் பேசியுள்ளார். இது வழக்கமான மோடி-ஸ்டைல் அறிவிப்பு.

ஆனால் ஆதிப்பழங்குடிகள் மீது முழுவேகத்தோடு தாக்குதல் வந்துவிட்டது. புதிய சட்டதிருத்தங்கள் வருகின்றன. அட்டவணைப் பழங்குடிகள் மற்றும் பூர்வீக காட்டு மக்கள் சட்டத்தைச் சூறையாடிவிட்டார்கள். காட்டு உரிமைகள் மொத்தம் பறித்து எறியப்படவிருக்கிறது.

சட்டத் திருத்தம் என்ன ?

28.6.2022 அன்று ஒன்றிய அரசு 1980 சட்டவிதிகளைத் திருத்தப்போகும் அறிவிப்பை ( தற்போதுள்ள சுற்றுச்சூழல், காடு, காலநிலை மாற்றம் நிர்வகிக்கும் அமைச்சரவை சார்பாக) வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கைக்குப் பெயர் ” காடு பராமரிப்பு விதிகள் — 2022 ” என்பது.

தற்போதுள்ள சட்டவிதிகளே 2004, 2014, 2017 என்று மூன்று
முறை திருத்தப்பட்டவைதான். நாடாளுமன்ற முரட்டுப்பலத்தை வைத்துக் கொண்டே வரும் கூட்ட அமர்விலேயே திருத்தம் நிறைவேற்றப்பட்டுவிடும். உடனே
பூர்வகுடிகள் இனிவரும் எல்லாக் காலங்களுக்குமாக எல்லா உரிமைகளையும் இழந்துவிடுவார்கள். பிறகு ஆதிகுடிகளின் கிராமசபைகளின் அனுமதி இல்லாமலேயே காடுகள் வெட்டி அழிக்கப்படும்; அதற்கான வரம்பற்ற அதிகாரத்தை ஒன்றியஅரசு எடுத்துக் கொள்ளும்.

தற்போதுள்ள விதிகள் என்ன சொல்கின்றன ?

தற்போது ஏற்கெனவே உள்ள விதிகளின்படி (காட்டு உரிமைகள் சட்டம், 2006–FRA ) காட்டு உற்பத்திக்குப் புறம்பாக வேறு எந்தவித உற்பத்திக்கும் நிலங்கள் திருப்பிவிடப்பட்டால் சட்டவிதிகளை மீறக்கூடாது, கட்டுப்பட்டு நடக்கவேண்டும். ஆதிகுடிகளின் விருப்பத்தை ஒன்றிய அரசு முதலில் பெறவேண்டும். அதற்குப் பிறகுதான் காட்டை தனியார்வசம் ஒப்படைக்கமுடியும்.

வரவிருக்கும் திருத்தங்கள் ஆதிப்பழங்குடிகளின் கிராமசபையைச் செல்லாக்காசாக்கி அழித்துவிடும் ; கார்ப்பரேட்டுக் கொள்ளைக்கு எல்லா வாய்ப்பு வசதிகளும் உருவாகிவிடும். தனியார் முதலாளிகளிடமிருந்து ஒன்றிய அரசு நிவாரணத்தொகை எதுவுமே பெறாமல் இலவசமாகவே கொடுத்துவிடவும் வாய்ப்பு உண்டு. அதானிகளுக்கே வெளிச்சம்!

கிராமசபைகள் அனுமதி வழங்கினால் தான் எல்லாம் நகரும் என்ற முட்டுக்கட்டை தொலைவதைப் பார்த்துக்கொண்டே இருக்கும் பெரிய பெரிய கார்ப்பரேட்டுகள் இப்போது கனகச்சிதமாகக் காய்நகர்த்தி மோடியின் திருக்கரங்களால் சட்டென ‘ ஒளிவேகத்துக்குக் கொஞ்சம் குறைவான வேகத்தில்’ அங்கீகாரமும் பெற்றுவிடுவார்கள்; சட்டவிரோதத்துக்குச் சட்ட அங்கீகாரம், பாரம்பரிய உரிமைக்குச் சட்டப்பூட்டு. சட்ட திருத்தங்களுக்குப் பிறகு சுரங்கத்தொழில்கள், பெரிய பெரிய அணைக்கட்டுக்கள், தொழிற்சாலைகள் எல்லாம் வெள்ளமாக வரப்போகின்றன.

பாஜகவின் தந்திரம் சுருக்கமாக இதுதான். முன்பு கிராமசபையிடம் அனுமதிபெறும் ‘சள்ளையான முதல்சடங்கு’ ஒன்றிய அரசிடம் இருந்தது. அது இப்போது காட்டுப்பகுதி உள்ள மாநில அரசாங்கத்தின் தலையில் தள்ளப்படும். அதுவும் மோடி பல்ஸ் தாண்டி, அதானி வகையறா கவனிப்புகளைத் தாண்டி பங்குகள் சுகுராகப் பிரிக்கப்பட்டு ஏரியாவுக்கு வரும். சரியான பொருளில், மாநிலங்கள் ஒன்றிய ஊழலில் பங்காளியாக்கப்பட்ட பிறகே திட்டம் நகரும். மற்றொன்று, மாநில அரசாங்கம் மக்களோடு தாவாவைத் தீர்த்துவைத்து மறுவாழ்வு என்ற இன்னொரு சிக்கலுக்குள் காலைவிடும்படி , மக்களை ‘ டீல் ‘ செய்வதை “எந்நாளும் தலைவலியாகும்படி” ஒன்றியம் செய்துவிடும். மொத்தமாக, ஒன்றியம் நாட்டின் மொத்த நில கன்ட்ரோல், மேற்பார்வைப் பொறுப்பும் எடுத்துக் கொண்டுவிடும். மாநில உரிமைகளைப் பிடுங்குவது மட்டுமல்ல, தேவைப்படும்போதெல்லாம் செக், கவுன்டர்செக் வைத்து மிரட்டும். பழங்குடிகள் இயற்கையோடு சொந்தப் பொறுப்போடு ஓரிடத்தில் வாழ்ந்து காட்டு உற்பத்தி செய்தது நீக்கப்பட்டு, நிலமும் பறிகொடுத்து, நிவாரணத்துக்காகவும் அலையவிடப்படுவார்கள். தேவைப்படும்போதெல்லாம் பாசிச பாஜக செய்வதுபோல் ஆதிபூர்வகுடிகளையே ” நீ இந்த நாட்டின் குடிமகள்தான் என்பதை நீயே நிரூபி! ” என்று குற்றக்கூண்டிலும் நிறுத்தும்.

ஆக தற்போதுள்ள FRA 2006 சட்டம் அடியோடு மாற்றப்பட்டுவிடும்.இதுவே மோடினாமிக்ஸ் சீர்திருத்தத்தின் அதிரடி, வல்லடி!

FRA 2006 சட்டம் 16 ஆண்டுகளுக்குமுன் எப்படி வந்தது ?

பல பத்தாண்டுகள் தொடர்ந்து பழங்குடிகள் போராடியபிறகே 2006 சட்டம் வந்தது. 1878 தொடங்கி பிறகு எத்தனை அரசுகள் வந்தனவோ அவை அத்தனையும் இந்த மக்களுக்கு அநீதிகள் இழைத்தார்கள் : பொய்வழக்குகள், கசையடிகள், கிராமம் கிராமமாகத் தீக்கிரையாக்கப்படுவது, பெண்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டது, போக்குவரத்துக்கு ஒழுங்கான மண்சாலைகள்+ மின்சாரம் மறுக்கப்பட்டது, நல்ல குடிநீர் மற்றும் பொதுச்சுகாதாரம், பொதுச்சுகாதார நிலையங்கள் நீக்கப்பட்டது, அத்தியாவசிய உணவுப்பொருள்கள் உப்பு கூட தடுக்கப்பட்டது என்று அவர்களை அழித்துவிட எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டன. சுமார் 130 ஆண்டுகள் பூர்வீகப்
பழங்குடிகள் போராடி வந்தார்கள் என்பதற்கான தடயங்கள் அவை. 47க்குப்பிறகு , பழங்குடி பிராஜெக்ட் என்று கோடிகோடியாய் ( அரசு ஆதரவோடு ) நக்கித்தின்ற அரசு சாரா என்ஜிஓ–க்களின் கொட்டம் தனிக்கொடுமை.

” FRA 2006 சட்டம் எல்லா காட்டு நிலங்களுக்கும் உரியதே; கிராமசபைகளின் அனுமதி இல்லாமல் காட்டு உற்பத்தி சாராத வேறு எந்தத் தொழிலுக்கும் காட்டுநிலம் கொடுக்கப்படக் கூடாது “

இவை அல்லாமல் ரிசர்வ்காடுகள் போடப்பட்டன; ‘நக்சலைட்டு’ , ‘தீவிரவாதி’ வேட்டை, சல்வா ஜூடும், ஆபரேசன் கிரீன் ஹன்ட் என்று பல பொய்வலை விரிக்கப்பட்டு அரசியல் விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன 18.4.2013–ல் வந்த உச்சநீதிமன்ற வேதாந்தா வழக்குத் தீர்ப்பில்கூட , பழங்குடிகள் கிராமசபை மூலமாக அனுபவித்துவரும் உரிமைகள் அடிக்கோடு போட்டுக் காட்டப்பட்டன, மறுபடி உறுதிசெய்யப்பட்டன. ” FRA 2006 சட்டம் எல்லா காட்டு நிலங்களுக்கும் உரியதே; கிராமசபைகளின் அனுமதி இல்லாமல் காட்டு உற்பத்தி சாராத வேறு எந்தத் தொழிலுக்கும் காட்டுநிலம் கொடுக்கப்படக் கூடாது ” போன்றவை அத்தீர்ப்பின் அறுதியிடப்பட்ட சொற்களாகும்.

இனி காடுகள் இருக்காது, கார்ப்பரேட் கொள்ளைக் காடாகிவிடும்! 

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் காட்டுநிலங்களை தில்லுமுல்லு செய்துவாரி விழுங்கி விடப் பறக்கின்றன. அதிகாரத்தில் மல்லாந்துகிடக்கும் அதானி, அம்பானி தவிர மற்ற கார்ப்பரேட்டுக்களும் துடிக்கிறார்கள். தூத்துக்குடியை ரத்தபூமியாக்கிய அனில்அகர்வால் ( வேதாந்தா ) ஆசையோடு பப்ளிக்காக ஊத்திய எச்சிலை ஸ்கேன் செய்து அலசினால் நிலவரம் விளங்கும். அவர் என்ன சொன்னார்? :
” இந்திய பூமியின் கீழே எத்தனை லட்சம் பேரல் பெட்ரோல் எண்ணெய் ஊறிக்கிடக்கிறது தெரியுமா? ” எத்தனைச் சுரங்கங்கள் – தாமிரம், இரும்பு, வெள்ளி தங்கச் சுரங்கங்களையும், அவை போக பூமிக்குக் கீழே புதைபடிவத் திரவ எண்ணெய் வளத்தையும் உறிஞ்சி எடுக்க ஓயாது கனவுகாணும் மூளை அகர்வால் மூளை !

கார்ப்பரேட்டுக்களின் திட்டங்கள் 2014–ல் பாஜக-ஆர்எஸ்எஸ்-மோடி ஆட்சி அரியணை ஏறியதும் பாய்ச்சலெடுத்தன.


இதையும் படிக்க: கார்பனை வெளியேற்றும் அமேசான் காடுகள் உலகின் நுரையீரல் திணறுகிறது!


 

” காட்டு உரிமைகள் — FRA 2006 சட்டத்தின்” கீழ் வரும் மக்களுக்கு உண்டான அத்தனை உரிமைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக நீராளமாக்கி, அதன் செறிவை பலத்தைக் குறையச் செய்து, இப்போது நீண்ட 8  ஆண்டுகளுக்குப் பின் இறுதியாகப் பல்லைப் பிடுங்கத் துணிந்துவிட்டார்கள். மொத்தக் காட்டையுமே கார்ப்பரேட்டுக்களுக்குத் தாரைவார்க்கும் கடைசிச் செயல் இது. முன்அறிவிக்கை வந்துள்ளது, விரைவில் சட்டமாக்கப்பட்ட பிறகு எத்தனை லட்சம் பழங்குடிகள் பூர்வீக நிலங்களிலிருந்து , அதாவது அவர்களின் உயிரிலிருந்து பிய்த்து எறியப்படுவார்கள் என்பதை ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள்!

அண்டை நாடான சீனாவில் மூ அஸ் என்ற பசுமைநிலம் பாழ்நிலமானது; அதை விவசாயிகள் ஒன்றிணைந்து உழைத்துப் போராடி 90% பசுமைநிலமாக மாற்றியிருக்கிறார்கள்; இன்று நாடு ஏகாதிபத்தியமாக நொறுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் மாவோ கால சோசலிச மக்கள்சீனத்தின் உயிரோட்டம் இன்னமும் அற்றுப்போகாத மண்ணோடு ஒட்டி வாழும் பல்லாயிரம் விவசாயிகள் பசுமை நிலத்தை மீட்டுவிட்டார்கள்.

ஆனால் இங்கே என்ன நடக்கிறது? அந்நிய, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகள் ஆளும் பாசிச மோடியின் பேராதரவோடு பூர்வீக, பசுமை வனங்களை அழித்துப் பாலைவனங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.இந்திய விவசாயிகள் உழைப்பாளர்கள் சங்கம் ( AIKMS) கடந்த ஜூலை 12 அன்று வெளியிட்ட தமது அறிக்கையில் இப்பேரபாயத்தை விவரித்துள்ளது. உழைக்கும் மக்கள் பற்றுள்ள அனைத்து தேசிய இன மக்களும் ஒன்றிணைந்து ஓரணி நின்று மோடி கும்பலின் பாசிசத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று அழைப்பும் கொடுத்துள்ளது.
இன்று மக்கள் முன்னே உள்ள முதன்மையான அரசியல் கடமை இது! ஒன்றிணைந்து ஆதி பழங்குடி காட்டு மக்களின் உரிமைக்குக் குரல் கொடுப்போம், தோள் கொடுப்போம்!!

ஆதாரம் : AIKMS அறிக்கை ( 12.7.2022 ) மற்றும்
“தி ஒயர் தள “ஆய்வுகள்.

ஆக்கம் : இராசவேல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here