தொழிலாளர் போராட்டம்

அன்பார்ந்த தோழர்களே,

மத்திய அரசால், 2020-ல் கொண்டு வரப்பட்டு 2025 நவம்பர் 21, முதல் முழுமையாக அமலுக்கு வந்த நான்கு புதிய தொழிலாளர் கோடுகள் (Code on Wages, Industrial Relations Code, Code on Social Security, Occupational Safety, Health and Working Conditions Code) தொழிற்சங்க உரிமைகளை அடிப்படையிலேயே பாதிப்படைய செய்துள்ளது. “எளிதான வணிகம்” (Ease of Doing Business) என்ற பெயரில் தொழிலாளர் உரிமைகளை அனைத்தும் Corporate-களுக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்களின் கூட்டு பேர உரிமை, நிர்வாகத்தின்  முடிவுகளில் தொழிலாளர் பங்கேற்பு உரிமை, வேலை நிறுத்த உரிமை, சங்கம் துவங்கும் உரிமை, ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமைகள், தொழிற்சாலை, தொழிலாளர் என்ற வரையறைகளில் மாற்றம், அலைமூடல் செய்வதில் அரசின் தலையீடு இல்லை, என அனைத்தும் மாற்றப் பட்டுவிட்டது. ஒரு தொழிற் நிறுவனங்களை  கட்டுப்படுத்தும், தொழிற்சாலை ஆய்வாளர், தொழிலாளர் நல ஆணையரகம்  போன்ற அமைப்புகளின் அதிகாரங்கள் நீர்த்து போக செய்யப்பட்டுள்ளன.

புதிய தொழிலாளர் சட்டத்தின் முக்கிய பாதிப்புகள்   

29 பழைய சட்டங்களை ஒருங்கிணைத்து 4 தொகுப்புகளாக்கி, தொழிலாளர் உரிமைகளை “நெகிழ்வுத்தன்மை” என்ற பெயரில் வெட்டி குறைக்கப்பட்டுள்ளன. தொழிற்சங்க அங்கீகாரம், வேலை நிறுத்த உரிமை, ஊதிய உயர்வு, சமூகப்பாதுகாப்பு, நிரந்தர வேலைவாய்ப்பு  ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தொழிலாளர் பாதுகாப்பு விதிகள் தளர்த்தப்பட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்களை அதிகம் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையை உடைக்கும், இதனால் தொழிற்சங்கம் பாதிக்கும் என்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்களின் கூட்டு பேர உரிமை (Negotiating Power) பதிப்பு   

Industrial Relations Code “Sole Negotiating Union” என்ற கருத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு நிறுவனத்தில் பல தொழிற்சங்கங்கள் இருந்தால், 51% தொழிலாளர்களின் ஆதரவு பெற்ற ஒரே தொழிற்சங்கம் மட்டுமே பேரம் பேச முடியும். இது சிறிய தொழிற்சங்கங்களை ஒதுக்கி வைக்கும். மேலும், வேலை நிறுத்தத்துக்கு 14 நாட்கள் முன்னறிவிப்பு, சமரச காலத்தில் 60 நாட்கள் வரை தடை, போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் தொழிற்சங்கங்களின் போராட்ட வலிமை பெரிதும் குறைந்துவிட்டது. இந்த நீண்ட நடைமுறையால் நிர்வாகதிற்கு அதிக அதிகாரம் கிடைத்துள்ளது. உதாரணத்திற்கு நமது February 12 வேலை நிறுத்தமே சாட்சி.

நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கேற்பு (Worker Participation in Management)

பழைய சட்டங்களில் தொழிலாளர் பிரதிநிதிகள் மேலாண்மை கூட்டங்களில் செயல்பாட்டு ரீதியில் பங்கேற்று முடிவுகளை பாதிக்க முடியும். புதிய கோடுகள் இதை வெறும் “ஆலோசனை” அல்லது “கிரீவன்ஸ் கமிட்டி” அளவுக்கு நீர்த்துப் போகச் செய்துள்ளன. ஊதியம், பணி நிலைமைகள், பாதுகாப்பு, தொழில் மாற்றம் போன்ற முக்கிய முடிவுகளில் தொழிலாளர்களின் குரல் புறக்கணிக்கப்படுகிறது. இது தொழிலாளர் ஜனநாயகத்தை (Industrial Democracy) பலவீனப்படுத்துகிறது.

மோட்டார் வாகன உற்பத்தியை அத்தியாவசிய சேவை நிறுவனங்களின் பட்டியலில் இணைத்து. தொழிற்ச்சங்கங்களின் போராட்டங்களை சட்டவிரோதமாக ஆக்க உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. ஆனால் பாஜக அரசு பரந்தமனதோடு  அதை அனைத்து நிறுவனங்களுக்கும் பொருத்தி சட்டத்தையே மாற்றிவிட்டது. இனி திடீர் வேலைநிறுத்தங்கள் தண்டனைக்குரிய குற்றமாகும். தொழிற்சங்கங்களுக்கு சிறை, முதலாளிக்கு அபராதம் இதுதான் புதிய சட்டம்.

ஒப்பந்தத் தொழிலாளர்களின் கடுமையான பாதிப்பு – நொய்டா போராட்டம்

புதிய சட்டங்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களை (Contract Labour) “கோர் ஆக்டிவிட்டி” என்ற வரம்புக்குள் மட்டும் கட்டுப்படுத்தி, நிரந்தர வேலைவாய்ப்பை குறைக்கின்றன. ஊதிய உயர்வு, PF, ESI, Bonus, உச்சவரம்பு உயர்வு ஆகியவை இல்லாமல், எந்த நேரத்திலும் வேலையை இழக்கும் அச்சம் அதிகரித்துள்ளது.

படிக்க:  தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை அமலாக்க விடாதே! திரும்பப் பெற வீதியில் இறங்கி போராடுவோம்!

சமீபத்தில் (ஏப்ரல் 2026) நொய்டா தொழில்துறை பகுதியில் ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, சரியான ஊதியம், பாதுகாப்பு ஆகியவற்றைக் கோரி ஆர்ப்பாட்டம் (Noida Agitation) செய்தனர். சாலைகள் மறிப்பு, போலீஸ் உடன் மோதல், வாகனங்கள் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றன. போலீஸ் கண்ணீர் புகை பயன்படுத்தி அடக்கியது. இந்த ஆர்ப்பாட்டம் புதிய சட்டங்களின் உண்மையான விளைவுகளை தெளிவாகக் காட்டுகிறது. இந்த போராட்டதின் விளைவாக Unskilled தொழிலாளிக்கு Basic 12885 +DA 805=13690 என உத்தர பிரதேச அரசு  இறுதி செய்துள்ளது. ஆனால் இங்கு தமிழ்நாட்டில் ஏற்கனவே Unskilled Basic 7650 + DA 7750  = 15400 என உள்ளது. எங்கே April 01 முதல் புதிய உத்தரவாத சட்டத்தின் மத்திய குறைந்தபட்ச ஊதியம்?

BHEL Adhoc ஊதியப்பிரச்சனை, BAP – யின் ஏமாற்று வேலை. 

மத்திய ஊதியத்தை சமன் செய்ய 2009 முதல் வழங்கப்பட்ட (Adhoc Payment), கோவிட் நெருக்கடி என்ற பெயரில் திருச்சி மற்றும் ராணிப்பேட்டை யூனிட்டுகளில் மட்டும் நிறுத்தப்பட்டது. ஆனால் பிற யூனிட்டுகள் தொடர்ந்து பெற்று வருகின்றன.  Subsume என்கிற பெயரில் உயர்த்தப்பட்ட DA – வை வழங்காமல் ADHOC தொகையை அதனுடன் கழித்து சமன் செய்து சட்டத்தை மதிக்காமல் கடந்த 6 வருடங்களாக ஏமாற்றி ஒப்பந்த தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து வருகிறது BAP நிர்வாகம். 2018 முதல் எந்த ஊதிய உயர்வும் (Wage Revision) இல்லை. “புதிய சட்டம் புதிய ஊதியத்தைத் தரும்” என்று உறுதியளித்தது. ஆனால் இன்று வரை எதுவும் நடக்கவில்லை. இது தொழிலாளர்களை ஏமாற்றும் திட்டமிட்ட செயல்.

பாஜக அரசு ஏன் இச்கட்டங்களை கொண்டு வந்தது?

மதிய தொழிற்சங்கங்கள் ஏன் தடுக்க முடியவில்லை

எதிர்க்கட்சிகள் என் இதை முழுமையாக எதிர்க்க வில்லை?

Delimitation அளவுக்கு இதற்காக யாருமே போராடவில்லையே ஏன்?

மத்திய அரசு இந்தக்கோடுகளை கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக, தொழிலாளர் உரிமைகளைத் தியாகம் செய்யும் வகையில் கொண்டு வந்தது. தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் சக்தி ஒற்றுமை குறைவு, கொரோனா காலத்தின் பாதிப்பு, அரசின் வலுவான அரசியல் நிலை போன்ற காரணங்களால் 2020– ல் முன்மொழியப்பட்ட இதை முழுமையாக தடுக்க முடியவில்லை என்று சொன்னாலும் அரசியல் சார்பு,  தொழிற்சங்கங்களுடைய பலவீனங்கள் தான்  முக்கிய காரணம். அல்லது இவற்றை பகுதியாக ஏற்று கொண்டனர் என்பதே உண்மையாக இருக்கிறது. மாநில அரசுகளோ மத்திய அரசோ அனைவருக்கும் Corporate நலன் என்பதே பிரதானம் என்பதைத்தான் இது  காட்டுகிறது. இதனால்தான் Delimitation  மசோதாவைப் போல் வலுவான எதிர்ப்பு இதற்கு இல்லை.

படிக்க: வேலை நிறுத்தங்களை நீர்த்துப் போகச் செய்யும் தொழிலாளர் நலத்துறை! BHEL – ஓர் சான்று! 

பெரும்பாலான மாநில அரசுகள் (குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்கள்) இந்தக் கோடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. ஆனால் தென்னிந்திய மாநிலங்கள் (தமிழ்நாடு, கேரளா உள்ளிட்டவை) வலுவாக எதிர்க்கவில்லை. Delimitation தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் என்பதால் எதிர்ப்பு வலுத்தது. ஆனால் தொழிலாளர் உரிமைகள் பாதித்தாலும் முதலாளிகளின் நலன் உள்ளதால் அரசியல் எதிர்ப்பு குறைவாகவே இருந்தது.

Adani Order, BHEL – ன் எதிர்காலம்

2014 – க்கு பிறகு அதானி குழுமம் அரசு கொள்கைகள், சுரங்கங்கள், துறைமுகங்கள், மின் நிலையங்கள் ஆகியவற்றை தொடர்ச்சியாக கையகப்படுத்தி மின்சக்தி உற்பத்தியில் அசுர சக்தியாக வளர்ந்துள்ளது. அதனிக்காகவே FGD (Flue Gas Desulphurization) திட்டம் நிறுத்தப்பட்டது, இது NTPC-ன் 49 ஆயிரம் கோடி மூலதன முதலீட்டை (Capital Investment) திட்டமிட்டே பாதிப்படைய செய்யபட்டுள்ளது. இதனால் NTPC – யின் வளர்ச்சி திட்டமிட்டே தடுக்கப்பட்டுள்ளது. அடானி மேலும் வளர்ந்தால் பொது துறை மின் நிறுவனமான NTPC மற்றும் மாநில அரசின் மின் உற்பத்தி பாதிக்கப்படும். தனியார் ஏகபோக முற்றுரிமை ஏற்படும்.

எதிர்கால அபாயங்கள் – மின்சார விலை, மானியம் மற்றும் தேச சேவை 

Adani எதிர்காலத்தில் மின்சக்தி விநியோகத்துக்கும் (Power Distribution) வரக்கூடும். சுரங்கங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி, விநியோகம் என முழு சங்கிலியையும் கட்டுப்படுத்தினால், உள்நாட்டு மின்சார விலை (Domestic Power Price) உயரும். அரசு மானியம் (Subsidy) தொடருமா என்பது சந்தேகம். “ஒவ்வொரு வீட்டையும் ஒளிரச் செய்வோம்” என்றாலும், தேச சேவை என்ற கருத்து கார்ப்பரேட் லாபமாக மாறகூடும் என்பதே நிதர்சனமான உண்மை. SHANTI Bill அறிவிக்கப்பட்ட சில மாதங்களுக்குள் Adani Atomic Energy Limited அறிவிக்கப்பட்டது. தனியார் நிறுவனங்களுக்கு அணு சக்தி துறையை திறந்து விட்டது. இது திட்டமிட்ட Adani மத்திய அரசு உறவின் வெளிப்பாடு. BHEL Adani Order Book மூலம் தற்போது ஒளிர்கிறது என்றாலும், NTPC பாதித்தால் அது நம்மையும் பாதிக்கும்.

ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து முதலாளிகளுக்கு பெரும் சுமையாக இருக்கும் தொழிலாளர் நலச்சட்டங்களை எப்படியாவது ஒழித்துவிடவேண்டும் என்று முயற்சி செய்து கொரொனா கலகட்டதில் நாடாளுமன்றதில் தாக்கல் செய்தது. தொடர்ந்து தொழிற்சங்கங்களின் போராட்டம், நவம்பர் 2025  வரை இச்சட்டங்களை நடைமுறை படுத்துவதை தடுத்து வந்தது. 2025 பீகார் தேர்தலுக்கு பின் தனக்கு ஆதரவு பெருகியதால் உடனடியாக அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. முதலாளின்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றி அவர்களை பெரு மகிழ்ச்சியடைய செய்துள்ளது பாஜக அரசு.

புதிய சட்ட தொகுப்புகளைதிரும்ப பெரும்வரை தொடர் போராட்டங்களை (விவசாயிகள் போராட்டங்களை போன்று) தேசிய அளவில் ஒருங்கிணைக்க வேண்டும்.   பொதுதுறைகளை பாதுகாக்க அனைத்து தொழிற்சங்கங்களின் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். அதன்மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களுடன் இணைந்து வலுவான போராட்டங்களை திட்டமிட வேண்டும்.  ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதிய வெளியீடு ஆகியவற்றுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.  நமது உரிமைகளைப் பாதுகாக்க ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றி பெறுவோம்!

நவீன் 
(பெல் சங்கத்தின் பொதுமகாசபையில் விளக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here