உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகி அவதியுறும் ஆஷாக்கள்!
இந்தியர்கள் கடந்த மாதம் இரண்டு பெருமைமிக்க விருதுகளை வென்றுள்ளனர். ஒன்று பேட்மிண்டனில் தாமஸ் கோப்பை சாம்பியன்ஷிப், மற்றொன்று இந்தியாவின் கிராமங்களில் சேவையாற்றும் சமூக நல ஆர்வலர்களான ஆஷாக்களுக்கு உலக சுகாதார அமைப்பின் (WHO) உலகளாவிய சுகாதார தலைவர்கள் விருது.
இந்த இரு விருதுகளுக்குமான நாட்டின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டு இருந்தது. பேட்மிண்டன் அணிக்கு பாராட்டுகளும், கௌரவங்களும், பரிசுகளும் வாரி வழங்கப்பட்டன. அவர்கள் கொண்டாடப்பட்டனர். அவர்களை பிரதமர் வரவேற்றார். விளையாட்டு அமைச்சகமும் இந்திய பேட்மிண்டன் சங்கமும் தலா ஒரு கோடி வழங்கின. ஆனால் சுகாதார ஊழியர்களுக்கு இப்படியான சிறப்பான வரவேற்போ, அங்கீகாரமோ எதுவுமே கிடைக்கவில்லை.
ஆஷாக்களுக்கு கிடைத்த கௌரவம் நாட்டில் ஏன் பதிவு செய்யப் படவில்லை? ஊடகங்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை? பிரதமரும், சுகாதார அமைச்சரும் கடமைக்கு வாழ்த்துக்கள் மட்டும் தெரிவித்தனர். மற்ற கட்சியினரோ, தலைவர்களோ இவர்களை பொருட்படுத்தவே இல்லை. இவர்களுக்கு எந்தவித ஊக்கத் தொகையும் வழங்கப்படவில்லை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஐபிஎல் போட்டியின் போது மைதான ஊழியர்களுக்குக் கூட 1.25 கோடி ரூபாயை பகிர்ந்தளித்த நிலையில், இவர்களுக்கு அப்படி எதுவுமே, யாருமே வழங்கவில்லை. மருந்து உற்பத்தி நிறுவனங்களும் , கார்ப்பரேட் மருத்துவமனைகளும் கூட இந்த வீரப் பெண்களை கௌரவிக்க ஒரு ரூபாய் கூட செலவழிக்கவில்லை. இந்த விளம்பரப் பிரியர்கள் விருதை கொண்டாடும் வகையில் ஒரு விளம்பரம் கூட போடவில்லை என்பதுதான் ஆச்சரியம். அவர்கள் உழைக்கும் வர்க்கம் என்ற காரணத்தினால்தான் புறக்கணிக்கப் பட்டிருப்பார்கள் என புரிந்து கொள்வோம்.
யார் இந்த ஆஷாக்கள்?
அங்கீகாரம் பெற்ற சமுதாய சுகாதார ஆர்வலர்கள் ( Accredited Social Health Activist – ASHA) எனும் பெயரில் கிராமங்கள்தோறும் பணியாற்றும் பெண்கள்தான் இவர்கள். இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 13 லட்சம் பேர் ஆஷாக்களாக உள்ளனர். கிராமப்புற ஏழை மக்களுக்கும் பொது சுகாதார திட்டத்துக்கும் இணைப்பு பாலம் போல செயல்படுபவர்கள் ஆஷாக்கள்தான்! இவர்கள் 6 தலைப்புகளில் 22 பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்களது கையேடு குறிப்பிடுகிறது. அதில் மகப்பேறு கால பராமரிப்பு, பிறந்த குழந்தை பராமரிப்பு, ஊட்டச்சத்து வழங்குவது, தொற்றுக் கட்டுப்பாடு, வீடுகளுக்கு நேரில் சென்று பரிசோதிப்பது, கிளினிக்கில் வருகைப் பதிவேடு பராமரிப்பது, கூட்டங்கள் நடத்துவது, மாதாந்திர சுகாதார மற்றும் ஊட்டச்சத்து தினம் கடைப்பிடிப்பது மற்றும் இவற்றையெல்லாம் பதிவு செய்வது போன்றவை அடங்கும்.
ஆஷாக்களின் சேவை 24 மணி (24X7) நேரமாகும். நள்ளிரவில் கூட மருத்துவமனைக்கு பெண்களை பிரசவத்திற்காக அழைத்துச் செல்வதும் இவர்கள்தான். இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கோவிட் தொற்று காலத்தில் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களும் இவர்கள்தான். இத்தகைய கடினமான பணிகளை செய்யும் இவர்களுக்கு மத்திய அரசு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்குகிறது. இதுதவிர காப்பீடும் சில குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு சிறு ஊக்கத் தொகையும் உண்டு. மாநில அரசுகளும் தம் பங்குக்கு சிறு தொகையை வழங்குகின்றன. அரிதாக, மகாராஷ்டிராவில் அவர்களுக்கு மாத ஊதியமாக 10 ஆயிரத்துக்கும் சற்று அதிகமாக கிடைக்கிறது. மற்ற மாநிலங்களில் எல்லாம் மிகவும் குறைவுதான். அரசாங்கத்தில் கடைமட்ட ஊழியர்கள் பெறும் சம்பளத்தை ஒப்பிடும்போது கூட இது மிகவும் கேலிக்குரிய தொகைதான்.
ஆஷாக்கள், வழக்கமான ஊழியர்களாக இல்லாமல் தன்னார்வலர்களாகவே (Volunteers) பணிபுரியும் நிலையில் உள்ளனர். எனவே தான் அரசு அவர்களுக்கு கருணை காட்டுவதைப் போல சிறு தொகையை வழங்குகிறது. இது வெறுக்கத்தக்க மாபெரும் உழைப்புச் சுரண்டலாகும். இது குறித்து ஆட்சியாளர்கள் எந்தவித கவலையுமின்றி இருப்பது நேர்மையற்ற மற்றும் இழிவான செயலாகும். இந்த தேசத்தின் குழந்தைகளுக்கு நோய்த் தடுப்பு மருந்து கொடுத்தல், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஆதரவளித்தல், தொற்று நோய்களுக்கு எதிராக அவர்களை பாதுகாத்தல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பணிகளுக்கு, நிலையான சம்பளத்தில் நாடு தழுவிய அளவில் தகுதியான பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் இதை மிகக் குறைந்த தொகுப்பூதியத்தில் அரசு நிறைவேற்றிக் கொண்டிருப்பது மிகக் கேவலமானது.
இது குறித்து ஹரியானாவை சேர்ந்த மீனா தேவி (ஆஷா ஒர்க்கர்ஸ் யூனியன்) கடின உழைப்பைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆனால் மாத சம்பளமாக 20,000 வழங்க வேண்டும் என்றார். அதன் பொதுச்செயலாளர் சுரேகா “கொரோனா சமயத்தில் அதிக நேரம் பணி செய்ததால் மத்திய அரசு ஆயிரம் ரூபாயும், மாநில அரசு 500 ரூபாயும் போனஸாக தருவதாக அறிவித்தனர். மத்திய அரசின் தொகை உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை. மாநில அரசு தொகையை கொடுக்காமலேயே ஏமாற்றியது. இதற்காக போராட்டம் நடத்தியபோது எங்கள் மீது எஸ்மா சட்டத்தை ஏவி மிரட்டினர். சிலரை பணிநீக்கம் செய்தனர். போனஸ் கேட்டால், நாங்கள் அரசு ஊழியர் இல்லை என்கின்றனர். ஆனால் எங்களை ஒடுக்க மட்டும் எஸ்மா சட்டம் பாய்கிறது” என்றார் வேதனையுடன். அம்பாலாவைச் சேர்ந்த பாலாவிடம் உலக சுகாதார நிறுவனத்தின் விருது குறித்து கேட்டபோது, “இந்த விருது மிகவும் வேடிக்கையாக உள்ளது. சில மாதம் முன்பு 500 ரூபாய் ஊக்க ஊதியம் கேட்டதற்கு அடித்து உதைத்து வேலையிலிருந்து விரட்டியடித்தனர். உரிய ஊதியம் வழங்குவது தான் எங்களுக்கு மிகப்பெரிய விருது” என்றார்.
படிக்க:
♦ மக்கள் போராட்டம் தோற்றதில்லை! கார்ப்பரேட்டுகள் தொடர்ந்து வெற்றி பெறுவதும் இல்லை!
♦ மார்ச் 28-29 அகில இந்திய தொழிலாளர் வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம்!
இந்த பெண் பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் மிகவும் அரிதானது மற்றும் போற்றப்பட வேண்டியது. ஆனால் இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமோ மிக சொற்பமானது. நாட்டின் உழைக்கும் மக்களின் நலனிலும், ஆரோக்கியத்திலும் அரசின் அக்கறையின்மை பளிச்செனத் தெரிகிறது.

மனிதகுல வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசிய தேவைகளை முறையான பணியாளர்களை அமர்த்தி நிறைவேற்றுவதற்கு பதிலாக அதற்கு ஆகும் செலவில் சொற்பத் தொகையை மட்டுமே ஒதுக்கி, தன்னார்வலர்களை(?) ஈடுபடுத்தி, மிகவும் தந்திரமாக ஈடு செய்யும் கேவலமான இந்தப் போக்கு மாற்றப்பட வேண்டும். இப்படியெல்லாம் மிச்சப்படுத்தப் படும் தொகையானது, இத்தகைய ‘புத்திசாலித்தனமான’ திட்டங்களை வகுத்த அதிகாரிகளுக்கு சம்பள உயர்வாக கிடைக்கலாம். அதன் மற்றொரு பகுதி, தலைவர்களுக்கு பிரமாண்ட சிலைகள் அமைக்கவும், புல்லட் ரயில்கள் மற்றும் நகர்புற வளர்ச்சி போன்றவற்றிற்கும் பயன்படுத்தப்படலாம். சமூக நலன்களுக்காக ஒதுக்கப்படும் தொகையைக் குறைப்பது அல்லது குறைந்த ஊதியத்தில் தற்காலிக பணியாளர்களை வைத்து அதை நிறைவேற்ற முயல்வது போன்றவை நியாயமற்றதும் அநியாயமும் ஆகும். நமது பணியாளர்களில் கணிசமான பகுதியினர் குறைந்த ஊதியத்தில் ஊட்டச்சத்து குன்றியும், முறையான கல்வி மற்றும் வேலைக்கு உரிய பயிற்சி இன்றியும் உள்ளனர். இப்படியான மனிதவள குறைபாடுகளால் நாட்டின் பொருளாதாரம் நிச்சயமாக முடங்கிவிடும்.
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், தனது குடிமக்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யாமல் உலகளாவிய மேன்மையை அடைய விரும்பும் ஒரே நாடு இந்தியா மட்டுமே எனக் குறிப்பிட்டார். மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களை நிம்மதியாக வாழவைக்க வக்கில்லாமல், நாங்கள் வல்லரசாக போகிறோம் என வீண் தம்பட்டம் அடிப்பதன் மூலம் இவர்கள் நாட்டை (மக்களையும் வளங்களையும்) சீரழித்ததுதான் மிச்சம்.
நமது ஆட்சியாளர்கள், அதிலும் குறிப்பாக மோடி வகையறாக்கள் வாயில் வடை சுடுவதில் வல்லவர்கள். அம்ருத்(Amrut), நிதி(NITI), பிஎம்கேர்ஸ்(PM cares), ஆயுஷ்மான் (Ayushman),தற்போது அக்னிபாத்(Agnipath) போன்ற பல புதிய வார்த்தைகளில் விளையாடி, நாடு வளர்ச்சி அடைவதை போல வெற்று தோற்றத்தை ஏற்படுத்தி ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்கள். எனவேதான் ஆஷாக்களுக்கு ஆறுதல் அளிக்க அவர்கள் முன்வருவதில்லை. இந்தியா முழுவதும் இதேபோல உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் அங்கன்வாடிப் பணியாளர்கள், தூய்மைத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக போராடுவதன் மூலமாகத்தான் விடியலைப் பெற முடியும்.
செய்தி மூலம்:
https://www.telegraphindia.com/opinion/left-without-hope/cid/1868542
ஆக்கம்: குரு