DHFL என்று அழைக்கப்படும் திவான் ஹவுஸிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் மீது வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் மோசடி செய்து விட்டதாக யூனியன் வங்கி  புகார் மனு ஒன்றை தயாரித்து 2020ஆம் ஆண்டு சிபிஐக்கு கடிதமாக எழுதி அனுப்பி இருந்தது.

யூனியன் வங்கியில் இருந்து 40,623.36 கோடி ரூபாயை கடனாகப் பெற்று விட்டு திருப்பி செலுத்தாமல் போலி கணக்கு வழக்குகளை காட்டி ஏய்ப்பதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தது.

யூனியன் வங்கியில் ஆடிட்டர் நிறுவனமான KPMG என்ற தணிக்கை நிறுவனத்தின் மூலம் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் இந்த புகாரை உறுதிப்படுத்தி குற்றம் சுமத்தி இருந்தனர்.

இந்தியாவில் செயல்படுகின்ற நூற்றுக்கும் மேற்பட்ட நேஷனல் ஹவுசிங் பங்க் (NHB)-களில் நடந்த மிகப்பெரிய வங்கிக் கடன் மோசடி என்று சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் வங்கிகளின் மூலம் கடன் கொடுத்து வீடு கட்டுவதற்கு வசதி செய்து கொடுப்பதாக 1988 ஆண்டு ஜூலை 9ஆம் நாள் தேசிய வீட்டு வசதி வங்கி நிறுவப்பட்டது.

இந்த நிறுவனத்திடம் அனுமதி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் ரியல் எஸ்டேட் முதலைகள் மற்றும் தனியார் கடன் வழங்கும் நிறுவனங்கள் இந்தத் துறையில் வேகமாகப் குதிப்பதற்கு முக்கிய காரணம்  பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கொண்ட மிகப்பெரும் துறையாக வீட்டு வசதி கடன் கொடுக்கும் துறை உள்ளது.

தவணை முறையில் வீடு வாங்கிக் கொள்ளலாம் என்ற பிரம்மாண்டமான அறிவிப்புகளுடன் சிறு நகரங்கள் முதல் நகராட்சி, மெட்ரோபாலிடன் மற்றும் காஸ்மோபாலிட்டன் நகரங்கள் வரை அனைத்திலும் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்வது, அந்த தொழிலை செய்வதற்கென்று வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடனை வாங்கி திருப்பி கட்டாமல் ஓடுவது என்பதை DHFL போன்ற தனியார் வங்கிகள் செய்து வருகின்றன.

இந்த திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் CMD கபில் வாத்வான் மற்றும் டைரக்டர் நீரஜ் வாத்வான் ஆகிய இருவரின் மீது 34,615 கோடி மோசடி செய்துள்ளதாக சிபிஐ வழக்கு தொடுத்து கைது செய்துள்ளது.

படிக்க:

ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள் தான் வாங்கிய டிராக்டருக்கு உரிய காலத்திற்குள் வங்கி கடனை கட்ட முடியவில்லை என்று தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் சுயமரியாதை மற்றும் தன்மானம், நேர்மை உணர்ச்சி எங்கே?

பல ஆயிரம் கோடி கடன் பெற்று விட்டு பொய் கணக்குகளை எழுதுவதற்கு என்றே உருவாக்கப்பட்டுள்ள ஆடிட்டர் துறையின் மூலம் கணக்கு காட்டி மோசடி செய்யும் வாத்வான் வகையறா எங்கே?

வங்கிகள் தனியார்மயம்!      
மோசடியாளர்களுக்கு அபயம்!

இந்தியாவில் 1969 ஆம் ஆண்டுக்கு முன்பு வங்கிகள் அனைத்தும் பெரும் முதலாளிகள் மற்றும் வியாபாரிகள் கையில்தான் இருந்தது. இப்படிப்பட்ட வங்கிகள் இதன் விளைவாகவே 1969இல் வங்கிகள் தேசிய உடைமை ஆக்கப்பட்டன.

அவ்வாறு தேசிய உடைமை ஆக்கப்பட்ட பிறகு 25 வங்கிகள் திவாலாகி அந்த திவால் ஆன வங்கிகளை அரசுடமை ஆக்கி அதன் காரணமாக அதன் வாடிக்கையாளர்கள் காப்பாற்றப்பட்டனர்.

எடுத்துக்காட்டாக 1994 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட குளோபல் டிரஸ்ட் என்ற வங்கி 10 ஆண்டுகளில் 2004 ஆம் ஆண்டு 1100 கோடி ரூபாய் கடனாளியாக மாறி திவால் ஆனது அப்போது ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் என்ற வங்கியின் மூலம் அதன் கடன் சரி செய்யப்பட்டு வாடிக்கையாளர்களின் சேமிப்பு பறிபோகாமல் அரசு காப்பாற்றியது.

அதேபோல YES Bank  2016 மார்ச் மாதத்தில் 98 ஆயிரம் கோடி கடனாளியாக இருந்து 2017 மார்ச் மாதம் 2,40,000 கோடி தனது வங்கியின் வைப்புத் தொகையை விட அதிகமான கடனாளியாக மாறியது.

 

இந்த YES Bank ரிசர்வ் வங்கியால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் நாட்டிற்கு நம்பிக்கையூட்டினார் அவர்களின் கண்காணிப்பில் இருந்தபோதுதான் ஒரே ஆண்டில் மூன்று மடங்கு அதிக கடனாளியாக மாறியது.

அந்த வங்கியின் நிர்வாகி ராணா கபூர் தனது பங்குகளை 2019 ஆம் ஆண்டு பங்குசந்தையில் விற்பனை செய்துவிட்டு எந்தவிதமான நட்டமுமின்றி வெளியேறினார்.

அந்த வங்கியை காப்பாற்றுவதற்கு தேசிய வங்கியான ஸ்டேட் வங்கி அதன் பங்குகளில் 49 சதவீதத்தை வாங்கி வாடிக்கையாளர்களை மோசடி செய்யாமல் பாதுகாத்தது.

இப்படிப்பட்ட தனியார் வங்கிகளின் யோக்கிதை சந்தி சிரிக்கும் போது மோடி இந்தியாவில் உள்ள அரசு வங்கிகளை ஒன்றிணைத்து நான்கு வங்கிகளாக மாற்றுவதற்கும், அதில் திரண்டுள்ள 140 இலட்சம் கோடி ரூபாயை சூறையாடுவதற்கும், கார்ப்பரேட்டுகளுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து அழைத்து கொண்டிருக்கிறார்.

தற்போது ஹவுசிங் பைனான்ஸ் என்ற பெயரில் இயங்குகின்ற திருட்டு மோசடி கும்பல், தனியார் வங்கிகள் என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளிடம் பல ஆயிரம் கோடிகளை கடன் வாங்கி அவர்களுக்கு திருப்பி கட்டாமல் மோசடி செய்து விட்டு ஓடுகின்றனர்.

இதுதான் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் நமது நாட்டிற்கு கொடுத்த பரிசாகும்.

இத்தகையை யோக்கிய சிகாமணிகளின் பெயர் பட்டியலை கூட வெளியிடுவதற்கு ரிசர்வ் வங்கி தயங்கியது. வங்கி துறையில் பணியாற்றுகின்ற நாட்டுப்பற்றுள்ள வங்கி ஊழியர் சங்கங்கள் தான் மோசடி பேர்வழிகளின் பட்டியலை மக்களுக்கு அம்பலப்படுத்தினார்கள்.

தற்போது மோசடி செய்து மாட்டிக் கொண்டுள்ள பொருளாதார குற்றவாளிகளான வாத்வான் வகையறா பற்றி விமர்சிக்கின்ற வகையில் ஊடகங்கள் எழுதுவதில்லை. கோட்டு சூட்டு அணிந்த பிளேடு பக்கிரி, பொருளாதார திருடர்கள், பொது சொத்துக்களை ஆட்டையை போடும் மோசடிப் பேர்வழிகள் என்று விவரிக்காமல் மோசடிகள் எவ்வாறு நடந்தது என்று புள்ளிவிவரங்களை எழுதி வாசகர்களை திகைப்பூட்டுகின்றனர்.

தனது சிறுசேமிப்பு பறி போவதை கூட அறியாமல் வங்கிகளில் பணத்தை முதலீடு செய்துவிட்டு உத்தரவாதமாக இருப்பதாகக் கருதிக் கொண்டு அரசு பணியாளர்கள், சிறுதொழில் அதிபர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், ஏழை, நடுத்தர விவசாயிகள் அனைவரும் நம்பிக்கையுடன் வங்கிகளுக்கு சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

ஒரு நள்ளிரவில் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மோடி அறிவித்ததைப்போல வங்கிகளில் நீங்கள் செலுத்திய பணம் திரும்பக் கிடைக்காது என்று அறிவிக்கும் நாள் தொலைவில் இல்லை.

படிக்க:

சாதாரண தொழிலாளி வீடுகட்ட வாங்கும் கடன், மாணவர்கள் வாங்கும் கல்விக் கடன், பெண்களின் திருமண கடன் நகை கடன் போன்ற அனைத்தையும் கூட்டு வட்டி போட்டு காறாராக வசூல் செய்யும் வங்கி மற்றும் வீடு கட்டும் கடன் தரும் நிறுவனங்களுக்கு மனிதாபிமானம் என்பது அறவே கிடையாது. கடன் கேட்பவர்கள் முதல் கடன் வாங்கியவர்கள் வரை சாதாரண மக்களை கிரிமினல் குற்றவாளிகளைப் போல வங்கி அதிகாரிகள் நடத்துவதை அன்றாடம் நாம் பார்க்கிறோம்.

ஆனால் DHFL போன்ற ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பலுக்கு பல ஆயிரம் கோடி கடனை கொடுத்துவிட்டு திரும்பி வாங்காமல் வழக்குப்பதிவு செய்வதற்கு சி பி ஐ வரை சென்று அலைய வேண்டியுள்ளது.

வங்கிகள் தனியார்மயமாவதையும்  மோசடி பேர்வழிகளுக்கு அந்த தனியார் வங்கிகள் அபயம் அளிப்பதையும் தனித்தனி விஷயங்களாக நாம் புரிந்து கொள்ளக் கூடாது.

இன்னும் எத்தனை நாள் நாம் அமைதியுடன் சகித்துக்கொண்டு வேடிக்கை பார்க்கப் போகிறோம் என்பதே நம்முன் உள்ள கேள்வி? எனவே வங்கிகள் தனியார் மயத்திற்கு எதிராக போராடுகின்ற வங்கி ஊழியர்களுடன் ஒன்றிணைந்து நாமும் போராடுவோம்.

வங்கிக் கடன் மோசடி செய்த கும்பலை கைது செய்வது மட்டுமின்றி அவர்களிடம் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்க வேண்டும். பல ஆயிரம் கோடி வட்டியுடன் வாங்கிய வீட்டுவசதி கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று போராடுவோம்.

  • திருச்செங்கோடன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here