மார்ச் 28-29 அகில இந்திய தொழிலாளர் வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம்!


மோடி அரசின் தேசவிரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதை எதிர்த்து அகில இந்திய தொழிற்சங்கங்கள் வருகின்ற
மார்ச் 28-29 தேதிகளில் இரண்டுநாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இந்திய தொழிலாளி வர்க்கம் பிரிட்டீஷ் காலனி ஆதிக்க காலத்திலிருந்தே போராடிபெற்ற தொழிலாளர் உரிமைகளை 44 சட்டங்கள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டங்களையெல்லாம் செல்லாக்காசாக்கும் நோக்கில் 4 நடத்தை விதிமுறைகளாக மாற்றும் மசோதாவை நாடாளுமன்றத்தில் முன் வைத்து நிறைவேற்றி
அமல்படுத்துவது மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் இடையூறின்றி கொள்ளையடிப்பதை உத்திரவாதப்படுத்த மோடிஅரசு முயற்சிக்கிறது.

மத்திய மற்றும் துறைவாரி தொழிற்சங்கங்களது பிரதிநிதிகளுடன் தொழிலாளர்கள் பிரச்சினைகளை விவாதிக்கின்ற நடைமுறையை 2015-ம்ஆண்டிலிருந்தே மோடி அரசு புறக்கணித்து வருகிறது. அதேபோல மத்திய அமைச்சர்கள் குழுவுடனும், துறைவாரி அமைச்சர்களுடனும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தும் வழக்கத்தினையும் புறக்கணித்து வருகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பிற்கும் துணையாக இருந்த பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட முடியாமல் முடக்குவதோடு பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றியஅரசு வைத்திருக்கும் பங்குகளை விற்பனை செய்து கார்ப்பரேட்களுக்கு விருந்து வைக்கிறது. ஒழுங்குமுறை ஆணையம் என்கிற அதிகார அமைப்பை உருவாக்கி கார்ப்பரேட் சேவையை தீவிரமாக்கி துரிதப்படுத்துகிறது.

இவ்வாறு கொழுக்க வைக்கப்படும் கார்ப்பரேட் முதலாளிகளில் பனியா- பார்சி முதலாளிகளுக்கே மோடி அரசு முன்னுரிமை அளிக்கிறது. மோடியின் ஆட்சி காலத்தில் அம்பானி, அதானி, டாடா உள்ளிட்ட பனியா-பார்சி முதலாளிகள் அடைந்துள்ள வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை புரியும்.

ஒப்பந்த தொழிலாளர் முறை மூலம் ஆட்குறைப்பு, வேலைபறிப்பு, தொழிற்சங்கம் அமைக்க தடை உள்ளிட்ட தொழிலாளர் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தொழிலாளர்கள் உழைப்பு குறைந்த கூலிக்கு கார்ப்பரேட்டுகளுக்கு சுரண்டிக் கொடுக்கப்படுகிறது.

இன்னொருபுறம் இவைகளை மூடிமறைத்து சாதிமத வெறியை தூண்டி மக்களை பிளவுபடுத்துவதோடு பாசிச ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

கார்ப்பரேட் காவி பாசிச கும்பலை வீழ்த்துகின்ற போராட்டத்தில் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் வரலாற்றுக் கடமையாற்ற மார்ச்28-29 இருநாள் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று தொழிலாளர் ஒற்றுமையை நிலைநாட்டுவோம்.

வேலைநிறுத்த கோரிக்கைகள் :

  1. தொழிலாளர் சட்ட தொகுப்புகள் நான்கையும் கைவிடு!
  2. தேசிய பணமாக்கும் கொள்கை உள்ளிட்ட எந்தப் பெயராலும், பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்காதே!
  3. மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறு!
  4. வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு, மாதம் ஒன்றுக்கு 7,500 ரூபாய் வீதம் நிவாரணம் வழங்கு!
  5. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டைஅதிகப்படுத்து! நகரங்களுக்கும் விரிவுபடுத்து!
  6.  கட்டுமான, உடலுழைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் விரிவான சமூக பாதுகாப்பு திட்டங்களை அமலாக்கு!
  7.  அங்கன்வாடி, ஆஷா, சத்துணவு மற்றும் இதர திட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தையும், சமூகப் பாதுகாப்பையும் உறுதிசெய்!
  8. கொரோனா பெருந்தொற்றில் பணிபுரிந்த முன்களப் பணியாளர்களுக்கு உரிய
    பாதுகாப்பும், காப்பீடு வசதிகளும் வழங்கு!
  9. விவசாயம், கல்வி, மருத்துவம் மற்றும் அத்தியாவசிய மக்கள் பயன்பாட்டுத் துறைகளில் பொது முதலீட்டை அதிகப்படுத்து !
    செல்வ வளம்மிக்கவர்களிடமிருந்து சொத்துவரி வசூலித்து இதற்கான நிதியைத் திரட்டி, தேசிய பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டி புனர் நிர்மாணம் செய்!
  10. பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியைக் குறைத்து, அனைத்து பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்து!
  11. காண்ட்ராக்ட் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்து! அதுவரை சம வேலைக்கு சமஊதியம் வழங்கு!
  12. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்து! பிராவிடண்ட் பண்டு குறைந்த பட்ச ஓய்வூதியத்தை கூடுதலாக்கு!

இழந்த தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டத்தை வெற்றிபெறச்செய்வோம்.

மக்கள் கலை இலக்கியக் கழகம்
தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here