Loan ஆப்பில் சிக்கி வாழ்வை இழக்கும் இளைஞர்கள்!
சென்னை சூளைமேடு பகுதியை சார்ந்தவர் பாண்டியன். அவருக்கு வயது 29. இவர் ஒரு தனியார் ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களாக அவருக்கு வேலை இல்லை. வேலை இல்லாத காரணத்தால் பண தேவை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் Loan ஆப் பற்றி அவருக்கு தெரிய வர ஆப்பை டவுன்லோட் செய்து ரூபாய் 5000 கடன் வாங்கியுள்ளார் பாண்டியன்.
வாங்கிய பணத்தை வேலை இல்லாத காரணத்தால் முழுமையாக கட்ட இயலாமல் போனது. இந்த நிலையில் Loan Appல் இருந்து போன் செய்து மிரட்டியுள்ளனர். கடனில் 1500 ரூபாய் மீதம் இருந்துள்ளது. தொடர்ந்து மிரட்டல் கொடுத்து வந்த லோன் ஆப் கும்பல் அவரது படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து பாண்டியனின் தொடர்பில் உள்ள அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் போனுக்கு அனுப்பியுள்ளது. இது தெரியவர பாண்டியன் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
பாண்டியன் கடன் வாங்குவதற்கு முன்னர் அவரது படம் மற்றும் ஆதார் எண்ணை பெற்றுக் கொண்ட கும்பல் அவரது தனிப்பட்ட தகவல்களை திருடிக் கொண்டு அவரை மிரட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டும் இதுபோல் ஒரு இளைஞர் தந்தையின் மருத்துவ செலவுக்காக லோன் ஆப்பில் கடன் வாங்கியுள்ளார். கட்ட முடியாத அளவுக்கு வட்டி போட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அவரையும் மிரட்டவே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த செய்தியை படித்து விட்டு இது குறித்து மேலும் தேடிய எனக்கு மிக அதிர்ச்சியாய் இருந்தது…
கடந்த ஆண்டு குருகிராமில் மட்டும் லோன் ஆப் குறித்து 20 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அப்படியான வழக்குகளை பார்ப்போம்…
குருகிராமில் தகவல் தொழில்நுட்ப நிபுணராக பணிபுரியும் ஒருவர் தனது உடனடி பண தேவைக்காக நண்பர்களை அணுகியும் கிடைக்காததால் தனது ஸ்மார்ட்போனில் வரும் விளம்பரங்களை பார்த்துவிட்டு கூகுள் ஆப்பில் லோன் ஆப்பை டவுன்லோட் செய்துள்ளார். ஆவணங்கள் எதுவும் தேவையில்லை. எளிதாக கடன் கிடைக்கிறது என்பதால் 5 ஆப்களில் இருந்து மொத்தம் 24,000 ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஒவ்வொரு Appக்கும் 4800 க்கு 8000 ரூபாய் குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்ட வேண்டும். மொத்தம் 5 Appகளில் கடன் வாங்கியுள்ளார்.
குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்ட அவரால் கட்ட இயலவில்லை. தினமும் 100 போன் கால்கள் மூலம் அடையாளம் தெரியாதவர்களால் மிரட்டல் வந்துள்ளது. அவரது படத்தை மார்பிங் செய்து முதலில் அவரது தொடர்பில் உள்ளவர்களுக்கு அனுப்பியுள்ளார்கள். பின்னர் சமூகவலைதளத்தில் பதிவேற்றுவதாக மிரட்டியுள்ளார்கள்.
இதன் பின்னரே அவர் காவல்துறையிடம் சென்றுள்ளார். அவர்கள் விசாரித்து விட்டு நீங்கள் வாங்கிய 24,000 ரூபாய் கடனுக்கு 3.5 லட்சம் ரூபாய் கட்ட வேண்டுமாம் என போலீஸ் சொல்கிறது.
இதுவரை லோன் ஆப்பின் மூலம் அச்சுறுத்தல், துன்புறுத்தல் என்று 20 புகார்கள் வந்துள்ளதாக கூறுகிறார்கள். இவருடைய புகாரையும் சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இது குறித்து பேசிய துணை போலீஸ் கமிஷினர் இந்திவர் இந்த வழக்குகள் முடிய 2 மாதங்கள் வரை ஆகலாம் என்றும் இதுவரை பலர் குருகிராமில் பிடிபட்டுள்ளனர் என்றும், அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் smart phone-ஐ ஹாக் செய்து bank details, mail, photo போன்ற தரவுகளை திருடியுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.
இதுபோலவே ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் நிர்வாகி அமித்ஷர்மா. லோன் ஆப்பில் 5500 கடனாக பெற்று 25,000 திருப்பி செலுத்தியுள்ளார். ஆனாலும் மன ரீதியான துன்புறுத்தல் தொடர்வதாக கூறியுள்ளார். அவரது படத்தை மர்பிங் செய்து நண்பர்கள் மற்றும் குடும்பத்திற்க்கு அனுப்பியுள்ளார்கள். இதனால் இவரது மனைவிக்கும் இவருக்கும் இடையே பிரச்சினை வந்துள்ளது. அந்த படம் மார்பிங் செய்யப்பட்டுள்ளது என்பதை அவரது மனைவி நம்பவில்லை. போலீசில் வழக்கு பதிவு செய்த பின்னரே நம்பியுள்ளார்.
இன்னொருவர் திருமணமாகி தேனிலவுக்கு செல்வதற்காக 50,000 கடன் வாங்கியுள்ளார். அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர் செலுத்திய தொகையோ 15 லட்சம் ரூபாய்.
2022 ஜனவரியில் செக்டார் 104 குடியிருப்பாளரான குல்தீப்சிங்கிடம் இருந்து காவல்துறைக்கு புகார் வந்துள்ளது. செப்டம்பர் 2022ல் 2% வட்டியில் கடன் கொடுப்பதாக எனது மொபைலில் வந்திருந்த பாப்அப் விளம்பரத்தை பார்த்து 2000 ரூபாய் கடன் வாங்கி பின்னர் திருப்பி செலுத்தினேன். மேலும் offer ஒன்றை அறிவித்தார்கள். எனக்கும் உடனடி தேவை இருந்ததால் 10.58 லட்சம் கடன் வாங்கி 17.55 திருப்பி செலுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
தெலுங்கானா காவல்துறை instant loan appகளை கண்டறிந்து 200 ஆப்களை playstore-ல் இருந்து நீக்குமாறு கூகுள் நிறுவனத்திடம் தெரிவித்தது.அவர்களும் நீக்கியுள்ளார்கள். ஆனால் வெவ்வேறு வடிவங்களில் புதிது புதிதாக முளைக்கிறார்கள் என காவல்துறை கூறியுள்ளது.
2020லிருந்து ஆன்லைன் லோன் ஆப் தொடர்பாக 1900 புகார்கள் சைபர் கிரைமுக்கு வந்துள்ளது. அதை விசாரித்த நோடல் அதிகாரி 69 செயலிகளை அகற்றுமாறு கூகுள் அமெரிக்க அலுவலகத்திற்க்கு ஆணையம் சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுபோல் லோன் ஆப்களின் மூலம் பலர் மிரட்டப்பட்டு மானத்திற்க்கு பயந்து பணத்தை இழந்துள்ளார்கள். பணம் இல்லாதவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். ஆனால் இதுவரை இந்த குற்றத்தை அரசால் தடுக்கமுடியவில்லை.
ஆரம்பகாலங்களில் மக்கள் அவசர தேவைகளுக்காக கந்துவட்டிக்கு கடன் வாங்குவதும் பின்னர் அவர்களால் துன்புறுத்தப்படுவதும் நடந்துவருகிறது. அது தற்போது டிஜிட்டல் மயமாகியுள்ளது.
லோன் ஆப் மூலம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியான மிரட்டல்கள், துன்புறுத்தல்களை கையாண்டுள்ளாது இந்தக் கும்பல். கடன் வாங்கியவர்களின் போன் நம்பரை ஹாக் செய்து அவர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடியுள்ளது. சாதரணமாக கேட்டால் தரமாட்டார்கள் என்று தெரிந்துக் கொண்டு அவர்கள்படங்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறித்துள்ளார்கள்.
படிக்க:
லோன் ஆப்கள் பல இருந்தாலும் இவர்கள் அனைவரும் ஒரே கொள்ளை கும்பல் தான் என்ற எண்ணம் இயல்பாகவே தோன்றுகிறது.
இந்திய பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த பின்னர், டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக paytmக்கு விளம்பரம் செய்தார். நாட்டை டிஜிட்டல்மயமாக்க போகிறேன் என்று, மக்களை இன்று நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்.
இந்தியாவில் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டு 2 வகையான டிஜிட்டல் கொள்ளை நடைபெறுகிறது. ஒன்று பங்கு சந்தை முதலீடு எனும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கொள்ளை. மற்றொன்று லோன் ஆப் மூலம் அரசால் அங்கீகரிக்கப்படாத, அரசுக்கு தெரிந்தே நடக்கும் கொள்ளை. இதைத்தான் இவ்வளவு நேரம் பார்த்தோம்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை( Artificial intelligence) பயன்படுத்திக் கொண்டு நம்முடைய தேவையை அறிந்து, ஸ்மார்ட்போன் மூலம் கூகுள் துணையுடன் விளம்பரங்கள் செய்கிறார்கள். நாமும் அவர்கள் விரிப்பது சதிவலை எனத் தெரியாமல் விழுந்து விடுகிறோம்.
தொழில்நுட்பம் வளர்ந்த அளவுக்கு அதில் நடக்கும் திருட்டுக்களை தடுப்பதற்கான சட்டங்கள் முறையாக இல்லை. திருடர்கள், கொள்ளையர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை ஆளும் காவிஅரசால் தடுக்கவும் முடியவில்லை. அறிவியல் மாநாட்டில் நாங்கள் அந்த காலத்திலேயே பிள்ளையாருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்தோம் என பேசுபவர்களிடம் தொழில்நுட்ப அறிவை எதிர்பார்ப்பது நமது தவறு. மாட்டு மூத்திரத்தை குடித்தால் கேன்சர் குணமாகும் என சொல்பவர்கள், டிஜிட்டல் இந்தியா என வெளியில் பீற்றிக் கொள்கிறார்கள்.
இளைஞர்கள் லோன் ஆப் போன்ற சதிவலைகளில் சிக்க காரணம் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வும், வேலையின்மையுமே. இதை ஏற்படுத்தியது ஆளும் கார்ப்பரேட்-காவி பாசிச அரசாங்கம்.
வேலையில்லாதவர்களுக்கு நிரந்தரமான வேலைவாய்ப்பை ஏற்படுத்தாமல் இது போன்ற டிஜிட்டல் கொள்ளையர்களின் பிடியில் இருந்து இளைஞர் சமுதாயத்தை காப்பாற்ற முடியாது. அதற்கு தற்போது ஆட்சியில் இருக்கும் காவி பாசிஸ்டுகளை வேரோடு பிடிங்கி எறிந்தால் மட்டுமே சாத்தியம்.
- நந்தன்