புதிய ஜனநாயகப் புரட்சியும், கார்ப்பரேட் காவி பாசிச ஒழிப்பும்!

மார்க்சிய லெனினிய அரசியலில் இருந்து வெளியேறி திருத்தல்வாதத்தில் மூழ்கித் திளைக்கின்ற பலவண்ண திருத்தல்வாத அமைப்புகள் போலவே மேலும் ஒரு அமைப்பாக மாறியுள்ளது வினவு மற்றும் செங்கனல் தலைமை

புதிய ஜனநாயகப் புரட்சி என்ற அரசியல் போர்த்தந்திரத்தின் மூலம் வழிகாட்டப்படும் அரசியல் செயல் தந்திரம் மற்றும் நீண்ட கால மக்கள் யுத்த பாதை என்ற ராணுவ போர்த் தந்திரம் மற்றும் செயல்தந்திரம் ஆகியவற்றின் மீது அவநம்பிக்கை கொண்டு ’திடீர் புரட்சி’ என்ற சோவியத் பாணியிலான ஆயுதம் தாங்கிய பேரெழுச்சியை முன்வைத்து இதுவும் புதிய ஜனநாயகப் புரட்சி பாதை தான் என்று பித்தலாட்டத்தில் இறங்கியுள்ளது வினவு தலைமை.

இந்திய விவசாயம் முதலாளித்துவமயமாகிவிட்டது, இன்னமும் நாட்டில் பாசிச அபாயம் சூழவில்லை என்பதால் செயல் தந்திர அரசியல் தற்போது தேவையில்லை. பாசிசம் ஆட்சிக்கு வந்தால் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி; இல்லையென்றால் புதிய ஜனநாயக புரட்சியை முன்வைத்து செயல்படுவோம் என்று செயல் தந்திர அரசியல் வழியை கைவிட்டது மட்டுமின்றி விவசாயத்தில் முதலாளித்துவம் என்ற புதிய ஆய்வு முடிவை முன்வைத்து செயல்படுகிறது செங்கனல் தலைமை.

இதன் மூலமாக மார்க்சிய லெனினிய அரசியலில் இருந்து வெளியேறி திருத்தல்வாதத்தில் மூழ்கித் திளைக்கின்ற பலவண்ண திருத்தல்வாத அமைப்புகள் போலவே மேலும் ஒரு அமைப்பாக மாறியுள்ளது வினவு மற்றும் செங்கனல் தலைமை.

புரட்சியின் மையமான கடமை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் என்பதைச் சரியாகவே சாரு மஜும்தார் முதலிய ’இடது’ சந்தர்ப்பவாதிகள் புரிந்து கொண்டிருந்தாலும், அந்த அரசியல் அதிகாரம் வர்க்க சமுதாயங்களில் ஒரு நிறுவனமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது – என்ற சாதாரண உண்மையை அவர்கள் புரிந்துகொள்ளத் தவறினர். தனிநபர்களே அரசியல் அதிகாரமாக நிலவுவதாகக் கற்பிதம் செய்து கொண்டனர். அவ்வாறான தனி நபரை அழித்தொழித்தாலே ஒரு பகுதி அரசியல் அதிகாரத்தில் வெற்றிடம் ஏற்பட்டுவிடும், விவசாயிகள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளலாம் என்றும் கனவு காணச் சொன்னார்கள். இக்கோட்பாட்டிலுள்ள அடிப்படையான தவறைச் சுட்டியது புதிய ஜனநாயகத்தின் அரசியல் தலைமை.

புரட்சியின் மையமான கடமை பொதுவில், ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் மேல் கட்டுமானத்தைத் தூக்கியெறிந்து மக்கள் தமக்கென்று புதியதொரு மேல்கட்டுமானத்தை நிறுவிக் கொள்வதாகும்; குறிப்பாக ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கும் அரசு இயந்திரத்தைத் தூக்கியெறிந்து மக்கள் தமக்கென்று புதியதொரு அரசு இயந்திரத்தை நிறுவிக் கொள்வது; இந்த உண்மையை முன்வைத்ததோடு, பொதுவிலும், குறிப்பாகவும் நமது நாட்டில் அரசியல் அமைப்பு எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது, இதன் வெவ்வேறு கூறுகள் என்னென்ன, இதன் வரலாறு என்ன; – இவற்றையெல்லாம் ஆய்வு செய்து முன் வைத்தது புதிய ஜனநாயகத்தின் அரசியல் தலைமை.

புரட்சியில் அரசியல், இராணுவப் போர்த்தந்திரங்களும் செயல்தந்திரங்களும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமை முறை பற்றிய அறிவியல் என்கிற மார்க்சிய-லெனினியக் கண்ணோட்டத்துக்கு மாறாக, அவை பற்றிய பாமரத்தனமான பார்வையையே இன்னமும் பிற குழுக்கள் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் ஆயுதப் போராட்டத்தைக் கட்டியமைக்க முயலும் மாவோயிச அமைப்புகளும் அவற்றின் முன்னோடிகளும், “இந்தியா போன்ற நாடுகளில் புரட்சியின் ஆரம்பக் கட்டத்திலிருந்தே ஆயுதப் போராட்டம்தான் பிரதான போராட்ட வடிவமாகவும், இராணுவம்தான் பிரதான அமைப்பு வடிவமாகவும் இருக்க முடியும்” என்று சொல்லிக் கொண்டு, இராணுவத்துக்கு ஆளெடுத்து, ஆயுதக் குழுக்களையும், படைகளையும் கட்டி, கியூபாவின் சே குவேரா – ரெஜிஸ் தொப்ரே வழிகாட்டியதைப்போல, “கொரில்லாத் தாக்குதல்கள்”, “நகரும் மற்றும் கிரமமான போர்கள்” மூலம் புரட்சியை நடத்த விழைகின்றனர்.

இதற்கு மாறாக புரட்சியின் அரசியல் இராணுவப் போர்த்தந்திரங்கள் செயல்தந்திரங்களுக்கான மார்க்சிய-லெனினியப் பொது நெறிகள் மற்றும் வழி காட்டுதல்களை ரஷ்ய மற்றும் சீனப் புரட்சியின் அனுபவங்களிலிருந்து தொகுத்து, இந்திய நிலைமைகளுக்குப் பொருத்தித் தந்தது, புதிய ஜனநாயகத்தின் அரசியல் தலைமை.

அவற்றின் அடிப்படையில் அரசியல் படைகளையும் அரசியல் போராட்டங்களையும் கட்டியமைத்து உள்ளூர் அரசியல் வேலை நிறுத்தங்களையும் அவற்றின் தொடர்ச்சியாக உள்ளூர் ஆயுதந்தாங்கிய எழுச்சிகளையும் நடத்தி, அவற்றின் வளர்ச்சியில் அரசியல் வேலை நிறுத்தங்களுக்கான தலைமைக் குழுக்களை அரசியல் அதிகாரத்துக்கான குழுக்களாகவும் ஆயுதந்தாங்கிய எழுச்சிகளுக்கான குழுக்களை தற்காப்பு மற்றும் தாக்குதலுக்கான மக்கள் ஆயுதக் குழுக்களாகவும் கொரில்லாக் குழுக்களாகவும் வளர்த்தெடுக்க வேண்டும்; இவற்றையெல்லாம் சாதிப்பதற்கான முன்தேவைகளையும் நிபந்தனைகளையும் வழிகாட்டுதல்களையும் வரையறுத்தது; இதிலிருந்து செந்தளப்பிரதேசங்களை நிறுவுவது, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது வரையிலான பொதுப்போக்கு, பொதுத்திசைவழியை வகுத்தளிந்திருந்தது, புதிய ஜனநாயகத்தின் அரசியல் தலைமை.

  • இவ்வாறான புரட்சி பற்றிய பொதுப்புரிதலும் பொதுத்திசைவழியும் இல்லாமல் மக்களின் போர்க்குணமிக்க பொருளாதார, அன்றாட, பகுதிக் கோரிக்கைகளுக்கான மற்றும் தனித்தனி அரசியல் பிரச்சினைகள் மீதான போராட்டங்களைப் போர்க்குணத்துடன் தொடர்ந்து நடத்திக் கொண்டே போனால், மக்கள் ஆதரவு பெருகி, அரசு அடக்குமுறை எல்லை மீறும்போது ஆயுதப் போராட்டம் வெடிக்கும் என்று பல குழுக்களும் நம்புகின்றன. செயல் தந்திர அரசியல் வழியைப் புறக்கணித்து நிகழ்ச்சிப்போக்கின் அடிப்படையில் செயல்படுவது என்ற இந்த வழியானது, இயக்கத்தைப் பொருளாதாரவாதப் புதைகுழிக்குள்தான் தள்ளும்.

எனவேதான் புதிய ஜனநாயகம் தலைமை போர்த்தந்திர வழிகாட்டுதலின் கீழ், நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களையும் பாதிக்கும் சமூக, அரசியல் பொருளாதார, பண்பாட்டு போக்குகளையும் கணக்கிட்டு வகுக்கப்படும் திட்ட வகைப்பட்ட அரசியல் செயல்தந்திரங்களின் அடிப்படையிலான அரசியல் போராட்டங்கள், அவற்றின் தொடர்ச்சியாக அரசியல் வேலைநிறுத்தங்கள் உள்ளூர் ஆயுதந்தாங்கிய எழுச்சிகள் ஆகியவற்றினூடாகத்தான் புரட்சியைக் கட்டமைக்க முடியும்: பிறகு மக்கள் யுத்தப் பாதையில் முன்னேற்ற முடியும் என்று தனது அரசியல் கோட்பாட்டு முடிவுகளின் மூலமாக வழிகாட்டியது.

அதன் அடிப்படையில் புதிய ஜனநாயக புரட்சி என்ற போர்த் தந்திர பாதை, விவசாயப் புரட்சி என்ற மக்கள் திரள் வழி, போர்த் தந்திரத்தை நோக்கி செயல்படுகின்ற செயல்தந்திரங்கள், நீண்ட கால மக்கள் யுத்தப் பாதை என்ற இராணுவ போர்த் தந்திரம் அடிப்படையிலான மார்க்சிய லெனினிய அரசியலுக்கு எதிரான பல்வேறு திசைவிலகல் போக்குகளுக்கு மத்தியில். பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி மற்றும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி, புதிய ஜனநாயகப் புரட்சிக்கு இடைக் கட்டமாக தோன்றியுள்ள ஜனநாயக கூட்டரசு என்ற திசைவழியில் புதிய ஜனநாயக புரட்சிக்காக மக்களை அணி திரட்டி வருகிறது புதிய ஜனநாயகம் இதழ், புதிய ஜனநாயகம் தினசரி மற்றும் அதன் தோழமை அமைப்புகள்.

  • வலது, இடது திருத்தல்வாத போக்குகளை முறியடிப்போம்!
  • கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த ஐக்கிய முன்னணி மற்றும் மக்கள் முன்னணியை கட்டியமைப்போம்!
  • ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம்!

தோழமையுடன்,

ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here