ஆர்.எஸ்.எஸ்-காரனான டி.ஜி.மோகன்தாஸ் (T G Mohandas) சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோக்களில் தெரிவித்துள்ள கருத்துக்கள், ஜனநாயகத்தின் மீதும், உரிமைக்காகப் போராடும் இளைஞர்கள் மீதும் அவருக்கு இருக்கும் கொடூரமான மற்றும் எதேச்சதிகாரப் பார்வையை அம்பலப்படுத்துகின்றன. இவரது பேச்சுகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரத்துவ மற்றும் பிளவுபடுத்தும் அரசியலின் பிரதிபலிப்பாகவே அமைகின்றன.

கேரளாவை சார்ந்த டி.ஜி.மோகன்தாஸ் சமூக ஊடகங்களில் சங்பரிவார் கும்பலின் கருத்தை பரப்பக் கூடியவர்.  இவர் ஆர்.எஸ்.எஸ் (RSS) மற்றும் பிஜேபி (BJP) அமைப்புகளுடன் நீண்டகாலத் தொடர்புடையவர். ஆதாரங்களில் இவர் “முன்னாள் ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர்” அல்லது “ஆர்.எஸ்.எஸ்-ன் அறிவுசார் பிரிவில் (Intellectual wing) பணியாற்றியவர்” என்று குறிப்பிடப்படுகிறார். இருப்பினும், தற்போது ஆர்.எஸ்.எஸ் என்று நேரடியாக கருத்துச் சொல்லாமல் தனிநபராக தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறார்.

இன்றைய அரசியல் சூழலில், அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பும் எவரையும் ‘தேச விரோதி’ என்று முத்திரை குத்துவது ஆர்.எஸ்.எஸ் – பாஜக தரப்பின் வழக்கமான உத்தியாக மாறிவிட்டது. இதன் சமீபத்திய உதாரணம்தான் டி.ஜி.மோகன்தாஸின் சர்ச்சைக்குரிய பேச்சுகள். டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் (NEET) முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய மாணவர்களைக் குறிவைத்து அவர் வீசியுள்ள வசவுகள், நாட்டின் எதிர்காலமான இளைஞர்கள் மீதான வலதுசாரி சக்திகளின் உண்மையான வெறுப்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி உருவான பொழுதே அதன் நிறுவனரை பாகிஸ்தான் கைக்கூலி என்றும் போராட்டத்தின் போது அமெரிக்க ஏஜென்ட் என்றும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கதையளந்தார்கள் சங்பரிவார் அமைப்பினர். சமூக வலைதளங்கள் முழுவதும் வெறுப்பை உமிழ்ந்தார்கள். அதன் ஒரு அங்கமாக சமூக வலைதளங்களில் செயல்பட்ட அக்மார்க் சங்கி தான் இந்த டி.ஜி.மோகன்தாஸ்.

டெல்லியில் போராடுபவர்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே உண்மையான மாணவர்கள் என்றும், மீதமுள்ளவர்கள் பாகிஸ்தான் மற்றும் வெளிநாட்டுச் சக்திகளால் தூண்டப்பட்ட தேச விரோதிகள் (Anti-nationals) என்றும் மோகன்தாஸ் கூறுகிறார். ஒரு நாட்டின் குடிமக்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகப் போராடுவது ஜனநாயக உரிமை. ஆனால், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைப் பொறுத்தவரை, அரசுக்கு எதிராகப் போராடினாலே குறிப்பாக பாஜகவுக்கு எதிராக போராடினாலோ, கருத்துக் கூறினாலோ அவர்கள் ‘தேச விரோதிகள்’தான். நாட்டின் இயற்கை வளங்களைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கும் மோடி அரசு தேசபக்த அரசாகச் சித்தரிக்கப்படும் வேளையில், கல்வி உரிமைக்காகப் போராடும் மாணவர்கள் தேச விரோதிகளாகச் சித்திரிக்கப்படுவது வேடிக்கையானது.

படிக்க:

🔴 மாணவர்கள் போராட்டஎழுச்சி: தர்மேந்திர பிரதான் ஓட்டம்! நீட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு ஓய்வில்லை!

🔴 போலீசு, ராணுவத்துடன், ஆர்.எஸ்.எஸ் பாசிச குண்டர் படையும் இணைந்து தாக்குதல் நடத்திய டெல்லி சிஜேபி போராட்டம்.

அடித்தட்டு ஏழை மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்தது நீட் தேர்வு என்பது ஊரறிந்த உண்மை. ஆனால், மோகன்தாஸோ நீட் பாதிப்பால் நிகழும் மாணவர் தற்கொலைகளை மிகக் கேவலமாக எள்ளி நகையாடுகிறார். மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது நீட் தேர்வால் அல்ல, மாறாக அது ‘காதல் தோல்வி’ போன்ற தனிப்பட்ட காரணங்களால் இருக்கலாம் என்று அவர் கொச்சைப்படுத்துகிறார். மேலும், போராட்டக் களத்தில் இருக்கும் ‘வோக்’ (Woke) இளைஞர்கள் எளிதில் மூளைச்சலவை செய்யப்பட்டு தற்கொலை அல்லது தீக்குளிக்கும் (Self-immolation) செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள் என்று அவர்கள் மீதான தனது வன்மத்தைக் கக்குகிறார்.

ஒரு போராட்டத்தை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு மோகன்தாஸ் சொல்லும் தீர்வு அதிர்ச்சியளிக்கிறது. தான் அந்த இடத்தில் அதிகாரத்தில் இருந்திருந்தால், ஊரடங்கு பிறப்பித்து, மூன்று முறை எச்சரிக்கை செய்த பின் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பேன் என்று கூறுகிறார். அந்த இடத்தைச் சுத்தம் செய்யப் பிணங்களை மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்றிருப்பேன் என்று அவர் சொல்லும் விதம், ஆர்.எஸ்.எஸ் குண்டர்களின் வன்முறை மனநிலையை உறுதிப்படுத்துகிறது. போராடுபவர்களைக் கொடூரமாகத் தாக்கியதில் எத்தனை ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் இருந்திருப்பார்கள் என்ற கேள்வி எழும் நிலையில், அந்த வன்முறையை நியாயப்படுத்தும் விதமாகவே இவரது கருத்துக்கள் அமைந்துள்ளன. “சுட்டுத் தள்ளுவேன்” – ஒரு ஆர்.எஸ்.எஸ் காரனின் மனநிலை. அதுதான் அவரிடம் வெளிப்பட்டுள்ளது.

படிக்க:

🔴 கல்வி நிதியில் கை வைக்கும் சங்கி தர்மேந்திர பிரதான்!

🔴  ஜனநாயகன் படத்துக்கு அனுமதி! நீட்டுக்கு எதிரான போராட்டத்துக்குத் தடை!

போராடுபவர்களையும் எதிர்க்கட்சியினரையும் ‘கரப்பான் பூச்சிகளுக்கு’ (Cockroaches) ஒப்பிட்டு, அவை மல்லாக்க விழுந்து கிடக்கின்றன, எழுந்து ஓட முடியாது என்று அவர் கேலி செய்வது ஒரு பைத்தியக்கார  அணுகுமுறையாகும். பிரதமர் மோடியை 100-வது மாடியில் இருப்பவராகவும், சாமானிய மக்களை 2-வது அல்லது 3-வது மாடியில் இருப்பவர்களாகவும் உருவகப்படுத்தும் அவர், மோடியின் ‘உயரமான பார்வையை’ மக்கள் கேள்வி கேட்கக்கூடாது என்று மறைமுகமாக மிரட்டுகிறார்.

டி.ஜி.மோகன்தாஸ் ஆர்.எஸ்.எஸ்-ன் முகம். ஆர்.எஸ்.எஸ் அணுகுமுறையின் வெளிப்பாடு அவர். “ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம்” என்பார்கள். ஒரு பருக்கை போலத்தான் இவரும். இவர்களால் கட்டமைக்கப்படும் இந்துராஷ்டிரத்தில் கருத்து சொல்பவர்களுக்கோ போராடுபவர்களுக்கோ இடமில்லை. தீவிர ஆர்.எஸ்.எஸ் காரனான டி.ஜி.மோகன்தாஸ் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை அவமானமாக கருதுவதாக கூறியுள்ளார். போராடிய மாணவர்களிடம் தோற்றுப்போய் அவமானத்தில் நிற்கும் ஆர்.எஸ்.எஸ் பாஜக கும்பல் எதையும் செய்ய துணியும்.

இந்தியாவை மதரீதியாகப் பிளவுபடுத்தி, கார்ப்பரேட் நலன்களுக்காக உழைக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக சக்திகளின் உண்மை முகம் டி.ஜி.மோகன்தாஸ் போன்றவர்களின் பேச்சின் மூலம் அம்பலமாகியுள்ளது. ஜனநாயகப் போராட்டங்களை ரத்த ஆறாக மாற்றத் துடிக்கும் இத்தகைய நாசகர சக்திகளை அடையாளம் கண்டு, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here