செப்டம்பர் 2020இல் உத்தரப் பிரதேசத்திலிருக்கும் ஹாத்ராஸ் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் ஒரு தலித் பெண்ணுக்கு நடந்த கூட்டுப் பாலியல் வன்புணர்வு, அதைத் தொடர்ந்து அவர் உடல் எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற சித்திக் காப்பன் என்கிற சுயாதீனப் பத்திரிகையாளருக்குத் தீவிரவாத முத்திரை குத்தி 871 நாட்கள் சிறையில் வைத்தது அம்மாநில போலீஸ். உச்ச நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கிய பிறகும் சுமார் 3 மாதங்கள் சிறையில் வைத்துக் கொடுமை செய்தனர். தற்போது விடுதலையாகி இருக்கும் காப்பன் (கேரளத்தில் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர், டெல்லியிலிருந்து பத்திரிகையாளராகச் செயல்பட்டவர். அவர் இன்று ‘க்வின்ட் என்கிற இணைய இதழுக்கு அளித்த பேட்டியின் சாரம்:

“டெல்லியிலிருந்து ஹாத்ராஸ் நோக்கி நான் ஒரு ஓலா காரில் புறப்பட்டேன். காலை 10 மணி அளவில் மதுரா நகர எல்லையில் காரை காவல் துறையினர் நிறுத்தினர். அன்று மாலை 6 மணி வரை அங்கேயே காரை நிறுத்தி வைத்து விட்டனர். அதன் பிறகு ஒரு உயர் போலீஸ் அதிகாரி அங்கே வந்து என்னை விசாரிக்கத் துவங்கினார். ‘நீ பாகிஸ்தானுக்குப் போய் இருக்கிறாயா? எத்தனை முறை சென்றிருக்கிறாய்? நீ மாட்டுக்கறி உண்பாயா…? இது போன்ற கேள்விகள். விசாரணை அடுத்த நாள் காலை 6 மணி வரை அங்கேயே நடந்தது. பிறகு பிஜேபி கொடியுடன் வந்த ஒரு காரில் என்னைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் UAPA சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தனர். என்னுடைய செல்போனையும், மடிக் கணினியையும் பறிமுதல் செய்தனர். 45 நாட்கள் வீட்டுக்குத் தகவல் கூடத் தெரிவிக்க விடாமல் என்னை வைத்திருந்தனர். கடைசியாக நோய்வாய்ப்பட்டிருந்த என் தாயுடன் போனில் பேச அனுமதித்தனர். ஆனால், நான் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று கூறி விட்டனர். என்னுடைய அம்மாவுக்கு அந்த இரு மொழிகளும் தெரியாது. மலையாளம் மட்டுமே புரியும். சிறிது நாட்களுக்குப் பின் நான் தீவிரவாதி இல்லை, ஒரு அரசியல் கைதி என்று புரிந்து கொண்ட (புரிந்து கொள்ளவே அவ்வளவு நாட்கள்!) சில அதிகாரிகள் மலையாளத்தில் பேச அனுமதித்தனர். தினமும் விசாரணை என்ற பெயரில் மேற்கூறிய கேள்விகளையே திரும்பத் திரும்பக் கேட்டனர். ஒவ்வொரு கேள்விக்கும் முகத்தில் ஓர் அடி!”


இதையும் படியுங்கள்: சித்திக் காப்பனின் ஜாமீனுக்காக உத்தரவாதம் வழங்கிய மாபெரும் மனிதாபிமானிகள்!


ஏன் சித்திக் காப்பனைக் குறி வைத்து உ.பி. போலீஸ் கைது செய்தனர்? அவர் கேரளா பத்திரிகையாளர் சங்கத்தில் உறுப்பினர். மோடி அரசின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டவர். அவருடைய மடிக் கணினியில் அவர் மீது தீவிரவாவாதக் குற்றம் சுமத்துவதற்கான ஆதாரங்கள் இருந்ததாகப் போலீஸார் கூறினர்.
கணினியில் அவருடைய கட்டுரைகள் மட்டுமே இருந்தன. வேடிக்கை என்னவென்றால், அவற்றுள் முக்கியமான கட்டுரை UAPA சட்டம் எப்படிச் செயல்படுகிறது என்பது குறித்தானது.

நேர்காணலின் இறுதியில் அவர் சொன்னது இதுதான்: “இந்தக் கொடுமைகளால் நான் தளர்ந்து விட மாட்டேன். நான் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்கும் பத்திரிகையாளனாகச் செயல்படுவேன்.”

Vijayasankar Ramachandran 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here