ப்கன் நாட்டில் கடந்த மூன்று நாட்களில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய பனி, மழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் காயமடைந்ததாகவும் முதன்மைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயற்கைக்கு மாறாக ஏப்ரல் மாத கோடையில் இந்த பெருமழையை எதிர்கொள்கின்றனர் ஆப்கானியர்கள். அந்நாட்டின் 34 மாகாணங்களில் 20 மாகாணங்களை கனமழை புரட்டி எடுத்துள்ளது.

600 வீடுகள் சேதமடைந்துள்ளன.உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமது வீட்டின் கூரை சரிந்து விழுந்து நசுங்கி இறந்துள்ளனர். கூடுதலாக, 200-க்கும் மேற்பட்ட ஆடு மாடுகள் அழிந்துள்ளன.

“கிட்டத்தட்ட 600 கிமீ (370 மைல்) சாலை அழிக்கப்பட்டுள்ளது, மேலும் சுமார் 800 ஹெக்டேர் (1,975 ஏக்கர்) விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன” என்று ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

மேற்கு ஃபரா, ஹெராத், தெற்கு ஜாபுல் மற்றும் காந்தஹார் ஆகியவை அதிக சேதத்தை சந்தித்த மாகாணங்களில் அடங்கும்.

சுமார் 22,000 குடும்பங்கள் சர்வதேச  நிவாரண உதவியை  எதிர்நோக்கி தெருவில் நிற்கின்றன.

பிரச்சனை இவற்றோடு முடிந்து விடவில்லை. ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான மாகாணங்களில் வரும் நாட்களில் அதிக பனி, மழை பெய்யும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஆப்பிரிக்கா கண்டம் வரலாறு காணாத வறட்சி, வெப்ப அலைத்தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. கென்யா உள்ளிட்ட நாட்டின் மக்காச்சோள விளைச்சல் பாதிக்கு மேல் கருகி விட்ட நிலையில், அம்மக்கள் உணவு பஞ்சத்தை எதிர்நோக்கி தவித்து வருவதை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் ஆப்பிரிக்கா கண்டத்தை ஒட்டி உள்ள மேற்காசிய பகுதியில் உள்ள  ஆப்கானிஸ்தானத்தின் பெரும் பகுதி வெள்ளக்காடாகி மிதக்கிறது.

ஒருபுறம் ஏகாதிபத்தியங்கள் தமது மேலாதிக்க வெறிபிடித்து தூண்டி வரும் போர்களை உலகம் கண்டு வருகிறது. குறிப்பாக இஸ்ரேலின் காசா மீதான தாக்குதலைத் தொடர்ந்து சிரியாவில் உள்ள ஈரானின் தூதரக கட்டடத்தையும் இஸ்ரேல் தகர்த்துள்ளது. அதற்கு பதிலடியாக ஈரான் ட்ரோன்கள் மூலமும் ஏவுகணைகள் மூலமும்  தாக்குதலை நடத்தி இருப்பதை உலகம் கவலையுடன் பார்த்து வருகிறது. மறுபுறம் மேலாதிக்க வெறி பிடித்த போருக்கு எவ்விதத்திலும் சளைக்காமல் பருவநிலை மாற்றமும் மக்களை கொன்று குவிக்க ஆரம்பித்து உள்ளது.

உலகின் மிக வெப்பமான ஆண்டாக தற்போதைய 2024 ஆம் ஆண்டின்  கோடை மாறி வருகிறது. தமிழகத்திலோ சில நகரங்களின் வெப்ப அளவு 106 டிகிரியை தொட்டும் உள்ளது.

இதையும் படியுங்கள்:

உக்ரைனிலும், காசாவிலும் எரிகணைகளால் மக்களின் வாழிடங்கள் பொசுக்கப்படுவதை, தகர்க்கப்படுவதை கவலையுடன் பார்த்து வருகிறோம்.

எரிகணைகள் மட்டுமா கட்டடங்களை, வீடுகளை தகர்த்து மக்களை தெருக்களில் அலைய விடுகிறது? மழைத்துளிகளும் கூடத்தான் பெரும் பிரளயமாக மாறி பல மாகாணங்களை துடைத்தெறிந்து வருகிறது.

இப்படி கோடிக்கணக்கான ரூபாய், போருக்காக வீணடிக்கப்படும் நிலையில் மறுபுறத்தில் மக்கள் உணவுக்கே வழி இல்லாமல் கையேந்தி நிற்கின்றனர்.

பருவநிலை மாற்றத்திற்கும், கடல் நீரின் வெப்ப அளவு ஏறி இறங்குவதற்கும் காரணமான கார்ப்பரேட்டுகளின், ஏகாதிபத்தியங்களின் நுகர்வையும், உற்பத்தியையும் தடுத்து நிறுத்தாமல் உலகைக் காக்க முடியாது; வறட்சி, வெள்ளம் போன்ற பேரழிவுகளையும் தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது.

  •  இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here