த்திரப்பிரதேசத்தின் பாசிச யோகி ஆதித்யநாத் அரசால் பொய்க்குற்றங்கள் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் காப்பன், இரண்டாண்டுகளுக்கு மேலான சிறைவாசத்துக்குப் பிறகு சமீபத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

உ.பி – யின் ஹத்ராஸ் எனும் கிராமத்தில் 19 வயதான ஒரு தலித் பெண், ஆதிக்க சாதி வெறியர்களால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைப் பற்றி செய்தி சேகரிக்க சென்றபோது, தீவிரவாத அமைப்புகளோடு தொடர்புடையவர் என்று கூறி ஆள்தூக்கி UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் உச்சநீதி மன்றம் செப்டம்பரில் ஜாமீன் வழங்கிவிட்டது. எனினும் அவர் மீது இரண்டாவதாக சுமத்தப்பட்ட பண மோசடி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் மூலமாக பிப்ரவரி 2 – ம் தேதிதான் ஜாமின் கிடைத்தது.

காப்பனின் குடும்பத்தினரும், வழக்கறிஞர்களும் எதிர்கொண்ட மிகப் பெரிய சவால், அவரது ஜாமீனுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இருவரைத் தேடி கண்டுபிடிப்பதாக இருந்தது. நல்வாய்ப்பாக அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் அறிமுகமே இல்லாத இரு நபர்கள் காப்பனுக்காக உத்தரவாதம் அளிக்க முன் வந்தனர். அதில் ஒருவரான குமார் சௌவிருக்கு வயது 63. அவர் 42 ஆண்டுகளாக பத்திரிகையாளராக உள்ளார். மற்றொருவர் டாக்டர் அலீமுல்லா கான், 44 வயதான எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர்.

காப்பனின் வழக்கறிஞரான முகமது தானிஷ் கூறுகையில், “உச்ச நீதிமன்றம் செப்டம்பர் ’22 – ல் UAPA வழக்கில் காப்பனுக்கு ஜாமீன் வழங்கிய போது, உத்தரவாதம் அளிக்க உள்ளூரைச் சேர்ந்த ஒருவரை கண்டுபிடிக்க சிரமமாக இருந்தது. இருப்பினும் லக்னோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான ரூப் ரேகா வர்மா (79 வயது) அதற்கு முன்வந்த போது, இந்த PMLA (பண மோசடி தடுப்புச் சட்டம்) வழக்கில் அது கடினமாக இருக்காது என நினைத்தேன்” என்கிறார்.

குமார் சௌவிர் கூறும் போது, “காப்பனின் ஜாமீனுக்கான உத்தரவாதம் அளிப்பது ஒரு இந்துவாகவும், ஒரு பத்திரிகையாளனாகவும் எனது கடமையாக உணர்ந்தேன்” என்றார். மேலும் “காப்பன் ஒரு நேர்மையான மனிதர். நீதிமன்ற உத்தரவை அவர் பின்பற்றுவார் என  நம்புகிறேன். அவர் நிரபராதி என்று நிரூபிக்கப்படும் வரை நான் அவருக்கு ஆதரவாக நிற்பேன்” என்று உறுதியோடு கூறுகிறார்.

அலீமுல்லா கான்,  நீதிமன்றத்தால் நிரபராதி என்று நிரூபிக்கப் படுவதற்குள், விசாரணைக் கைதிகளாக சிறையில் வாடும் மக்களைப் பற்றி “பைசாத் பாரி” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அவர் கூறுகையில் “காப்பனின் ஜாமீனில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் அநியாயமாக கைது செய்யப் பட்டதிலிருந்தே, அவரது வழக்கைக் கூர்ந்து கவனித்து வருகிறேன்” என்றார். காப்பனுக்கு உத்தரவாதம் அளிப்பதற்காக சௌவீர் தனது  இடத்தை அடமானம் வைத்தார். அதேபோல அலிமுல்லா தனது காரை அடமானம் வைத்துள்ளார்.

2017 முதல் 2022 பிப்ரவரி வரை உ.பி-யில், யோகி ஆதித்யநாத் அரசு மூலம் 138 ஊடகவியலாளர்கள் மீது வழக்கு பாய்ந்துள்ள தகவலை பத்திரிகையாளர் பாதுகாப்புக்குழு (CAAJ) வெளியிட்டுள்ளது. எனவே இத்தகைய விளைவுகளை அறிந்தும் ஒரு பத்திரிகையாளராக நீங்கள் அச்சமடைய வில்லையா என சௌவிரிடம் கேட்டபோது “அவரும் ஒரு பத்திரிகையாளர், நானும் ஒரு பத்திரிகையாளன். உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் கடமையை நாங்கள் இருவரும் செய்கிறோம். எனவே இந்த கடமைக்காக  அரசாங்கம் யாரையாவது சிறையில் அடைக்க நினைத்தால், நானும் அதற்கு தயாராகவே இருக்கிறேன்” என்கிறார்.

காப்பன், சிறையிலிருந்து வெளியே வந்ததும் தனக்கான ஜாமீனுக்கு உத்தரவாதம் அளித்த அவர்களை சந்திக்க விரும்பினார். அலீமுல்லா, சிறை வாயிலில் காப்பனுக்காக காத்திருந்தார். சௌவீர், இப்போதுதான் பக்கவாதத்திலிருந்து குணமடைந்துள்ள நிலையில், கோமதி நகரில் உள்ள ஒரு உணவகத்தில் காத்திருந்தார்.        சௌவீர் மற்றும் அலிமுல்லா இருவருமே, தாங்கள் காப்பனை சந்தித்தபோது உணர்ச்சி வயப்பட்டதாக தெரிவித்தனர்.

சௌவீர் கூறுகையில், “நாங்கள் இருவரும் பேசாமல் இருந்தோம். சில நிமிடங்கள் பேச முடியவில்லை. அவர் என்னைக் கட்டி அணைத்த போது நாங்கள் இருவருமே அழ ஆரம்பித்தோம். நான் அவரை பல ஆண்டுகளாக அறிந்திருப்பதைப் போல உணர்ந்தேன்” என நெகிழ்வுடன் விவரிக்கிறார்.

காப்பனுடனான சந்திப்பு குறித்து அலிமுல்லா கூறும் போது, “காப்பன் தனது சிறை அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அதில் குற்றவாளிகளுடன் சிறையில் அடைபட்டதால் ஏற்பட்ட சிரமங்களையும் சேர்த்தே விளக்கினார். நாங்கள் ஒரே மதத்தைப் பின்பற்றுகிறோம். உத்திரப்பிரதேச அரசு எங்கள் சமூகத்தினரை எப்படி எல்லாம் குறி வைக்கிறது என்பது எனக்குத் தெரியும்.

இருந்தும் இந்த யுத்தத்திற்கு நான் தயாராகத்தான் இருக்கிறேன், இது முடிவல்ல என்று எனக்குத் தெரியும்” என்றார்.

இப்படித்தான் இந்து மதவெறி, காவி பாசிஸ்டுகளின் ஆட்சியில், அறிவுத் துறையினர் மற்றும் ஊடகவியலாளர்கள், அதிலும் குறிப்பாக சித்திக் காப்பனைப் போன்ற சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள் அநீதியான முறையில் தண்டிக்கப் படுகிறார்கள்.

சிறுபான்மையைச் சேர்ந்தவர் நசுக்கப்படும் போது, பெரும்பான்மையாக உள்ள ஜனநாயக உணர்வு கொண்ட மக்கள் அவர்களை எப்படி காத்து நிற்க வேண்டும் என்பதை சௌவீர் நமக்கு உணர்த்தி இருக்கிறார். இத்தகையப் பிணைப்பு வலுவடைய, வலுவடைய மோடி, யோகி கும்பல் வலுவிழக்கும் என்பது உறுதி.

செய்தி ஆதாரம்: தி ஒயர்.

ஆக்கம்: குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here