தனக்குத் தானே “வீரன் ” பட்டம் கொடுத்துக் கொண்ட தேச விரோத கோழையின் வரலாறு…!


சிறு வயதிலேயே சாவர்க்கரின் மூளையில் இந்துத்துவா வெறி குடி புகுந்தது. 1894-95ல் மும்பையிலும்,புனேயிலும் இந்து – முஸ்லீம் கலவரம் நடந்த போது அவருக்கு 12 வயது. தனது சக பள்ளி மாணவர்களை சேர்த்துக் கொண்டு மசூதி மீது கல்லெறிந்து சன்னல் கண்ணாடிகளையும், பளிங்கு கற்களையும் உடைத்து எறிந்தார். நாங்கள் மசூதியை சேதப்படுத்தி, கத்தி, கம்பு மற்றும் ஆயுதங்களோடு ஊர்வலம் வந்தோம். அதுமட்டுமல்ல, முஸ்லீம்களை இந்துக்கள் தாக்கிக் கொல்லுகிறபோது நாங்கள் நடனமாடி மகிழ்ந்தோம் என்று தனதுசுய சரிதையில் உற்சாகம் பொங்க எழுதி உள்ளார்.

சாவர்க்கர் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டம் பாகூர் என்ற ஊரில் சித்பவன் பார்ப்பன குடும்பத்தில் 1883ம் ஆண்டு மே மாதம் 28ம் நாள் பிறந்தார். உயர்நிலைப் பள்ளி படிப்பு முடிந்தவுடன், 1906ம் ஆண்டு சட்டப் படிப்புக்காக லண்டன் சென்றார்.

தீவிரவாத இயக்கமான அபினவ் பாரத் சொசைட்டி யின் உறுப்பினரான அவர்,அங்கு “சுதந்திர இந்திய சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கி, இங்கிலாந்தில் பயிலும் இந்திய மாணவர்களை ஒன்று திரட்டினார். ஒரு மாபெரும் புரட்சிக்காரரைப் போல் சங்கக் கூட்டங்களில் முழங்கினார்.

1909ல் அப்போதைய நாசிக் மாவட்ட கலெக்டர் ஏஎம்டி ஜாக்சன் என்பவரை படுகொலை செய்வதற்கு இங்கிலாந்திலிருந்து துப்பாக்கி விநியோகம் செய்ததற்காக லண்டனில் கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்டார். கொலை முயற்சியில் கலெக்டர் காயங்களுடன் உயிர் தப்பினார்.நீதி மன்றத்தில் அவருக்கு ஐம்பது ஆண்டு கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் சிறைக்கு 1911 ஜூலை 04ம் நாள் கொண்டு போகப்பட்டார்.

ஒரு ஒடுக்குமுறையான காலனிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனிதராக இருப்பதற்கு விலை கொடுக்க வேண்டிய நேரம் வந்த போது, சாவர்க்கர் தன்னை மாற்றிக் கொண்டு ஆங்கிலேய அரசுக்கு விசுவாசத்தைக் கொடுக்கும் உறுதியான ஆதரவாளராக மாறினார்.

பிரிட்டிஷ் விசுவாசி

ஆங்கிலேயர்களின் சிறைச்சாலைக் கொடுமைகளுக்கு ஒரு மாதம் கூட தாங்க முடியாத சாவர்க்கர், தன்னை இரக்கப்பட்டு விடுதலை செய்தால், பிரிட்டிஷ் ஆட்சிக்கு விசுவாசமாக இருப்பதாக 1911ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தனது முதல் கருணை மனுவை அனுப்பினார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.

மற்ற கைதிகளுக்கெல்லாம் சிறையில் சலுகைகள் கிடைத்த போது, அபாயகரமான குற்றவாளி “d” என வகைப்படுத்தப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். ஐம்பது ஆண்டுகள் தண்டனை என்பது வாழ்நாள் முழுக்க நான் சிறையிலேயே கழிக்க வேண்டி வரும். என்னுடைய இளமையும், ஆற்றலும் வீணாகிப் போய்விடும். சாதாரண குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் கூட எனக்கு கிடையாது என்று மனுவில் மன்றாடியிருந்தார்.

1913ம் ஆண்டு மீண்டும் கருணை மனு எழுதினார். அதில் நான் 1906-1907களில் நாட்டில், விரக்தியும், அவநம்பிக்கைகளும் நிரம்பிய சூழலில் தவறாக வழி நடத்தப்பட்டு தீவிரவாத இயக்கத்தின் பாதையில் சென்றேன். என்னை நீங்கள் மன்னித்து விடுதலை செய்தால், ஆங்கிலேயர்களின் மதமாற்ற செயல்பாடுகளுக்கு ஒருபோதும் தடையாக இருக்கமாட்டேன். பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் விரிந்து பரவுவதற்கு வாழ்நாள் முழுவதும் உண்மையாய் செயல்படுவேன். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள என்னால் வழி காட்டப்பட்ட தீவிரவாத இளைஞர்களை ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக நான் கொண்டுவர முடியும். மாட்சிமை தங்கிய பிரபு அவர்கள் என்னை கருணை அடிப்படையில் விடுதலை செய்து, வழி தவறிய மகன் பெற்றோரிடம் வந்து சேர்வது போல், உங்களிடம் சேர்ந்து அரசுக்கு சேவை செய்ய தயாராக இருக்கிறேன் என்று எழுதியிருந்தார்.

சாவர்க்கரின் மன்னிப்பு கடிதம்!

முதல் உலகப் போர் முடிந்த மறு ஆண்டில் 1920 மார்ச் 30ம் நாள் மீண்டும் கருணை மனு அனுப்பினார். இந்தியாவின் வடக்கு எல்லையிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் ஊடுருவி படையெடுப்பு நடக்கும் அபாயம் உள்ளது; எனவே என்னை மன்னித்து விடுதலை செய்தால், பிரிட்டிஷ் ராணுவத்திற்கு ஏராளமான இளைஞர்களைக் கொண்டு வருவேன். ஒவ்வொரு புத்திசாலி இளைஞனும் ஆங்கிலேய அரசுக்கு ஒத்துழைப்பு நல்குவதே இந்தியாவின் நலன்களைக் காப்பதாகும் என்று கூறுவேன். காலனிய அரசை விசுவாசமும், மரியாதையும் கொண்டு முன்னேற்றுவேன். மேன்மை மிக்க அரசாங்கம் கூடுதலாக என்னுடைய சேவையைப் பெறுவதற்கு என்னையும், எனது சகோதரனையும் கருணையுடன் விடுதலை செய்தால், நாங்கள் எந்த அரசியல் இயக்கங்களிலும் ஈடுபடமாட்டோம். அரசு விரிந்து பரந்து வளர அதன் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்று சாவர்க்கர் எழுதிக் கொடுத்துள்ளார். பத்து ஆண்டுகள் அந்தமான் சிறைவாசம் முடிந்து 1921ம் ஆண்டு ரத்தினகிரி சிறைக்கு மாற்றப்பட்டார். தொடர்ச்சியான மன்னிப்பு வேண்டுதல்களும், ஓயாத கருணை மனுக்களும் பலனளித்தன. இறுதியாக 1924ல் பல நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டார்.

சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு எழுதிய கருணை மனுக்கள் அனைத்தும் டெல்லியிலுள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ளன. மாவீரன் சிவாஜியின் வீரத்தை உள்வாங்கி அவர் வழி நடப்பதாக கூறிக் கொண்ட சாவர்க்கர் சிறையிலிருந்து விடுதலையான போது பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசமாகவும், நன்றியுடனும் என்னை அர்ப்பணித்துக் கொண்டு செயல்படுவேன் என்று பிரகடனம் செய்தார்.

பிரிட்டிஷாருக்கு அவர் அளித்த வாக்குறுதிப்படியே சுதந்திரப் போராட்ட காலத்தில் காலனிய ஆட்சிக்கு ஆதரவாகவும், நாட்டு விடுதலைப் போராட்டத்திற்கும், அதன் தலைவர்களுக்கும் எதிராக செயல்பட்டார் என்று வரலாறு நெடுக நிரூபணம் ஆகியுள்ளது.இப்படிப்பட்டவரை “வீர” என்ற அடைமொழியோடு “வீர சாவர்க்கர்” என்றழைப்பது வரலாற்று நகை முரண்.

தனக்குத் தானே புகழாரம்

இப்பேர்ப்பட்ட வீரருக்கு தன் வரலாறு நூல் எழுத ஆசை பிறந்தது. “பாரிஸ்டர் சாவர்க்கரின் வாழ்க்கை” என்ற நூலை 1926ம் ஆண்டு வெளியிட்டார். சித்திர குப்தர் என்பவர் ஆசிரியர் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் அவருடைய சாமர்த்தியம், புத்திசாலித்தனம், வீரம் இவற்றை உயர்த்திக் காட்டி, ஒரு மாவீரனைப் போல் புகழப்பட்டிருந்தார்.அந்தமான் சிறையில் தனக்கு ஏற்பட்ட கொடுமைகளையும், துன்பங்களையும் தேசத்திற்காக புன்முறுவலோடு தாங்கிக் கொண்டதாக விவரிக்கப்பட்டிருந்தது.

தன்னை தானே புகழ்ந்து எழுதிய நூல்

சங்பரிவாரங்களுக்கு எவ்வித வரலாற்று ஆவணமும் இல்லையாதலால், 1987ம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக அந்த புத்தகம் வெளியிடப்பட்டது.

அதற்கு முன்னுரை எழுதிய ரவீந்திர ராம்தாஸ் என்பவர், நூலாசிரியர் சித்திர குப்தர் வேறு யாருமல்ல; அது சாவர்க்கர்தான் என உண்மையை வெளிக்கொண்டு வந்தார். தன்னைத் தானே மாவீரனாக எழுதிப் பார்த்து புளகாங்கிதம் அடைந்த முதல் நூலாசிரியர் சாவர்க்கர்தான். அதில் இளைஞர்கள் எல்லாம் தைரியத்துடனும், விளைவுகள் பற்றியும் கவலைப்படாமல் நாட்டுக்காக உழைக்க வேண்டுமென்று அறைகூவல் விடுத்திருப்பது மிகுந்த நகைச்சுவையாக உள்ளது.

சாவர்க்கரின் சமூக, அரசியல் சிந்தனையின் குறுங்குழுவாதத் தன்மை, முஸ்லீம்களுக்கு எதிராக ஆழமான வெறுப்புணர்வை வளர்த்தது மட்டுமல்லாமல், வரலாற்று நிகழ்வுகளை மதவாத சிந்தனை அடிப்படையில் திரித்து எழுதினார்.

சாவர்க்கர் எழுதி வெளியிட்ட “1857ம் ஆண்டின் சுதந்திரப் போர்” எனற நூலில், ஆங்கிலேயர்கள் இந்தியாவை கிறிஸ்து மயமாக்குவதற்கு எதிராக இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றுபட்ட புரட்சியே முதல் சுதந்திரப் போர் என்றார். மேலும் இந்து வீரர்களும், முஸ்லீம் வீரர்களும் தங்களுக்குள் இருந்த மதப் பகைமையை ஒதுக்கிவிட்டு, கிறிஸ்தவத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர் என்றார்.

ஆனால் இவையெல்லாம் சாவர்க்கர் கைது செய்யப்படுவற்கு முன்பும், பிரிட்டிஷாருக்கு விசுவாசத்தை அறிவிக்கும் முன்பும் எழுதப்பட்டவை.

சாவர்க்கரின் இந்துத்துவா கொள்கைகள் விடுதலை இயக்கத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது ‘அது தங்களுக்கு நல்லது’ என்பதை உணர்ந்ததால் தான் பிரிட்டிஷார் நிபந்தனைகளுடன் சாவர்க்கரை சிறையிலிருந்து விடுதலை செய்தார்கள். அவர் இந்து மகாசபாவிற்கு முன்னோடியாக முதலில் ரத்தினகிரி மகாசபாவைத் துவக்கினார்.

அதனுடைய முக்கிய பணி இந்து மதத்திலிருந்து சென்றவர்களை தாய் மதத்திற்கு கொண்டு வருவதும், மசூதிகளில் தொழுகை நடக்கும் போது இசைக் கருவிகளை வாசித்து இடைஞ்சல் செய்வதுமாகும். இந்து-முஸ்லீம் பகைமையும், வெறுப்பும் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக இருந்ததால் சாவர்க்கரை ஆதரித்தார்கள்.

அன்றைக்கு காங்கிரஸில் அதிருப்தியில் இருந்த தலைவர்களில் ஒருவரான கே.எஸ்.ஹெட்கேவரைச் சாவர்க்கர் சந்தித்து, தனது இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவாக அவரைத் தன் பக்கம் சேர்த்துக்கொண்டார். பின்னர் இருவரும் சேர்ந்து இந்தியாவில் “இந்து ராஷ்ட்ரம்” அமைப்பதே லட்சியம் என பிரகடனம் வெளியிட்டார்கள். 1925ம் ஆண்டு ஹெட்கேவர் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை ஆரம்பித்தார்.

ஒரு மத அமைப்பு தங்களுக்கு ஆதரவாக இருப்பதைக் கண்டு பிரிட்டிஷார் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

சாவர்க்கரும் பிரிட்டிஷாரும் ஒருவருக்கொருவர் நல்லுறவு வைத்துக்கொண்டு செயல்பட்டார்கள். எங்களுடைய முக்கிய எதிரி முஸ்லீம்கள் தானேயொழிய பிரிட்டிஷார் அல்ல என்று சாவர்க்கர் கூறினார். ஆனால் பதவிக்காக இந்துத்துவாவாதிகள் எந்த நிலைக்கும் போவார்கள் என்பது அடுத்தடுத்த நிகழ்வுகளில் தெரிந்தது.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் காங்கிரஸார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது, சாவர்க்கர் தலைமையிலான இந்து மகாசபையினர் வங்காளத்திலும், சிந்து மாகாண அரசிலும் முஸ்லீம்களோடு கூட்டணி வைத்து மந்திரி சபையில் பங்கேற்றார்கள்.

1943ம் ஆண்டு முஸ்லீம் லீக்-இந்து மகாசபா கூட்டணி ஆட்சி நடந்த சிந்து மாகாண சட்டமன்றத்தில் முஸ்லீம்களுக்கென்று பாகிஸ்தானை தனி நாடாக பிரித்துக் கொடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றி பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பி வைத்தார்கள். இந்து மகாசபா அமைச்சர்களின் ஆதரவோடு அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் தற்போது “பிரிவினையை தவிர்க்க நினைத்தவர்” என்று சாவர்க்கர் பற்றி புத்தகம் எழுதி அவரைப் புகழ்ந்து பேசுவது மோசடித்தனமானது.

1947 ஆகஸ்ட் 14ல் இந்தியா-பாகிஸ்தான் என்று பிரிக்கப்பட்ட போது, இந்தியா பிளவுபடுவதற்கு தன் மீதுள்ள பழியை மறைத்து, காந்தி தான் காரணம் என்று சாவர்க்கர் குற்றம் சாட்டினார். இந்த வெறுப்பு சாவர்க்கரின் தளகர்த்தரான நாதுராம் கோட்சே உட்பட அவரின் சீடர்கள் பலருக்கு வெறியாக மாறி தேசப்பிதாவை சுட்டுக் கொல்லும் அளவிற்கு சென்றது.

தேசபக்தர் என்றும், சிறந்த தேசியவாதியாகவும் நம் காலத்தில் புகழப்படுகிற சாவர்க்கர், சுதந்திரப் போராட்டங்களுக்கு எதிராகவும், தலைவர்களைக் காட்டிக் கொடுப்பது போன்ற மன்னிக்கவே முடியாத செயல்களைச் செய்து, இந்துத்வா கொள்கைகளைப் பரப்பி விடுதலை இயக்கத்தை பிளவு படுத்தினார்.

இத்தகைய இழி மனிதரைத்தான் மோடி “இந்தியத் தாயின் உண்மையான புதல்வன்” என புகழாரம் சூட்டுகிறார்.

இத்தகைய நபருக்குத்தான் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பது உள்பட முன்னிறுத்தும் வேலையை சங் பரிவாரக் கூட்டம் மேற்கொண்டு
வருகிறது.

மா.தங்கராஜ்.
நன்றி தீக்கதிர்.
முகநூல் பகிர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here