மோடி தலைமையிலான ஆட்சி விவசாயிகளை வஞ்சிப்பதாக உள்ளது. 3 ஆண்டுகளில் பிரதமரின் கிசான் திட்ட பயனாளிகள் 67% சரிவு என்கிறது தமிழ் இந்து சுட்டிக்காட்டும் ஒரு ஆர்டிஐ தகவல்.

சமூக செயற்பாட்டாளர் கண்ணய்யா குமார் தான் ஆர்டிஐ மனுவை தாக்கல் செய்தவர். இப்படி அரசை அம்பலப்படுத்தும் தரவுகளாக அமையும் கேள்விகளை  கேட்பவர்கள் பாசிச குண்டர்களால் தாக்கப்படுகிறார்கள். அத்தகை நிலை இனிமேல் வராதிருக்க பெரும்பாலான மக்களுக்கு உண்மைகள் புரியவேண்டும். பாசிஸ்டுகள் வீழ்த்தப்பட வேண்டும். நான் விசயத்திற்கு – விவசாயத்திற்கு வருகிறேன்.

அரசு விவசாயிகளுக்கு என்ன தருகிறது?

கார்ப்பரேட்டுகளுக்கு பலஆயிரம் கோடிகளை வாரி வழங்கும் அரசு மூலம் புல்லுக்கும் பொசிவதுதான் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி. இந்நிதியின் (PM-KISAN) கீழ், தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டின் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒரு முறை தலா ரூ 2,000 வீதம் என, மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 நிதி வழங்கப்படுகிறது.

 

விவசாயத்துறையை ஆட்டிவைக்கும் கார்ப்பரேட்டுகளால் விவசாயிகள் பயன்படுத்தும் விதை, உரம், பூச்சிக்கொல்லி என அனைத்தின் விலைகளும் ஏறிக்கொண்டே போகிறது. நன்றாக விளைந்தாலோ உரிய விலை கிடைக்காமல் போகிறது. இன்று பொள்ளாச்சியில் தக்காளிகளை சாலையோரம் கொட்டுகின்றனர். செடியிலேயே அழுக விடுகின்றனர். இந்நிலையில் அரசு தரும் நிதி“உதவி” சிறு குறு விவசாயியின் இழப்புக்கு பொருந்துமா?

விவசாயிகள் தற்கொலை நடக்கும் நாட்டில் இப்படி உதவித்தொகை தருவது சரியானதுதானே. ஏன் அதைப்பற்றி இப்பொழுது RTI யில் கேள்வி கேட்டதைப்பற்றி எழுத வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அதையும் பார்ப்போம்.

கணக்கிலிருந்து ’காணாமல்’ போகும் விவசாயிகள்!

ஒவ்வொரு தவணையாக இத்திட்டத்தில் ’பயன்’பெறும் விவசாயிகள் கணக்கிலிருந்தே காணாமல் போகிறார்கள். இந்த சரிவு 6வது தவணையில் இருந்து ஆரம்பித்துள்ளது. 6வது தவணையை 9.87 கோடி விவசாயிகள் பெற்றனர். அதன் பின்னர் 7, 8, 9, 10வது தவணைகளை முறையே 9.30, 8.59, 7.66 மற்றும் 6.34 கோடி விவசாயிகள் பெற்றுள்ளனர். அதாவது விவசாயிகள் பட்டியலிலிருந்து மறைந்து போகின்றனர்.

தமிழ்நாட்டில் 2019ல் 46.8 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். இந்நிலையில் இந்த அக்டோபரில் 23.04 லட்சம் விவசாயிகளே பயனடைந்துள்ளனர். அதாவது எஞ்சியவர்கள் கணக்கிலிருந்து காணாமல் போயுள்ளனர்.

விவசாயிகள் உதவி திட்டத்தில் டிஜிட்டல் மோசடியாம்!

மோடி அரசின் கீழ்  “முறையாக” அம்பானி, அதானிகளுக்கு லட்சம் கோடிகளை தானமாக தந்தாலும் அதுதான் தவறே கிடையாதே? ஆகவே ஆயிரங்களின் களவுபற்றி நம்மூர் சங்கியின் பேச்சையும் பார்ப்போம்.

‘தகுதியில்லாதவர்களுக்கு அரசு பணம்’ போவதாக பொங்கினார் பாரதிய ஜனதா கட்சி – விவசாய அணியின் மாநில தலைவர் நாகராஜன்.

இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காக பாஜக ஆளும் மத்திய அரசு சார்பில் பயிர் வளர்ச்சி, பயிர் காப்பீடு, உணவு பதப்படுத்தும் வசதிகள் உள்ளிட்ட 32 வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், ஒன்றுதான் பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம். இத்திட்டத்தில், இந்தியா முழுவதும் 19 கோடி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமே இதுவரை 45 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். ஏழை விவசாயிகளுக்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள இத்திட்டத்தில் இ-சேவை மையம் மற்றும் கணினி மையங்களின் உதவியோடு தமிழகத்தில் விஞ்ஞான ஊழல்கள் நடந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.”

என தவறுகளை திருத்தவைக்க போராடப்போவதாக 2020 இல் சூளுரைத்தார்.

நடவு செய்யும் பெண்கள்

விவசாயிகளுக்கான நிதி உதவித் திட்டத்தில் முறைகேடுகள் செய்த  அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார் தமிழ்நாடு விவசாய சங்க கூட்டமைப்பின் செயலாளர், நல்லசாமி.

நமது நாட்டில் அமல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் சிறப்பானவை தான், ஆனால் அவற்றை அமல்படுத்துவதில் தான் ஊழல், முறைகேடுகள், லஞ்சம் ஆகிய சிக்கல்கள் இருக்கின்றன. மகாத்மா காந்தியின் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் இதற்கு ஓர் சிறந்த உதாரணம். வேளாண் மக்கள் பயன்பெறக் கூடிய இத்திட்டம், இன்றைக்கு ஊழல் நிறைந்த திட்டமாக மாறியுள்ளது. மரத்தடியில் படுத்துக்கொண்டு கிடைக்கும் பணத்தை வாங்கிச் செல்லும் அறிவற்ற சமூகமாக விவசாயிகள் உருவாக்கப்பட்டு வருகின்றனர். பொய்யான பட்டியலை சமர்ப்பித்து அதிகாரிகள் நிதி உதவியை கைப்பற்றிக்கொள்கின்றனர். இதேபோன்ற ஊழல் தான் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்திலும் நடந்துள்ளது. இந்த முறைகேடுகள் அனைத்துமே நம் அனைவருக்கும் தெரிந்தவை தான். தண்டனைகள் கடுமையாகும் வரை இதுபோன்ற முறைகேடுகள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும்

என்கிறார் இவர்.

அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன்,

விவசாய நிதி உதவி திட்டத்தில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள இ-சேவை ஊழியர்களையும், தனியார் கணினி மைய உரிமையாளர்களையும், அரசு அலுவலர்களையும் மட்டும் விசாரணை செய்து, தண்டனை வழங்குவது ஏற்புடையதல்ல. இதில் சம்பந்தப்பட்ட அரசு உயர் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்

என்றார். இதுவெல்லாம் தமிழ் ஊடகங்களில் ஏற்கனவே வந்துள்ள செய்திகள்தான். இது முழுமையான பார்வையா என்று பார்ப்போம்.

மரத்தை மட்டும் பார்ப்பவர்களுக்கு காடு தெரியாது!

உதவித்தொகை போலவே கார்ப்பரேட் கொள்ளைக்காக உர மானியமும்  ஒழிக்கப்பட்டு வருகிறது. ஆதாரை வைத்து முழு பணத்தையும் கட்டி உரம் வாங்க வேண்டும் என்கிறது மோடி அரசு!

உரமூட்டை குடோன்

வேர்மட்ட அளவிலான அதிகாரிகளின் முறைகேடுகளை விமர்சிக்கும் சிலர், இந்த அரசின் உண்மையான நோக்கத்தை புரிந்துகொண்டதாக தெரியவில்லை. அரசின் குறிப்பிட்ட ஒரு திட்டத்தில் நடந்துவரும் முறைகேடுகளை மட்டுமே பார்க்கின்றனர். அதிலும் கீழ்மட்ட அளவில் நடக்கும் சில்லரை திருட்டுதான் கண்ணில் படுகிறது. இவர்களின் பரிந்துரைப்படி கீழ்மட்ட அளவில் அரசு அதிகாரிகள், ஊழியர்களை தண்டிப்பது மட்டும் போதுமானதா?

இன்று சிறு விவசாயிகள் சில மாதம் நிலத்தில் உழைக்கின்றனர். சில மாதம் நகரங்களுக்கு வேலை தேடிப்போகின்றனர். உதாரணத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்தால் திருப்பூர் ஆளில்லாமல் வெறிச்சோடும் என்று சொல்லப்பட்டதும் உண்டு. தொழில் நகரங்களில் அந்த காலி இடத்தை விவசாயக்கூலிகளாக இருந்த வட மாநிலத் தொழிலாளர்கள் நிரப்பி அவருகின்றனர். இப்படி விவசாயிகள் முழுமையாக விவசாயம் செய்து வாழமுடியாத நிலைமை நீடிக்கிறது.

அரசு இன்று பயனாளிகளின் பட்டியலில் ஒருவழியாக விவசாயி அல்லாதவர்களை  ‘கண்டுபிடித்து’ நீக்கிவருகிறது. நாளை விவசாயிகளை விவசாயத்திலிருந்தே விரட்ட உள்ளது. மூன்று வேளாண்சட்ட திருத்தங்களை அமல்படுத்த துடிக்கும் பாஜக அரசின் உண்மையான நோக்கமும் இதுதான் என்பதை டெல்லியில் முற்றுகையிட்ட விவசாயிகள் உலகுக்கே உணர்த்தியுள்ளனர்.

நாம் அரசின் சிறு தவறுகளையோ, கவனக்குறைவுகளையோ இப்படி மிகைப்படுத்தி சொல்லவில்லை. இதை புரிந்துகொள்ள வகைமாதிரிக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை அரசு ஒழித்த வரலாற்றைப் பற்றி பார்ப்பது அவசியம்.

கேஸ் மானியத்தை ஒழித்துவிட்ட அரசு!

Direct Benefit transfer திட்டத்தில் 2013 மே மாத கணக்கின்படி, டெல்லியில் 14.2 கி சமையல் எரிவாயு (LPG) விலை 410 ஆக இருந்த நிலையில் மக்கள் இரு மடங்கு தொகை செலுத்த வேண்டும், அதற்கான மானியத் தொகை ரூ.435 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என கூறி இருந்தனர்.

முதலில், வசதியானவர்கள் மட்டும் தானாக முன்வந்து சிலிண்டருக்கான மானியத்தை வேண்டாம் என்று அறிவியுங்கள் என்றது அரசு. பின்னர் அனைவருக்கும் மானிய வெட்டை அமலாக்கிவிட்டது.

இன்றைய மானிய அல்லது உதவித்தொகை வெட்டு என்பது காங்கிரசின் ஆட்சியில் தொடங்கி மோடியால் உச்சம் தொட்டுள்ளது. வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் 14 கிலோ எடை கொண்ட எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கான மானியம் அனைத்துக் குடும்பங்களுக்கும் இனி தரப்படாது என்கிறது மத்திய அரசு.

மத்திய பெட்ரோலியத்துறை அறிவிப்பு!

நாட்டில் தற்போது 30.50 கோடி எல்பிஜி இணைப்புகள் உள்ளன, இதில் 9 கோடிக்கும் அதிகமாக உஜ்வாலா திட்டத்தின் கீழ்வழங்கப்பட்டது. இன்று யானைப்பசிக்கு சோளப்பொரியை போட்டு விட்டு கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறது அதிகார வர்க்கமும் காவிக் கும்பலும்.

மோடியுடன் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
மோடியுடன் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

”மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் 21ம் தேதி அறிவித்ததுபோல், உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவசமாக கேஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு மாதம் ரூ.200 வீதம் 12 மாதங்களுக்கு மானியம் வழங்கப்படும். சமையல் சிலிண்டர் விலை கடுமையாக அதிகரித்து வரும்நிலையில் இந்த மானியம் அவர்களுக்கு சமாளிக்க உதவும்”

இப்படி பேசிய, மத்திய பெட்ரோலியத்துறை செயலாளர் பங்கஜ் ஜெயினைப் போன்ற உயரதிகாரிகள் அனுபவித்துவரும் சலுகைகளில் கைவைக்குமா? நிம்மியின் அமைச்சகம்.

பெட்ரோலுக்கான மானியத்தை மத்திய அரசு கடந்த 2010 ஜூன் மாதம் நிறுத்தியது, டீசலுக்கான மானியத்தை 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் நிறுத்தியது. அடுத்த இரு ஆண்டுகளில் மண்ணெண்னெய்க்கான மானியத்தை நிறுத்தியது. இப்போது எல்பிஜி சிலிண்டர்களுக்கு மட்டும் மானியம் வழங்கப்பட்டு வந்தது. அதுவும் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது.

அரசின் பார்வையில் உண்மையில்  யார்தான் பயனாளிகள்?

உழைக்கும் மக்கள் யாரும் பயனாளிகள் இல்லை. பல்வேறு பிரிவினருக்கும் உதவ என்று கவர்ச்சியாக அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் இறுதியாக ஒரே இடத்தில்தான் முடிகின்றன. அதாவது, விவசாயிகள், கிராமப்புற வேலையற்ற விவசாய கூலிகள், மாணவர்கள் என உழைக்கும் மக்களுக்கு மானியமோ உதவித்தொகையோ தரப்படாது என்பதில்தான் முடிகிறது.

இதற்கு நேரெதிராக வரித்தள்ளுபடி, வங்கிக் கடன் தள்ளுபடி, வாராக்கடன் உள்ளிட்ட அனைத்து  வகை சலுகைகளுக்கும் உரியவர்கள் கார்ப்பரேட்டுகள் மட்டுமே! என்பதை உறுதியாக நடைமுறைப்படுத்துகிறது பாசிச மோடி அரசு.

உலக வர்த்தக கழகத்தின் உத்தரவுகளை கச்சிதமாக  அமலாக்குவதையே இவை அனைத்தும் நிரூபிக்கிறது என்பதை உணர்வோம். மற்றவர்களுக்கும் உணர்த்துவோம்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here