ழகான இலக்கணக் கட்டமைப்பையும், பல்வேறு இலக்கியங்களையும் தன்னகத்தே கொண்டு தமிழர்களின் உயிரில் கலந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மிளிர்ந்து நிற்கும் தொன்மை வாய்ந்தது தமிழ் மொழி. அதனை விழுங்கி ஜீரணித்துவிட ஆயிரம் ஆண்டுகளாக முயன்று தோல்வி அடைந்த பார்ப்பனியம் 2014-ல் மோடி தலைமையில் காவி பாசிஸ்டுகள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பிறகு புத்துணர்ச்சியுடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது

தனது காவி சாம்ராஜ்யத்தை இந்தியாவெங்கும் நிறுவிட தேர்தல் மோசடிகள் முதல் எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்குவது என்று தனக்கு ஓட்டு போடாத மக்களின் விருப்பங்களை புறந்தள்ளிவிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்த்து தனது அடிமைகள் மூலமும், நேரடியாகவும் இந்தியாவில் 21 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. ஆனால் அத்தகைய வழிமுறைகள் மூலமும், தேர்தல் மூலமாகவும் தமிழ்நாட்டில் கால்பதிக்க முடியாமல் திண்டாடும் ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் தற்போது ஒரு மாற்று வழியாக தமிழ் மொழி மீது பாசம் காட்டுவதாக நடிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

ஆர்எஸ்எஸ்-சால் கவனமாகத் தீட்டப்பட்ட இத்திட்டத்தின் வெளிப்பாடுதான் மோடி ஐ.நா. சபையில் தமிழில் முழங்குவது, திருக்குறள், அகநானூறு போன்ற இலக்கியங்களை மேற்கோள்காட்டி பேசுவது, வேட்டி சட்டையில் வருவது என்ற செப்படி வித்தைகள்.

ஒருபுறம் தமிழ் ஒரு நீசபாஷை, கருவறையில் பாடத்தகுதி இல்லாதது, தமிழ் மொழியில் ஒன்றுமில்லை இந்தி/சமஸ்கிருதத்தில் தான் எல்லாம் இருக்கிறது கூறிக்கொண்டும், ஒன்றிய தகுதித் தேர்வுகளிலிருந்தது தமிழை நீக்கிக்கொண்டும், தமிழ் வளர்ச்சிக்கான தொகையை வெட்டி சுருக்கிக் கொண்டும் இருக்கும் காவி பாசிஸ்டுகள் தற்போது “தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு நாங்கள் என்னவெல்லாம் செய்கிறோம் பாருங்கள்” என்று “காசி தமிழ் சங்கமம்” என்ற “ஜூம்லா” காட்டுகின்றனர்.

அப்படியே இந்நிகழ்ச்சி தமிழ் மொழி சார்ந்து நடத்தப்படுவதாக இருந்தாலும், தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சகம்/அதிகாரிகளை கலந்தாலோசிக்காமலும், தமிழறிஞர்கள், தமிழார்வலர்களின் பங்கேற்பு இல்லாமலும் நடத்தப்படுகிறது. இந்நிகழ்வுக்கு கூட்டத்தை கூட்ட IIT மற்றும் பல கல்லூரி, பள்ளி மாணவர்கள் அடங்கிய சுமார் 2500 பேரை அத்துறை சார்ந்த அமைச்சகம்/அதிகாரிகளின் அனுமதி பெறாமல் ஆட்டுக்குட்டி அண்ணாமலை தலைமையில் காவித்துண்டு போர்த்தி அழைத்துப் போகப்பட்டுள்ளனர். இதன் மூலம் வெளிப்படையாகவே ஆர்எஸ்எஸ்-க்கு ஆள் பிடிக்கும் வேலையைச் செய்துள்ளனர்.

இந்நிகழ்வில் ஆர்எஸ்எஸ்-பாஜக பாசிச கும்பல் தனது அரசியல் அடிமைகளையும், கொடுத்த காசுக்கு மேலே கூவும் இளையராஜா போன்ற தமிழின துரோகிகளையும் மேடையேற்றி மோடியின் புகழ் பாட வைக்கின்றனர். இருந்துவிட்டு போகட்டும் என்றால், இதில் பேசப்பட்ட கருத்துக்கள்தான் மிகமிக ஆபத்தானது. குறிப்பாக, யோகி ஆதித்யநாத் “சிவன் வாயிலிருந்து தான் தமிழ் மொழி வந்தது” என்று கூறியிருப்பது மிகவும் தந்திரம் வாய்ந்தது. இதன்மூலம் சிவனை வணங்காதவர் தமிழர்கள் அல்ல என்று சிறுபான்மையினரை ஒதுக்கி வைக்கும் இவர்களின் இந்துராஷ்டிரா கனவுக்கு இக்கருத்துப் பயன்படும்.

“காசி தமிழ் சங்கமம்” என்ற இந்த நிகழ்வையொட்டி தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் இக்காவி பாசிஸ்டுகள் தொன்றுதொட்டு செய்துவரும் குழிப்பறிப்புகளும், புறக்கணிப்புகளும் பற்றிய பல விவரங்கள் பல முற்போக்கு, ஜனநாயக, திராவிட அமைப்புகள், சமூக ஊடகங்கள் அம்பலப்படுத்தி வருகின்றன.

தமிழ்நாட்டில் நேரடியாக அரசியல் அரங்கில் காலூன்ற முடியாத நிலையில் காவி பாசிஸ்டுகள் கலாச்சார, பண்பாட்டு ரீதியாக தமிழ் மக்களின் பக்தி, மொழி மீதான பற்று ஆகிய வழிமுறைகளின் மூலம் நுழைந்துவிட முயற்சிக்கிறது. அதன் ஒரு நிகழ்ச்சி நிரல்தான் இந்த காசி தமிழ் சங்கமம். இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் “பார்த்தீர்களா தமிழ் மொழியை நாங்கள் அங்கீகரித்து இவற்றையெல்லாம் செய்கிறோம். அதேபோல நீங்களும் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்ற ஒரு கருத்துருவாக்கம் செய்வதுதான் இவர்களின் தமிழ் மீதான திடீர் பாசத்துக்கு காரணம்.

இதையும் படியுங்கள்: பார்ப்பன ஆதிக்க மொழி தான் இந்தி!

ஆனால் அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் ஒப்பீட்டளவில் பக்குவப்பட்ட தமிழர்கள்,

“கருவறையில் தமிழ் பாட முடியுமா?

தியாகராஜ ஆராதனையில் தமிழில் பாட முடியுமா?

ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்றுவிக்க காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுமா?

கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் மூடப்பட்ட தமிழ்வழிப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமா?

தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு நிறுவனங்கள், வங்கிகளில் தமிழில் விண்ணப்பங்கள் வழங்கப்படுமா?

15,000 பேர் மட்டுமே பேசக் கூடிய சமஸ்கிருதத்திற்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டை விட உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பேருக்கு மேல் பேசும் தமிழ்மொழிக்கு வழங்கப்படுமா?

கங்கையின் கரையில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு கேட்பாரற்று கிடக்கும் திருவள்ளூர் சிலை அங்கு நிறுவப்படுமா?

போன்ற பல கேள்விகளை காவி பாசிஸ்டுகளிடம் கேட்கின்றனர்.

ஆனால் காவி பாசிஸ்டுகளோ வழக்கம்போல “செல்லாது செல்லாது” என்று கிளம்பி விடுகின்றனர்.

  • ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here