உழவர் போராட்டம்: இந்திய வரலாற்றில் தனிச்சிறப்பானதொரு இயக்கப்போக்கு.


பெருநிலவுடையார்கள் ஆதிக்கம் செலுத்தும் கிராமப்புறங்களில் உள்ள நிலவுடைமை விவசாயிகளுக்கும், நிலமில்லா கூலி விவசாயிகளுக்கும் உள்ள முரண்பாடுகளை தீர்த்து ஒரு பொது கோரிக்கைக்காக எப்படி அவர்களை ஒன்றிணைத்து கொண்டுவருவது என்பது நீண்டநெடுங்காலமாக இடதுசாரிகள் மத்தியில் விவாதிக்கப்பட்டுவருகிறது. இடதுசாரி விவசாய சங்கங்கள் கூட்டுநடவடிக்கைக்கு மற்ற இயக்கங்களோடு வந்தாலும், கூலி விவசாயிகளின் கோரிக்கைகளையும் அவற்றில் இணைக்க வேண்டும் என்ற இடதுசாரிகளின் முயற்சி இதுவரை சாத்தியமாகவில்லை என்பதுதான் உண்மை.

இந்தியாவில் விவசாயிகளுக்கும் விவசாய கூலிகளுக்குமான முரண்பாடு வெறும் பொருளாதார அடிப்படையை மட்டுமே கொண்டதில்லை. மாறாக, அது சாதிய அடிப்படையிலும் உள்ளது. நிலமுள்ள பெரும்பான்மை விவசாயிகள் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களாகவும், விவசாய கூலிகளில் பெரும்பான்மையினர் ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். அதிலும் இந்தியாவின் வடமாநிலங்களில் ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள் சொந்தமாக நிலம் வைத்துக்கொள்ளக்கூட காலம்காலமாக அனுமதிக்கப்படுவதில்லை.

டெல்லி சுற்றுவட்டாரத்தில் ஜாட்-தலித் சாதிகளுக்கிடையேயான முரண்பாடாக இது உள்ளது. எடுத்துக்காட்டாக, டெல்லிக்கு அடுத்த கஞ்சாவாலா என்ற கிராமத்தில் 1970-களில் கம்யூனிஸ்ட் கட்சியால் வளர்த்தெடுக்கப்பட்ட கூலி உயர்வுக்கான போராட்டம் இச்சாதிகளுக்கிடையேயான மோதலாக உருவெடுத்தது. இத்தகைய முரண்பாட்டை உள்வாங்கி ஆராய்வது இந்திய புரட்சிக்கான சிக்கல்களில் பிரதானமாக உள்ளது.

மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இந்த முரண்பாடுகளை வெகுவாகக் களைந்துள்ளது. இப்போராட்டத்தில் நிலஉடமையாளர்கள் மட்டுமின்றி விவசாய கூலி தொழிலாளிகளும் பெருமளவில் பங்குபெற்றுவருகின்றனர். முசாஃபர் நகரில் செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகளின் மஹாபஞ்சாயத்தை ஒருங்கிணைத்தவர்கள் அதில் அனைத்து வகுப்பினரும், ஜாதியினரும், மதத்தினரும் பங்குபெற்றதாக பெருமையுடன் அறிவித்தனர்.

முசாஃபர் நகர் மஹா பஞ்சாயத்து

பெரிய கட்சிகள் கூட இந்த இயக்கப்போக்குடன் இணைந்து போகவேண்டிய கட்டாயத்தை இப்போராட்டம் உருவாக்கியுள்ளது. செப்டம்பர் 27 அன்று விவசாயிகள் அழைப்பு விடுத்த நாடுதழுவிய முழுஅடைப்பை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரிக்க வேண்டியிருந்தது. அதோடு மட்டுமல்லாமல் ஆண்டாண்டு காலமாக இருந்துவந்த சாதிய முரண்பாடுகளையும் இவ்வியக்கம் தாற்காலிகமாகவாவது தீர்த்துள்ளது.

படிக்க:

கார்ப்பரேட்டுகளின் பிடியில் விவசாயம்! தொடரும் மக்கள் திரள் போராட்டம்!

கூடவே இரண்டு முக்கியத் தளங்களிலும் இத்தகைய இயக்கம் மாறுதல்களைக் கொண்டுவந்துள்ளது. முதலாவதாக, பெண்கள் போராட்டங்களில் பங்குபெறுவது பெருமளவு அதிகரித்துள்ளது. ஆணாதிக்கத்தால் ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டிருந்த ஜாட் பெண்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து இப்போராட்டங்களிலும், போராட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களிலும் திரளாகக் கலந்துகொள்கின்றனர். இது முன்னெப்போதும் நினைத்துகூடப் பார்க்கமுடியாத ஒன்றாகும்.

மற்றொன்று, இப்பகுதிகளில் வாழும் ஜாட்கள் மற்றும் முஸ்லீம்களுக்கிடையே உள்ள உறவு. பொதுவாகவே இச்சமூகங்களுக்கிடையே சுமூகமான உறவு இருந்து வந்தாலும், தற்போதைய ஆளும் கட்சியான பா.ஜ.க. 2014-ஆம் ஆண்டு தேர்தலில் ஜாட் சமூகத்தின் ஓட்டுகளை அறுவடை செய்ய மூட்டிவிட்ட கலவரத்தால் இவ்வளவு காலமும் பிளவுண்டு கிடந்தன. தற்போது இவ்விரு சமூகங்களும் 7 ஆண்டுகளுக்கு முன் செய்த தவறை மீண்டும் செய்யப்போவதில்லை என்று பரஸ்பரம் உறுதியளித்துள்ளன.

விவசாயிகளின் இந்த போராட்டம் சாதி, மத, பாலியல் வேறுபாடுகளை விடுத்து பரந்துபட்ட மக்களை ஒன்றுபடுத்தியுள்ளது. விவசாயிகள் தங்களுக்கான கோரிக்கைகளோடு நிற்காமல் ஒன்றிய எதேச்சதிகார போக்கிற்கும், தேசிய பணமாக்கல் போன்ற அதன் தவறான பொருளாதார கொள்கைகளை எதிர்த்தும், பீமா-கோரேகான் பொய் குற்றச்சாட்டில் சிறையிலுள்ள முன்னணியாளர்களுக்காகவும், விசாரணைக் கைதிகளாக சிறையில் வாடுபவர்களுக்காகவும் கோரிக்கைகளை முன்னிறுத்தி நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் போராடுவது என்று புதிய பரிணாமம் அடைந்துள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற எந்த ஒரு விவசாயிகளின் போராட்டமும் இப்படிப்பட்ட ஒரு அர்த்தம் செறிந்த போராட்டமாக இருந்ததில்லை.

இத்தகையதொரு போராட்டத்தை அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்கள் தாம் முன்னெடுப்பார்கள், விவசாயிகள் அதிகபட்சமாக தொழிலாளர் வர்க்கத்தின் கூட்டாளியாக இருப்பார்கள் என்றுதான் மார்க்சியம் சொல்லுகிறது. ஏனென்றால் நிலவுகின்ற அரசை தகர்த்துவிட்டு அடுத்து என்னவகையான அரசு அமைக்கவேண்டும் என்று விவசாய வர்க்கத்துக்கு தெரியாது என்று சொல்லப்படுகிறது. ஆனால் இங்கே விவசாயிகள்தான் ஜனநாயகத்துக்காகவும், மதச்சார்பின்மைக்காகவும், அரசியல் சாசனத்தை காக்கவும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்திவருகின்றனர். படித்த, குட்டிமுதலாளிய மேட்டுக்குடி வர்க்கமும் தற்போது இந்த போராட்டத்தை ஆதரித்து விவசாய வர்க்கத்தின் மீது நம்பிக்கை வைத்து அவர்களின் இந்த போராட்டம் அரசை மீண்டும் ஒரு ஜனநாயகப் பாதைக்கு மாற்றும் என்று நம்புகிறது.

பிற்போக்குத்தனமுள்ள கிராமப் பின்னணியில் இருக்கும் ஒரு வர்க்கம் எப்படி தற்போது ஒரு முன்னேற்றமடைந்த வர்க்கமாக வளர்ந்து, தேசிய அளவிலான ஒரு போராட்டத்தை விடாப்பிடியாக நடத்திக்கொண்டுள்ளது?
அதற்கு காரணம் மாறிவரும் சூழ்நிலைகளேயாகும். தற்போதைய ஏகாதிபத்திய முதலாளித்துவம் எல்லா சிறு அளவிலான விவசாயம் உட்பட அனைத்து சிறு உற்பத்தி நிறுவனங்களையும் விழுங்கி வருகிறது. ஆகவே விவசாயிகள் நிலவுடைமையை எதிர்த்து மட்டும் போராடாமல் இத்தகைய ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும் எதிர்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

இந்தியாவில் விவசாயத்தில் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் ஊடுருவல் புதிய தாராளவாதக் கொள்கை அமுலுக்கு வந்ததையடுத்து வேகம் பெற்றுள்ளது. புதிய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் அரசின் கொள்கையானது விவசாயத்தை இத்தகைய ஊடுருவல்களிலிருந்து காப்பாற்றிவந்தது. ஆனால் புதிய தாராளவாதம் வந்தபின்பு, விவசாயம் ஏகாதிபத்திய முதலாளித்துவத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. விவசாயிகளை நிலங்களை விட்டு வெளியேற்றும் நோக்கில், எல்லாவித மானியங்களும் நிறுத்தப்படுவது, பணப்பயிர்களுக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயம் ரத்து, கடனுதவி நிறுத்தம், இலவச மின்சாரம் நிறுத்தம் என அடுக்கடுக்கான நெருக்கடிகள் தரப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தீவிரமான விளைவுகளால் லட்சக்கணக்கான விவசாயிகளின் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

அரசு கடைசியாக விட்டுவைத்திருந்த குறைந்த பட்ச ஆதாரவிலை என்பதையும் இந்த மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதால், விவசாயிகள் வேறு வழியில்லாமல் தங்களது புதிய எதிரிகளான உள்ளூர் தரகு முதலாளிகளையும், பன்னாட்டு விவசாய நிறுவனங்களையும் எதிர்த்து இத்தகைய ஒரு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

முந்தைய கேள்விக்கான பதிலின் மற்றொரு பக்கம் இந்தப் போராட்டத்திலேயே அடங்கியுள்ளது. ஆம், விவசாயிகளின் இந்த நீண்ட போராட்டம் அவர்களை பிற்போக்குத்தனம், சாதி பாகுபாடு, ஆணாதிக்கம் போன்ற பண்புகளிலிருந்து விடுத்துள்ளது என்பதுதான். இதுவே போராட்டங்களின் புரட்சிகர விளைவாகும்.

ஆங்கிலத்தில்:
பிரபாத் பட்நாயக், பேராசிரியர், JNU.

தமிழில்: செந்தழல்

நன்றி: Countercurrents.org

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here