‘பம்பாய்க் கலவர வழக்கு ‘ :உச்சநீதிமன்றத் தீர்ப்பு :நவம்பர் 4, 2022

” சட்டத்துறை  தாமதப்படுத்தியதற்கும் சேர்த்து  பாதிக்கப்பட்டோரே  தண்டிக்கப்படுவதா ? ”  : பம்பாய்  ஷகீல் அகமது கேட்கிறார்.

வழக்குரைஞரும்  மக்கள்  உரிமைச் செயற்பாட்டாளருமான  ஷகீல் அகமது  கடந்த  30 ஆண்டுகளாகப்   பலவகைகளிலும் ‘பம்பாய்க் கலவரத்’ தில்  பாதிக்கப்பட்டவர்களுக்காக  ஓய்வு உறக்கம் இல்லாமல் உதவி  செய்துவருகிறார்.  பாதிக்கப்பட்டவர்களை  வழக்காடுமன்றங்கள் வெறுங்கைகளோடு  திருப்பி  அனுப்புகின்றன,  அங்கே  நீதி – நியாயம்  இல்லை  என்று  உறுதியாகச்  சொல்கிறார்  அவர்.

சென்ற  வெள்ளிக்கிழமை,  நவம்பர் 4  ஆம் நாள்  ‘பம்பாய்க் கலவரம்’  தொடர்பான  உச்சநீதிமன்ற  வழக்கில் தீர்ப்பொன்று  வந்தது. மனுதாரரான  ஷகீல்  அகமதுவுக்கே தீர்ப்பு  வந்ததுபற்றித்  தெரியாது. பம்பாய்  மூத்த ஊடகக்காரர்  ஒருவர்  அகமதுவை  அழைத்து  நீதிக்கான  அவரது  இருபதாண்டு  நெடிய போராட்டம்  திடீரென்று முடிவுக்கு வந்துவிட்டது  என்று  தெரிவித்திருக்கிறார்.

51 வயதாகிவிட்ட  வழக்குரைஞர்  ஷகீல் அகமதுவுக்கு  அது ஒன்றும்  அதிர்ச்சிதரவில்லை.  இத்தனை  ஆண்டுக்காலமும் நீதித்துறை  நீண்ட பல  வருடங்களாக  இந்த வழக்கை இழுத்துப் பறித்தே  வந்திருக்கிறது.  நல்ல முடிவு  கிடைக்கும் என்ற  நம்பிக்கையே   அறுந்து  போய்விட்டதென்றார் அகமது.  இதில்  அவரது  மனசைப்  பாதித்த  விசயம் — அவரது  மனுவை  முடிவுகட்டுவதற்கு  மன்றம்  சொன்ன காரணங்கள் கிரிமினல் நோக்கம் கொண்டவை.  சட்ட நியாயம், தர்க்க நியாயம்  போன்ற பேச்சுக்குக் கூட  முயற்சி அற்ற, பொறுப்பு அற்ற — அதாவது,  ”  பல வருசம்  ஆகிவிட்டது / காலம் கடந்துவிட்டது ”  என்று சொல்லித் தூக்கி வீசிவிட்டார்களே என்ற குமுறல்தான்  பொங்கிவழிந்தது.

2001 – ல்   நீதிபதி B.N. சிரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையை  மகாராட்டிர அரசு நடைமுறைக்குக் கொண்டுபோகாமல் மூன்று ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டதால்,அகமது வேறுவழியின்றி வழக்கை உச்சநீதி,மன்றத்துக்குக் கொண்டுபோனார். 30 போலீசார்மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்கவேண்டும்; அவர்கள்தான் முசுலீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டவர்கள்  அல்லது  நேருக்கு நேர் சுட்டவர்கள் — இது தான் கமிஷனின் தெளிவான தீர்ப்பு, குறிப்பான சிபாரிசு. பலர் செத்துப்போகவும் படுகாயம் அடையவும் அவ்வாறு அவர்கள் சுட்டதே காரணம். அகமதுவின் மனு ” 168 பேர்கள் ‘கலவரத்துக்குப்பிறகு காணாமல் ஆக்கப்பட்டுவிட்டார்கள்’, எனவே அவர்களின்  குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் கொடுக்கவேண்டும் ” என்று கோரியது.

21 ஆண்டுகள் சென்று  உச்சநீதிமன்றம் இப்போது  உத்தரவுகள் பிறப்பித்தது. அதாவது — பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும்  2 லட்சம் இழப்பீடு தரவேண்டும், ஜனவரி 1999 முதல் அதற்கு  9% வட்டி கூடுதலாகச் சேர்த்துக்கொடுக்கவேண்டும். அரசாங்கம் அந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தது அந்த ஆண்டுதான். மேலும் காணாமல்போனவர்களைக் கண்டுபிடிக்க ஒரு குழு நியமிக்கவேண்டும். அவர்களுக்கு  ” நிவாரணம் கொடுக்காமல் இருந்ததற்கும் சேர்த்து, என்ன காரணங்களோ அவற்றைக்  கண்டுபிடிக்கும் முறைகளையும்  இறுதிசெய்யவேண்டும்.”

பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் பரிவாரத்தால் இடிக்கப்படுகிறது

தவறுசெய்த காவலர்களின்மீது நடவடிக்கை எடுப்பதைப் பொறுத்தவரை,  மன்றம்  “காலம் வெகுவாகக் கடந்துவிட்டது. இப்போது 2022–ஆம் ஆண்டில், ஒழுங்குநடவடிக்கை பொறுத்தமட்டில், ஒழுங்குமுறை ஆணையம் போட்ட உத்தரவுகளின் செல்லுபடிநிலை  மற்றும் தீர்மானிக்கப்பட்ட தண்டனைகளின் அவசியம் இரண்டைப் பற்றியும் இப்போது விசாரித்துக் கொண்டிருப்பது பொருத்தமானதல்ல,” என்று குறிப்பிட்டது.

டிசம்பர் 6, 1992 அயோத்தியில் பாபரிமசூதி இடிக்கப்பட்டதைத்  தொடர்ந்து பம்பாய் நகரின்  எல்லா  இடங்களில்  வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டது. சிவசேனா, விஸ்வஹிந்து பரிசத் (VHP), பஜ்ரங்தள் (BD), ராஷ்டிரீய ஸ்வயம் சேவக் சங் (RSS) ஆகிய அமைப்புக்களின்பல உயர்மட்டத் தலைவர்கள் நகரம் முழுதுமிருந்த  முசுலீம்கள்மீது  வன்முறைத் தாக்குதல் நடத்த கும்பலகளைத்திரட்டியதாகக் குற்றப் புகார் எழுந்தது. பரவலாக ஒருமாதம் நடத்தப்பட்ட கலவரங்களில் 900 பேர்

(அவர்களில் பாதிக்கப்பட்ட அனேகம் பேர்  முசுலீம்  சமூகத்தைச் சேர்ந்தவர்களே) கொல்லப்பட்டார்கள். நீதிபதி சிரீகுமார்  கமிஷன், அப்போதைய சிவசேனைத் தலைவர் பால்தாக்கரேதான் தன்கட்சி ஊழியர்களிடம்  ” முசுலீம்களுக்கு எதிராகத்  திட்டமிட்ட  தாக்குதல்கள் நடத்தி  பழிக்குப்பழி வாங்குவோம் ! ” என்று தூண்டிவிட்டதாக நேர்குற்றம் சாட்டியது.

பெருந்தொகுதியாகத் திரட்டப்பட்ட கமிஷன் அறிக்கையும்   அதன் மறுக்கமுடியாத  (ஆழ்ந்த கவனத்துக்குரிய), தேடிக்கண்டறியப்பட்ட உண்மைகளும் காங்கிரஸ் கட்சியாலும் , அதன்பிறகு சிவசேனா – பாஜக அரசாங்கத்தாலும் கடந்த முப்பது  ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டுக்  குப்பையில் வீசப்பட்டன. கலவரங்கள் வெடித்தபோது, மகாராட்டிர மாநிலத்தில் காங்கிரஸ்தான் ஆட்சியிலிருந்தது. பிறகு 1995- ல் சிவசேனா – பாஜக கூட்டாட்சி வந்தது.  கமிஷனின் பிரதான கவனம் குவிக்கப்பட்ட  ‘பம்பாய்க் கலவரத்’திலிருந்துகவனத்தைத்திசைதிருப்பி மாநிலத்தில்தொடர்ச்சியாக நடந்த குண்டுவெடிப்புக்களின் பக்கம் தள்ளிவிட்டது. நீதிபதி சிரீகிருஷ்ணா பின்வாங்க மறுத்தார்.  இதை ஒட்டியே  கமிஷனின் அறிக்கையை அரசு முழுவதுமாக ஒதுக்கித்  தள்ளுவதற்கான முயற்சிகள் தொடங்கின.

1998  முதல் 2001 வரை அகமதுவும்  மற்ற  குடிமைச்  சமூகக் குழுக்களும்  குற்றம் செய்த  போலீஸ்மீது நடவடிக்கை கோரி  தீவிரமாகப்  பிரச்சாரம்  எடுத்தார்கள்.  இதை அகமது  இப்போது  நினைவு கூர்கிறார்.அவர்களின் கோரிக்கை  தொடர்ச்சியாக உறுதியாக  இருந்தது.  அவை : “கமிஷன் அறிக்கையை  அடிப்படையாக  வைத்து  நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ; பம்பாய் நகரில்  பல  அப்பாவி  மக்களைக்  கொன்ற,  கொலைசெய்யப்படக்  காரணமாக இருந்த  போலீஸ்மீது நடவடிக்கை  வேண்டும் ;  அகமது வழக்காடுமன்றம்  சென்றார்;  நீதிவேண்டும்  என்பதே  பாதிக்கப்பட்டவர்களின்  குரல்  என்று தீர்மானமாகச்  சொன்னார்.  “உச்சநீதிமன்றம் —  தான் நீதியை நிலைநாட்டாமல் இருந்துவிட்டு எப்படி ” காலம் கடந்துவிட்டது” என்ற  சாக்குப்போக்கைக் காரணமாகச் சொல்லமுடியும் ?” என்றும், “நீதித்துறையின் தாமதத்திற்குப் பாதிக்கப்பட்டவர்கள்  தண்டிக்கப்படலாமா? தாமதத்திற்கு கோர்ட்டுகளும் அரசாங்கமும்தானே பொறுப்பாகமுடியும் ?” என்றும் அவர்  கேட்கிறார்.

30 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன, கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிகேட்டுப் பலமுயற்சிகளும்  எடுத்துப்பார்த்து விட்டார்கள். அவ்வப்போது நிர்வாகத்துக்கும் நீதித்துறைக்கும் மனுக்கொடுத்துவிட்டார்கள் — நிவாரணம் கேட்டு, சட்டநடவடிக்கை கோரி. அவை அத்தனையுமே அற்பசொற்ப காரணங்கள் சொல்லி தூக்கி எறியப்பட்டன.  இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்ட போலீசை,  முசுலீம் சொத்துக்களை அழித்துப்   பொய்க்கேசு போட்டு ஒடுக்குமுறை செய்த போலீசை  அரசு  கௌரவிக்கிறது,  பதவிஉயர்வு கொடுத்து அழகுபார்க்கிறது. “எப்படி இருக்குது இந்த நியாயம் ?” என்று  அகமது  நியாயம் கேட்கிறார்.

ஓர் எடுத்துக்காட்டாக, 253 வழக்குகள் சம்பந்தமாக முடிவென்ன என்று  அகமது கேட்டார். அதில் அடங்கிய 114 வழக்குகளில் குற்றவாளிகளை நிரபராதிகள் என்று அறிவித்தார்கள்.  மேலும் 97 வழக்குகளை  “செயலுக்கு ஆகாதவை” என்று முத்திரை குத்திச் சமாதிக்கு அனுப்பினார்கள்.  உச்சநீதிமன்றம் இப்போது மாநில அரசாங்கங்களிடம் அந்த 97 வழக்குகள் சம்பந்தமான நடப்புவிவரங்களைக் கேட்டு  பம்பாய்  உயர்நீதிமன்ற முதன்மைப் பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒருமாத அவகாசம்;  தலைமறைவாகிவிட்ட, காணாமல்போன குற்றவாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து உடனே விசாரணையை ஆரம்பிக்கவேண்டுமாம் — இவையிரண்டும் நிபந்தனைகளாம்.

இதையும் படியுங்கள்: டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு கருப்பு தினம்!

ஷகீல் அகமது மேலும் ஒரு முறையீட்டைச் செய்கிறார். 1300 வழக்குகளுக்கும் மேல்  ‘தொகுப்பு வழக்குகள்’ என்று வகைப்படுத்தி ( சட்டத் துறையில் அது ஒரு வழக்குச் சொல். அதற்குப் பொருள்: ” அவை உண்மையானவை, ஆனால் கண்டுபிடிக்கப் படாதவை “. )  போலீஸ் முத்திரை குத்தி  தள்ளுபடி செய்துவிடும்.   அது ஒரு சுலப வழி. இவற்றில் அநேக வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் சான்று ஆதாரங்களை நேரில் கமிஷன் முன்னால் கொடுத்திருக்கிறார்கள் ;  மன்றம் தொடர்ந்து விசாரணை நடத்துகின்ற அளவுக்கு  சாட்சியங்களாக அவை உள்ளன. இத்தனை நடைமுறைகளுக்குப்பிறகு, இவற்றுக்கு  நேர்மாறாக, “வழக்குகளை முடிக்கவேண்டும்” என்று போலீஸ் கோரியபோது, ‘விசாரணை நீதிமன்றம்’ அந்தக் கோரிக்கையை கொஞ்சம்கூடப் புத்தியைச் செலுத்தாமல் அப்படியே ஏற்றுக் கொண்டது என்று  அகமது சுட்டிக்காட்டி விமரிசிக்கிறார்.

கடந்த 30 ஆண்டுகளாக, ஷகீல் அகமது, முதலில் இளம்  ‘மக்கள் உரிமைப் போராளி’யாக, அதையடுத்து ஓர் வழக்குரைஞராக, ‘பம்பாய்க் கலவரம்’ மற்றும் பல்வேறு ‘கலவரங்களி’ல்  பாதிக்கப்பட்டவர்களுக்கு கோர்ட்டை எப்படி அணுகுவது என்று வழிகாட்டினார்; அரசிடமிருந்து அவர்களுக்கு நிவாரணங்கள் பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்தார் பல பெண்கள் முதல் கணவர்  இறந்தபிறகு வேறு திருமணம் செய்துகொண்டதால் நிவாரணத்தொகை மறுக்கப்பட்டதையும் அகமது குறிப்பிட்டார்; ஒருசிலர் ரேஷன் கார்டு,  வீட்டுமுகவரிச்  சான்று போன்ற போதிய ஆதாரங்களை, ஆவணங்களைக் கொடுக்காததால் நிவாரணத்துக்குத் தகுதியற்றவர்கள் என்று நிராகரிக்கப்பட்டார்கள்; ஆண்டுகள் போகப் போக, மக்கள் சலித்துப்போய்க் கைவிட்டுவிட்டனர் என்பதைக் குறிப்பிட அகமது தவறவில்லை.

‘பம்பாய்க் கலவரத்’தின்போது எண்ணற்ற உயிர்கள் பலிவாங்கப்பட்டன; அவர்களின் சொத்துக்கள் எரித்து அழிக்கப்பட்டன. ‘கலவரத்’துக்குப் பிறகு பல முசுலீம் குடும்பங்கள் வீடு, உடைமைகளையெல்லாம் விட்டுவிட்டு பம்பாய்க்குப் புறத்தேயுள்ள பகுதிகளில் பாதுகாப்பான இடங்கள் தேடி ஓடினார்கள். மும்பையில் திட்டமிட்டு ‘தனி’ப்பகுதிகள், முசுலீம் குடியிருப்புக்கள் இப்படித்தான் தோன்ற ஆரம்பித்தன; பிறகு நிரந்தரமாகவே அவர்கள் நகரின் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டார்கள்.

உச்சநீதிமன்றத்தில் நீண்டகாலம் காத்துக்கிடந்த மிகச்சில வழக்குகளில் ஒன்று — ஷகீல் அகமதுவின் வழக்கு. 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்காக வழக்காடியவர் காலின் கான்சால்வஸ்.  (மக்கள் நலனுக்காக  அவர் காசு வாங்காமல்  வழக்குப் பணிகளைத் தொடர்ந்து செய்துவருகிறார். ) ** உச்சநீதிமன்றம் சென்று தொடர்ச்சியாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் விடாப்பிடியாகவும் நீண்டகாலம் வழக்காடுவது எளிய செயல் அல்ல. இதுபற்றி அகமது சொல்வதைக் கேளுங்கள் :

“நெருக்கியடித்து சட்டத்துறையின் உயர்ந்த மாடங்களின் கதவுகளை எட்டித் தட்டியது  நாங்கள் ஒருசிலர் மட்டுமே, அதுவும் இப்போது வெற்றுக் கைகளோடு திரும்பியிருக்கிறோம்.”

மூலம் : சுகன்யா சாந்தா  Thewire.in

ஆங்கிலம் வழி தமிழில் :  இராசவேல்.

பின்குறிப்பு :

காலம் கடந்தபின் கிடைக்கும் நீதிகூட அநீதி என்பார்கள். காஷ்மீர், குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களில் முசுலீம் மக்கள்மீது அடக்குமுறை செலுத்தப்பட்ட  ஏராளமான வழக்குகளில்  இன்றுவரை அநீதி இழைத்து மூடிமறைத்து வந்திருக்கிறார்கள். ஷகீல் அகமது  வழக்கில் இப்பொழுது  ‘அந்த’ ‘அநீதிக்குக்கூட வழிஇல்லாமல் செய்துவிட்டார்கள்.

காலின் கான்சால்வஸ் உச்சநீதிமன்ற வழக்குரைஞர். தமிழகத்திலிருந்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ( PRPC ) எடுத்துச்சென்ற  வழக்குகளுக்கு  வாதாடி  உறுதுணையாக நின்றுவருகிறார்.

ஒயர்.இன் போன்ற ஒன்றிரண்டு தளங்களே இப்படிப்பட்ட செய்திகளை அம்பலப்படுத்துவதால் அங்கேயும்போய் ‘ ரெய்டு ‘ என்ற பெயரில் ஒடுக்கப் பார்க்கிறார்கள். ‘ஒயர்.இன்’-னை ஆதரிக்கவேண்டியது நம் கடமை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here