கஸ்ட் 14ஆம் தேதி இந்தியா – சீனா ராணுவ தளபதிகள் இடையிலான 19வது சுற்று பேச்சு வார்த்தை நடக்கிறது. அதே நேரம் எந்த நேரமும் இந்திய சீன எல்லையில் கைகலப்புகள் நடக்கலாம் என்ற பதட்டத்தையும் மோடி அரசு உருவாக்கி வருகிறது.

இன்றைய 14.08.23 தினமணி நாளிதழானது “கல்வான் மோதல்: சீன எல்லையில் 68 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர் “ என்று தலைப்பிட்டு எழுதியுள்ளது . நம் படை வீரர்கள் குவிக்கப்படுவது தற்போது நடக்கும் பரபரப்பு செய்தி போன்ற ஒரு கருத்தை இந்த தலைப்பு உருவாக்குகிறது. ஆனால் உண்மை அது அல்ல.

மோடி அமித்ஷா தலைமையிலான பாஜகவின் ஆட்சியானது நாடு முழுவதும் அதிருப்தியை, எதிர்ப்பு அலைகளை தூண்டி விட்டுள்ளது. காப்பரேட் – காவி பாசிசத்துக்கு எதிரான பல்வேறு போராட்டங்களையும் – பல மாநிலங்களில் உருவாக்கியுள்ளது.

இதன் எதிர் விளைவாக சங்கிகள் தமது பாசிச அடக்குமுறைகளையும், தமது வழமையான பிரித்தாளும் கொள்கையிலான சாதி, மத, இனக்கலவரங்களை திட்டமிட்டு முன்னெடுக்கின்றனர். ஆனால் மக்களிடையே பெருகிவரும் அதிருப்தியை போக்குவதற்கோ, எதிர்ப்பு போராட்டங்களை மட்டுப்படுத்துவதற்கோ,  வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியை மீண்டும் பிடிப்பதற்கோ இது மட்டும் போதுமானதாக இருக்காது.இவைகளை விட பெரிதாக ஒன்று தேவைப்படுகிறது.

எல்லை பிரச்சனை ஏன் முன்னுக்கு வரும்?

2014 தேர்தலின் போது இதே சூழலை எதிர்கொண்ட காவி பாசிஸ்ட்டுகள் அதிலிருந்து மீண்டு வர புல்வாமாவை தூண்டி பயன்படுத்தினர். அதேபோல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும் மக்களை திசை திருப்ப தேசபக்தியை தூண்டுவதற்கு ஒரு எல்லை தகராறு தேவைப்படுகிறது.

தற்போது பாகிஸ்தான் உள்நாட்டு குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறது. அதனுடன் மோதுவதால் மோடியின் எஜமானர்களான அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு பெரிய பலன் எதுவும் இல்லை. அதே வேலை இந்தியா சீனாவுடன் உரசுமானால், அதை பயன்படுத்தி சீனாவை தனிமைப்படுத்த அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் ஆர்வத்தோடு காத்துக் கிடக்கின்றன. இந்த பின்னணியில் இருந்து இருநாட்டு எல்லைப் புறங்களிலும் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.

எல்லைப் பகுதியின் மீது காட்டப்படும் திடீர் கரிசனம்!

இந்தியா சீனா ஆகிய இது நாட்டு அரசுகளும் தத்தமது எல்லை பகுதி கிராமங்கள், சிறு நகரங்களின் மீது திடீர் அக்கறை காட்டுகின்றன.

கிராமங்களை வளப்படுத்துவது (well of villages)  என்ற திட்டத்தின் அடிப்படையில் கிராமங்களை வளப்படுத்த சீனா களமிறங்கியுள்ளது. சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் திபெத்தியர்களை எல்லைக்கோட்டுக்கு அருகே திட்டமிட்டு குடியேற்றியுள்ளது சீன அரசு. இதுகுறித்து (gisreportsonline.com) ஜிஐஎஸ் ரிப்போர்ட் ஆன்லைன் இணையம் தனது கட்டுரையில் விரிவாக விளக்கியுள்ளது.

சீனாவின் நிலப்பரப்பில் இந்தியாவுடன் பிரச்சனை உள்ள மாகாணங்களில் சுமார் 628 கிராமங்களும் 112 நகரங்களும் எல்லைக்கோட்டின் அருகில் வருகின்றன. சீனா தரப்பில்  நவீனமாக்கப்பட்டுள்ள இதில் ஒரு கிராமம் நமது எல்லைக்குள் அமைந்துள்ளது. நாம் அருணாச்சலப் பிரதேசமாக வரையறுத்துள்ள இந்தபகுதியை “தெற்கு திபெத் ” என சீனா உரிமை கொண்டாடுவதும் அதை நாம் மறுப்பதுமாக சிக்கல் நீடிக்கிறது.

இந்தியா, சீனா ஆகிய இரு தரப்புமே LAC – எதார்த்தத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதிக்கு எளிதாக செல்ல நெடுஞ்சாலைகளை அமைக்கின்றன. அதற்காக புதிய பாலங்கள் சுரங்கப்பாதைகள் அமைக்கின்றன. இதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாரி இறைக்கின்றன. தத்தமது பகுதிகளில் இணையதள வசதி, 5ஜி அலைவரிசை வசதி உள்ளிட்டவற்றை கொண்டு செல்கின்றனர்.

சீனாவானது G695 எனப்படும் புதிய நெடுஞ்சாலையை அமைக்கிறது. இது திபெத்தையும், ஜிஞ்சியாங்கையும் இணைக்க உள்ளது. இந்த திட்டம் 2035இல் முடிக்கப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை பிரச்சனைக்குரிய அக்சாஸின், கல்வான் பள்ளத்தாக்கிலுள்ள பாங்சாங் சோ ஏரி வழியாக செல்ல உள்ளது. இந்த சாலை பொதுவாக, LACக்கு 20 முதல் 50 கிலோமீட்டர் வரையிலான இடைவெளியில் ஒட்டியபடி செல்ல உள்ளது.

இந்தியாவும் தனது பங்கிற்கு துடிப்பான கிராமங்கள் திட்டம் (Vibrant village programme)  என அறிவித்து 4,800 கோடிகளை ஒதுக்கி, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள 1,967 கிராமங்களில் வேலைகளை முன்னெடுக்கிறது. இந்த திட்டமானது  அருணாச்சலப் பிரதேசத்தில் அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள  எல்லைப் புற கிராமமான கிபுத்தூவில் தொடங்கப்பட்டது. இந்தத் தொடக்க விழாவிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஏப்ரல் 10,  2023இல் சீனாவுக்கு எச்சரிக்கை எடுக்கும் விதமாக எல்லைப்புறத்திற்கு நேரில் வந்து துவக்கி வைத்தார்.

இந்தியாவானது அருணாச்சல் எல்லைப்புற (Arunachal frontier highway) நெடுஞ்சாலையை சுமார் 2000 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைத்து வருகிறது. இது மக்மோகன் கோட்டை ஒட்டி செல்கிறது. இந்த நெடுஞ்சாலை அருணாச்சல பிரதேசத்தின் மாகோவில் தொடங்கி தவாங் வழியாகச் சென்று மியான்மர் அருகில் உள்ள விஜய நகரில் முடிகிறது. இத்திட்டம் 2027 இல் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள கிழக்கு மேற்கு தாழ்வார (east west corridor highway) நெடுஞ்சாலையும் விரைவில் முடிக்கப்பட உள்ளது.

உள்நாட்டில் தலைநகருக்கு அருகில் உள்ள மக்களையே ஏறெடுத்தும் பார்க்காத ஆட்சியாளர்கள் தொலைதூரப் பகுதிகளில், போதிய வருவாயை ஈட்டாத பனி மலை பிரதேசங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் நோக்கம் எதுவாக இருக்கும்? நிச்சயமாக அம்மக்கள் மீதுள்ள அக்கறை என்ற பொய்யை நாம் நம்பமுடியாதல்லவா?

முன்னெடுக்கப்படும் இந்த உள்கட்டமைப்பு மேம்பாடுகள்  அனைத்தும் ராணுவ நோக்கத்திற்கானது தான். சீனாவைப் பொறுத்தவரையில் அது தனது வர்த்தகத்துக்காகவும் சேர்த்து திட்டமிடுகிறது. பொதுவாக சொல்வதென்றால், இருநாட்டு அரசுகளும் எதிர்காலத்தில் வரக்கூடிய எல்லை தகராறு சண்டையை எதிர்கொள்வதற்காக தான்.

2020-க்கு பின்னர் இருதரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அதி நவீன படைக்கலன்கள் எல்லைப் பகுதியில் அணிவகுத்துகின்றன. குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கும், பாங்சாங் சோ ஏரியும் உள்ள லடாக் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

சீனாவானது தனது அதிவிரைவு நெடுஞ்சாலையை விரிவுபடுத்தி பங்சாங் சோ ஏரியின் தென்முனையில் இருந்து வடமுனையை இணைக்கும்படி பாலத்தை கட்டியுள்ளது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் பாங்சாங் சோ ஏரி பகுதியில் தனது துருப்புகளை இறக்கி, கட்டுமானங்களை அமைத்து எதிர் தாக்குதலுக்கு களம் அமைத்து வருகிறது. இந்தியா தரப்பில் இதுவரை 9 ஆயிரம் டன் அளவிலான தளவாடங்கள் எல்லைப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்: 

அமெரிக்காவின் பதிலிப் போர் உத்தி! ரஷ்யாவுக்கு உக்ரைன்; சீனாவுக்கு தைவான்!

புல்வாமா தாக்குதலும், பாஜகவின் பிண அரசியலும்

இரு தரப்புமே விமான எதிர்ப்பு, ஏவுகணை எதிர்ப்பு கட்டமைப்புகளை தத்தமது பகுதியில் அமைத்து வருகின்றன.

சீனாவைப் பொறுத்தவரை காரகோரம் நெடுஞ்சாலை மிகவும் முக்கியமானது. அதன் பட்டுப்பாதை திட்டத்தில் சீனாவின் மேற்கு நோக்கிய அனைத்து வர்த்தக நடவடிக்கைகளுக்கும் உயிராதாரமானது. அத்தகைய பாதை கல்வான் பள்ளத்தாக்கை ஒட்டி போகிறது. எனவே சீனா அந்தப் பாதையை தனது பிடியில் வைத்திருக்க எந்த எல்லைக்கும் செல்லக்கூடும்.

இந்தியாவைப் பொறுத்தவரை கல்வான் பள்ளத்தாக்கால் ஆகக்கூடிய உருப்படியான விஷயம் ஒன்றுமில்லை. ஆனால் அமெரிக்க எஜமானனின் விருப்பத்தின் படி சீனாவுக்கு நெருக்கடி தர வரையறுக்கப்படாத இந்த எல்லைப் பகுதியில் சில பத்து கிலோமீட்டர்கள் முன்னேறினாலே போதும். அது சீனாவின் போக்குவரத்து வலை பின்னலை ஊடறுத்துவிடும்.

இரு தரப்பு பேச்சுவார்த்தை என்பது நாடகமா?

1967-லிருந்து சீனாவும் நாமும் மோதி வருகிறோம் .இந்த மோதலுக்கு முடிவு கட்ட இரு தரப்பும் எல்லைக்கோடு தொடர்பாக பேசி ஒரு இறுதியான வரையறைக்கு வந்தாக வேண்டும். ஆனால் ஏற்கனவே 18 முறை பேச்சுவார்த்தை நடத்தியும்கூட எல்லை பிரச்சினையை ஒரு இம்மி அளவு கூட தீர்க்காமல் இருப்பது ஏன்? இரு தரப்புமே தீர்க்க விரும்பவில்லை என்பது தான் சரியான பதிலாக இருக்ககூடும். இவர்கள் எல்லை பிரச்சினையை தீர்ப்பதில்லை; மாறாக மேலும் புதிதாக அடுத்தடுத்த பிராந்தியங்களில் கிளப்புகிறார்கள்.

நாம் சுதந்திரமாகத்தான் இருக்கிறோமா?

PM மோடியால் சுதந்திரமாக மக்களை சந்திக்க முடியாது. அவ்வளவு ஏன்? மீடியாவை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல கூட பிரதமர் தயாராக இல்லை. இந்தியா தனது 77வது சுதந்திர தின கொண்டாட்டத்தை நாளை நடத்த உள்ளது. இதையொட்டி தில்லி செங்கோட்டையில் 144 தடை பிறப்பிக்கப்பட்டு அப்பகுதியில் பலூன்களோ, பட்டங்களோ, ட்ரோன்களோ பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 56 இன்ச் மார்பு கொண்ட திருவாளர் மோடி நாட்டு மக்களிடையே கொடியேற்றி உரையாற்ற இத்தனை கட்டுப்பாடுகளை போட்டு செய்ய வேண்டியுள்ளது. இதில் எங்கே உள்ளது சுதந்திரம்?

சாதாரண குடிமக்களை பார்த்து கூட மோடி அச்சம் கொள்கிறார் என்பதையே இது காட்டுகிறது. பாசிஸ்டுகள் எங்கும் எப்பொழுதும் கோழைகளே என்பதைத்தான் மோடியும் நிரூபிக்கிறார்.

இப்படிப்பட்ட பாசிச மோடி கும்பல் தேவை இல்லாமல் எல்லைப் பிரச்சினையை கிளறினால் அதில் பலியாக போவது இரு நாட்டு ராணுவத்தினரும் தான். நவீன சமூக ஏகாதிபத்தியமாக வளர்ந்து ஒற்றைத் துருவ மேலாதிக்கவாதியான அமெரிக்காவை அசைத்துப் பார்க்கும் சீனாவானது, எந்த ஒரு பிராந்தியத்திலும் தனது கரத்தை வலுப்படுத்தவே விரும்பும். அதற்காக சீனா தானாக வந்து இந்தியாவுடன் மோத வேண்டிய தேவை தற்போது இல்லை. இந்த உண்மையையும் கணக்கில் கொண்டு நாம் எல்லை பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களை மதிப்பிட வேண்டும்.

பாசிஸ்டுகள் தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள உழைக்கும் மக்களிடையே கலவரங்களைத் தூண்டி, படுகொலைகளை செய்வது போல், இருநாட்டு படைகளிடையே மோதல்களை தூண்டியும் உயிர்ப்பலியை ஏற்படுத்தக்கூடும். எனவே பாசிஸ்ட் மோடியின் போலி தேசபக்த கூச்சல்களை இனம் காண்போம். நாட்டின் உண்மையான எதிரிகளான கார்ப்பரேட் – காவி பாசிஸ்ட்களை வீழ்த்தி நாட்டை காப்போம்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here