சங்கிகள் யார் என நண்பர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

எனது அனுபவத்தில் சங்கிகள் என்போர்: காலம் காலமாக இந்தியா ஒரு தனி நாடாக இருந்ததாக நம்புவார்கள்.சுதந்திரத்திற்கு முன்பு வரை 500 க்கும் மேல் வரை சுதேசி சமஸ்தானங்களாக இருந்ததை மறந்துவிடுவார்கள்.

ஹிந்து மதம் காலம் காலமாக இந்த மண்ணில் அழியாமல் இருந்து வருவதாக நம்புவார்கள். ஹிந்து எனும் பெயரே ஒரு சில நூற்றாண்டுகளாகவே அறியப்படுகிறது என்பதை மறுப்பார்கள்.

இந்தியாவில் பாலும் தேனும் ஓடியதாகவும், இஸ்லாமியர்களின் படையெடுப்பின் போது இங்கிருந்த கோயில்களின் செல்வங்கள் கொள்ளயடிக்கப்பட்டு அவர்களது நாடுகளுக்கு எடுத்துச் சென்றுவிட்டதாக நம்புவார்கள்.

இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்பார்கள், ஆனால் EWS ற்கான 10 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வாய் திறக்கமாட்டார்கள். கல்விக் கொள்கை, சுற்றுச் சூழல் சட்டம், குடியுரிமைச் சட்டம், NEET, விவசாய சட்டம் என எது வந்தாலும் கண் மூடி ஆதரிப்பார்கள்.

அண்டை நாடுகளால் ஆபத்து இருப்பதாகவும் அந்த நாடுகளைப் பற்றி அவதூறு செய்திகளை அடிக்கடி சமூக ஊடகங்களில் பரப்புவார்கள். ஆளும் மதவாத அரசின் திட்டங்களை கொள்கைகளை எதிர்த்தால் அவர்களை தேசத் துரோகிகள் என முத்திரை குத்துவார்கள். சாதிகளை ஆங்கிலேயர்களே பெரிதுபடுத்தி பிரிவினைகளை உண்டாக்கினர் என்பார்கள்.

பௌத்தம் அழிந்து போனதையும் சமணம் தமிழ்நாட்டில் ஒழிந்து போனதையும் அறியாதவர்கள் போல நாடகமாடுவார்கள். இந்த இரண்டு மதங்களையும் அழித்தே வைணவமும் சைவமும் வளர்ந்தன என்பது தெரிந்தும் தெரியாதவர்கள் போல நடிப்பார்கள்.

ஓர் மதம், ஓர் மொழி, ஓர் அதிகாரம் என்பது அபாயகரமானது ஜனநாயகத்திற்கு எதிரானது என்பது தெரிந்தும் ஆதரிப்பார்கள். சக மனிதர்களை விட பசுமாடே முக்கியம்.அதற்காக சக மனிதனின் உயிரை எடுப்பதற்கும் தயங்க மாட்டார்கள். வைதிக புராணங்களை சரித்திரம் என நம்பும்படி கட்டுக் கதைகளை அள்ளி விடுவார்கள்.

பொது முடக்கத்தின் போது கோடிக் கணக்கான மக்கள் ஆயிரம் மைல்கள் நடந்து போனதோ அதில் பலர் இறந்து போனதோ இவர்கள் கவலைப்பட்டதில்லை. ஹிந்து மதம் பற்றிய எந்த ஒரு விமர்ச்சனத்தையும் இவர்களால் பொறுத்துக் கொள்ள இயலாது. இவர்களின் மனம் புண்பட்டுவிட்டதாக புலம்புவார்கள். ஹிந்து மதத்தை விமர்ச்சிப்பவர்களை ஏன் மற்ற மதங்களை விமர்ச்சிப்பதில்லை என்பார்கள்.

ஹிந்து மத நூல்கள் சூத்திரனை தாசி மகன், அடிமை, ஈனப்பிறவி,இழிபிறப்பாளன், தொட்டாலும் பார்த்தாலும் தீட்டு என எழுதிவைத்திருப்பதை படித்தாலும் இவர்களின் மனம் புண்படாது. பெண்கள் சுயாதீனமாக இருக்கவும் கூடாது சிந்திக்கவும் கூடாது, அவர்களது பிறப்பே தோஷமானது,அவர்கள் நம்பகமானவர்கள் அல்ல, காம இச்சை உள்ளவர்கள் என எழுதிய ஹிந்து மத நூல்களை படித்தாலும் இவர்களது மனம் புண்படுவதில்லை.

சங்கிகள் சொந்தமாக சிந்திக்கத் தெரியாதவர்கள்.ஹிந்து மதம் பற்றி நூல்களை ஏதும் படிக்காமலேயே ஹிந்து மதம் உயர்ந்தது என்பார்கள்.அது மதமே அல்ல, வாழ்க்கை முறை, way of living என தங்களுக்குச் சொன்னதை திருப்பிச் சொல்வார்கள்.

இதையும் படியுங்கள்: சங்கி என்ற சொல்லை எவ்வாறு பயன்படுத்துவது.?

பழம் பெருமை பேசுகிறவர்களாக இருப்பார்கள். ஹிந்து மதச் சடங்குகள் எல்லாவற்றிலும் அறிவியல் உண்டு என்பார்கள். ஆளும் ஆட்சியாளர்களை விமர்ச்சித்தால் தாய் நாட்டினை விமர்ச்சிக்கலாமா? என்பார்கள். நாட்டினை பெற்ற தாயுடன் ஒப்பிட்டு தாயினை அவமதிக்கலாமா என்பார்கள்.

சாதிப் பிரச்சனையினால் தினமும் எத்தனையோ பேர்கள் இறப்பதையும், பெண்கள் வன் கொடுமைகளுக்கு உள்ளாவதையும் இவர்கள் கண்டு கொள்வதே இல்லை.அரசாங்கத்தின் புள்ளி விபர பட்டியலை ஆதாரம் தந்தாலும் அதை இவர்கள் அதை நம்புவதுமில்லை.

 

மாறாக இப்போதெல்லாம் யார் சாதி பாக்குறாங்க? என்பார்கள். ஹிந்து மத விமர்சனங்களுக்கு ஆதாரம் கேட்பார்கள்,ஆதாரம் தந்தால் காணாமற் போய்விடுவார்கள்.

கேள்விகள் எதிர் கேள்வி கேட்டால் பயப்படுவார்கள்.ஹிந்து மதத்தில் உள்ள சாதிப் பிரச்சனையோ மூட நம்பிக்கை பற்றி எழுதினால் வாட்ஸ்அப் போன்ற குழுவிலிருந்து வெளியேற்றிவிடுவார்கள்.மதம் சாதி விசயங்களைப் பற்றி பதிவிடக் கூடாது என admin மூலமாக கட்டளையிடுவார்கள்.

ஹிந்து மதம் பற்றி விவேகானந்தர், ஸ்வாமி தயாநந்த சரஸ்வதி, ராஜாராம் மோகன் ராய் போன்றோர் விமர்ச்சித்து கேள்வி எழுப்பியதெல்லாம் பிரச்சனையே இல்லை. நாம் ஹிந்து மதம் பற்றி கேள்வி எழுப்பினால் அதை சகித்துக் கொள்ளமாட்டார்கள்.

வறுமையில் உள்ள ஓரிரு பிராமணர்கள் மட்டுமே இவர்கள் கண்களுக்குத் தெரிவார்கள், அவர்களுக்காக பரிதாபப் படுவார்கள், ஆனால் தினமும் கோயில் வாசல்களில் ரோட்டில் பிச்சையெடுக்கும் சிறுவர்கள், வயதானவர்கள் இவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை.

இதையும் படியுங்கள்: சங்கி முட்டாள்களுக்கு நன்றி!

கருத்திற்கு எதிர் கருத்தை எழுதுவதோ பேசுவதோ கிடையாது, அதை விடுத்து கருத்தை பதிவிடுகிறவர்களை பயமுறுத்துவார்கள்.

சாதிப் பெருமையையும் சாதி அடையாளத்தையும் இவர்கள் வெளிப் படுத்திக் கொண்டேயிருப்பார்கள். ஆனால் சாதி பார்ப்பதில்லை என்றும் கூறிக் கொள்வார்கள்.

உண்ணும் உணவை மதத்தோடும் கடவுளோடும் தொடர்பு படுத்துவார்கள். உணவு தனிப்பட்ட விருப்பம் என்பது இவர்களுக்கு தெரிந்தாலும், மரக் கறி உணவே சிறந்தது என்பார்கள்.மாமிசம் சாப்பிடுகிறவர்கள் ஹிந்துக்களே அல்ல என்பார்கள்.

இதையும் படியுங்கள்: சங்கிகளிடம் விவாதித்தால் எப்படியிருக்கும்?

பாண்டே, மாரி போன்றோர் பேசுவதை அடிக்கடி கேட்பார்கள். அவர்கள் பேசுவதே சரியென பதிவிடுவார்கள். இஸ்லாமியர்களை, கிறிஸ்தவர்களை எதிரிகளைப் போலவே பாவிப்பார்கள்.கோல்வார்கர் சொன்னதைப் போல கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் அல்லது ஹிந்துக்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பார்கள்.

ஹிந்து வைதிக நூல்களில் உள்ளவற்றை உள்ளது உள்ளபடி எழுதினால் அந்த நூலை எழுதியவர்கள் மீது கோபப்பட மாட்டார்கள். நூலில் உள்ளதை தெரியப் படுத்தியவர்கள் மீது ஆத்திரப் படுவார்கள், கோபப்படுவார்கள்.

நம்புங்கள் இவர்களை நாம் தினம் தோறும் சந்திக்கிறோம்,பழகுகிறோம்.ஒரு சிலர் தான் ஒரு சங்கி என்பதையே உணர்வதில்லை, மற்றவர்கள் கூறும்போது அதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதுமில்லை.

இப்பதிவு சங்கிகளின் மனதை புண்படுத்தலாம் வேதனைப்படுத்தலாம், ஒரு சிலரை யோசிக்கவும் வைக்கலாம். யோசிக்கிறவர்கள், சிந்திக்கிறவர்கள் மனிதர்கள். ஓரிருவர் சிந்தித்தாலும் மகிழ்ச்சியுறுவேன்!

  • தினகரன் செல்லையா

முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here