தொழிலாளர்களுக்கான வைப்பு நிதியின் (PF) வட்டிக் குறைப்பு
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி எனப்படும் இபிஎப் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் வட்டியை குறைத்துள்ளது ஒன்றிய அரசு. இது 44 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்த வட்டியாகும்.
தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்களின் எதிர்கால பாதுகாப்புக்காக 1952 ம் ஆண்டில் ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டம் இது.
நாடு முழுவதும் சுமார் 7 லட்சம் நிறுவனங்களில் பணியாற்றும் 6.12 கோடி பணியாளர்களை சந்தாதாரர்களாக கொண்ட பி.எப் திட்டத்தில் தற்பொழுது 14 லட்சம் கோடி வைப்பு நிதியாக சேர்ந்துள்ளது. தொழிலாளர்களின் வருங்கால சேமிப்பு மீதான வட்டி விகிதம், 8.10% என குறைக்கப்பட்டிருப்பது அநீதியானது.
2020-21ம் ஆண்டில் நாடு ஊரடங்கில் மூழ்கி இருந்த பொழுது கூட 8.5% என நீடித்தது. இப்பொழுது நிலைமை சரியாகி வரும் பொழுதும். வருங்கால வைப்பு நிதி வாரியம் பங்கு சந்தையிலும், கடன் சந்தையிலும் செய்துள்ள முதலீடுகள் கணிசமாக லாபம் ஈட்டியுள்ள நிலையிலும், 44 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமைக்கு வட்டி விகிதத்தை கொண்டு சென்றிருக்கிறது.
படிக்க:
♦ மக்கள் நலஅரசு என்ற பம்மாத்து!!
♦ அழிக்கப்படும் தொழிலாளர் நலச்சட்டங்கள்!
வங்கியில் பொதுமக்களால் வைக்கப்படும் வைப்புத்தொகைகளுக்கு தரப்படும் வட்டிவிகிதம் என்பது 6.5%க்கு கீழாக தருகிறார்கள். அதோடு ஒப்பிட்டு இப்படி குறைப்பது என்பது அபத்தமானது. இந்த அரசு தொழிலாளர்களின் நலத்திட்டமான வைப்பு நிதிக்கும், பொதுமக்களின் வைப்பு தொகைக்கும் (Fixed Deposit) ஒப்பிடுகிறது என்றால், நாம் ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத மனநிலையை புரிந்துகொள்ளவேண்டும்.
தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை எல்லாம் ஒன்றிய அரசு முதலாளிகளின் நலனுக்காக வெட்டி சுருக்கிய நிலையில் தான் இப்பொழுது தொழிலாளர்களுக்கான வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை வரலாறு காணாத வகையில் குறைத்திருக்கிறது. தொழிலாளர்கள் இதன் அபாயத்தை உணர்ந்து, உடனடியாக போராட்டத்தில் இறங்கவேண்டும். இல்லையெனில், ஒன்றிய அரசு இன்னும் வட்டியை குறைக்கும் நடவடிக்கையில் தைரியமாக இறங்குவார்கள். தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டம் தான் தொழிலாளர் விரோத அரசை பணிய வைக்கும். வேறு குறுக்கு வழிகள் இல்லை.