அனைத்தையும் அனுபவிக்கும் அறிஞர்களுக்கு மனசாட்சி என்று ஒன்று உள்ளதா?


வாட்ஸ்அப் அல்லது முகநூல் பக்கத்தை திறந்து பார்த்தாலும் அல்லது ஒரு முறை பயன்படுத்தி விட்டாலும் ஒரு சில விஷயங்கள் மீண்டும் மீண்டும் வந்து குவிந்து கொண்டிருக்கும். தெரியாத்தனமாக சில அறிஞர்களின் முகநூல் பக்கங்களை திறந்து பார்த்த குற்றத்திற்காக அவர்களின் அரிய கருத்துகள் தினமும் வந்து குவிகிறது.

காஷ்மீரில் அரசு பயங்கரவாதம் மீண்டும் தலைவிரித்து ஆடத் துவங்கினாலும் சரி தமிழகத்தில் ஆதீனங்கள் தெருவில் இறங்கி ஆர்எஸ்எஸ் அரசியலை பேசி சவால் விட்டாலும் சரி நமது அறிஞர்கள் காக்கின்ற மௌனம் அல்லது உலகை 360 டிகிரியில் நமக்குச் சுட்டிக்காட்டுகின்ற அற்புதம் இருக்கிறதே அதை அடித்துக் கொள்ளவே முடியாது.

 

உலகம் முழுவதும் சமகால அரசியலில் நிகழ்கின்ற அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கலை, இலக்கியங்கள் மூலமாக பரந்துபட்ட மக்களை தட்டி எழுப்பினார்கள்.

தமிழகத்தின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் மன்னர்களையும், இல்லாத கடவுளர்களையும் உருகி உருகி துதிபாடி பக்தி கடைவிரித்து ‘படிக்காசு’ பெற்றனர் அறிஞர்கள்.

அந்தப் பாரம்பரியத்தை அகழ்வாராய்ச்சிகளில் தேடத் தேவையில்லை. நமது அறிஞர் பெருமக்களின் வாயிலிருந்து உதிர்கின்ற முத்துக்களில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.

இஸ்லாமியர்களுக்கு எதிரான கொலைவெறித் தாக்குதல்கள் ஜஹாங்கீர்புரி தொடங்கி கர்நாடகம், உத்தரப் பிரதேசம், காஷ்மீர், டெல்லி என்று விரிவடையும் போதிலும், கண்ணெதிரே நடக்கின்ற அட்டூழியங்களைப் பற்றி வாய் திறக்காமல் விக்ரம் படத்தில் ஆண்டவர் நடித்த குத்து பாடலை பற்றி புளகாங்கிதம் அடைந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

மரண நெடில் வெளி இரவு - மே - தமிழ் இனப்படுகொலை மாதம் - Senpakam.org
முள்ளிவாய்க்கால் படுகொலை

ஈழத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு சிறிது சிறிதாக அந்த நாட்டின் பொருளாதாரம் நிலைகுலைந்து போய் இறுதியில் திவாலாகி உழைக்கும் மக்கள் வீதியில் நின்று கதறிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நமது அறிஞர் பெருமக்கள் ஐபிஎல் மேட்சில் எந்த அணி வெற்றி பெறும் என்று ஆருடம் தெரிவிப்பதும் புதிதாக வந்துள்ள குஜராத் அணி வெற்றி பெற்றதை எண்ணி வியந்து வியந்து பாராட்டிக்  கொண்டுள்ளனர்.

கன்னியாகுமரியில் மீனவர் சமூகத்தைச் சார்ந்த பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட போதும், ஹைதராபாத்தில் தலித் சமூகத்தைச் சார்ந்த சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட போதும், நமது அறிஞர் பெருமக்கள் மோடிக்கு காவடி தூக்கிய, சின்ன சங்கரனாக மாறிய இளையராஜாவின் இசை அற்புதங்களை வியந்து வியந்து பாராட்டிக் கொண்டிருந்தார்கள்.

 

சொல்லிக்கொண்டே போகலாம் அறிஞர்களில் அற்புதமான திருவிளையாடல்கள் பற்றி, இந்து கடவுளான மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்து திருவிளையாடல் புரிந்ததாக புராணக்கதைகள் கூறுகின்றன.

ஆனால் நமது அறிஞர் பெருமக்கள் எடுக்கின்ற அவதாரங்களை சொல்லிமாளாது. பத்து அவதாரங்கள் தானே என்று கேட்டால் சத்தியராஜ் திரைப்பட பாணியில் 11, 12, 13 என்று அவதாரங்களை அதிகரித்துக் கொண்டே போகிறார்கள்.

படிக்க:

♦ அமெரிக்க, ரசிய அரசுகளின் உலக மேலாதிக்க வெறிக்கு உக்ரைன் மக்கள் பலிகிடா!

 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! சிபிஐ குற்றப்பத்திரிகை! பாசிச அடக்குமுறையின் இருவேறு வடிவங்கள்!

என்ன செய்வது பெரும்பான்மை மக்கள் எழுதப்படிக்க தெரியாத போதிலும் அவர்கள் வாங்குகின்ற ஒவ்வொரு பொருளிலும், அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் கிடைக்கின்ற நேர்முக, மறைமுக வரிகள் உதவியால் கல்வி பயின்று  வாழும் சமூகத்திற்கும் பொறுப்பற்ற முறையில் செயல்படும் அறிஞர்களை, அறிஞர்கள் என்று சொல்வதற்கோ அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு எழுதுவதற்கோ கூச்சமாக உள்ளது.

  • செல்வம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here