கூகுளில் நிறுவனத்தில் இந்துத்துவ வெறி!
கடந்த ஏப்ரலில் ஈக்வாலிட்டி லேப்ஸின் நிறுவனர் மற்றும் செயல் இயக்குனரான தேன்மொழி சௌந்திரராஜன் தலித் வரலாற்று மாதத்திற்காக கூகுள் செய்திகள் ஊழியர்களிடம் உரை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால் கூகுளில் பணிபுரியும் சில ஊழியர்கள் தேன்மொழி சௌந்திரராஜன் குறித்து தவறான தகவல்களை பரப்பி, அவரை இந்து விரோதி, இந்து எதிர்ப்பாளர் என்றும் அழைத்துள்ளனர். கூகுளில் வேலை பார்க்கும் பார்ப்பனர்கள் மற்றும் சில உயர்சாதி இந்துக்கள் எதிர்ப்பு சட்டகாரணமாக இந்த நிகழ்ச்சி எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்யப்பட்டது.
அதன் பின்னர் தேன்மொழி சௌந்தரராஜன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையிடம் நேரடியாக முறையிட்டுள்ளார். ஆனால் சுந்தர் பிச்சை பதில் அளிக்கவில்லை. கூகுள் நிறுவனம் குறிப்பிட்ட சாதிய சார்பை கடைபிடிக்கிறது. இதனால்தான் அவர்கள் சவுந்தரராஜனை பேச அனுமதிக்காமல் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர். இதன் காரணமாக தேன்மொழி சவுந்தரராஜனை பேச அழைத்த கூகுள் செய்திகளின் மூத்த மேலாளர் தனுஜா குப்தா தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
ஈக்குவாலிட்டி லேப்ஸ், தலித்துகள் அல்லது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு வாதிடும் ஒரு லாப நோக்கமற்ற நிறுவனம். இந்த நிறுவனத்தின் செயல் அதிகாரி தேன்மொழி சௌந்தரராஜன் மைக்ரோசாஃப்ட், சேல்ஸ் போர்ஸ், ஏர்பின்ப், நெட்ஃப்லிக்ஸ் மற்றும் அடோப் ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்களில் சாதியம் பற்றிய உரைகளை நிகழ்த்தியுள்ளார்.
அமெரிக்காவில் ஜார்ஸ் பிளாய்ட் கொலைக்குப் பின்னர், நிறவெறிக்கு எதிராகவும் இனவெறிக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றன. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன அதையொட்டி பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஈக்குவாலிட்டி லேப்ஸ் நிறுவனத்தை பேச அழைத்துள்ளனர். இந்த அடிப்படையில்தான் கூகுள் செய்திகள் அதிகாரி தனுஜா குப்தா ஈக்வாலிட்டி லேப்ஸின் தேன்மொழி சவுந்தரராஜனை பேச அழைத்துள்ளார். கூகுளில் பணிபுரியும் பார்ப்பனர்களால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதை ஒட்டி தனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்து வெளியேறியுள்ளார் தனுஜா குப்தா. பன்முகத்தன்மை குறித்து கூகுளிடம் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
தனுஜா குப்தா 2018ல் கூகுள் வாக்கவுட்டின் பின்னணியில் உள்ள ஏழு அமைப்பாளர்களில் அவரும் ஒருவர். இதில் உலகெங்கிலும் உள்ள 20 ஆயிரம் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலை கூகுள் நிறுவனம் தவறாக கையாள்வதாக கூறி அலுவலகங்களை விட்டு வெளியேறி போராட்டம் நடத்தினர். மற்ற ஆறு அமைப்பாளர்கள் ஏற்கனவே கூகுள் நிறுவனத்தை விட்டு வெளியேறி விட்டனர்.தனுஜா குப்தா தொடந்து பணியாற்றி வந்த வேலையில் தற்போது நடந்த சாதிய பாகுபாடு காரணமாக அவரும் வெளியேறியுள்ளார்.
ஈக்குவாலிட்டி லேப்ஸின் தேன்மொழி சௌந்திரராஜன் கூறுகையில், “சுந்தர் பிச்சை இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்த பிராமணர் சாதியை சார்ந்தவர். அவருக்கு சாதிய பாகுபாடு குறித்து எதுவும் தெரியாது என்று கூறியிருப்பது நகைப்புக்குரியது” என்றார். (தி போஸ்ட்).
கூகுள் தங்கள் நிறுவனத்தில் சாதிய பாகுபாடு இல்லை என்று கூறியுள்ளது. ஆனால் இந்த செய்தியால் கூகுள் நிறுவனத்தின் யோக்கியதை அமெரிக்காவில் நாறியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த தலித் உரிமைகள் அமைப்பு கடந்த வியாழன்று கூகுள் நிறுவனத்தில் சாதிவெறி மற்றும் விரோதமான பணியிட நடைமுறைகளை கொண்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளிலும் அதற்கு இணையான பதவிகளிலும் பார்ப்பனர்கள் அமர்ந்துள்ளார்கள். கூகுள் நிறுவனத்திலும் அவ்வாறே அமர்ந்துள்ளனர். சுந்தர் பிச்சை உட்பட. இவர்கள் சமத்துவத்தை நிராகரிக்கிறார்கள். சாதிய கட்டமைப்பை அம்பலப்படுத்தும் நிகழ்வுகளை தடுக்கிறார்கள். ஆனால் இவர்களின் சாதிய செயல்பாடு சர்வதேச அரங்கிலும் அம்பலமாகி நாறியுள்ளது.
- நந்தன்
மூலம்: The Washington post