அழிக்கப்படும் தொழிலாளர் நலச்சட்டங்கள்
(மே தினத்தை முன்னிட்டு)
கடந்த 150 வருடங்களாக, அதாவது பிரிட்டிஷ் ஆட்சி, விடுதலை பெற்ற இந்தியாவில் நேரு காலம் தொடங்கி இன்று வரையிலும், ஆட்சியில் இருந்த யாராகிலும் இயற்றிய எந்த ஒரு தொழிலாளர் நலச்சட்டமும் ஆட்சியாளர்கள் தாமாகவே முன் வந்து கொண்டு வந்த சட்டம் அல்ல. இங்கல்ல, உலகம் எங்கும் அப்படியே. சாமான்ய மக்களும் தொழிலாளர்களும் வீதிகளில் இறங்கிப் போராடியும் போலீசின் துப்பாக்கி சூட்டில் உயிர்த்தியாகம் செய்தும் சிறைகளில் வாடியும் உயிர் நீத்தும் அதன் பலனாக நிர்ப்பந்தம் காரணமாகவே அரசுகள் அவ்வப்போது சட்டங்களை இயற்றி வந்துள்ளன. எட்டு மணி நேர வேலை என்பதன் பின்னே குருதி தோய்ந்த ஒரு 150 வருட போராட்ட வரலாறு உள்ளது.
இந்தியாவில் முதல் தொழிலாளர் நலச்சட்டம் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுற்ற பின்னர் பிரிட்டிஷ் முடியாட்சியின்போது 1881இல் இயற்றப்பட்டது. அதுதான் முதல் தொழிற்சாலை சட்டம், 1881 என்பதாகும். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சட்டப்படி 16 மணி நேரம் வேலை செய்யலாம் என்று தொடக்கத்தில் சட்டம் இருந்தது, பின்னர் 12 மணி நேரம் ஆகி, பின்னர் இப்போதுள்ள 8 மணி நேரம் ஆனது. இதன் பின்னால் சர்வதேச , இந்திய தொழிலாளர்களின் உயிர்த்தியாகமும், இடதுசாரிகளின் போராட்டமும் அரசியலமைப்பு சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் முனைப்பும் உள்ளது. கேரளாவில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் அரசுதான் ஒரு மாநிலம் என்ற அளவில் 8 மணி வேலை நேரத்தை சட்டமாக்கிய முதல் மாநிலம்.
விடுதலைக்கு முன்னும் பின்னுமாக நூற்றுக்கும் மேற்பட்ட சட்டங்கள் இந்தியாவில் இயற்றப்பட்டன, தேவை கருதி அவ்வப்போது திருத்தப்பட்டன. International Labour Organizationஇல் இந்தியா ஒரு உறுப்பினர். நிறுவன உறுப்பினரும் கூட. 1919இல் முதல் கூட்டம் நடந்தது. அங்கேதான் ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலை, ஒரு வாரத்துக்கு 48 மணி நேர வேலை என்று தீர்மானம் ஆனது, இந்தியாவும் கையெழுத்து இட்டது.இதுவரை 39 கூட்டங்கள் நடந்துள்ளன, 39 தீர்மானங்களையும் இந்தியா ஒத்துக்கொண்டுள்ளது. அவற்றுள் முக்கியமானது C144 எனப்படும் Tripartite Consultation International Labour Standards Convention, 1976. இதன்படி தொழிலாளர் நலசட்டங்களை அரசு தன்னிச்சையாக திருத்த முடியாது. அரசு, முதலாளிகள், தொழிலாளர்கள் (அதாவது தொழிற்சங்கங்கள்) மூன்று தரப்பினரும் சேர்ந்து பேசி ஒத்துக்கொண்டால் மட்டுமே எந்த ஒரு சட்டத்தையும் திருத்த முடியும். C144இல் இந்தியா கையெழுத்து இட்டுள்ளது.
இந்தியாவில் இப்போது உள்ள சில முக்கியமான சட்டங்களை மட்டும் பாருங்கள்:
The Trade Union Act, 1926
The Industrial Disputes Act, 1947
The Factories Act, 1948
Employees Compensation Act, 1928 (Formerly Workmen Compensation Act)
The Payment of wages Act, 1936
The minimum wages act,
The ESI Act, 1948
The Payment of Wages Act, 1965
The Payment of Gratuity Act, 1972
The Employees Provident Funds Act and Miscellaneous Provisions Act,
The Employees Liability Act, 1938
The Weekly Holidays Act, 1942
The Industrial Employment (Standing Orders) Act, 1948
The Fatal Accidents Act, 1948
The Dock Workers (Regulations of employment) Act, 1948
The Plantation Labour Act, 1951
The Personal injuries (Compensation Insurance) Act, 1963
The Motor Transport Workers Act, 1961
The Maternity Benefit Act, 1961
The Children (Pledging of Labour) Act, 1933
The Child labour (Prevention and Regulation) Act, 1984
The Contract Labour (Regulation and Abolition) Act, 1970
The Bonded Labour System (Abolition) Act, 1976
The Equal Remuneration Act, 1976
The interstate migrant workers (Regulations of employment and conditions of service) Act, 1979
இன்னும் பல.
அரசாங்கம் ஒரு முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டும், அதாவது model employer. ஆனால் மார்ச் தொடங்கி நடப்பது என்ன? கொரோனா கால ஊரடங்கை பயன்படுத்தி மக்களை வீடுகளுக்கு வெளியே வர விடாமல், அதாவது வீதிகளில் இறங்கி திரண்டு போராட விடாமல் தடுத்து, இதுகாறும் இந்திய தொழிலாளர்கள் வர்க்கம் பல பத்தாண்டுகள் போராடியும் உயிர்த்தியாகம் செய்தும் வென்றெடுத்த உரிமைகளை ஒழித்துக்கட்டுகின்றது. மிக முக்கியமானது 8 மணி நேர வேலை என்னும் உரிமையை ஒழித்து 12, 16 மணி நேர வேலையை கொண்டு வருவதாகும். அதாவது நாடாளுமன்றம் இத்தனை ஆண்டுகளாக இயற்றிய சட்டங்களை, மாத ஊதியம் பெறுகின்ற, 60 வயதில் ஓய்வு பெற்று வீட்டுக்கு செல்கின்ற யாரோ ஒரு அதிகாரி ஒரே ஒரு கையெழுத்து இட்டு ஒழித்து விடுகின்றார் அல்லது நீர்த்துப் போக செயகின்றார். முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட வேண்டும் என்ற C144 சர்வதேச ஒப்பந்தத்தை யாரோ ஒரு அதிகாரி டெல்லியில் தன் அறையில் இருந்து கொண்டு மீறுகின்றார்.
12.5.2020 அன்று இந்த தேசத்தின் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பின்னால் இந்த தொழிலாளர்கள் விரோத நடவடிக்கைகள் தீவிரம் ஆகி உள்ளன. அதாவது model employer இப்போது model violator ஆக அவதார் எடுத்துள்ளார்.
பிரதமரின் உரையை உடனடியாக நிறைவேற்றி விட பிஜேபி அரசுகள் மட்டுமின்றி காங்கிரஸ் அரசுகளும் பந்தயத்தில் ஓடின. உத்தர பிரதேச பிஜேபி அரசு, 8.5.20 தேதியிட்ட ஆணை மூலம், தொழிலாளர்கள் வேலை நேரத்தை 12 மணி நேரம், வாரத்துக்கு 72 மணி நேரம் என உயர்த்தியும், ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கு அரை மணி நேர ஓய்வு என்றும் உத்தரவு இட்டு மனித உரிமைகளுக்கும் மாண்புகளுக்கும் எதிரான தன் உண்மை உருவத்தை காட்டியது. ஒரு படி மேலே சென்று, முதலாளி தனக்கு ஊதியம் வழங்கவில்லை என தொழிலாளர்கள் இடம் இருந்து புகார்கள் வந்தால் அரசின் உயர்மட்ட அதிகாரிகளை ஆலோசிக்காமல் FIR பதிவு செய்யக்கூடாது என மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளுக்கு உத்தரவு இட்டது. உ பி அரசின் கவனம் எல்லாம் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவது எப்படி என்பதில் உள்ளது.
குஜராத், ஹிமாசல் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, மத்திய பிரதேசம், கோவா, அசாம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் இதே தொழிலாளர் விரோதப்போக்கை கையில் எடுத்தன. இதில் காங்கிரஸ், பிஜேபி வேறுபாடு இல்லை.

மோடி அரசு 2014 முதல் பெருமுதலாளிகளின் 7 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளது. பெருமுதலாளிகளுக்கு 4.3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வரி சலுகைகள் வழங்கி உள்ளது. கார்பொரேட் வரியை 30 சதத்தில் இருந்து 25.17 சதமாக குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் சேமிப்பில் இருந்த 1.26 லட்சம் கோடி ரூபாய்களை எடுத்து யார் யாருக்கு கொடுத்துள்ளது என்பதில் மர்மம் உள்ளது. மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜி எஸ் டி பங்கை ஒரு மத்திய அரசே தராமல் ஏமாற்றும் விந்தையை நாடு பார்க்கின்றது.
இந்திய மக்கள்தொகையின் 70 சதம், அதாவது 96 கோடி மக்கள், சமூகத்தின் அடித்தட்டு மக்கள். இவர்களின் மொத்த சொத்து மதிப்பை போன்று 4 மடங்கு சொத்து இந்தியாவின் ஒரு சதவீத பெரு முதலாளிகளின் கையில் உள்ளது.
அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்கள் சக்தி மாபெரும் ராட்சத சக்தி என்பதை உணர்ந்துள்ள கார்பொரேட்+ஒன்றிய இந்துத்துவா அரசு கூட்டணி, அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களை அம்பானி, அதானி வகையறாக்களுக்கு விற்று விடுவதில் மிக மிக தீவிரமாக இறங்கி உள்ளது.
இந்த வரிசையில் இறுதியாக ஏர் இந்தியா நிறுவனம். தன் தனிப்பட்ட பயணத்துக்கு 8000 கோடி ரூபாய் மக்கள் பணத்தில் விமானம் வாங்கிய பிரதமர், அரசு நிறுவனம் ஆன ஏர் இந்தியாவை டாட்டாவுக்கு விற்றதன் மூலம் சொந்தமாக விமான நிறுவனம் இல்லாத அரசு இந்திய அரசு என்ற விசித்திரமான பெருமையை தேசத்துக்கு தேடி கொடுத்தார். இப்போது எல் ஐ சி நிறுவனம். இந்திய அரசின் பட்ஜெட்டில் விழும் ஆழமான பள்ளங்களை எல் ஐ சியின் நிதியை கொண்டுதான் இதுவரை இந்த நாடு நிரப்பி வந்தது. நாட்டின் ஆகப்பெரிய கட்டுமான திட்டங்கள் அனைத்திலும் எல் ஐ சியின் அதாவது மக்களின் பணம்தான் மூலதனமாக இருந்து வருகின்றது. இனிமேல் இந்த பல லட்சம் கோடி மக்கள் பணமும் சூதாட்டத்தில் விடப்படும்.
நான்கு நெறிமுறைகளில் Codes ஒன்று 2019 ஏப்ரலிலும் மீதி மூன்று 2020 செப்டம்பரிலும் நாடாளுமன்றத்தில் கேள்வி பதில் இன்றி இந்த அரசால் நிறைவேற்றப் பட்டன. வரும் ஜூலை மாதத்தில் இவை சட்ட வடிவத்தில் நடைமுறைக்கு வரும் என்ற வதந்தியை ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சர் இதுவரை மறுக்கவில்லை. நாடு விடுதலை பெற்றதில் இருந்து ஒன்றிய தொழிலாளர்கள் (நல) துறையால் கூட்டப்படும் Indian Labour Conference கடைசியாக ஜூலை 2015இல், அதாவது மோடி அரசின் இரண்டாவது ஆண்டில் கூட்டப்பட்டது. 46ஆவது கூட்டம் அது. 7 வருடங்கள் ஓடி விட்டன. நாட்டின் அனைத்து ஜனநாயக நிறுவனங்கள், அமைப்புகள் இந்த அரசால் எவ்வாறு படிப்படியாக ஒழிக்கப்பட்டனவோ அதே போல் ILC யும் ஒழிக்கப்பட்டு விட்டது.
எதிரியின் அணுகுமுறையை பொறுத்தே நம் எதிர்வினை இருக்க வேண்டும். அந்த நோக்கில் பார்க்கும்போது தொழிற்சங்கங்கள் பல பத்தாண்டுகளாக நடத்தி வரும் பாரம்பரிய போராட்ட வடிவங்கள் போதாது என்பது தெளிவு. கடந்த 150 வருடங்களாக இந்திய தொழிலாளி வர்க்கம் பெற்றுள்ள உரிமைகள் யாவும் மனுபோட்டு பெற்ற உரிமைகள் அல்ல என்பதையும் அதே உரிமைகள் பறிக்கப்படும்போது மனு எழுதினால் மீண்டும் கிடைத்து விடாது என்பதையும் இந்திய தொழிலாளர் வர்க்கமும் தொழிற்சங்க இயக்கமும் உணர்ந்தே உள்ளன, ஆனால் எதிர்வினையின் வடிவமும் கனமும் தீவிரமும் போதாது.
மு இக்பால் அகமது
முகநூல் பகிர்வு