புதுக்கோட்டை வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலத்தைக் கலந்த ஆதிக்க சாதியின் கொடூரம்!
தமிழகம் முழுவதும் தொடரும் மக்கள் அதிகாரத்தின் போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் நடந்த குடிநீர் தொட்டியில் மலம் கலந்த கொடூரம் பற்றிய செய்தி தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இன்னமும் எதிரொலிக்கவில்லை.

ஆண்ட பரம்பரை என்று மார்தட்டுகின்ற பிற்படுத்தப்பட்ட மேல் சாதியினர், அரசு சன்மானங்களை பெறுவதற்கு தன்னை ‘பிற்படுத்தப்பட்டவன்’ என்று அடையாளப்படுத்திக் கொள்வதும், கிராமப்புறங்களில் தலித்துகள் மீது ஆதிக்கம் செலுத்தும் போது தன்னை மேலானவர்கள் என்று பெருமையுடன் சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டுகின்ற வகையில் நடந்து கொள்வதும் என்ற இரட்டை வேடத்தை தோலுரிக்காமல் இந்த பிரச்சனை அடுத்த கட்டத்திற்கு நகராது.

வேங்கைவயலில் அய்யனார் கோவிலில் நுழைவதற்கு தலித் மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நீக்கம் செய்தார் என்ற செய்தி ஒரு புறம் இருக்க அவ்வாறு கோவிலில் நுழைந்த தலித் முதியவர் ஒருவரை ஆதிக்க சாதியினர் போலீசின் முன்னிலையில் தாக்கியுள்ளனர் என்பது அடுத்தடுத்து வரும் செய்தியாக உள்ளது.

குடிநீர் தொட்டியில் மலத்தைக் கலந்த ஆதிக்க சாதி வெறியர்களை இன்னமும் கைது செய்த பாடில்லை. ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகரானது என்று பெருமை பீத்திக்கொள்ளும் போலீசு குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் அல்லது கண்டுபிடிக்க விரும்பாமல் போங்காட்டம் ஆடி வருகிறது.

யூடியூபர் மற்றும் பார்ப்பன சனாதன வெறியை தனது சேனல்களின் மூலம் பரப்புகின்ற ஆர்.எஸ்.எஸ்-காரன் ரங்கராஜ் பாண்டே குடும்பத்தில் நடந்த சாவு பற்றி விசாரிப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்கிறார். ஆனால் புதுக்கோட்டை வேங்கை வயலுக்கு செல்வதற்கு நேரமில்லை.

தமிழகத்தில் சாதி -தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் மக்கள் அதிகாரம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் தமிழகம் முழுவதும் புதுக்கோட்டை சாதி தீண்டாமை வன்கொடுமைக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

ஜனநாயகத்தைப் பற்றி பேசும்போது டாக்டர் அம்பேத்கர் முன்வைத்த வாதம் கவனிக்கத்தக்கது. “தீண்டாமை கொடுமைகளைப் பற்றியும், அதன் விளைவுகளைப் பற்றியும் தலித்துகள் மத்தியில் பேசுவதைக் காட்டிலும், அந்த கொடூரத்தை நிகழ்த்துகின்ற ஆதிக்க சாதியினர் மத்தியில் சென்று பேசுவதும், விமர்சிப்பதும் தான் உண்மையான ஜனநாயக பண்பு” என்பார்.

தலித்துகள் மீதான புதுக்கோட்டை வேங்கைவயல் போன்ற சம்பவங்களை எதிர்த்து போராடுவதற்கு வர்க்க உணர்வும், சமூகப் பொறுப்பும், பார்ப்பன சனாதன வாழ்வியல் மற்றும் சாதி தீண்டாமை கொடுமைகளை எதிர்த்துப் போராடும் மனநிலை ஆகியவற்றை உள்ளடக்கிய அத்தகைய ஜனநாயக பண்பாடு அவசியமாகிறது.

இதையும் படியுங்கள்: மனிதன் வாயில் மலத்தை திணிப்பதும், குடிநீரில் மலத்தை கலப்பதும் தீண்டாமை வன்கொடுமையின் உச்ச கட்டங்கள்!

பார்ப்பன பாசிஸ்டுகளை களத்தில் வீழ்த்துவதற்கு அவர்களின் அடித்தளமாக விளங்குகின்ற கிராமப்புறங்களில் நீடித்து நிலவும் அரை நிலப் பிரபுத்துவ உறவுகள் மற்றும் அவை தோற்றுவிக்கும் சாதி- தீண்டாமை கொடுமைகள் ஆகியவை அனைத்தையும் எதிர்த்து போராடுவதன் மூலம் தான் நிரந்தரமாக வீழ்த்த முடியும்.

“தீண்டாமை குற்றங்களை புரியும் ஆதிக்கு சாதியினருக்கு இட ஒதுக்கீட்டு உரிமையை ரத்து செய்!” என்று முழங்குவதன் மூலம் இது போன்ற குற்றம் இழைக்கும் ஆதிக்க சாதியின் மத்தியில் தன் சாதியினர் மீதான விமர்சனத்தையும், கோபத்தையும் உருவாக்குவதற்கு வழிவகுக்கும்.

இத்தகைய கண்ணோட்டத்தில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த கொடூரத்திற்கு எதிரான போராட்டத்தை தொகுத்து அளிக்கின்றோம்.

மக்கள் அதிகாரத்தின் போராட்டம் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஜனநாயக சக்திகளை இணைத்துக் கொண்டு வீச்சாக நடந்து வருகிறது.

மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here