புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் குடிக்கின்ற குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த சாதி-தீண்டாமை வக்கிரத் தனத்தையும், இது போன்ற ஆதிக்க சாதி வெறியாட்டங்களை செய்திகளை போல கடந்து செல்கின்ற மனநிலையையும் உடனே கண்டிக்காத சொரணையற்ற எனது சிந்தனை முறையை கம்யூனிஸ்ட் என்ற வகையில் குற்ற உணர்ச்சி அடைகிறேன்.

சமகாலத்தில் நடக்கும் அரசு பயங்கரவாத நடவடிக்கைகள் துவங்கி உள்ளூரில் நடக்கின்ற ஆதிக்க சாதி வெறியாட்டங்கள் வரை அனைத்தையும் உடனுக்குடன் கண்டிப்பதும் அதற்கு எதிராக வெகுஜன மக்களை கிளர்ந்து எழச்செய்யக்கூடிய வகையில் எழுதுவதும் இந்த நவீன டிஜிட்டல் யுகத்தில் சிரமமான செயல் அல்ல.

உழைக்கும் மக்கள் மீது நடக்கின்ற தாக்குதல்களை கண்டிப்பதற்கு அவர்களைப் பற்றி பொது புரிதல் இருந்தால் மட்டும் போதாது. அவர்களின் வாழ்நிலை, அன்றாடம் அவர்கள் அனுபவிக்கும் சாதி-தீண்டாமை கொடுமைகளை சொந்த முறையில் உணர்ந்து வெளிப்படுத்துவதே கம்யூனிஸ்ட்டின் உணர்ச்சியாக இருக்க முடியும். அப்படி செயல்படாததால்தான் குற்ற உணர்ச்சி நெஞ்சை உறுத்துகிறது.

சாதி தீண்டாமை கொடுமைகளுக்கு பேர்போன புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்றாடம் தீண்டாமை வன்கொடுமைகள், தலித் மக்கள் மீது ஆதிக்க சாதிகள் நடத்துகின்ற தாக்குதல்கள், பிற சாதியினரை திருமணம் செய்து கொள்கின்ற தலித் இளைஞர்களை ஆதிக்கசாதி வெறியுடன் படுகொலைகளை நடத்துகின்ற கொடூரங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த சம்பவங்கள் எதுவும் வெளியில் தெரிவதில்லை என்பதாலேயே சமூகம் எந்த பிரச்சனையும் இன்றி போய்க் கொண்டிருக்கிறது என்று அர்த்தமல்ல.

அதேபோன்று சமீபத்தில் நடந்த உச்சகட்ட கொடூரமான மனிதர்கள் குடிக்கின்ற தண்ணீரில் மலத்தை கலக்கின்ற அளவிற்கு சாதி வெறி வக்கிரத்தனமாக மனதில் ஊறிப் போயுள்ள ஒரு கும்பல் இன்றும் ‘மனிதர்கள்’ என்ற போர்வையில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்சனை இருந்த புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூரில் உள்ள வேங்கை வயல் தெருவில் உள்ள தலித் மக்களுக்குதான் இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது. சுதந்திரம் பெற்றதாக கூறிக்கொண்ட இந்தியாவில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு ஆளும் வர்க்கத்திற்கு யோக்கியதை இல்லை.

தவித்த வாய்க்கு தண்ணீரை கேட்பதற்கு கூட பல போராட்டங்கள் நடத்தி 2016-17 ஆண்டில் தான் இறையூரில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்தக் குடிநீர் தொட்டியில் தான் மலத்தை கலந்தார்கள் ஆதிக்க சாதி வெறியர்கள். இதனால் இந்த தண்ணீரை குடித்த சிறுவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்தான் குடித்த நீரில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று ஆராய்ச்சி துவங்கியது.

ஆட்சியரிடம் முறையிடும் ஊர் மக்கள்

அவ்வாறு ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சியாளர் உட்பட அதிகார வர்க்க கூட்டத்திற்கு அந்த கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலில் தலித் மக்கள் நுழைவதற்கு அனுமதி இல்லை என்ற உண்மையும், தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை தொடர்கிறது என்ற உண்மையும் உறைத்திருக்கிறது.

பல நூற்றாண்டுகளாக சாதி தீண்டாமை கொடுமையில் ஆழ்த்தி வைக்கப்பட்டுள்ள தலித் மக்கள் மீதான கொடூரங்களை பட்டியலிட்டு மாளாது. அவை ‘சுதந்திர இந்தியா’ என்று கூறிக் கொள்ளப்பட்ட இந்தியாவில் இன்றைய தேதி வரை தொடர்கிறது என்பது நமக்கு அவமானம்.

ஆனால் சமூகத்தில் கணிசமாக வாழ்கின்ற தலித் மக்கள் மீது இப்படிப்பட்ட கொடூரமான தீண்டாமை வன்கொடுமைகள் நடக்கின்ற போது பிறர் அதை மௌனமாக கடந்து செல்வதற்கு அடிப்படை உள்ளது. இந்தியாவில் சாதி அமைப்பை பற்றி ஆய்வு செய்த டாக்டர் அம்பேத்கர் “இந்திய சமூகம் படிநிலை சாதி அமைப்பை கொண்ட சமூகமாக உள்ளது. அந்த படிநிலை என்பதும் தனித்தனி அடுக்குகளைக் கொண்ட படிநிலையாக உள்ளதால், ஒரு அடுக்கிற்குள் நடக்கின்ற கொடுமைகள் பிற அடுக்கில் உள்ளவர்களுக்கு எந்த வகையிலும், துன்பத்தையோ, குற்ற உணர்ச்சியோ ஏற்படுத்துவதில்லை” என்று தீண்டாமை பற்றிய ஆதிக்க சாதியினரின் அல்லது சாதி இந்துக்களின் மனநிலை பற்றி கேள்வி எழுப்பினார்.

சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி என்பதற்கும் தீண்டாமை குற்றம் புரியும் ஆதிக்க சாதியின் மனநிலைக்கும் நெருக்கமான உறவு உள்ளது. சுயமரியாதை, பகுத்தறிவு உட்பட சமூக நீதிக் கோட்பாடு தலித் மக்களுக்கு கிடையாது, இருக்கக் கூடாது என்பதுதான் ஆதிக்க சாதியின் மனநிலையாக தொடர்கிறது. இதை இடித்து உரைக்காமல் அவர்களின் மனநிலையின் மீது கேள்வி எழுப்புவது சாத்தியமே இல்லை.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பிறகு அந்த தொகுதி எம்எல்ஏ அன்பரசன் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தவுடன் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரும் நேரடியாக களத்தில் இறங்கி விசாரணை நடத்திய போது அந்த விசாரணையில் வெளிவந்த இன்ன பிற தீண்டாமை குற்றங்கள் (அதாவது கோவிலில் வழிபட தடை, இரட்டை குவளை முறை போன்றவற்றின்) மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து விட்டார்கள் கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள் என்றவுடன் பலரும் ‘அப்பாடா நிம்மதி’ என்று கருதுகிறார்கள்.

இதையும் படியுங்கள்: ஆதிக்க சாதி வெறியனால் ராஜஸ்தானில் சிறுவன் கொலை!

அதிகார வர்க்கத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் தெரிந்தால் தானே இது போன்ற குற்றங்களை தடுக்க முடியும். இப்போதுதான் கவனத்திற்கு தெரிய வருகிறது என்பது போல சமூகத்தில் நடக்கின்ற சாதி தீண்டாமை கொடுமைகளை பற்றி எதுவும் தெரியாதது போல மௌனமாக கடந்து செல்ல விரும்புகிறார்கள்.

இதைத்தான் நாம் பரிசீலிக்க வேண்டும். எங்கோ மாவட்ட ஆட்சியாளர் பொறுப்பிற்கு படித்துவிட்டு மக்களில் இருந்து வெகு விலகி, பங்களாக்களில் ஏசி அறைகளில் அமர்ந்து கொண்டு மக்களின் வாழ்க்கை பற்றி பரிசீலனை செய்யும்போது இவற்றைப் பற்றி பெரிதாக எதுவும் உணர முடியாது. இத்தகைய அதிகார வர்க்கத்தின் கைகளில் நாட்டை ஆளுகின்ற அதிகாரம் இருப்பதால் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை பெரும்பான்மை மக்களின் பிரச்சனை இதுவரை தீர்ந்த பாடும் இல்லை. எனவே அவர்களிடமிருந்து அதிகாரம் பறிக்கப்பட வேண்டும் அதிகாரம் மக்களிடம் இருக்க வேண்டும் என்கிறது மக்கள் அதிகாரம்.

அவ்வாறு அதிகார வர்க்கத்திற்கு சென்ற ஒரு சிலர் அபூர்வமாக இதுபோன்று நடவடிக்கையில், அதாவது தீண்டாமை குற்றம் புரிந்தவர்கள் மீது உடனடியாக சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளும் போது அதுவே மிகப்பெரிய செய்தியாக மாறுகிறது.
ஆனால் இந்தியா சுதந்திரம் பெற்றதாக கூறிக்கொண்டு 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் இது போன்ற சாதி -தீண்டாமை கொடுமைகளும், வக்கிரங்களும் தொடர்வதை பற்றி ஆட்சியாளர்களும், இன்ன பிறரும் பெரிதாக அவமானப்படுவதில்லை அல்லது குற்ற உணர்ச்சி கொள்வதில்லை.

இது போன்ற சம்பவங்களை விடுதலை சிறுத்தைகள் மற்றும் ஒரு சில அமைப்புகள் மட்டுமே கண்டித்துள்ளனர். பொது சமூகமோ, பிற மைய அரசியலில் ஈடுபடுகின்ற கட்சிகளோ இது பற்றி பேசவில்லை

– தொல்.திருமாவளவன்

வேங்கை வயல் தெருவில் நடந்த கொடுமைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய தொல் திருமாவளவன் “இது போன்ற சம்பவங்களை விடுதலை சிறுத்தைகள் மற்றும் ஒரு சில அமைப்புகள் மட்டுமே கண்டித்துள்ளனர். பொது சமூகமோ, பிற மைய அரசியலில் ஈடுபடுகின்ற கட்சிகளோ இது பற்றி பேசவில்லை” என்று விமர்சித்தார்.

இதுதான் சமூக நீதிக் கோட்பாட்டை பேசுகின்ற திராவிட இயக்கங்கள் துவங்கி வர்க்க புரட்சி பேசுகின்ற கம்யூனிஸ்டுகள் வரை நேர்மையாக பரிசீலிக்க வேண்டிய கேள்வியாகும்.

வட இந்தியாவைப் போல தமிழகம் கிடையாது, இங்கு நீண்ட காலமாக திராவிட இயக்கங்கள் ஆட்சியில் உள்ளதால் தலித் மக்களுக்கு ஒரு சில உரிமைகள் கிடைத்துவிட்டது என்பதெல்லாம் ஓரளவிற்கு உண்மைதான். ஆனால் சாதி-தீண்டாமை கொடுமை என்ற இழிவானது இன்றும் பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது என்பதே புதுக்கோட்டை நமக்கு உணர்த்துகின்ற உண்மையாகும்.

நீண்ட காலமாக நிலவி வருகின்ற வர்ண-சாதி அமைப்பு முறை தற்போது ஆர் எஸ் எஸ் பாஜக கும்பலால் மீண்டும் வீரிய முறையில் புதுப்பிக்கப்படுகிறது. சுலபமாக இத்தகைய ஆதிக்க சாதி வெறியர்களுடன் ஒன்று கலந்து சாதி-தீண்டாமை கொடுமைகளை தலித் மக்கள் மீது நிகழ்த்தவும் வசதியாகிறது.

இதை இப்படியே நாம் அனுமதிக்க முடியாது. தீண்டாமை உள்ளிட்ட ஆதிக்க சாதி வெறியாட்டங்களுக்கு எதிராக, ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை ஆற்றுவதன் மூலமே தற்போதைக்கு தடுத்து நிறுத்துவதும், அதற்கு மேலாக முற்றாக துடைத்து எறிகின்ற வகையில் வினையாற்றுவதும் தான் சாதி – தீண்டாமை கொடுமைகளுக்கு நிரந்தரமாக முடிவு கட்டும்.

  • இரா. கபிலன்.

1 COMMENT

  1. சாதிக்கொரு சங்கம் ,சாதி அடிப் படையில் சலுகைகள்,சாதி அடிப படையில் வேட்பாளர் தேர்வு, சாதி அடிப்படையில் தொகுதி ,சாதி அடிப்படையில் பள்ளி கல்லூரி சேர்க்கை, வேலை, பதவி உயர்வு, சாதி அடிப்படையில் தனி கோவில்,தனி சுடுகாடு இப்படி பிரித்து வைத்துக் கொண்டு சாதியை எப்படி ஒழிப்பது.பா்ப்பானர் சூத்தரினை ஏத்துக்கலை,சூத்திரன் பஞ்சமனை. ஏத்துக்கலை., 7& ஆண்டுகள். கடந்தும் இப்படியே இருக்க சுயநலமிக்க அரசியல்வாதிகளே,சாதி சங்க தலைவர்களே காரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here