மாநாட்டு தீர்மானங்கள்
- அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை உணவு, எட்டுமணி நேர வேலை, போதுமான கூலி என்பதை கார்ப்பரேட்டுகளின் நலனிலிருந்து முடிவெடுக்காமல் மக்கள் நலனில் இருந்து அடிப்படை உரிமையாக்க சட்டமியற்ற வேண்டும்.
- தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கின்ற தொழிலாளர் நல சட்ட திருத்தங்களை ரத்து செய்து வேலை உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுகளுக்கு வாரி கொடுப்பதை நிறுத்தி அனைத்தையும் அரசுடமையாக்க வேண்டும்.
- விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் நிரந்தரமாக பாதுகாக்கவும், 140 கோடி மக்களின் உணவு தற்சார்பை உறுதி செய்யவும், விதை, உரம், பூச்சி மருந்து, தொழிற் கருவிகள், கொள் முதல் ஆகியவற்றில் கார்ப்பரேட் கம்பெனிகளை அனுமதிக்காமல் அரசே அனைத்தையும் வழங்க வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை சட்டபூர்வ உரிமையாக்க வேண்டும்.
- அதிகரிக்கும் வேலையின்மை, விலைவாசி உயர்வு சமூக ஏற்றத்தாழ்வால் பாதிக்கப்படும் பெரும்பான்மை இந்துக்களுக்கு எந்த தீர்வையும் தராமல் வாக்கு அரசியலுக்காக மக்களை இந்துக்கள் என மோசடி செய்வதுடன் மதசார்பின்மை, சமத்துவம், சமூகநீதி இந்தியாவின் பன்முகத்தன்மை ஆகியவற்றை சிதைத்து மதவழி தேசியத்தை வன்முறை கலவரம், படுகொலைகள் மூலம் கட்டமைக்க முயலும் ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங்தள் சனாதன்சன்ஸ்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளை தடை செய்வதுடன் இதுவரை இத்தகைய அமைப்புகள் நடத்திய மதவெறி படுகொலை வன்முறை குற்றங்கள் மீது நீதிவிசாரணை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
- வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரே கூட்டத்தொடரில் 146 எம்பிக்களை சஸ்பென்ட் செய்துவிட்டு எந்த விவாதமுமின்றி தேர்தல் ஆணையரை ஆளும்கட்சியே முடிவு செய்யும் வகையில் தேர்தல் ஆணைய சட்ட மசோதாவை அமல்படுத்தியது ஜனநாயக உரிமைகளை நசுக்கும் பாசிச சர்வாதிகாரமாகும். இந்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தேர்தல் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு அளித்த தீர்ப்பின்படி பிரதமர், எதிர்கட்சிதலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுதான் தேர்தல் ஆணையரை தெரிவு செய்ய வேண்டும் என்பதை மீண்டும் அமல்படுத்த போராட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக செயல்படுவதுடன் மாநில உரிமைகளை பறித்து போட்டி அரசாங்கம் நடத்தி கூட்டாட்சி முறைக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஆளுநர் பதவியை முழுமையாக ஒழிக்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
- ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், என ஒற்றை அதிகாரத்தை நோக்கி நாட்டை அழிவுபாதைக்கு இழுத்துச் செல்லும் பாசிச பாஜக ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை முறியடிக்கும் விதமாக கல்வியில், வழிபாட்டில், வழக்காடு மன்றங்களில் பயிற்று மொழியாக தாய்மொழி தமிழை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும். பல்வேறு தேசிய இனங்கள் உள்ள நாட்டில் அந்தந்த தேசிய இனங்களின் மொழியில் மேற்கண்ட அனைத்தையும் அமல்படுத்த வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
- பிறப்பின் அடிப்படையில் உயர்வு -தாழ்வு, தீண்டாமை என்பதை முழுமையாக ஒழிக்க சாதி ஒழிப்பை சட்டமாக்குவதுடன், உடனடி தீர்வாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி பயனடைய வேண்டியவர்களை கண்டறிந்து தீர்வுகாண வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- உலகம் முழுவதிலும் 80 சதவீத நாடுகளில் வாக்கு சீட்டு முறையில்தான் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுகின்றன. இந்தியா, பிரேசில் போன்ற ஒரு சில நாடுகளில் மட்டுமே எலக்ட்ரானிக் வோட்டிங் மெசின் (இவிஎம்) மூலம் வாக்குபதிவு செய்து தேர்தல் நடத்தப்படுகின்றன. இத்தகைய எலக்ட்ரானிக் மெசினில் தில்லுமுல்லு செய்து வெற்றி தோல்வியை முன்கூட்டியே தீர்மானி்க்க முடியும் என துறைசார்ந்த வல்லுநர்கள் நிருபித்துள்ளனர். தான் யாருக்கு வாக்களித்தேன் என்பதை உறுதி செய்து கொள்ளும் உரிமை உத்திரவாதம் செய்யப்பட வேண்டும். எனவே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது.
- ஊபா போன்ற கருப்பு சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். மக்களுக்காக குரல் கொடுத்த, மோடி அரசை விமர்சித்த, எதிர்த்துப் போராடிய அறிவுஜீவிகள், மாணவர் தலைவர்கள், சிறுபான்மையினர் காலவரையற்ற வகையில் விசாரணை கைதிகளாகவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் எந்த நிபந்தனைகளும் இன்றி விடுவிக்கப்பட வேண்டும். பாசிச மோடி அரசு கருத்து உரிமையை பறிக்க கொண்டு வந்துள்ள தொலைத்தொடர்பு சட்டம் போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
- பாசிச பா.ஜ.க மீண்டும் ஆட்சியை கைபற்ற அனைத்து வழிகளிலும் சாதி,மத,இன மோதல்களையும், கலவரங்களையும் நடத்தி இந்துத்துவா வாக்குவங்கியை நிலைநிறுத்த முயற்சிக்கும். அவற்றை எதிர்கொண்டு முறியடிக்க அனைத்து ஜனநாயக இயக்கங்களும் இணைந்து மக்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
- 2024 நாடாளுமன்ற தேர்தல் வழக்கமாக வந்துபோகும் தேர்தல் அல்ல. பாசிசத்தை சட்டபூர்வமாக செயல்படுத்த மக்களிடம் நயவஞ்சகமாக பாசிச பாஜக அங்கீகாரம் கோரும் முக்கிய தேர்தலாகும். 2000 இஸ்லாமியர்களை படுகொலை செய்த, உச்சநீதிமன்ற தடையை மீறி பழமையான பாபர் மசூதியை இடித்து அதை சட்டபூர்வமாக அபகரித்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் பிரிவு பாஜக என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே, எதிர்கால தலைமுறையினர் சுயமரியாதையோடும், சுதந்திரமாகவும், சமூக நல்லிணக்கத்தோடும் வாழ வேண்டும் என்றால் பாசிச பாஜகவை தோற்கடிக்க அனைவரும் ஓரணியில் திரண்டு இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
- நாட்டு மக்களின் முக்கியமான கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த இந்தியா கூட்டணியை நிர்ப்பந்திக்க வேண்டும் எனவும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு புதுவை