ந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் NLC, தொடர்ந்து தனது நிறுவனத்திற்கு நிலத்தை வாரி வழங்கிய விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

நான்கு திறந்தவெளி சுரங்கங்களின் மூலமாக ஆண்டுக்கு 30.6 மில்லியன் டன் நிலக்கரியை பூமியிலிருந்து வெட்டி எடுத்து பயன்படுத்தி வருகிறது நெய்வேலி நிலக்கரி நிறுவனம் அதுமட்டுமின்றி அன்றாடம் 4240 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து சதர்ன் கிரிட் கார்ப்பரேஷன் மூலம் அதனை விநியோகம் செய்து வருகிறது.

1956 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று பொதுத்துறை நிறுவனங்களான நவரத்தினங்களில் ஒன்றாக கருதப்பட்டு நவரத்தினா அந்தஸ்தையும் பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த நிறுவனத்தில் பன்னிரண்டாயிரம் நிரந்தர தொழிலாளர்களும், நான்காயிரம் பொறியாளர்களும், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களும் வேலை செய்து வருகிறார்கள். ஆண்டுக்கு 1500 கோடி முதல் 2000 கோடி வரை நிகர லாபம் ஈட்டி வருகிறது நெய்வேலி நிலக்கரி நிறுவனம்.

இந்த அனைத்து பெருமைகளை எப்படி அடைந்தது தெரியுமா? ஒன்றிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் வசித்து வந்த லட்சக்கணக்கான மக்கள், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு மனைகளை பறித்துக் கொண்டு அவர்களுக்கு அற்ப, சொற்ப நட்ட ஈடுகளை கொடுத்து அவர்களின் காலடியில் புதைந்து கிடந்த பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுத்து பல்லாயிரம் கோடி ரூபாயை சம்பாதித்துள்ளது நிலக்கரி நிறுவனம்.

ஏறக்குறைய 53 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடைய நெய்வேலி நிலக்கரி நிறுவனம், மீண்டும் தன்னுடைய சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களை எடுக்கத் துவங்கி உள்ளது. அவ்வாறு நிலங்களை எடுக்கும்போது நில உரிமையாளர்களான விவசாயிகள் வயிற்றில் அடிக்கின்ற வகையில் அடிமாட்டு விலைக்கு நிலங்களை எடுப்பதற்கு தனது அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி வருகிறது.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் முதற்கட்டமாக முதல் சுரங்க விரிவாக்கத்திற்கு ஒன்பது கிராமங்களை சேர்ந்த மக்களிடமிருந்து 3000 ஏக்கர் நிலத்தை பறித்தெடுத்தது. இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக 25 கிராமங்களை சேர்ந்த மக்களிடம் இருந்து பத்தாயிரம் ஏக்கருக்கும் மேல் பறித்து எடுத்தது. தற்போது மூன்றாவது முறையாக சுரங்க விரிவாக்கத்திற்காக 26 கிராமங்களை சேர்ந்த மக்களிடம் இருந்து 12,125 ஏக்கர் நிலங்களை பறித்தெடுப்பதற்கு தயாராகி உள்ளது.

அது மட்டும் இன்றி கடந்த 66 ஆண்டுகளில் நெய்வேலி நிலக்கரி நிறுவனமானது இதுவரை 37,256 ஏக்கர் நிலங்களை விவசாயிகளிடமிருந்தும், வீட்டு மனைகளில் குடியிருந்தவர்களிடம் இருந்தும் பறித்தெடுத்துக் கொண்டு குறைந்தபட்ச நட்ட ஈட்டை மட்டும் வழங்கி அவர்களை நாசம் ஆக்கி உள்ளது.

எடுத்துக்காட்டாக, முதன் முதல் என்எல்சிக்கு நிலம் கொடுத்த அஜிஸ் நகர் மக்கள் துவங்கி அதன் அடுத்த கட்டமாக நிலத்தை கொடுத்த வெள்ளையங்குப்பம் உள்ளிட்ட 23 கிராம மக்கள் விருதாச்சலம் அருகில் புதுக்கூரைப்பேட்டை மற்றும் விஜயமாநகரத்தில் குடியேற்றப்பட்டனர். அஜிஸ் நகர் மக்கள் உளுந்தூர்பேட்டை அருகில் எடைக்கல் என்ற கிராமத்தில் குடியேற்றப்பட்டனர். அன்று அவர்கள் இழந்த வாழ்க்கையை மீட்பதற்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆகி உள்ளது.

அந்த அனுபவத்திலிருந்து தற்போது மூன்றாவது முறையும் ஏமாற மாட்டோம் என்று நிமிர்ந்து நிற்கிறார்கள் கம்மாபுரம், கத்தாழை, கரிவெட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள்.

தற்போதைய நிலைமையில் ஏற்கனவே என்எல்சி கையகப்படுத்திய நிலம் ஏறக்குறைய 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் இன்னமும் பயன்படுத்தப்படாமல் உள்ளது அதே சமயத்தில் புதிதாக 12,125 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கு 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முயற்சித்து வந்தாலும் தற்போது ஏன் இவ்வளவு அவசரத் காட்டுகிறது என்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

நாட்டை ஆளுகின்ற பாசிச ஆர்எஸ்எஸ் பாரதிய ஜனதா கும்பலானது, இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் விற்று வருகிறது. அந்த அடிப்படையில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை அதானியிடம் ஒப்படைப்பதற்கு உரிய தருணத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை பாராளுமன்றத்திலேயே பட்டவர்த்தனமாக அறிவித்துள்ளனர்.

தனியார் முதலாளிகள் நிலத்தை கேட்டால் சட்டபூர்வமாக அதை கையகப்படுத்துவதற்கு பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது என்ற காரணத்தினால் அரசாங்கமே நிலத்தை கையகப்படுத்தி அதனை தனியாருக்கு ஒப்படைக்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தமிழகத்தில் மட்டும் செயல்பட்ட நிறுவனமாக இருந்து, தற்போது அகில இந்திய நிறுவனமாக (NLC India limited) மாறி உள்ளது. அதன் தேவைகளுக்கான நிலம் எடுப்பு மற்றும் கையகப்படுத்துதல் பணியை மட்டும் தமிழக அரசின் தலையில் கட்டி நிலத்தை விவசாயிடமிருந்து பறித்துக் கொடுப்பதற்கு உத்தரவிடுகிறது.

Neyveli Lignite Corporation

விவசாயிகளை பணிய வைப்பதற்கு தமிழகத்தை ஆளும் திமுகவை பயன்படுத்தி பல்வேறு பேச்சுவார்த்தைகள் மற்றும் நைச்சியமான முறையில் மிரட்டல்கள் போன்றவற்றின் மூலம் பணிய வைத்துவிட துடித்துக் கொண்டிருக்கிறது இந்திய ஒன்றிய அரசு. திமுக அரசும் இத்தகைய செயல்களுக்கு எதிர்த்து நின்று போராடாமல் விவசாயிகளை சரி கட்டுகின்ற வகையிலே நடந்து கொள்கிறது.

தனது சொந்த நிலத்தில் நெல், கரும்பு, வாழை, உளுந்து, தானியங்கள் மற்றும் காய்கறிகள் என அனைத்தையும் முப்போகம் விளைவித்து வந்த விவசாயிகள் பல தலைமுறைகளாக தனது குடும்பத்திற்கு வாழ்வளிக்கக்கூடிய விளை நிலத்தை விட்டு வெளியேறும் போது அவர்கள் கேட்கின்ற நட்ட ஈட்டை கொடுப்பதற்கு பதிலாக பேரம் பேசுகின்றனர்.

கடந்த மாதம் 16 ஆம் தேதி  தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம், திராவிடர் கழகம் மற்றும் மக்கள் அதிகாரம், பல்வேறு விவசாய சங்கங்கள் ஆகிய கட்சிகள் இயக்கங்கள் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை அணி திரட்டி மாபெரும் பேரணி, ஆர்ப்பாட்டத்தை நடத்தி என்எல்சி எச்சரித்த பின்னரும் என்எல்சி நிர்வாகம் பணியவில்லை.

மாறாக மாவட்ட நிர்வாகம் திமுக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்கிறது. அதில் விவசாயிகளை அழைக்காமல் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களை வைத்து பிரச்சனையை முடிப்பதற்கு முயற்சி எடுக்கிறது.

“எனது நிலம், எனது உயிர்! நிலம் என் அதிகாரம்” என்று முழங்கிய விவசாயிகளை ஒரிசா, பீகார், சத்தீஸ்கர், மேற்குவங்க பாணியில் அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் தயாராகி வருகிறது இந்திய ஒன்றிய அரசான பாஜக மற்றும் தமிழகத்தை ஆளும் திமுக.


இதையும் படியுங்கள்: நிலக்கரிச் சுரங்கம்; கருப்பில் தோய்த்த நெல் – கருப்பு நுரையீரல்


தனது காலடியின் கீழ் உள்ள நிலத்தில் கிடைக்கின்ற நிலக்கரி பல கோடி ரூபாய் மதிப்புடையது என்பதை அரை நூற்றாண்டுக்கு முன்பு அந்த விவசாயிகள் புரிந்து கொள்ளவில்லை. முதன்முதலில் நிலக்கரியை கண்டெடுத்த ஜம்புலிங்க முதலியார் தனது விவசாய நிலங்கள் 620 ஏக்கரை தொழில் வளர்ச்சிக்காக தமிழக அரசிடம் ஒப்படைத்தார். ஆனால் இன்றோ அத்தனை கனிம வளங்களையும் கொள்ளையடித்துக் கொண்ட பிறகு விவசாயிகளை வஞ்சிப்பதால் இந்தக் கட்டத்தில் அவர்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தனது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு 17 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்தாலும், அதில் மிக முக்கியமாக “ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் நட்ட ஈடு என்பதும், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை” என்பதும் மையமானது ஆகும்.

சாதாரணமாக விவசாயிகள் பயிரிட்ட பன்னீர் கரும்பை பொங்கலின் போது அரசாங்கம் வழங்குகின்ற பொருட்களோடு சேர்த்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடிய பின்பே தமிழக அரசு பன்னீர் கரும்பை கொள்முதல் செய்வதற்கு 72 கோடி ஒதுக்குவதற்கு முன் வந்தது. ஆனால் அதையே தமிழக அரசு இழுத்தடித்தது, பல்வேறு போராட்டங்கள், கண்டனங்களுக்கு பிறகு பன்னீர் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை இந்த நில கொள்முதலுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் விவசாயிகள் வயிற்றில் எந்த அளவிற்கு அடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நன்றாக விளங்கும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கனிம வளங்களை, அந்த மாநிலத்திற்கு, அந்த மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு, அந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்கு பயன்படுத்துவது என்ற மாநில உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை உதறித் தள்ளிவிட்டு கார்ப்பரேட் கொள்ளைக்காகவும், பாஜக ஆளுகின்ற மாநிலங்களைச் சார்ந்த தேசங்கடந்த தரகு முதலாளிகள் கொழுப்பதற்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வேட்டையாடப்படுவதை நாம் அனுமதிக்க முடியாது.

எனவே, 26 கிராமங்களைச் சேர்ந்த 17,000 குடும்பங்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் பேரின், நாட்டின் கண்ணின் மணிகளான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ள இந்த நில கையகப்படுத்தும் திட்டம் அவர்களின் வாழ்வை முற்றாக அழித்து ஒழிப்பதற்கு முன்பாக கிளர்ந்து எழுவோம்.

  • கணேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here