90களில் புதிய தாராளவாதக் கொள்கை என்ற பெயரில் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்கிற மறுகாலனியாக்க கொள்கை நமது நாட்டின் மீது திணிக்கப்பட்ட போது அது நாட்டின் பொருளாதாரத்தை நாலு கால் பாய்ச்சலில் முன்னேற்றி விடும் என்று அறிவித்தனர்.

காங்கிரசு ஆளுங்கட்சியாக இருந்தபோது கொண்டுவந்த திட்டங்களை பாசிச ஆர்எஸ்எஸ் பாஜக ஆட்சியைப் பிடித்த பிறகு மக்களைப் பற்றி எவ்வித கவலையும் இன்றி கார்ப்பரேட் சேவையில் மூர்க்கமாக இறங்கியுள்ளது. இதன் விளைவு நாடு மறுகாலனியாக்கத்தை தீவிரத்தன்மையை அடைந்துள்ளது.

தமிழகத்தில் மீத்தேன் திட்டம், ஷேல் கேஸ் திட்டம், கூடங்குளம் அணுஉலை, தேவாரம் அம்பரப்பர் மலையில் அமையப்பெறும் நியூட்ரினோ திட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர், திருவண்ணாமலை கவுத்தி-வேடியப்பன் மலைகளை உடைத்து ஜிந்தால் நிறுவனத்தின் கனிமவள கொள்ளை போன்ற அனைத்தும் எவ்வித தங்கு தடையுமின்றி அமுலாக துவங்கியுள்ளது.

இதை எதிர்த்து மக்களின் போராட்டங்களும் தீவிரமடையத் துவங்கியுள்ளது.
அந்த வகையில் கெயில் குழாய் பதிப்பதற்கு துவங்கிய காலத்திலேயே அதைப் பற்றி எமது விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் ஆய்வு செய்து எழுதிய கட்டுரையை மீள் பதிவு செய்கிறோம்.

000

விவசாயிகளை காவு வாங்கும் எரிவாயு குழாய்!

இத்திட்டத்தின் மொத்தத் தொலைவான 884 கி.மீ.-ல் தமிழகத்தின் இந்த 7 மாவட்டங்களில் மட்டும் 310 கி.மீ. தூரத்திற்கு இக்குழாய் பதிக்கப்பட இருக்கிறது. அந்தவகையில், 175 கிராமங்களிலுள்ள சுமார் 50,000 ஏக்கர் விளைநிலங்கள் நாசமாகும். 5000 விவசாயக் குடும்பங்கள் நேரடியாகவும் பல ஆயிரம் குடும்பங்கள் மறைமுகமாகவும் பாதிக்கப்படும்.கேரளத்திலிருந்து கோழிக்கோடு வழியாக மங்களூருக்கும் தமிழ்நாடு வழியாக பெங்களூருக்கும் குழாய் வழியாக எரிவாயு கொண்டு செல்லும் ரூ.3 கோடி மதிப்பிலான திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்தது. இதனடிப்படையில், தமிழ்நாட்டில் கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக குழாய் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் மேற்கொண்டது.

திட்டத்தின் கோர முகம்

இது விவசாயத்தைச் சீர்குலைக்குமென்பதால், இக்குழாய்களை நெடுஞ்சாலை ஓரமாகவோ, ரயில்பாதை ஓரமாகவோ கொண்டு செல்லுமாறு கோருகிறார்கள் விவசாயிகள். அவ்வாறு கொண்டு சென்றால் “குழாய்ப்பாதையின் நீளம் அதிகரிக்கும், செலவு அதிகரிக்கும், அதனை நுகர்வோர் சுமக்க வேண்டியிருக்கும்” என்பதுதான் கெயில் நிறுவனத்தின் ஆட்சேபம். எரிவாயு விலையை விருப்பம் போல உயர்த்தி மக்களைக் கொள்ளையடிக்கும் எரிவாயு நிறுவனம், நுகர்வோர் நலன் குறித்துப் பேசுவது ஒரு பித்தலாட்டம். தற்போது இந்தக் குழாய்ப் பாதையில் செல்லும் எரிவாயுவில் கூட 50 சதவீதத்துக்கு மேல் தனியார் தொழிற்சாலைப் பயன்பாடுகளுக்குத்தான் செல்லவிருக்கிறது. இருப்பினும் இந்நிறுவனங்களின் இலாபம் ஈட்டும் உரிமையை, பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வுரிமையைக் காட்டிலும் மேம்பட்ட பொதுநலனாக நீதிமன்றம் கருதுகிறது.

  • இத்திட்டத்திற்காக நிலத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்கிறது என்கிறது கெயில் நிறுவனம். அதுவும் 99 ஆண்டுகளுக்கு!
  • நிலத்திற்கு மட்டும்தான் இழப்பீடு. மரங்கள், பயிர்கள், கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், பசுமைக் குடில்கள், வீடு போன்ற கட்டுமானங்கள் மற்றும் விவசாயத்திற்காக அந்த நிலங்களின் உரிமையாளர்களான விவசாயிகள் பட்டக் கடன்கள் போன்றவற்றிற்கு எந்தப் பாதுகாப்பும் கிடையாது.
  • அப்படியானால், இழப்பீடு எவ்வளவு தருவார்கள்? நிலத்தின் சந்தை மதிப்பிற்கு 10% மட்டுமே வழங்கப்படும்.
  • குழாயின் இருபுறமும் சுமார் 30 அடி தூரத்திற்கு வேர் ஆழமாக செல்லும் மரங்களை வைக்கக் கூடாது. அதாவது, தென்னை, மா, புளி போன்ற மரங்கள் வெட்ட வேண்டும். குறுகிய கால பயிர்களை மட்டும் தான் பயிரிட முடியும். இதனை மீறி நட்டால் அந்த விவசாயிகள் கிரிமினல்களாகக் கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும்.
  • இந்த இடத்திற்கு அருகில் நிலத்தை உழக் கூடாது. ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கூடாது.
  • குழாயைச் சுற்றி இருபுறமும் சுமார் ஒரு கி.மீ. தூரம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். அதாவது, இப்பகுதிகளில் கிணறு, வாய்க்கால் அல்லது குளங்கள் வெட்டக்கூடாது.
  • ஏழு மாவட்டங்களில் இலட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டும். சுமார் ஆயிரம் நீர்நிலைகள் மூடப்படும். ஆயிரக்கணக்கான வீடுகள் இடிக்கப்படும்.

இறுதியாக ஒரு கேள்வி. இந்த எரிவாயு குழாய் பாதுகாப்பானதா? இல்லை என்பதற்கு சாட்சி, சென்ற ஆண்டு ஆந்திர மாநிலத்தில் நாகாராம் என்ற கிராமத்தில் கெயில் நிறுவனம் எரிவாயு கொண்டு செல்லப் பதித்த குழாய்களில் கசிவு ஏற்பட்டு வெடித்ததால் 16 பேர் பலி ஆனார்கள் என்பதுதான்!

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இதன் பாதிப்பு

gail-pipeline-4இத்திட்டத்தின் படி விவசாய நிலங்களில்தான் குழாய் பதிக்கப்படும். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர், தேன்கனிக்கோட்டை வட்டங்களைச் சேர்ந்த உடையாண்ட அள்ளி, தொட்ட திம்மன அள்ளி, கருக்கன அள்ளி, தொட்ட மெட்டரை, போடிசிப் பள்ளி, அச்செட்டிப் பள்ளி, எடய நல்லூர், பூனப்பள்ளி ஆகிய ஊராட்சிகளின் வழியாக கர்நாடகத்திற்கு இக்குழாய் கொண்டு செல்லப்பட இருக்கிறது. தருமபுரி மாவட்டத்தின் தருமபுரி, பாலக்கோடு வட்டங்களின் வழியாக இக்குழாயின் பாதை செல்கிறது.

இக்குழாய் பதிக்கப்படும் இந்தக் கிராமங்களில் நெல், கரும்பு, வாழை, தென்னை, மா, பலா, தக்காளி, பூக்கள் மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. பல நூற்றுக்கணக்கான கிணறுகளும் ஏரிகளும் உள்ளன. பல லட்ச ரூபாய் கடன்பட்டு ஆழ்துளைக் கிணறுகளை விவசாயிகள் அமைத்துள்ளனர். இவை அனைத்தையும் நாசமாக்கும் வகையில்தான் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

சர்வக் கட்சி ஒத்துழைப்பு!

2003-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி (பா.ஜ.க. + திமுக + மதிமுக + பாமக கூட்டணி) காலத்தில்தான் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட உடனே, கெயில் நிறுவனத்துக்காக இந்திய அரசின் எரிபொருள் மற்றும் இரசாயனத் துறை அக்டோபர் 22-ம் தேதி அரசாணை பிறபித்தது. அதனைத் தொடர்ந்து அரசிதழில் வெளியிட்டு உடனடியாக இத்திட்டத்தை அமுலாக்கும் வேலையில் இறங்கியது. கெயில் நிறுவனமும் குழாய் பதிக்க தேவையான விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சிகளைத் துவங்கியது. விவசாயிகளின் எதிர்ப்பை பொருட்படுத்தவில்லை.

இத்திட்டத்தை அமுல்படுத்துவதில் உள்ள சட்டசிக்கல்களை உணர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி (காங்கிரசு – போலி கம்யூனிஸ்ட் – திமுக கூட்டணி) தனது முதல் ஆட்சி காலத்தில் அமுல்படுத்தத் துணியவில்லை. இதனைத் தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி 2ல் 2011-ல் பெட்ரோலியம் மற்றும் கனிம வளங்கள் குழாய் பதிக்கும் சட்டம் 1962-ல் ஒரு சட்டத்திருத்தத்தை எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டது.

மினி நிலம் கையகப்படுத்தும் சட்டம்!

பெட்ரோலியம் மற்றும் கனிமவளக் குழாய் பதிக்கும் சட்டத்தில் 2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் படி,

  • மத்திய அரசின் குழாய் பதிக்கும் திட்டங்களுக்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது.
  • இச்சட்டத்தின் படி நிலம் கொடுத்த விவசாயிகளையே குற்றவாளிகளாக்கி தண்டனை வழங்க முடியும். அதாவது, விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய், சேதமடைந்திருந்தாலோ, வேறு எந்த வகையான பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ, சம்பந்தப்பட்ட விவசாயி தான் பொறுப்பேற்க வேண்டும்.
  • தான் குற்றவாளி அல்ல என்று நிரூபிக்க வேண்டியது நில உரிமையாளரான விவசாயிகளின் பொறுப்பு.
  • குற்றம் சுமத்தப்பட்ட ஒரு விவசாயி தான் குற்றவாளி அல்ல என்று நிரூபிக்கத் தவறினால், தண்டனை மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.

இதில் சட்டத்துறை கட்டமைப்பு நெருக்கடி என்ன தெரியுமா? இந்திய அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு ‘நிலம்’ மீதான gail-pipeline-1அதிகாரத்தை வழங்கியுள்ளது. இந்தச் சட்டமும் நிலம் கையகப்படுத்தும் சட்டமும் (நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து மோடி அரசு அமுல்படுத்த முயற்சிக்கும் மசோதா) அரசியல் சாசனம் மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ள நிலத்தின் மீதான உரிமையைப் பறிக்கின்றன. இந்திய அரசியல் அமைப்பின் போலித்தனத்தை அம்பலப்படுத்தாமல், போலி கம்யூனிஸ்டுகள், தமிழக அரசிடம் கெஞ்சுகின்றனர். அரசியல் சாசனம் வழங்கியுள்ள ‘உரிமை’யை நிலைநாட்டக் கோருகின்றனர்.

ஜெயலலிதாவின் நாடகம்!

இதன் பின்னர் 2013-ம் தொடக்கத்தில் இத்திட்டத்தை அமுல்படுத்தும் வேலையில் கெயில் நிறுவனம் ஈடுபட்டது. அதற்கு ஜெயலலிதா அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்தது. இதற்காக விவசாய நிலத்தில் உள்ள மரங்களை பொக்லைன் இயந்திரம் வைத்து வேரோடு பிடுங்கி எறிந்தது; விவசாயிகளை பலவந்தமாக மிரட்டியது; மிரட்டி கையெழுத்து வாங்கியது; பலவந்தமாக குழாய் பதிக்கும் வேலையில் இறங்கியது; போராடிய விவசாயிகளை போலீசைக் கொண்டு அடித்து விரட்டியது; பொய்வழக்கு பதிவு செய்தது; பல விவசாயிகளை வீட்டுக்காவலில் வைத்தது.

அப்போது விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உயர்நீதிமன்றம் விவசாயிகளின் கருத்தைக் கேட்டு அமுல்படுத்துமாறு தமிழக அரசுக்கு அறிவுருத்தியது. அந்தவகையில் மார்ச் 6, 7, 8 தேதிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தனர். கருத்துக் கேட்பு கூட்டத்தை தனக்கு சாதமாக நடத்த கெயில் நிறுவனம் எடுத்துக்கொண்ட சதி வேலைகளை விவசாயிகள் தவிடு பொடியாக்கினர்.

விவசாயிகளின் கடும் எதிர்ப்புகளைக் கண்டஞ்சிய ஜெயா நாடகமாடத் தொடங்கினார். தனது அரசியல் பகடைக்காயாக இதனைப் பயன்படுத்த முடியும் என உணர்ந்த ஜெயா, “மக்களுக்காத்தான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் அல்ல, விவசாயிகளை பாதிக்கக் கூடிய வகையிலான் அதிட்டங்களை எனது அரசு அனுமதிக்காது” என்று சட்டமன்றத்தில் வாய்ச்சவடால் அடித்தார். விளைநிலங்களின் வழியாக குழாய் பதிக்கக் கூடாது என தடைவிதித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமாகவும் நிறைவேற்றியது.

படிக்க:

♦  வேளாண்சட்டங்கள் – விவிமு வெளியீடு!

  விவிமு | வாழ்த்துரை | தோழர்.கோவன் || மகஇக பொதுச் செயலாளர்

இங்கு கவனிக்க வேண்டிய விசயம், மார்ச் மாதத்தில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்திலேயே 2011-ம் ஆண்டின் சட்டத்திருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதில் சட்டத்திருத்தத்தை வாபஸ் பெறுவது தொடர்பாக ஜெயா வாயைத் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விவசாய நிலங்களின் வழியே குழாய் பதிப்பதற்கும், அதன் பொருட்டு நிலங்களைக் கையகப்படுத்துவதற்கும் அனுமதி மறுத்த தமிழக அரசு, நெடுஞ்சாலைகள் வழியாக குழாய் பதிக்குமாறு கெயில் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு சட்டப்படி செல்லுபடியாது என்று தமிழக அரசுக்கு நன்கு தெரியும்.

விவசாயிகளின் எதிரி உயர்நீதிமன்றம்

தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்த கெயில் நிறுவனத்திற்கு சார்பாக, விவசாயிகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விவசாயிகளின் நலனுக்கு மேலான பொதுநலன் இந்த எரிவாயுக் குழாய்த் திட்டத்தில் இருப்பதாகவும், இந்தத் திட்டம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுமென்றும் கூறி, விளைநிலங்களில் குழாய் பதிக்க அரசு பிறப்பித்திருந்த தடை உத்தரவை ரத்து செய்துள்ளது.

அதுமட்டுமல்ல; இத்திட்டத்தினை விவசாயிகள் ஏற்குமாறு செய்ய தமிழக அரசால் இயலுமென்றும், ஒருவேளை அவர்கள் ஏற்க மறுத்துப் போராடினால், கூடங்குளம் போராட்டத்தைக் கையாண்டதைப் போல இதையும் கையாள முடியுமென்றும், சட்டம்–ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தேவையான அளவு வலிமை அரசுக்கு இருப்பதாகவும் நீதிபதிகள் தமது தீர்ப்பில் கூறியிருக்கின்றனர். இதனை எதிர்த்து தமிழக அரசும், விவசாயிகளும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

தொடரும் ஜெயலலிதா-நீதிமன்றங்களின் கூட்டு நாடகம்

இந்நிலையில், தற்போது நடந்த இறுதி விசாரனையின் போது, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பாக மூத்த வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தையே சீரழிக்கும் டாஸ்மாக்கிற்கு எதிராக பாடகர் கோவனை போலீசு காவலில் எடுத்து விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்திற்கு சென்ற ஜெயலலிதா அரசு, அதற்கு மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடியது. ஜெயா மீதான கள்ளத்தனமான சொத்துக் குவிப்பு வழக்கில், மேல் முறையீடு செய்வதற்கு இவர்கள் நடத்திய பித்தலாட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் ஜெயாவின் இந்தத் துரோகத்தை புரிந்து கொள்ள முடியும்.இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 2013-ம் ஆண்டு ஜனவரியில் சென்னை உயர்நீதிமன்ற உத்திரவிற்கு இடைக்கால தடை விதித்தது. விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இடைக்கால தடையை மேலும் நீட்டித்து உத்தரவிட்டது. கெயிலுக்கு எதிரானதாகத் தோன்றும் இந்த இடைக்கால உத்தரவு, முக்கியமாக அப்பொது தமிழகத்தில் நடந்து வந்த மீத்தேன் எதிர்ப்பு, ஜிண்டால் எதிர்ப்பு, தாதுமணல் கொள்ளை எதிர்ப்பு, கிரானைட் கொள்ளை எதிர்ப்பு, நியூட்ரினோ எதிர்ப்பு, ஆற்றுமணல் கொள்ளை எதிர்ப்பு, வன உயிரியல் பூங்கா அமைக்கும் கொடைக்கானல் மலைவாழ் மக்கள் எதிர்ப்பு ஆகிய போராட்டங்களின் வீச்சின் பின்னணியுடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்திட்டத்தை ஆரம்பம் முதலே ஜெயா கையாண்ட விதத்தையும், இது போன்ற ‘வளர்ச்சி’த் திட்டங்களான கூடங்குளம் அணுமின்நிலையத்திலும் ஜெயா அரசும் நீதிமன்றமும் மேற்கண்ட பாணியிலான நாடகத்தைத்தான் அரங்கேற்றின என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

விவசாயிகளின் முகத்தில் குத்தும் உச்ச நீதிமன்றம்!

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய இறுதி விசாரணையில் நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு பிப்ரவரி 2-ம் தேதியன்று வழங்கிய தீர்ப்பில், “2011-ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்த பெட்ரோலியம் மற்றும் கனிமவளங்கள் குழாய் பதிக்கும் சட்டத்திருத்தத்தின் (பி.எம்.பி. சட்டம்)படி, மத்திய அரசு நிறுவமனமான கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டத்தில் தமிழக அரசு தலையிடுவதற்கு அதிகாரம் இல்லை; மேலும், எரிவாயு பாதையை மாற்றுவதற்கும் தமிழக அரசுக்கு உரிமையில்லை”, “தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்தலாம்” என்று அனுமதி வழங்கியுள்ளனர். மேலும், “கெயில் நிறுவனம் எரிவாயு பதிக்கும் திட்டத்தை வரையறுக்கும் போதே தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?”, “வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தத் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கிறதா?” என்று கேள்வி எழுப்பி தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர்.

இடைக்காலத் தீர்ப்பு கெயிலுக்கு எதிராக, இறுதித் தீர்ப்பு விவசாயிகளுக்கு எதிராக – இதுதான் உச்ச நீதிமன்றம்! சதித்தனத்தின் ஒட்டுமொத்த உருவமாக உச்சநீதிமன்றம் விளங்குவதை இந்தத் தீர்ப்பின் மூலம் புரிந்து கொள்ள முடியும். மேலும், ஜெயலலிதா வாக்கு வங்கி அரசியலுக்காக இவ்வாறு செய்கிறாரா என்று கேட்பதன் மூலம் ஜெயாவை கெயில் எரிவாயுக் குழாய்க்கு எதிரானவராகக் காட்ட நினைக்கிறார் தலைமை நீதிபதி தாக்கூர். கெயில் திட்டத்திற்கு ஜெயா தெரிவிக்கும் எதிர்ப்பு என்பது நாடகமே என்பதை மறைக்கிறார்.“எரிவாயுக் குழாய் திட்டத்தால் நிலங்களை இழக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக மாநில அரசு ஒருகுழு அமைத்து, கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பீடு எவ்வளவு என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும்; அதன் அடிப்படையில் கெயில் நிறுவனம், விவசாயிகளுக்கு அவர்களது நிலத்தின் சந்தை மதிப்பில் 40 சதவீதத்தை இழப்பீடாக வழங்க வேண்டும்” என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

கேடி அரசு!

மோடி அரசு விவசாயிகளுக்கு எதிரானது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இந்த திட்டத்தை அமுல்படுத்துவதில் தீவிரம் காட்டுவது என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்தப் பிரச்சனைத் தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் கெயில் நிறுவனத்திற்கு ஆதரவாக வழக்காடியது யார்? பொட்ரோல் மற்றும் எரிவாயுத் துறைக்குத் தெரியாமலேயே அத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகவிட்டார்களா? விவசாய நிலங்களின் வழியாக கொண்டு செல்வதை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று பா.ஜ.க.வினர் சொல்வது கடைந்தெடுத்தப் பொய் அல்லவா. ஒரு பக்கம் உச்சநீதிமன்றத்தில் விவசாயிகளுக்கு எதிராக வழக்காடும் பார்ப்பன இந்து மதவெறியர்களான பா.ஜ.க.வினர்தான் மற்றொருபுறம், விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

கெயில் பொதுத்துறை நிறுவனம் தானே! ஏன் எதிர்க்க வேண்டும்?

சி.பி.எம்., சி.பி.ஐ. உள்ளிட்டு எல்லா ஓட்டுக் கட்சிகளும் கெயில் எரிவாயு குழாய் தேச வளர்ச்சிக்கானதுதான், ஆனால், அது விவசாயிகளை பாதிக்கின்ற வகையில் அமுல்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கின்றன. கெயில் பொதுத்துறை நிறுவனம் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால், இந்தப் பொதுத்துறையை தனியார்மயமாக்கம் என்ற பெயரில் கார்ப்பரேட் கம்பெனிகளும் பன்னாட்டுக் கம்பெனிகளும் கொள்ளையடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பதையும் இதற்கு இந்த ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக இருந்துள்ளனர் என்பதையும் நாம் உணர வேண்டும். மேலும், தற்போது கெயிலில் 30% பங்குகளை அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் கையில்தான் உள்ளது.

இது மட்டுமல்ல, மீதியையும் படிப்படியாகத் தனியார்மயமாக்குவதுதான் அரசின் கொள்கை. ஏற்கெனவே கோதாவரிப்படுகை எரிவாயுக்கிணறுகள் அம்பானிக்குத் தாரைவார்க்கப்பட்டுவிட்டன. அவற்றிலிருந்து எடுக்கும் எரிவாயுவை ஆந்திராவிலிருந்து கர்நாடகா, மகாராட்டிரா, ம.பி., வழியாக குஜராத் கொண்டு செல்லும் குழாய்ப்பாதையும் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமாக உள்ளது. ம.பி.யிலிருந்து உ.பி.க்கு புதிய குழாய்ப்பாதையொன்றையும் அம்பானியின் நிறுவனம் அமைக்கவிருக்கிறது. நாட்டின் பொதுச்சொத்தான கோதாவரி எரிவாயுவின் விலையை ரிலையன்சும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனமும்தான் இன்று தீர்மானிக்கின்றன. சொன்ன விலை தராவிட்டால் உற்பத்தியை முடக்குகின்றன.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் பொதுவான ஒரு நிறுவனமாக இனியும் கெயில் இருக்க முடியுமா, சிந்திப்பீர்!

எரிவாயு யாருக்காக?

எரிவாயு யாருக்காக எடுத்துச் செல்லப்படுகிறது என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். எரிவாயு என்பது மின்சார உற்பத்தி உள்ளிட்ட தேவைகளை ஈடேற்றக் கொண்டு செல்லப்படுகிறது என்று ஆளும் வர்க்கமும் ஓட்டுக் கட்சிகளும் அதிகார வர்க்கமும் ஒரு சேர கூறுகின்றனர். இது தேச வளர்ச்சிக்கான திட்டம் என்றும் கூறுகின்றனர். இந்தக் கூற்று உண்மையா?

இந்த எரிவாயுவில் 50% தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட இருக்கிறது. மீதியை யாருக்கு மக்களுக்கு என்று கருதினால் அதுவும் தவறு. ஏனெனில், அதிலும் தனியார்மயம் புகுந்து விளையாடும். ஏற்கனவே, எரிவாயுக்காக வழங்கப்பட்டு வந்த மானியங்கள் ஒழிக்கப்பட்டு வரும் நிலையில் எரிவாயு மக்களுக்கான என்று சொல்வது எவ்வளவு பெரிய மோசடி. மொத்தத்தில், எரிவாயு முழுவதும் கார்ப்பரேட் முதலாளிகளில் நலனிற்கும் கொள்ளைக்கும் தான் கொண்டு செல்லப்படுகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய போது, இதே போன்ற ஒரு கருத்தைத்தான் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் ஆளும் வர்க்கமும் முன்வைத்தன. ஆனால், நடந்தது என்ன என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். 15 நாட்களின் மின் உற்பத்தி தொடங்கிவிடும், மின்வெட்டு முடிவுக்கு வந்துவிடும் என்பதெல்லாம் இன்று நகைக்கத்தக்க பொய்ப் பிரச்சாரங்கள் என்பதை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். இந்த ஐந்து ஆண்டுகளில் மின்வெட்டு அதிகரித்திருப்பது மட்டுமின்றி மின் கட்டணம் இரு மடங்காக உயர்ந்துள்ளது. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மேலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவைதான் உண்மை!

கெயிலை விரட்டியடி, நிலத்தைக் காப்பாற்ற கமிட்டி போடு!

ஏற்கெனவே ஆறு வழிச் சாலைகள், உயர் அழுத்த மின் கோபுரங்கள், இருவழி இரயில் பாதைகள், சிப்காட் போன்றவற்றுக்காக பொதுநலன் என்ற பெயரில் தமது நிலத்தை வழங்கிய விவசாயிகள், அதனால் அடைந்த பயன் என்ன? கிராமங்களுக்கு 10 மணிநேர மின்வெட்டு, நெடுஞ்சாலைகளில் டோல்கேட் வசூல், கிராமங்களில் நிற்கும் பாசஞ்சர் ரயில்கள் மென்மேலும் ரத்து செய்யப்பட்டு அதிவேக ரயில்கள் அறிமுகம் – என்பதுதான் இந்த “பொதுநலன்” விவசாயிகளுக்கு அளித்திருக்கும் பரிசு.

ஆகையால், பொது நலன், தேச நலன், வளர்ச்சி, முன்னேற்றம் என்ற வார்த்தைகளைக் கண்டு இனியும் விவசாயிகள் ஏமாறலாமா?

மாவட்ட ஆட்சியர், வி.ஏ.ஓ., நீதிமன்றம் என ஒட்டுமொத்த அதிகார வர்க்கமும் விவசாயிகளுக்கு எதிராக இராணுவம் போன்று அணிவகுத்து நிற்கின்றன. ஓட்டுக் கட்சிகள் திட்டத்தை அமுல்படுத்திவிட்டு, வெளியே நீலிக்கண்ணீர் வடிக்கின்றன. ஓட்டுக்காகவும் சீட்டுக்காவும் இலாவணி பாடுகின்றன. இந்த நாடகத்தின் மூலம் விவசாயிகளை ஏமாற்றப் பார்க்கின்றன.

மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமுலுக்கு வர இருக்கிறது. இனியும் தாமதிக்காமல் உடனடியாக தீர்வுக்கு வரவேண்டும். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு போட்டுள்ள மறுசீராய்வு மனுவின் மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு வருவதற்குள், நிலங்கள் கெயிலின் கட்டுப்பாட்டில் போய்விடும். எப்படியும் இது நடக்கும் எனத் தெரிந்தும், உச்சநீதிமன்றத்தின் முடிவை எதிர்ப்பார்ப்பதைவிட, உடனே களத்தில் இறங்க வேண்டும்.

இனி தீர்வு ஒன்றுதான். “யார் உத்தரவிட்டாலும் எங்கள் நிலத்தில் குழாய் பதிக்க அனுமதிக்கமாட்டோம்” என்று எதிர்த்து நின்று போராடுவது மட்டும்தான் விவசாயிகள் முன்னுள்ள ஒரே வழி.

அதற்காக, கிராமத்திற்கு கிராமம் விவசாயிகள் கமிட்டி அமைப்போம். விவசாயிகள் தமக்கான அதிகாரத்தை நிலை நிறுத்துவோம். கெயிலின் குழாய் பதிக்கும் எந்திரங்களையும் அதற்கு கங்காணிகளாக வர இருக்கும் அதிகாரிகளையும் போலீசையும் ஊருக்கு வெளியே தடுத்து நிறுத்துவோம்!

மறுகாலனியாக்கமும் விவசாயத்துறை கட்டமைப்பு நெருக்கடியும்!

விவசாயத்தை அழித்து நாட்டை கார்ப்பரேட் கம்பெனிகள், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு திறந்துவிடுவதுதான் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கை. விவசாயத்தை அழிப்பது, இந்தியாவின் உணவுத்தற்சார்பை ஒழிப்பது, உணவுக்காக இந்தியாவை ஏகாதிபத்தியங்களிடம் கையேந்த வைப்பது இக்கொள்கையின் அடிப்படையிலான இலக்குகள். இந்த இலக்கை நிறைவேற்றும் வகையில்தான் தஞ்சை டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டம், தூத்துக்குடி கடலோர மாவட்டங்களில் தாதுமணல் கொள்ளை, மதுரை-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கிரானைட் கொள்ளை, தேனி மாவட்டத்தில் நியூட்டிரினோ திட்டம், திருவண்ணாமலை மாவட்டத்தில் கவுத்தி வேடியப்பன் மலைகளை ஜிண்டாலுக்கு தாரைவார்த்தல், தமிழகம் முழுவதும் ஆற்றுமணல் கொள்ளை, ஆறுவழிச் சாலைகள், வனச் சரணாலயங்கள் போன்ற பல திட்டங்கள் வகுத்து அமுல்படுத்தப்படுகின்றன. இதுபோன்று நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன.

இதற்கேற்ப இந்திய அரசின் கட்டமைப்பும் மாற்றப்படுகிறது. ஏற்கனவே சொல்லப்பட்டு வந்த மக்கள் நல அரசு என்ற போர்வையை தூக்கியெறிந்து பட்டவர்த்தனமாக கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகளின் நலன் முன்னிறுத்தப்படுகிறது. இதற்காக, விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வந்த மானியங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன; விவசாயத்தில் உணவு உற்பத்தி ஒழிக்கப்பட்டு வருகிறது; பயோடீசல், பூ உற்பத்தி என்ற பெயரில் ஏற்றுமதி சார்ந்து தொடங்கப்பட்ட விவசாயம் எல்லாம் நட்டமடைந்து விவசாயிகள் நடுவீதிக்குத் தள்ளப்பட்டு விட்டனர். காட்டு விலங்குகளான யானை, காட்டுப் பன்றிகளால் விவசாயம் சேதமடைவது மட்டுமல்ல, காட்டு யானைகளால் விவசாயிகள் கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது.

தற்போது விவசாயிகள் தற்கொலை என்ற அவலமும் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது.

இந்தத் தனியார்மயம் – தாராளமயக் கொள்கையை கடந்த 25 ஆண்டுகளாக தீவிரமாக அமுல்படுத்தியதன் விளைவாக இயற்கை அழிக்கப்பட்டு, மழை குறைந்துள்ளது; விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதில்லை; ரியல் எஸ்டேட் நிறுவனங்களினால் தொல்லை; உரம் பூச்சிக் கொல்லி மருந்து எல்லாம் கார்ப்பரேட் கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் போய்விட்டது; மரபணு மாற்றப்பட்ட விதைகள், ஹைபிரேட் விதைகள் போன்றவற்றால் விவசாயமே நஞ்சாகியுள்ளது; கால்நடைகள் குறைந்துவிட்டன; இயற்கையான உரங்கள் கிடைப்பதில்லை; இரசாயன் உரங்கள், பூச்சிக் கொல்லிகளால் நிலங்களே மலடாகிப் போயுள்ளன. இவற்றை ஒட்டுமொத்தமாக பார்க்கும் விவசாயம் என்ற கட்டமைப்பே சீரழிக்கப்பட்டுவிட்டது. விவசாயம் என்ற துறை இன்று மீளமுடியாத கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கியுள்ளது.

விவசாயிகளுக்கே அதிகாரம்!

அரசின் கொள்கைகள் என்பவை, கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக உழைக்கும் மக்கள் மீது நடத்தப்படும் யுத்தம். இதில் நடுநிலை வகிப்பதாக சொல்லிக்கொண்ட அரசு, பட்டவர்த்தனமாக இன்று கார்ப்பரேட் கம்பெனிகளின் பக்கம் தான் என்று அறிவித்துள்ளது. மற்றொருபுறம், விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள இந்தக் கட்டமைப்பு நெருக்கடி என்பது, நாட்டின் அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு நெருக்கடியின் ஒரு பகுதியாக உள்ளது.

அதனால், கெயில் எரிவாயு குழாய் பதிப்பது என்பது, அதனால் பாதிக்கப்படுகின்ற விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் பிரச்சனை.

இதனால் தான் நீதிமன்றத்தில் சென்றால் நீதி கிடைக்காமல் அநீதியே நடக்கிறது; சட்டப்படியே விவசாயிகள் நிலங்கள் பறிக்கப்படுகின்றன; எதிர்ப்பவர்கள் குற்றவாளிகளாக்கி தண்டிக்கப்படுகின்றனர்.

இனி ஒரு பாதைதான் உள்ளது. விவசாயிகள் அதிகாரத்தைக் கையிலெடுக்க வேண்டும். கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய் பதிப்பதற்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் என்பது, விவசாயிகள் தங்களுக்குத் தேவையானதை தீர்மானிக்கும் அதிகாரமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு விலை நிர்ணயிப்பது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் விவசாயிகள் கையில் வந்து சேரவேண்டும். அந்தவகையிலான ஒட்டுமொத்த விவசாயிகளின் எழுச்சியாக, கெயில் எரிவாயுக் குழாய் பதிப்புக்கு எதிரான போராட்டத்தை வளர்த்தெடுப்போம்!

மத்திய, மாநில அரசுகளே!

  • கெயில் எரிவாயு பதிக்கும் திட்டத்தை கைவிடு! விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்காதே!
  • பெட்ரோல்-கனிமவளக் குழாய் பதிக்கும் சட்டம் 1962ஐத் திரும்பப் பெறு!

விவசாயிகளே!

  • விவசாயத்தை அழிப்பதே தேசமுன்னேற்றமாம் – இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு!
  • விவசாய நிலத்தில் குழாய் பதிக்க வரும் கெயில் நிறுவனத்தை விரட்டியடிப்போம்!
  • கிராமந்தோறும் கமிட்டி அமைத்து விவசாயிகளின் அதிகாரத்தை நிலைநிறுத்துவோம்!
  • விவசாயத்தை அழிக்கும் நாட்டை மீண்டும் காலனியாக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான தனியார்மய-தாராளமயத் திட்டங்களை முறியடிப்போம்!
  • விவசாயிகளைக் காக்க, விவசாயத்தைக் காக்க அனைத்து அதிகாரங்களையும் விவசாயிகள் கமிட்டிக்கே என முழங்குவோம்!

விவசாயிகள் விடுதலை முன்னணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here