டாணாக்காரன் – திரைப்பார்வை


   நேர்மையான போலீஸ் ஆகவேண்டும் என்ற ஆசையுடன் 1998ல் தேர்வாகி நெல்லைக்கு போலீஸ் பயிற்சிக்கு வருகிறார் நாயகன். 1983ல் தேர்வாகியும், பயிற்சி பெற முடியாமல், நீதிமன்றத்தில் அலையாய் அலைந்து வழக்கில் வெற்றி பெற்று  நடுத்தர வயதுடைய 100 பேரும் பயிற்சிக்கு வந்து சேர்கிறார்கள்

அங்கு வந்து சேர்ந்திருக்கும் அனைவரும் அதிகாலையிலேயே பயிற்சிக்கு வரவேண்டும். நான்கே நான்கு கக்கூஸ்கள் மட்டும் ஒதுக்கப்படுகின்றன. மேலதிகாரி குறை ஏதும் இருக்கிறதா என ஒரு பேச்சுக்கு கேட்கும் பொழுது, ஒருவர் இயல்பாய் வேண்டுமென்றே மூடிவைக்கப்பட்டிருக்கும் கக்கூஸ்களை திறந்துவிட கோருகிறார். அவர் கடுமையாக திட்டுகிறார். மாணவர்களிடம் அதிகாரிகள் லஞ்சமாய் பணம் வசூலிக்கிறார்கள். நாயகன் உட்பட சிலர் எதிர்க்கிறார்கள்.

கேள்விக்கே இடமில்லாத தங்களது எல்லையற்ற அதிகாரத்தை கேள்வி கேட்டவர்களையும், லஞ்சம் தர மறுத்தவர்களையும் கட்டம் கட்டுகிறார்கள்.  தண்டனை என்கிற பெயரில் மிக கடுமையான பயிற்சி தந்து மைதானத்திலேயே விழுந்து சாகும்படி செய்கிறார்கள். எல்லா சிரமங்களையும், தடங்கல்களையும் தாண்டி, கட்டம் கட்டப்பட்டவர்கள் போலீசானார்களா என்பதை உணர்ச்சிபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

முதன் முதலில் வர்க்கங்கள் தோன்றிய பிறகு, ஆளும் வர்க்கங்களாய் தங்களை உயர்த்திக்கொண்ட பிறகு பெரும்பாலோரை ஒடுக்குவதற்கு ஆயுதமேந்திய ஆட்களை கொண்ட தனிவகைப் படைகளை உருவாக்கிக்கொண்டார்கள் என்பது வரலாறு. இதையே நடைமுறை வார்த்தையில் சொல்வதென்றால், போலீசும், இராணுவமும் ஆளும் வர்க்கங்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டப்பூர்வ கிரிமினல் கும்பல்கள் தான்.

ஆளும் வர்க்கத்திற்கு விசுவாசவான சேவையும், பெரும்பாலான மக்களையும் அடக்கி, ஒடுக்கி வைப்பதற்கான படை/போலீசு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதை பயிற்சியின் பொழுதே “ஒழுங்கமைத்து”க்கொள்கிறார்கள். எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிகாரத்திற்கு கீழ்படிபவர்களை விட்டுவிடுகிறார்கள். கேள்விக்கேட்பவர்களை மிரட்டுகிறார்கள்.  கதறவிடுகிறார்கள். தண்டிக்கிறார்கள்.  அதையும் மீறினால் நுட்பமாக கொன்றுவிடுகிறார்கள்.

ஒருவர் தன்னை கெட்ட வார்த்தையால் திட்டிய ஒரு மேலதிகாரியை அடித்துவிடுகிறார். அதற்கு பிறகு அவருக்கு பதவி உயர்வு தராமலே 20 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கிறார்கள்.  மோசமாக இழிவுப்படுத்துகிறார்கள். மேல்விசாரணையில் உயர் மேலதிகாரி அதைவிட மோசமாக திட்டி “உன்னை அதிகாரி திட்டுனா அடிப்பியோ! இப்ப நான் திட்டுறேன். என்னை அடி பார்க்கலாம்” என அவமானப்படுத்துகிறார். தன் குடும்ப சூழ்நிலையால், வேலையை விட்டு போக முடியாமல் புலம்பிக்கொண்டே வாழ்க்கையை தள்ளுகிறார்.

டாணாக்காரன் படக்காட்சி

அங்கு பயிற்சி தரும் கொடூர பயிற்சியாளருக்கு பக்கபலமாய் எல்லா உயரதிகாரிகளும் நிற்கிறார்கள். அதை இறுதியில் அந்த தலைமை உயரதிகாரி “இந்தப் பக்கம் ஈஸ்வர மூர்த்தி. அந்தப் பக்கம் என் பையன்” என்றால், நான் ஈஸ்வரமூர்த்தியைத் தான் ஆதரிப்பேன். ஈஸ்வரமூர்த்தி என்பது ஒரு ஆள் அல்ல! இந்த சிஸ்டத்தின் ஒரு பகுதி. நாங்க எல்லோரும் சேர்ந்தது தான் ஈஸ்வரமூர்த்தி” என சொல்வதின் மூலமும் பளிச்சென புரிந்துகொள்ளலாம்.

மற்ற போலீசு படங்களை விட இந்த படத்தின் சிறப்பு இன்னும் நிஜத்திற்கு நெருக்கமாய் போலீசின் அவலட்சணங்களை நமக்கு பளிச்சென காட்டுகிறது. இதில் இன்னொரு குரலும் கேட்கிறது. இந்த சிஸ்டத்தின் பல அநீதிகளையும் பார்த்துக்கொண்டு, மனம் வெதும்பி நிற்கும் நாயகனிடம் ஒரு நேர்மையான அதிகாரி ”இந்த அமைப்பு ஈஸ்வரமூர்த்தி ஆட்கள் போல ஆட்கள் நிரம்பினால், மக்களின் நிலைமை என்ன ஆவது? இந்த நிலைமையை மாற்றவேண்டும். யார் மாற்றுவார்கள்? மக்களை நேசிக்கிற உன்னை போன்றவர்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும்.” என ஆறுதல் சொல்கிறார். அவர் பேச்சில் ஒரு முரண் இருப்பதை கவனிக்கலாம். தான் நடத்தும் சட்ட வகுப்பில் புரட்சி என்பார். பிறகு இந்த சிஸ்டத்தில் நம்மை போன்ற நல்லவர்கள் இருக்கவேண்டும் என்பார்.  புரட்சி என்பது இருக்கும் சிஸ்டத்தில் மாற்றம் கொண்டு வருவதல்ல! புதிதாய் ஒன்றை கட்டியமைப்பது!

படிக்க:

♦  ‘ஜெய்பீம்’ சினிமா மீதான பார்வை

  ஒரு கோபம் எப்படி இருக்க வேண்டும்? (சர்தார் உத்தம் சினிமா)

அதே அதிகாரி சொல்வார். “இந்த அமைப்பு முரட்டு வெள்ளைக்காரனுக்கும், முட்டாள் அரசியல்வாதிகளுக்கும் பிறந்தது” அதை திருத்தமாக இப்படி சொல்வோம்.  இந்த அமைப்பு என்பது ஆளுகின்ற கார்ப்பரேட்டுகளையும், காவி பாசிஸ்டுகளையும் காத்துநிற்க கூடியது.   இந்தப் போலீசும், இராணுவமும் அவர்களுக்குத் தான் விசுவாசமாக வேலை செய்யும்.  இதில் நேர்மையானவர்கள் பெரும்பாலோருக்கு நடக்கும் எல்லா அநீதிகளையும் பார்த்து ஒன்றும் செய்யமுடியாமல், குற்ற உணர்வில் அவதிப்படுவார்கள். எதிர்த்து கேள்விகள் கேட்டால் அடக்கப்படுவார்கள். தற்கொலைக்கு தள்ளப்படுவார்கள். இல்லையெனில் பழி சொல்லி சிறையில் வதைக்கப்படுவார்கள்.  அதிகப்பட்சம் கொலை செய்யப்படுவார்கள். இப்போதைய நடப்பு நிலைமையே இதற்கு சாட்சி.

நிலவுகிற இந்த முதலாளித்துவ சமூகத்தில் ”ஜனநாயகம்” அனைவருக்கும் ”வாக்குரிமை”, தேர்தல் என எத்தனை பூச்சுகள் இருந்தாலும், மூகமூடி தரித்த முதலாளித்துவ சர்வாதிகாரம் தான் என்கிறார் ஆசான் லெனின். சீழ்பிடித்து, அழுகி நாறும் இந்த முதலாளித்துவ பாடியை எவ்வளவு நாளைக்குத் தான் மக்கள் தலையில் சுமப்பது? பாடியை அடக்கம் செய்யும் வேலைகளை வேகமாக நகர்த்தலாம்.

புரட்சியின் மூலம் உழைக்கும் வர்க்கம் ஆட்சி செய்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் கடந்த நூற்றாண்டில் உலகம் பார்த்திருக்கிறது. அதன் நன்மைகளையும் அனுபவித்திருக்கிறது. பெரும்பாலோருக்கு ஜனநாயகம், பிற்போக்கு சக்திகள் மீது சர்வாதிகாரம் என்பது தான் அதன் கோட்பாடு. அதை நடைமுறைக்கு கொண்டு வர பாடுபடலாம்.

இயக்குநர் பாலுமகேந்திரா பயிற்சி பட்டறைலிருந்து இன்னுமொரு இயக்குநர் தமிழ்.  உண்மையை, அழுத்தமாக பதிவு செய்யும், அரசியல் அறிந்த இன்னுமொரு இயக்குநர். உருவாகியிருக்கிறார். வாழ்த்துக்கள்.

நடிகர் லால், எம்.எஸ். பாஸ்கர், மதுசூதனன், விக்ரம் பிரபு, பிரகதீஸ்வரன், போஸ் வெங்கட் என படத்தில் நடித்த அத்தனைப் பேரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது. அவசியம் பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here