பீஸ்ட்: மசாலா தடவியதிரைப்படங்களுக்கு கொட்டி அழாதே!


மிழகத்தில் ஏப்ரல் 13 அன்று வெளியான பீஸ்ட் திரைப்படம் களியாட்ட வெறியை தூண்டி உள்ளது.

கலை இலக்கியம் என்ற பெயரில் மக்கள் விலைவாசி உயர்வால் செத்து மடிந்து கொண்டிருந்தாலும், நாடே பொருளாதாரத்தில் திவாலாகி கொண்டிருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் ஒரு கும்பல் பிடில் வாசித்துக் கொண்டு இருக்கிறது.

இந்தியாவில் – தமிழகத்தில் மட்டுமின்றி, இலங்கையிலும் பீஸ்ட் வெளியாகி, பெரும் ஆரவாரத்தை கிளப்பியுள்ளது என்று ‘ஊடக மாமாக்கள்’ பொறி கிளப்புகிறார்கள்.

தளபதி விஜய், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ் காட்டும்திரைப்படம் என்று வாங்கிய காசுக்கு மேல் பிரமோட் செய்ய சன் பிக்சர்ஸ் அடிமைகள் கூச்சலிடுகிறார்கள்.

கடந்த 15 நாட்களாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு விலை போன்றவை பல மடங்கு ஏறியுள்ளது.

இந்த விலையேற்றம் அன்றாடம் வேலைக்குச் சென்று திரும்பும் உழைப்பாளி மக்களின் வாழ்க்கையில் மிகப் பெரியநெருக்கடியை உருவாக்கியுள்ளது.

நீரு பூத்த நெருப்பாக வெடிக்க காத்திருக்கிறார்கள் உழைக்கும் மக்கள். இத்தகைய சூழலில்பீஸ்ட் போன்ற திரைப்படங்கள் மக்களின் கோபத்தை திசை திருப்பி மசாலா,கிளுகிளுப்பு, நாயகர் வழிபாடு போன்ற கழிசடை கலாச்சாரத்திற்கு  பின்னால் ஓட வைக்கிறது.

சமீபத்தில் வெளியான  ஆர் ஆர் ஆர், புஷ்பா, கேஜிஎப் 2 போன்ற மசாலாகளின் மத்தியில் பீஸ்ட் வசூலை எட்டுமா என்று கணக்குப் போட்டு உசுப்பேத்துகிறார்கள் திரைப்பட விமர்சகர்கள்.

தொடப்பக்கட்டைகளுக்கு பட்டுக் குஞ்சலம் எதற்கு? கலை, இலக்கியம் என்ற பெயரில் மக்கள் வெந்து சாகும் போதும் இது போன்ற அபத்தங்களை திரைப்படமாக எடுத்து குப்பையாக கொட்டுவதை சகித்துக்கொண்டு, அதுவும்தான் இதுவும்தான் என்று குழப்புவது கேடுகெட்ட மனப்பான்மையாகும். இந்த மனப்பான்மையே பாசிசத்திற்கு அடித்தளமாகும் என்பதை மட்டும் நினைவில் வையுங்கள்.

  • செல்வம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here