ஜாஃப்ரிக்கு என்ன நடந்தது? பாகம்- 2

0
75

குஜராத் இனப்படுகொலை: இஷான் ஜாஃப்ரிக்கு என்ன‌ நடந்தது? | பாகம் 1

தொடர்ச்சி….

பிறகு 14 ஆண்டுகள் எடுத்துக் கொண்டன. ஜாஃப்ரியின் வயது முதிர்ந்த மனைவி ஜாக்கியா உணர்வு செறிவான காவிய யுத்தமே நடத்த வேண்டி இருந்தது. 2002இல் நடத்தப்பட்ட கோரமான இனவெறிப் படுகொலை. அது இரண்டாவது ரணகளம். நிர்வாகத்தின் உச்சியில் சதி நடத்தப்பட்டு கணவர் கொல்லப்பட்டார் என்று ஜாக்கியா உறுதியாக நம்பினார். நரேந்திர மோடி என்ற முதலமைச்சர் தொடங்கி, மூத்த அமைச்சர்கள், காவல் அதிகாரிகள், சங் பரிவார தலைவர்கள் (இவர்கள் ஆளும் கட்சியோடு நெருக்கமான உறவு கொண்டவர்கள்) எல்லோரும் சேர்ந்து தான் சதி செய்திருக்கிறார்கள். நீதிமன்றம் 1300 பக்கங்களுக்கு தீர்ப்பை கொடுத்தது; சதி என்பதை மறுத்தது. கொலைகளுக்கு 11 பேரே காரணம் என்று காட்டியது. அவர்கள் வெறும் காலாட் படைகளே!. வெட்டிப் படுகொலை நடந்தது சதியினால் அல்ல என்று நீதிபதி P.S தேசாய் ஏற்றுக் கொண்டு விட்டார்; காவலும் நிர்வாகமும் கலவரத்தை கட்டுப்படுத்த எல்லாம் முயற்சிகளும் எடுத்ததாகச் சொன்னார்.

கோத்ரா ரயில் எரிப்புக்குப் பிறகு அந்த குடியிருப்பைச் சுற்றி 1000 பேர் கொண்ட கூட்டம் கூடியது என்றும் நீதிபதி சொன்னார். அப்படியானால் அக்குடியிருப்பில் இருந்த ஜாஃப்ரியும் மற்றவர்களையும் ஏன் கொன்றார்கள்? காரணம் ஜாஃப்ரிதான்! அவரது உரிமம் பெற்ற துப்பாக்கியால்  கூட்டத்தை நோக்கிச் சுட்டார். இதையே முதலமைச்சர் மோடியும் வெளிப்படையாகச் சொன்னார். நீதிபதியும் சரி! மோடியும் சரி !ஜாஃப்ரி வெட்டிக்கொல்லப்பட ,அவரேதான்காரணம்  என்று கணக்கு போட்டார்கள்!?

தொடர்ந்து நடந்த சிறப்பு நீதிமன்றம் ; அகமதாபாத்தின்சாட்சிகள் ;  அவற்றில்    உயிர் தப்பி பிழைத்தவர்கள்; அவை அனைத்தும் ஒரே மாதிரியானவை; கோத்ராவில் 27.2.2002 அன்று ரயில் பெட்டிகள் கொளுத்தப்பட்டன என்ற செய்தி குல்பர்க் குடியிருப்பில் பரவிய உடனே, இதயங்களில் தீப்பொறிகள் பற்றிக்  கொண்டன. ஆளும் கட்சியின் ,   ‘இந்து’ சமூகத்தின், நெருப்பு போன்ற பேச்சுக்கள் டிவி பெட்டிகளை நிரப்பின. குல்பர்க் குடியிருப்பில் இருந்த அநேகம் பேர் முஸ்லிம்களே! ஒரே ஒரு பார்சி குடும்பம் அதைச் சுற்றி இந்து குடியிருப்புகள்!.  ஏற்கனவே திரும்பத் திரும்ப நடத்தப்பட்ட இந்துவெறி சம்பவங்கள் நகரத்தின் சூழலை மாற்றி விட்டிருந்தன. நகரம் எந்த சமரசமும் இல்லாமல் இந்து பகுதி, முஸ்லிம் பகுதி என்று பிரிந்து விட்டது. குல்பர்க் குடியிருப்பு மட்டுமே இந்து குடியிருப்பு அருகே இருந்த முஸ்லிம் குடியிருப்பு.

இஷான் ஜாஃப்ரி என்ற மகத்தான மனிதர் அங்கே வாழ்ந்ததால் மதவெறி பற்றினாலும் தங்களுக்கு ஒரு கேடும் வராது என்று அந்த மக்கள் நம்பினார்கள். மேலதிகாரிகள் வரை நெடுகிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு. அவர்கள் கைவிட்டது இல்லை! நகரமே கொந்தளித்து பற்றி இருந்தாலும் அவர் இருக்கிறார் என்ற ஒன்றே நம்பிக்கை.! காவல்துறைக்கு அவர் ஓயாமல் எழுதினார், பாதுகாப்பு கேட்டார், காவலும் காப்பாற்றுவதாக வாக்களித்து வந்தது. அடுத்த நாள் குஜராத் முழுவதும்- மாநிலம் தழுவிய கதவடைப்பை அறிவித்தது விஷ்வ ஹிந்து பரிஷத்!.  எதற்கு? – ரயில் கொலைகள் நடந்ததை எதிர்த்து. முதலமைச்சர் மோடி, விஎச்பி இருதரப்பினரும் இஸ்லாமிய கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றே சாதித்தன!  ரயில் எரிந்ததற்குப் பிறகு விஎச்பி குண்டர்கள் கடைகளை பலவந்தமாக இழுத்து மூடினார்கள். ரத்தம் உறையச் செய்யும் முஸ்லிம் எதிர்ப்பு முழக்கங்களை கூவினார்கள். மிக வேகமாக கூட்டம் திரட்டப்பட்டது சைக்கிள் கடை ஒன்றிலிருந்து இரண்டு முஸ்லிம்களை இழுத்து அடித்தார்கள்; சில ஆட்டோ ரிக்சாக்களை எரித்தார்கள்.

ஒரு சில சீனியர் போலீஸ் அதிகாரிகள் அந்த இடத்துக்கு வந்தார்கள்; கமிஷனர் பிசி பாண்டேவும் வந்தார் என்று அக்கம்பக்கம் சொன்னார்கள். அவர்கள் வந்து போன பிறகு வெள்ளம் போல் கூட்டம் திரண்டது. பிற்பகல் 1.30 க்கு 10 ஆயிரம் பேருக்கு மேலே கூட இருக்கும். கோபம்- பயமுறுத்தும் சொற்கள்- முழக்கம். பலரும் ஆயுதம் ஏந்தியவர்கள். முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் மீது தாக்குதல் நடந்தது. குல்பர்க் குடியிருப்புக்கு வெளியே இருந்தவர்களும் பாதுகாப்புக்காக குல்பர்க் காலனி நோக்கி ஓடினார்கள். ஜாஃப்ரி காப்பாற்றி விடுவார் என்ற ஒரே நம்பிக்கை தான்.

குல்பர்க் குடியிருப்புக்கு உயரமான சுவர்கள், அதன் வாயில்கள் பூட்டப்பட்டன. குடியிருப்புவாசிகளும் தஞ்சம் புகுந்தவர்களும் பயத்தால் பூட்டி  உள்ளே இருந்தார்கள். குடியிருப்பைச் சுற்றி வெறி தலைக்கேறிய கும்பல் சூழ்ந்து கொண்டன. பற்றி எரியும் கோணிகள், கற்கள், அமிலக் குண்டுகள் வீசித்தாக்கின. கோணிகளில் ரசாயனம் நிரம்பி இருந்தது; கொஞ்சம் தீப்பற்றினால் ‘ஓ’வென்று எரியும்; பற்றிப் பரவிக் கொண்டே இருக்கும்! அப்பகுதி மக்கள் ஜாஃப்ரி வீட்டுக்கு ஓடினார்கள். பலர் காயம்பட்டிருந்தார்கள். ஜாஃப்ரியின் நூலகம் நிரம்பி வழிந்தது; தங்கும் அறைகளில் எங்கும் தஞ்சம் புகுந்தவர்கள்; ஜாக்கியா ஜாஃப்ரி எங்கே ஒளிந்து இருந்தாரோ அங்கேயும் மக்கள் நிரம்பி விட்டார்கள்.

வெளிப்புறச் சுவர் வலிய சிமெண்ட்டால் ஆனது; விளிம்பில் உடைந்த கண்ணாடி  சில்லுகள் உண்டு. முன்புறமும் பின்புறமும் வெறியர்கள் கூட்டம் காஸ் சிலிண்டர்களை வைத்து சுவர்களை உடைத்தது. சுவர்கள் விழவிழ கூட்டம் உள்ளே பாய்ந்தது; கைகளில் குத்துவாள்கள், பெரிய கத்திகள், இரும்புத்தடிகள், அமிலக் குண்டுகள், பெட்ரோல், கரசின் டின்கள்; சிலரிடம் துப்பாக்கியும் இருந்தது. கீழே தரைத்தளத்தில் நின்ற எல்லா வாகனங்களையும் கொளுத்தினார்கள். ஜாஃப்ரி வீட்டுக்குள்ளேயும் அமிலத்தீ பரவியது; பயந்து குலை நடுங்கிய பெண்களும், ஆண்களும் வெளியே இறங்கி ஓடி ,வெறியர்கள் கைகளில் சிக்கினார்கள். கூட்டம் பாய்ந்து குதறியது.எல்லோரையும் வெட்டியது,துண்டு துண்டாக.! பிறகு, அங்கேயே எரித்தது. கூட்டத்திலிருந்த ஆண்கள், சில பெண்களை, சிறுமிகளை வலிய இழுத்துச் சென்று ஆடைகளை கிழித்து, அம்மணமாக்கினார்கள், கற்பழித்தார்கள், பிறகு கொலை செய்தார்கள். அவர்களின் உடல்களை எரித்தார்கள்; காலையிலிருந்து அத்தனைச் சம்பவங்கள் மத்தியிலும் ஜாஃப்ரி மறுபடி மறுபடி காவல் அதிகாரிகளை அழைத்துக் கொண்டே இருந்தார்- முதலமைச்சர் மோடி உட்பட!. பல சாட்சிகளும் சொல்லி சொல்லி கதறினார்கள். ஒரு பலனும் இல்லை. பிற்பகல் வெட்டு கொலை தொடர்ந்தது‌. சிறு போலிஸ் படை – 20 பேர்- மட்டுமே வந்தது. பிறகு அதிகப்படுத்தவும் இல்லை. வெறி கொண்ட கொலைக்கூட்டத்தை போலீஸ் தடுக்கவில்லை; சிறிதும் முயலவில்லை. பிற்பகல் 4.30 பெரிய போலீஸ் அணி வந்தது. கண்ணீர் புகை அடித்தது .ஓரிருமுறை சுட்டது. இன்னமும் உயிருக்கு போராடிய ஒரு சிலரை காப்பாற்றியது.

இதற்கு முன்பாக, தன் வீட்டில் தஞ்சம் புகுந்தவர்களை காப்பாற்ற கடைசி முடிவு எடுத்தார் ஜாஃப்ரி. பாதுகாப்புக்காக வந்தவர்களை ஒன்றும் செய்துவிட வேண்டாம் என்று தானே போய் கேட்பதாக இருந்தார், வெளியே போனார். கைகள் கும்பிட்டு இரக்கப்படுங்கள் என்று கெஞ்சினார். பலர் வேண்டாம் என்று தடுத்தும் ஜாஃப்ரி கேட்கவில்லை. சிலரின் கூற்றுப்படி, அந்த கும்பலிடம் காசு கூட கொடுப்பதாக பேசி இருக்கிறார். தஞ்சம் புகுந்தவர்களுக்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்று உறுதியாக நின்றார் ஜாஃப்ரி. இந்து மதவெறி  பிடித்த கும்பலின் செவிகளில் எதுவுமே விழவில்லை. அவரை வெளியே இழுத்துப் போட்டது; எங்கேயோ இழுத்துச் சென்றது. அவரது மகன் பிறகு தேடி கண்டுபிடித்தது வாப்பாவின் ஒற்றைச் செருப்பு மட்டுமே. போலீஸ் காப்பாற்றும் குழு ஒரு வழியாக அங்கு வந்து சேர்ந்த போது எங்கும் எரிந்த பிணங்கள். பாதி உடல், பாதி சாம்பல். பல செத்துப் போன பெண்கள்- நிர்வாண உடல்கள். அந்த கும்பல் என்ன செய்தது என்பதை பார்த்துக் கொண்டிருந்த, பின்னால் உயிர் பிரிந்த யாருக்கும் சரியாக சொல்லத் தெரியவில்லை. இஷான் ஜாஃப்ரி உடலின் பகுதியோ, மீதமிச்சமோ, எரிக்கப்பட்ட, சிதைக்கப்பட்ட  பிணங்களில் இருந்து யாரும் அடையாளம் காட்ட முடியவில்லை. தரைமட்டமாக்கப்பட்ட குல்பர்க் குடியிருப்பு பகுதியிலிருந்து போலீஸ் கண்டெடுத்த சடலங்களில் எங்குமே ஜாஃப்ரி இல்லை. அவருக்கு என்ன நடந்திருக்கலாம்? வேறொரு ஆதார மூலத்திலிருந்து ரத்தம் உறையச் செய்யும் கோரத்தை யூகிக்க முடியும்.

தொடரும்…

முதல் பாகத்தை படிக்க… குஜராத் இனப்படுகொலை: இஷான் ஜாஃப்ரிக்கு என்ன‌ நடந்தது? | பாகம் 1

மூலநூல்: இதயப்பிரிவினைகள்இந்தியா என்ற எண்ணம் உருவாவது கலைக்கப்படுகிறது!

ஆசிரியர்: ஹர்ஷ் மந்தேர்

பதிப்பகம்: பென்குயின் ரேண்டம் ஹவுஸ்

ஆசிரியரிடமிருந்து அனுமதி பெற்று நூலின் சில பகுதிகளை scroll.in பதிப்பித்துள்ளனர்.

தமிழில் ஆக்கம்: இராசவேல்

ஆசிரியர் பற்றி: ஹர்ஷ் மந்தேர்.

பிறப்பு- 13-04- 1955. குஜராத் இனப்படுகொலை ஆர்எஸ்எஸ் வெறியர்களால் தூண்டப்பட்ட தருணத்தில் கோபமுற்ற ஹர்ஷ் மந்தேர் தான் பணிபுரிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் பதவியை விட்டு விலகி வெளியேறினார். பாபர் மசூதி இடிப்பு பற்றி உணர்வு எழுச்சி மிக்க துடிப்பான அவரது கட்டுரையை எவரும் மறக்க முடியாது. தற்போது பத்திரிகைகளில் சிறப்பு பத்தி எழுத்தாளர், ஆய்வாளர், ஆசிரியர், சமூக செயற்பாட்டாளர். முஸ்லிம்களுக்கு எதிராக இந்துமத வெறியர்கள் கலவரம், இன அழிப்பு போர் நடத்தும் இடங்களில் அந்த வன்முறைகளை எதிர்த்து உறுதியோடு நின்று போராடி வருபவர்; குரல் கொடுப்பவர். டெல்லியில் இயங்கும் “சமூக சமத்துவ ஆய்வுகள் மையம்” இயக்குனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here