என்ன நடக்கிறது காஷ்மீரில்?

காஷ்மீரில் குடியிருக்கும் பண்டிட்டுகள் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களின் தாக்குதலுக்கு அஞ்சி நடுங்கி ஊரைவிட்டு காலி செய்து ஓடுகின்றனர் என்ற செய்தி வட இந்திய ஊடகங்களால் பரபரப்பாக பரப்பப்படுகிறது.

காஷ்மீரில் என்ன நடந்தது? என்ன நடக்கிறது? என்பதை பருந்துப் பார்வையில் பார்ப்போம். மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள விரும்பினால் புதிய ஜனநாயகம் இதழ் வெளியிட்ட ‘காஷ்மீர் யாருக்கு சொந்தம்? என்ற வெளியீட்டை படிப்பதன் மூலமும், காஷ்மீருக்கு சென்று வந்த உண்மையான ஜனநாயகத்தை விரும்பும் ஊடகவியலாளர்கள் வெளியிட்டுள்ள பல கட்டுரைகளை தேடி படிப்பதன் மூலமும் அறிந்து கொள்ளலாம்.

காஷ்மீரில் டோக்ரா இந்து வம்ச மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக அலிகார் பல்கலைக் கழக மாணவரான ஷேக் அப்துல்லா தலைமையில் 1932 ஆண்டு முதல் போராடி வரும் ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் மாநாடு என்று துவக்கப்பட்டு, பின்னர் 1938 ல் “ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு” தலைமையில் மதச்சார்பற்ற காஷ்மீரை உருவாக்க போராடி வரும் அமைப்பும் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையில் இந்துக்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து சுயாட்சி பிரதேசமாக அறிவிக்கும்படி போராடினர்.

 

சொந்த மக்களின் சுதந்திர உணர்வை மறுத்து 1947 ஆம் ஆண்டு மன்னன் ஹரிசிங் இந்தியாவுடன் போட்டுக் கொண்ட இணைப்பு சாசன ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுடன் சேர்க்கப்பட்டதுதான் காஷ்மீர். அந்த உடன்படிக்கையின் அடிப்படையில், காஷ்மீரில் (1947 ஆம் ஆண்டு கணக்கின்படி) வசித்த மக்களிடம், அதாவது 18% உள்ள இந்துக்கள், 77% உள்ள இஸ்லாமியர்கள், மீதம் உள்ள 5% உள்ள சீக்கியர்கள், புத்த சமயத்தினர் ஆகியவர்களை கொண்ட, மதவழிபாட்டு முறைகளில் வேறுபாடும், இனத்தால் காஷ்மீரி இனமாக வாழும் காஷ்மீர் மக்களிடம் ஐ.நாவின் மேற்பார்வையில் சுதந்திரமான வாக்கெடுப்பை நடத்தி காஷ்மீரின் தலைவிதியை தீர்மானிக்க வேண்டும் என்ற ஒப்பந்தம்தான் அது.

1947 ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததாக கூறிக்கொண்ட பின்னர், வானொளியில் உரை நிகழ்த்திய நேரு “ஜம்மு-காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை மக்களே தீர்மானிப்பார்கள்” என்று உறுதியளித்தார். ஆனால் காஷ்மீர் மக்களுடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தங்களை இந்திய ஆளும் வர்க்கங்கள் மற்றும் அதன் ஏஜெண்டுகளான அரசியல் கட்சிகள் காங்கிரஸ் முதல் கம்யூனிஸ்டுகள் வரை நிராகரித்தனர்.
காஷ்மீர் இந்தியாவின் பகுதி என்பதில் உறுதியாகவும், ‘தேசிய ஒருமைப்பாடு’ என்ற பெயரில் ஒற்றுமை கூச்சலையும் போட்டு வந்தனர். காஷ்மீரின் சுற்றுலா வருமானத்தின் மூலம் கிடைக்கும் ஆண்டுக்கு சுமார் 15,000 கோடிகளையும், அதன் இயற்கை வளங்களையும் பழத்தோட்டங்கள், தேயிலை, மூலிகை தோட்டங்களையும் கொள்ளையிட வெறியுடன் மூர்க்கமாக அலைந்தனர்.

காஷ்மீரை தொடர்ந்து கொள்ளையடிக்க விரும்பிய இந்திய ஒன்றிய அரசு தான் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தவில்லை என்றவுடன் ஏறக்குறைய 30 ஆண்டுகள் அமைதியாக காத்திருந்த காஷ்மீர் மக்கள் 1976 முதல் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை துவங்கினார்.

அவ்வாறு துவங்கும் போதே பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய தீவிரவாத குழுக்களும், இந்திய ஆதரவு இந்து தீவிரவாத குழுக்களும் நிபந்தனை இன்றி தமது நாடுகளுடன் இணைப்பதற்கு வேலை பார்த்தனர். அதே சமயம் சுயநிர்ணய உரிமை கோரிய ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி போன்ற அமைப்புகள் சுதந்திர வாக்கெடுப்பை நடத்தும்படி தொடர்ந்து போராடி வந்தனர்.

காஷ்மீரில் சுயநிர்ணய உரிமைக்கு எழுந்த குரல் கடுமையாக ஒடுக்கப்பட்டது. மாநில உரிமைகளையும், 370 பிரிவின்படி ஏற்கப்பட்ட, அரசியல்சாசனம் வழங்கிய சிறப்பு அந்தஸ்தையும் ஒழிப்பதற்கு இன்றைய தமிழகம் போல பல்வேறு ஐந்தாம்படைகள் உருவாக்கப்பட்டது.

அந்த மக்களின் உரிமைக்கான போராட்டங்கள் அனைத்தும் துப்பாக்கிமுனையில் அடக்கி ஒடுக்கப்பட்டது. நசுக்கப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால் இந்தியாவின் இராணுவம் காஷ்மீர் மீது ஒரு தாழ்நிலை யுத்தத்தை நடத்தி வருகிறது.
2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஆர் எஸ் எஸ் மோடி தனது அகண்ட பாரத இந்து ராஷ்டிரா திட்டத்தின் அடிப்படையில், 2019 ஆம் ஆண்டு காஷ்மீர் மக்களை இனரீதியாக மூன்றாகப் ஜம்மு, காஷ்மீர், லடாக் என்ற முறையில் பிரித்தது. 2019 ஆம் ஆண்டு நடந்த இந்த பிரிவினையை தொடர்ந்து காஷ்மீரில் இணையதளங்கள் மற்றும் செய்தி தொடர்பு அனைத்தும் முடக்கப்பட்டன.

படிக்க:

♦  கண்ணீரை வற்ற வைக்கும் காஷ்மீர் படுகொலைகள்! தீர்வு என்ன? 

போராளிக் குழுக்கள், சுயநிர்ணய உரிமை கோருபவர்கள் மட்டுமின்றி அவர்களே சொல்லிக் கொள்வது போல ஜனநாயக நீரோட்டத்தில் கலந்த காஷ்மீர் மாநாட்டுக் கட்சிகளின் தலைவர்களான உமர் அப்துல்லா மெஹபூபா முப்தி போன்றவர்கள் கூட வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். மொத்தத்தில் காஷ்மீர் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக அடக்கி ஒடுக்கப்பட்டது.

இது குறித்துப் பேசுபவர்கள், எழுதுபவர்கள் அனைவரையும் உளவுத்துறை கண்காணித்து பிரிவினைவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் (செடிஷன்) கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. இதுதான் காஷ்மீரின் உண்மைநிலையாகும்.

000

இந்த சூழலில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் புதிதாக தோன்றியுள்ள பிரிவினைவாத அமைப்பு, லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான “காஷ்மீர் சுதந்திர போராளிகள்” என்ற அமைப்பு பண்டிட்களையும், ஆர்எஸ்எஸ் பிஜேபி ஆதரவு போலீசு அதிகாரிகளையும் இலக்கு வைத்து தீர்த்துக் கட்டி வருவதாக செய்திகள் வருகின்றன. இந்த யூனியன் பிரதேசத்தில் மோடி அமித்ஷா ஆட்சிதான் நடக்கிறது என்பது குறிப்பித்தக்கது.

இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் என்ற மதரீதியாக வேறுபட்டாலும், காஷ்மீர் இனமாக ஒற்றுமையுடன் வாழ்ந்த மக்கள் 1990 ஆம் ஆண்டு ஜக்மோகன் காஷ்மீர் ஆளுனராக பதவியேற்ற பிறகு இரண்டே நாளில், ஸ்ரீநகர் காவ்கடல் பாலத்தின் மீது நடந்து சென்ற இஸ்லாமியர்களின் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி 50 க்கும் மேற்பட்டவர்களை கொன்ற பிறகுதான் அமைதியை இழக்கத்துவங்கினர். இந்த வெளியேற்றத்தின் போது 1.5 லட்சம் பண்டிட்டுகள் வெளியேறி விட்டதாக காஷ்மீர் பண்டிட் சங்கர்ஷ் சமீதி பொய்யான அறிக்கைகளை வெளியிட்டது

தற்போதைய தமிழகத்தின் ஆளுநர் ரவியைப் போல ஆர்.எஸ்.எஸ்-காரரான ஜக்மோகன் இந்து தேசியவாதத்தை மக்களின் முன்வைத்தார். போலியான அகதிகள் வெளியேற்ற கதைகளை பரப்பினார். இன்றோ அது வரலாறாக திரிக்கப்பட்டு விவேக் அக்னிஹோத்ரி மூலம் காஷ்மீர் பைல்ஸ் என படமாக மாறிவிட்டது.
காஷ்மீர் சுதந்திர போராளிகள் என்ற அமைப்பினால் கொல்லப்பட்ட 19 பேரில் 12 பேர் பிறப்பால் இஸ்லாமியர்கள் 7 பேர் பிற மதங்களைச் சார்ந்தவர்கள். அந்த அமைப்பு குறிப்பான மதத்தைச் சார்ந்தவர்களை குறி வைக்கவில்லை.

படிக்க:

♦  காஷ்மீர் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டும் kashmir Files!காஷ்மீர் ஃபைல்ஸ்:

♦  முஸ்லிம்கள்தான் பண்டிட்டுகளைப் பாதுகாத்தார்கள்- உளவுத்துறை முன்னாள் தலைவர்.

மாறாக இந்திய ஆளும்வர்க்கத்தின் ஏஜெண்டுகளாக செயல்படுகின்ற காஷ்மீரை இரண்டாக துண்டாடிய ஆர்எஸ்எஸ் கைக்கூலிகளாக வேலை செய்கின்ற நபர்களை தேர்வு செய்துதான் இவ்வாறு படுகொலை நிகழ்த்தி வருகின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. தனிநபர் அழித்தொழிப்பு ஒரு போதும் தீர்வாகாது எனினும் இந்த தாக்குதல்களுக்கு பாஜகவின் அகண்ட பாரத அரசியல் மற்றும் காஷ்மீரை துண்டாடிய, பிரிவினைவாத நடவடிக்கைகள் தான் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.
காஷ்மீர் மக்கள் மீதான அடக்குமுறைக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. அவை எதையும் தொடர்ந்து வெளியிடாத ஊடகநரிகள் தற்போது பண்டிட்டுகள் குறி வைத்துக் கொல்லப்படுவதாக ஊளையிடுகின்றனர்.

கொரானா பாதிப்பின் போது நடந்த வேலை முடக்கத்தினால் நாடு முழுவதும் காலில் இரத்தம் வழிய, மனைவி-மக்களுடன் கால்நடையாக பயணம் செய்த 15 கோடி புலம் பெயர் தொழிலாளிகள் பற்றி கண்ணீர் வடிக்காத ஊடகநரிகள் பண்டிட்டுகள் வெகுசிலர் வெளியேறியவுடன் தனது இரத்தம் கொதிக்க, சதைகள் துடிதுடிக்க செய்திகளை வெளியிடுகின்றனர். கடந்த ஒராண்டுகளுக்கும் மேலாக தனது உணவை உண்ண முடியாமல் குடியிருக்கும் வீடுகளையும் இடிக்கும் கொடூரத்தில் உயிர்பயத்துடன் வாழும் இஸ்லாமியர்கள் வாழ்நிலையைக் கண்டு குதிக்காத அறிஞர்கள், கங்கனா ரனாவத் போன்ற சினிமா கழிசடைகள் உணர்ச்சிக் கொப்பளிக்கின்றனர்.

உடனே உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைச்சரவை கூடுகிறது காஷ்மீர் மக்கள் மீது அரசு பயங்கரவாத அடக்குமுறையை எவ்வாறு இயக்குவது என்ற ஆலோசனையை மேற்கொள்ளப்படுகிறது. காஷ்மீரின் மாநில சுயாட்சி உரிமைகளை நீக்க வேண்டும் என்று இன்று நேற்றல்ல, 1952-லேயே ஆர்.எஸ்.எஸ் சின் பிரிவான பிரஜா பரிசத் என்ற அமைப்பு மூலம் போராட துவங்கினர். அவர்களுக்கு இது போன்ற வாய்ப்பு கிடைத்துவிட்டால் சாமியாட துவங்கிவிடுவார்கள்.

2019 ல் காஷ்மீர் பற்றி ஆர்எஸ்எஸ் பாஜக எடுத்த முடிவான காஷ்மீரை இரண்டாகப் பிரிப்பது என்ற பிரிவினைவாத நடவடிக்கை தவறு என்று முன்னாள் பாஜக உறுப்பினரான யஸ்வந்த் சின்கா உட்பட அனைவரும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். ஆம் ஆத்மி கெஜ்ரிவால் காஷ்மீரை பாஜகவால் கையாள முடியாது என தனது ஐந்தாம் படை வேலையை துவங்கிவிட்டார்.

காஷ்மீர் பற்றிய வரலாற்று உண்மைகளை மறைத்து விட்டு தற்போது ஒரு சிலர் கொல்லப்பட்டதை வைத்து மீண்டும் அடுத்த சுற்று அடக்குமுறைக்கு இந்திய ஆளும் வர்க்கங்கள் குறிப்பாக ஆர்எஸ்எஸ்- பாஜக தயாராகி வருகிறது. ஏற்கனவே சுமார் 1 கோடி மக்கள் தொகை கொண்ட காஷ்மீரில் 15 பேருக்கு ஒரு ராணுவம் என்ற கணக்கில், காஷ்மீரை திறந்த வெளி சிறைச்சாலையாக்கி 6 லட்சம் இராணுவ துருப்புகள் நிரந்தரமாக அங்கேயே உள்ளனர்.

இனி அதனை மேலும் அதிகரிப்பதும்., காஷ்மீரில் ஆண்டுக்கு வெறும் 6,000 கோடி இராணுவத்திற்கு செலவாகிறது தீவிரவாதத்தை கட்டுப்படுத்த இந்த தொகை போதாது என்று நமது வரிப்பணம் சட்டப்பூர்வமாகவே பிடுங்கப்படுவதும், ‘இந்திய ஒற்றுமை’, ‘தீவிரவாதிகள் வெறியாட்டம்’ போன்ற அடைமொழிகளுடன், தேசபக்தி பஜனையுடன் கொள்ளையிடப்படுவதும் தவிர்க்கமுடியாதது.

பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா எப்போதும் ‘ஒற்றை அரசின்’ கீழ் வாழ்வதற்கு தயாராக இல்லை பல தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரத்தை கடைப் பிடிக்கின்ற மக்கள் அவரவர்கள் விருப்பப்படி சுதந்திரமாக வாழ்வதும், அந்த விருப்பத்தின் அடிப்படையில் கட்டப்படுகின்ற ஒன்றியம் மட்டுமே நிலைத்து நிற்கும் என்பதே பல நாடுகளில் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. “காஷ்மீர் உள்ளிட்ட தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி!”, “காஷ்மீர் மீது தாழ்நிலைப் போரை உடனே நிறுத்து!”, “இராணுவத்தை திரும்ப பெறு” என்ற முழக்கங்களுடன் வீதியில் இறங்கி போராடுவோம்.

  • பா.மதிவதனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here