“ஹர்ஷ் மந்தேர்” – ‘குஜராத் இனப்படுகொலை’

“இஷான் ஜாஃப்ரி”,கவிஞர், பொதுநலவாத இதயம் கொண்டவர். 28.02.2002 அன்று‌ அவருக்கு என்ன நடந்தது?

அகமதாபாத், குஜராத் கலவரங்களில் ‘ஜாஃப்ரி ”கொல்லப்பட்ட பின்னணியை ஹர்ஷ் மந்தேர் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார், பேசுகிறார்.

ஹர்ஷ் மந்தேர்,

20.07.2002 காலை பதிவு செய்தது.

அகமதாபாத், 1969. நிஷ்ரினின் இளமைக் காலம் என்றால், அது அவர்களின் வீடு, ஒரு அதிபயங்கர கூட்டத்தால் எரிக்கப்பட்டது தான் நினைவுக்கு வரும்.

அவள் அப்பா துணியால் போர்த்தி அவளை அணைத்து எடுத்துக் கொண்டு ரயில் பாதை நடுவே ஓடினார். சுற்றிலும் முழு இருட்டு. அருகே அவள் வீடு கொஞ்ச நேரம் முன்னால் எரிக்கப்பட்டிருந்தது.நிஷ்ரினுக்கு அப்போது ஐந்து வயதுகூட ஆகியிருக்கவில்லை.

அடுத்த நினைவு, அருகே இருந்த நிவாரண முகாம்கள். அது ஒரு விளையாட்டுத் திடல், தற்காலிக நிவாரண முகாமாக மாற்றப்பட்டிருந்தது. பல மாதங்கள் ஒரு கூடாரத்தில் அவளது குடும்பம் மற்ற சில குடும்பங்களோடு கூட்டாகத்தங்கியிருந்தது‌. முகாம்களில் சாப்பாட்டுத்தட்டோடு வரிசையில் காத்திருந்ததை இப்போதும் நினைவில் வைத்திருக்கிறாள்.

1969 படுகொலை நடத்தப்பட்ட நாட்களுக்கு முன்னால், நிஷ்ரின் தன் தந்தை இஷான் ஜாஃப்ரியின் அன்றாட வேலைகளை நினைவு கூர்ந்தாள்.

தாத்தா டாக்டர். மிகச்சிறிய மருத்துவமனை. ரயில் தண்டவாளம் அருகே – இந்துக்கள் பெரும்பான்மை யாக வாழ்ந்த அகமதாபாத் ,’சாமன்புரா ‘பகுதி. இவர்கள் வீடு இரண்டே அறைகள் கொண்டது. பகலில் அப்பாவுக்கு உதவி. மாலையில் சட்டக்கல்லூரி படிப்பு. எப்படியாவது வழக்குரைஞராகிவிட வேண்டும் என்பது ஜாஃப்ரி யின் முயற்சி.

அப்பாவுக்கு ராமா சேத் என்ற இந்து கடைக்காரர் உயிர் நண்பர். ஜாஃப்ரி முகாமில் படுகின்ற துன்பத்தை பார்த்து வருத்தப்பட்ட ராமா சேத் தன் கடைக்குப் பின்னால் இருந்த ஒத்தை அறைக்கு குடியேற்றினார். ஒருசில தட்டுமுட்டு சாமான்கள்- பழங்குடிகள் ஆகியவையே அவர்கள் சொத்து- அவை முகாம்களில் கொடுக்கப்பட்டவற்றுடன் நிஷ்ரின் குடும்பம் அங்கே குடிபெயர்ந்தது.

அந்த நேரத்தில் அவர்கள் எல்லாம் இழந்து விட்டார்கள். நிஷ்ரினின் அம்மாவால் ஒரே ஒரு இழப்பை மறக்க முடியவில்லை. எரிக்கப்பட்ட முந்தைய வீட்டில் அவர்களின் திருமண நிழற்படம் சேர்ந்து கருகிப் போன பழைய காட்சி.

அகமதாபாத்தில் முசுலீம்களுக்கு எதிரான கலவரம் அவ்வப்போது பல வருடங்கள் தொடர்ந்தது. நாளடைவில் முசுலீம்கள் ஒரு குடிசைப்பகுதியில் – அனேகம் பேர்- பாதுகாப்புக்காக திரண்டார்கள். எண்ணிக்கையில் அதிகம் திரண்டால் பாதுகாப்பு என்பதை நிஷ்ரின் அப்பா ஜாஃப்ரி ஏற்கவில்லை.


இதையும் படியுங்கள்: நீதித்துறையில் நிலவும் சீரற்ற தன்மை – இரு வேறு வகையான தீர்ப்புகள்!


 

“இதுவரை நான் நம்பியிருந்தது எல்லாமே பொய்யாக போய்விடும். முசுலீம்கள் மத்தியில் மட்டுமே நான் பாதுகாப்பாக இருப்பேன் என்று நான் நம்பவில்லை.” ஜாஃப்ரி கனவு நிறைந்த கண்களோடு எப்போதும் சொல்வார். ஆனால் அப்படி அவர் முசுலீம்கள் மத்தியில் சென்று வாழ்ந்திருந்தால் இப்போதும்கூட உயிரோடு இருந்திருப்பார்.

சட்டப்படிப்பை அவர் முடித்தார். வழக்குரைஞராக கோர்ட்டுக்கு போய்வந்தார். ரயில் பாதைக்கும் ராமா சேத்தின் கடைக்கும் நடுவே ஒரு துண்டு நிலம் வாங்கினார். அதற்கே பல வருசங்கள் பிடித்தன. இந்த பகுதியில் தான் ‘குல்பர்க்’ என்ற கனவுக் குடியிருப்பு அமைக்கப்பட்டது. அந்நாட்களில் அவர் சோசலிசக் கருத்தினால் ஈர்க்கப்பட்டதால் கூட்டுக் குடியிருப்பு அமைப்பதில் அத்தனை ஆர்வமாக இருந்தார். ரயில்வேயில் சுமைதூக்கும் மற்றும் பிற தொழிலாளர்களுக்காக சங்கம் கட்டினார். காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். காங்கிரசு கட்சி அனேகம் தொகுதிகளில் தோல்வி கண்ட போது அகமதாபாத் தொகுதி எம்.பியாக வெற்றி பெற்று ஜாஃப்ரி நாடாளுமன்றத்துக்குப் போனார்.

அப்போதெல்லாம் மதவெறிக்கலவரம் நடந்தால், ‘குல்பர்க் குடியிருப்பு’வாசிகள் அங்கு தாங்கள் பாதுகாப்பாக இருந்ததாக உணர்ந்தார்கள்.எப்போதும் ஜாஃப்ரி உதவிக்கு வருவார். முதலமைச்சருக்கு ஃபோனில் கூப்பிட்டுப் பேசுவார். காவல்துறையிடம் உதவி கோருவார். வளாக வாசலில் பந்தோபஸ்து போடப்படும். 1985-ல் கூட (1969க்குப் பிறகு நடந்த மிகப்பெரிய கொடிய மதவெறிக் காட்டுத்தீ அதுதான்.) “இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடங்கிய இயக்கம்” என்று சொல்லப்பட்டது; ஆனால், முசுலீம்களுக்கு எதிரான வன்முறையாக மாற்றப்பட்டு 300 உயிர்களை பலி வாங்கியது. – தானும் தன் தம்பியுமாக மாடியில் நின்று கொண்டு ரொம்பத் தொலைவில் இருந்து தீவட்டி எடுத்துக் கொண்டு வெறிகொண்ட கூட்டம் வந்ததை பார்த்ததாக ‘நிஷ்ரின்’ உணர்ச்சியோடு கூறினாள். ஆனால், குல்பர்க் குடியிருப்பு அப்போது காக்கி உடுப்பு போட்ட காவலாளிகளால் சேதமில்லாமல் பாதுகாக்கப்பட்டது.

ஆனால், 2002-ல் குல்பர்க் குடியிருப்பு முழுவதும் தீயிட்டு கொளுத்தப்பட்டது.; குடியிருந்தவர்கள் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். நிஷ்ரினுக்கு அப்போது திருமணம் முடிந்து அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

2002 ஆம் ஆண்டு- 1947க்குப் பிறகு நடந்த மிக மோசமான ரத்தப் படுகொலைகள். குஜராத்தின் அனேகம் பகுதிகள் வெட்டி, குத்திக் குதறப்பட்டன. அயோத்தியிலிருந்து திரும்பி கொண்டிருந்த 58 இந்து யாத்திரிகர்கள் கோத்ரா என்ற ஒரு சின்ன இரயில் நிலையத்தில் ரயில் பெட்டியோடு எரிக்கப்பட்டார்கள். குஜராத்தில் (மொத்தம் 25 மாவட்டங்களில்) 20 மாவட்டங்களில் முசுலீம்களைக் கொல்லுங்கள், கோத்ரா எரிப்புக்கு அவர்களே காரணம் என்று வெறுப்புப் பிரச்சாரம் திட்டமிட்டுத் தொடங்கியது. பல வாரங்கள் தொடர்ந்து கலவரம் நடத்தப்பட்டது. சில இடங்களில் மாதக் கணக்கிலும் விரிவடைந்தது. அரசு தடுக்கவோ கட்டுப்படுத்தவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ரத்தப் படுகொலை செய்யப்பட்டார்கள் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பு 1000 பேர் என்றும், அதிகாரப்பூர்வமற்ற ஆய்வுகள் 2000 பேர் என்றும் தெரிவித்து அறிக்கைகள் வெளிவந்தன. பெரும்பான்மையானவர்கள் சிறுபான்மை முசுலீம்கள். அப்படி ஒரு கொடூரம் சிந்தனையை உறையச் செய்யும் அளவு – இப்படியுமா என்று கேட்டவரைப் பதறச் செய்யுமளவு இருந்தது. பெண்கள், குழந்தைகளைக் குறிவைத்து ஈவிரக்கமில்லாமல் நடத்தப்பட்டது”

எத்தனை பாலியல் வன்முறைகள்? பொது இடங்களில் பெண்கள் பாலியல் மானபங்கம்; அடுக்கடுக்காக சிறுமிகள், சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் உயிரோடு கொல்லப்பட்டார்கள். துயரம் நிரம்பிய நாட்கள், கொடூரங்களே திரும்பத் திரும்ப நடந்த இருண்ட நாட்கள்!


இதையும் படியுங்கள்: குஜராத் இனப்படுகொலை 2002! குற்றவாளிகள் தப்பி விட்டனர்! எதிர்த்து போராடியவர்கள் ஒடுக்கப் படுகின்றனர்!


 

பத்தாயிரக்கணக்கான வீடுகள், சிறு கடைகள், பெட்டிக் கடைகள், தள்ளுவண்டிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள், டாக்சி ஜீப்புகள், சாப்பாட்டுக் கடைகள், மெக்கானிக் (கராஜ்) கடைகள் அத்தனையும் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. ஆடு, மாடுகள், வாழ்நாள் சேமிப்புகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதனால் நீண்ட நாட்களுக்கு முசுலீம் குடும்பங்கள் அகதிகளாயின. கலவரமுற்று செய்வதறியாது திகைத்து, வாழவழியற்றுப் போன, எல்லாம் இழந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சம் பேர்.பாதி பேருக்கும் மேல் அவர்கள் வீடுகளுக்கு திரும்பவே இல்லை. பயம், மிரட்டப்படுதல், சமூக, பொருளாதார புறக்கணிப்பு – ஆகியவையே அதற்கு காரணம். எங்கே பிறந்தார்களோ, அந்த கிராமங்களில் இருந்து, காலனிகளில் இருந்து நிரந்தரமாகவே வெளியேற்றப்பட்டார்கள். இந்த இன அழிப்பில், படுகொலைகள்; எரிப்புகளில் ,நூற்றுக்கணக்கான மசூதிகள், பள்ளிவாசல்கள் உடைத்து நொறுக்கப்பட்டன.

அகமதாபாத் நகரத்திலேயே நடந்த முதல் பெரிய வெட்டு, கொலை – குல்பர்க் குடியிருப்பு தான். நிஷ்ரினின் பெற்றோர் அங்கே தான் வாழ்ந்தார்கள். முதலில் வெறுப்புப் பிரச்சாரம் அகமதாபாத்தில் விதைக்கப்பட்ட போது குல்பர்க் குடியிருப்புவாசிகள், இஷான் ஜாஃப்ரி தங்களது உயிரை, தங்கள் வீடுகளை நிச்சயம் மறுபடியும் காப்பாற்றிவிடுவார் என்றே நம்பினார்கள்.

ஆனால், அப்படி நடக்கவில்லை.

28.02.2002 அன்று ஜாஃப்ரி வெறிகொண்ட கூட்டத்தால் கொடூரமாக கொல்லப்பட்டார். அவரோடு சுமார் எழுபது பெண்கள், குழந்தைகள், ஆண்கள்- அவர் வீட்டில் தஞ்சம் புகுந்தவர்களும் கொல்லப்பட்டார்கள். ரத்தம் குடிக்க அலைந்தவர்களிடமிருந்து ஜாஃப்ரி காப்பாற்றுவார் என்றுதான் அந்த மக்கள் தஞ்சம் புகுந்தார்கள்.

அவர் மட்டுமே நம்பிக்கை தந்தவர். அவரை காலிக் கூட்டம் இழுத்துச் சென்று கை, கால்களை தனித்தனியாக வெட்டிக் கொத்தி எடுத்தார்கள். அவர் உடலின் மிச்சம் எங்கே கொண்டு போய்‌ எறியப்பட்டதென்றுகூட குடும்பத்தாரால் கண்டெடுக்க முடியவில்லை. மக்களுக்கான பொதுக் கல்லறையில் ஜாஃப்ரி போலவே ,கொத்துயிரும் குலைஉயிருமாகச் சாகடிக்கப்பட்ட ‘குல்பர்க் குடியிருப்பு’, ‘*நரோடா பாட்டியா’வை சேர்ந்த மக்கள் புதைக்கப்பட்டார்கள். உறவினர்களுக்கு எரிந்துபோன உடல்களின் மீதமிச்சங்கள் முழுதாக கிடைக்கவில்லை.

  • தொடரும்…

000

மூலநூல்: இதயப்பிரிவினைகள்: இந்தியா என்ற எண்ணம் உருவாவது கலைக்கப்படுகிறது!

ஆசிரியர்: ஹர்ஷ் மந்தேர்

பதிப்பகம்: பென்குயின் ரேண்டம் ஹவுஸ்

ஆசிரியரிடமிருந்து அனுமதி பெற்று நூலின் சில பகுதிகளை scroll.in பதிப்பித்துள்ளனர்.

தமிழில் ஆக்கம்: இராசவேல்

ஆசிரியர் பற்றி: ஹர்ஷ் மந்தேர்.

பிறப்பு- 13-04- 1955. குஜராத் இனப்படுகொலை ஆர்எஸ்எஸ் வெறியர்களால் தூண்டப்பட்ட தருணத்தில் கோபமுற்ற ஹர்ஷ் மந்தேர் தான் பணிபுரிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் பதவியை விட்டு விலகி வெளியேறினார். பாபர் மசூதி இடிப்பு பற்றி உணர்வு எழுச்சி மிக்க துடிப்பான அவரது கட்டுரையை எவரும் மறக்க முடியாது. தற்போது பத்திரிகைகளில் சிறப்பு பத்தி எழுத்தாளர், ஆய்வாளர், ஆசிரியர், சமூக செயற்பாட்டாளர். முஸ்லிம்களுக்கு எதிராக இந்துமத வெறியர்கள் கலவரம், இன அழிப்பு போர் நடத்தும் இடங்களில் அந்த வன்முறைகளை எதிர்த்து உறுதியோடு நின்று போராடி வருபவர்; குரல் கொடுப்பவர். டெல்லியில் இயங்கும் “சமூக சமத்துவ ஆய்வுகள் மையம்” இயக்குனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here