நாடாளுமன்றத்திற்கு வெளியே  சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கரை மிமிக்ரி செய்த விவகாரத்தை ஊதி பெருக்கி வருகிறார்கள் பாசிஸ்டுகளும் அதன் அடிவருடி ஊடகங்களும். மணிப்பூர் பழங்குடி இன மக்களின் உயிருக்கு கொடுத்ததை விட ஜகதீப் தன்கரின் ‘மாண்புக்கு’ அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

பாராளுமன்றத்தில் கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி பாதுகாப்பு அரண்களை தாண்டி இருவர் உள்நுழைந்து நடத்திய வண்ண புகை குண்டு தாக்குதல் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்களவை, மாநிலங்களவை என மொத்தமாக எதிர்க்கட்சி எம்பிக்கள்  143 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளது பாசிச மோடி அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்திற்கு வெளியே போராடி வருகிறார்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டு பாராளுமன்றத்திற்கு வெளியே போராடும் எம்பி-க்கள்

இவர்களில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி துணை ஜனாதிபதி ஜெகதீஷ் தன்கர் போல் மிமிக்ரி செய்ததை ராகுல் காந்தி தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனைப் பார்த்த Godi மீடியாக்கள் கண்டென்ட் கிடைத்து  விட்டதை அடுத்து  தொலைக்காட்சியில் விவாத பொருளாக்கியுள்ளனர். அவர்களின் இலக்கு திரிணாமுல் எம்பி அல்ல ராகுல் காந்தி தான்.

இதனை அடுத்து ஜனாதிபதி திரௌபதி மிமிக்ரி விவகாரம் குறித்து “நாடாளுமன்ற வளாகத்திற்குள் மதிப்புக்குரிய  துணை ஜனாதிபதி அவமானப்படுத்தப்பட்டது பார்த்து திகைத்துப் போனேன். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தாங்கள் சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கண்ணியம் மற்றும் மரியாதையுடன் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். அதுதான் நம் பெருமைக்குரிய நாடாளுமன்றத்தின் பாரம்பரியம். அதை அவர்கள் நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இப்படிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்கும் போது தான் குடியரசுத் தலைவர் என்று ஒருவர் இருக்கிறார் என மக்களுக்கு தெரிய வருகிறது. தற்போது ஜனாதிபதியாக இருந்து வரும் திரௌபதி முர்மு தான் வகிக்கும் பதவிக்கு விசுவாசமாக இல்லாமல் ஆர்எஸ்எஸ் பிஜேபிக்கு தான் விசுவாசமாக இருந்து வருகிறார். ஜெக்தீப் தன்கருக்கு பொங்கி வந்து கருத்து சொல்லும் முர்மு மணிப்பூரில் இரண்டு குக்கி இனப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு நிர்வாணமாக அழைத்துச்  செல்லப்பட்டது குறித்து இதுவரை எந்தவிதமான கருத்தும் கூறவில்லை. இதற்காகவெல்லாம் வெட்கப்படவில்லை. மாறாக மிமிக்ரி செய்வதற்கு பொங்குகிறார். ஜனாதிபதியான பின்னர் கோவிலுக்கு சென்றவரை பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதற்காக உள்ளே அனுமதிக்காமல் அதே கோவிலுக்கு மோடி சென்றபோது உள்ளே அனுமதித்தது எண்ணி அவமானம் கொள்ளாத முர்மு இதற்காக அவமானம் கொள்கிறார். ஆனால், நாட்டின் முதல் குடிமகனான தன்னை தவிர்த்துவிட்டு புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டதை அவமரியாதையாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் மோடியோ ஒரு படி மேலே போய் தான் 20 வருடங்களாக அவமானங்களை எதிர்கொண்டு வருவதாக கூறியுள்ளார். அதற்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட். தான் ஒரு ஏழை என்பதால் அவமானப்படுத்துகிறார்களாம். 10 லட்சம் ரூபாய் போட்டு, லட்சம் ரூபாய் மதிப்பிலான காளான் உணவு, வெளிநாடுகளுக்கு செல்வதற்கு 4800 கோடியில் தனி விமானம் இப்படி வாழும் ஏழைத்தாயின் மகன் தான் 20 வருடங்களாக அவமானங்களை சந்தித்துக் கொண்டு வருவதாக ஜெக்தீப் தன்கருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.  ஆனால், இதே மோடி முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை இழிவுபடுத்தியது இன்னும் பதிவுகளில் உள்ளது என்பதை சங்கி கும்பல் மறந்து விடக் கூடாது.

பத்து நிமிடம் மிமிக்ரி செய்ததற்காக ஜெக்தீப் தன்கருக்கு ஆதரவாக எழுந்து நின்றார்கள் பாஜக எம்.பி  ஒன்றிய அமைச்சர்களும். இதற்கு நடுவே தான் சத்தமே இல்லாமல் மூன்று மசோதாக்களை குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றி உள்ளது பாசிச அரசு. இதற்காக தான் 143 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த பிரச்சனையை திசை திருப்ப தான் Godi மீடியாக்கள் மிமிக்ரி விஷயத்தை பெரிது படுத்துகிறார்கள்.

இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்ட ஜெக்தீப் தன்கர் ஒரு எம்பி என்னை கேலி செய்வதையும் அதை மற்றொரு எம்பி வீடியோ எடுப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஒரு வெட்கக்கேடான செயல் என தெரிவித்திருக்கிறார். இந்த துணை  ஜனாதிபதியாக உள்ள ஜெக்தீப் தன்கர் வேறு யாருமல்ல பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த அவர் ராஜஸ்தானில் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். தான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்ததால் என்னை அவமானப்படுத்துகின்றனர் எனக் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:

இது தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்புகையில் “143 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது பற்றி ஏன் விவாதிக்கவில்லை? அதானி, ரஃபேல் பற்றி ஏன் விவாதம் நடத்தவில்லை? வேலைவாய்ப்பை பற்றிய விவாதிக்கவில்லை? தயவு செய்து இந்த செய்திகளை சிறிதாவது ஒளி பரப்புங்கள் அதுதான் மீடியாக்களின்  கடமை” என்று Godimediaக்களை கேள்வி எழுப்பி உள்ளார்.

Godimediaக்கள் எவ்வளவு காரி துப்பினாலும் கண்டுகொள்ளப் போவதில்லை மோடி போடும் எலும்புத் துண்டுகளுக்கு வாலாட்டுவதையே அவர்களது கடமையாக கருதுகிறார்கள்.

மோடியின் பத்து ஆண்டுகால பாசிஸ ஆட்சியில் இந்திய மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். பண மதிப்பு நீக்கம் தொடங்கி வேலையின்மை, வறுமை, தொழில்நசிவு, மணிப்பூர் கலவரம் சிறுபான்மையினர் மீதான தாக்குதல், பெண்கள் மீதான வன்முறை இதையெல்லாம் ஒருபோதும் அவமானமாக பார்க்காத பாசிஸ்ட் மோடி, மிமிக்ரி செய்ததை அவமானமாக கருதுகிறார். மோடியின் பேச்சு அதிர்ச்சி அளிக்கவில்லை என்றாலும் இது ஒரு மலிந்த அரசியல்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here