ந்திய தண்டனைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் போன்றவற்றை மாற்றுவதற்காக ஒன்றிய அரசு முன்வைத்துள்ள மூன்று மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டால், நமக்கிருக்கும் பெயரளவு ஜனநாயகமும் பறிக்கப்படும் ஆபத்து உள்ளது. அளவு அடிப்படையில் பார்த்தால் தற்போதைய சட்டங்களில் 20 – 25 %  மாற்றப்பட வாய்ப்புள்ளது. ஆனால் தன்மை அடிப்படையில் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய 12 வகையான அபாயகரமான மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது.

புதிய 3 சட்டத் தொகுப்புகளின் விளைவுகள்!

இங்கு நிலவுகின்ற அரைகுறை சுதந்திரத்தையும் முற்றிலுமாக இழப்பது, பெயரளவு ஜனநாயகமும் ஒழிக்கப்படுவது, இந்த நாட்டில் சட்டபூர்வமாக சர்வாதிகாரத்தை அரங்கேற்றுவது ஆகியவை நடந்தேறும். அரசுக்கு எதிரானக் குரல்களை அடக்கவும், பொது உரையாடல்களை முடக்கவும், அரசுக்கு எதிரான விமர்சனப் பார்வைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகங்களை ஒடுக்கவுமே இது பயன்படப் போகிறது.

இந்த 12 வகை மாற்றங்களில் 6 வகையானது எதிர்ப்பை அடக்கவும், எதிராளிகளை ஒடுக்கவும், பொது உரையாடலை முடக்கவும் கூடியதாக உள்ளன. இதில் மூன்று வகையானது குறி வைத்து, ஒரு சார்பாக அரசியல் ரீதியான பழிவாங்கலுக்கு உதவப் போகிறது. ஆளும் வர்க்கத்தால் எதிரிகளாக கருதப்படும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீது வழக்கு தொடுத்து சிறையில் அடைக்கும் வகையில் வலுவான ஆயுதமாக மாறப்போகிறது.

அதில் இரண்டு வகையானது, ஜனநாயக நடவடிக்கைகளை நேரடியாகத் தாக்கும் வகையிலும், ஒன்று ஜனநாயகத்திற்கு எதிராக சங்பரிவார் கும்பலின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் இருக்கப் போகிறது. ஒட்டுமொத்தமாக ஜனநாயக சிந்தனை மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை சிறையில் அடைத்து, துன்புறுத்தி அதில் ஆட்சியாளர்கள் குரூர இன்பம் காணப் போகிறார்கள்.

இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் சட்டபூர்வ வழிமுறைகள் மூலம் இந்தியாவில் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட நிரந்தர அவசர நிலை நிறுவப்படும். எதிர்காலத்தில் வரும் புதிய அரசாங்கங்கள் இந்த கூடுதல் அதிகாரங்களை விட்டுக் கொடுக்கவோ, அவசர நிலையை ரத்து செய்யவோ வாய்ப்பில்லை. இந்தப் புதிய குற்றவியல் சட்டங்கள் அரசியலமைப்பின்  அறம்சார் விஷயங்களை பிரதிபலிக்கப் போவதில்லை.

மாறாக, அரசியலமைப்புக்கு எதிரான உணர்வும், நடவடிக்கைகளும் தான் இருக்கப் போகின்றன. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் வெளிப்படுத்திய “அவர்களுக்கு சுவாசிக்க இடம் கொடுக்காதே” என்ற அவர்களின் கொடூர நோக்கத்தை நிறைவேற்றவே இத்தகைய மாற்றங்கள் அரங்கேறப் போகின்றன. மிகவும் அபாயகரமான தன்மை கொண்ட இந்த சட்டத் திருத்த விஷயங்களில் சிலவற்றை மட்டும் சுருக்கமாகப் பார்ப்போம்.

சாதாரண ஜனநாயக நடவடிக்கைகள் கூட இனி பயங்கரவாதம்தான்!

சமூக, அரசியல், பொருளாதார மற்றும் ஜனநாயக நீதிக்கான எந்தவொரு அமைதி வழியிலான போராட்டமும் மட்டுமின்றி அரசாங்கத்தை விமர்சித்துப் பேசுவதும் கூட பயங்கரவாதம் என்று முத்திரை குத்த அரசாங்கத்துக்கு அதிகாரம் உண்டு. பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின் முழு வீரியத்தை செலுத்தி இத்தகைய வன்முறையற்ற நடவடிக்கைகளைக் கூட ஒடுக்க முடியும்.

இப்போதுள்ள UAPA சட்டத்தில் இந்தியாவின் ஒருமைப்பாடு, ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான வன்முறை செயல்களே பயங்கரவாதமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவே தவறாகப் பயன்படுத்தப் படுவதை நாம் பார்த்து வருகிறாம். புதிதாக வரப்போகும் பாரதிய நியாய சன்ஹிதா(BNS) சட்டமானது அமைதியான, வன்முறையற்ற செயல்களையும் கூட பயங்கரவாத வரையறையில் சேர்க்கிறது. வெறும் பேச்சு மற்றும் எழுத்தும் கூட இந்த வகையில் பயங்கரவாதமாகும்.

அடுத்து UAPA வின் கீழ், மக்களில் எந்தப் பிரிவினரின் மீதாவது  தாக்குதல் தொடுப்பதுதான் பயங்கரவாதம். ஆனால் BNS – ல் பொதுமக்களை அச்சுறுத்தும் அனைத்து செயல்களுமே பயங்கரவாதம் என வரையறுக்கிறது. மேலும் “பொது ஒழுங்கை சீர்குலைத்தல்” என்ற சொல்லையும் சேர்த்து பயங்கரவாதம் என்பதன் வலையை மேலும் விரிவு படுத்துகிறது. அதாவது பயங்கரவாதம் என்பதை சட்ட வரம்புகளுக்கு அப்பால் அதன் வரையறையின் எல்லையைப் பெரிதும் விரிவு படுத்துகிறது. எனவே இதன்மூலம் புரட்சிகர, சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களுக்காக  அமைதியான வகையில் போராடும் அனைத்து இயக்கங்களையும் பயங்கரவாத இயக்கங்களாக அறிவித்துத் தடை செய்ய முடியும்.

அம்பேத்கர், பெரியார் உள்ளிட்டோர் வலியுறுத்திய “சாதி ஒழிப்பு” உள்ளிட்ட சமூக ஒழுங்கை அச்சுறுத்தும் பிரச்சனைகளுக்கு எதிராக, சமூக சீர்திருத்தத்தை கோருவதும் கூட இனி பயங்கரவாதம்தான். இந்தக் கொடூர சட்டமானது இந்நாட்டில் நிலவும் சமத்துவமற்ற கட்டமைப்பைப் பாதுகாக்கும் வகையில், சமூக மாற்றத்தைத் தடுப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

கொடூர அவதாரம் எடுக்கும் தேசத்துரோக சட்டம்!

BNS – ன் பிரிவு 150, ஏற்கனவே IPC 124 A க்கு மாற்றாக கொண்டு வரப்படுகிறது. இது நாசகார நடவடிக்கைகள், பிரிவினைவாத செயல்கள், இந்திய இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படுத்துதல் மற்றும் ஆயுதக் கிளர்ச்சி போன்றவற்றை தேச துரோகமாக வரையறுக்கிறது. ஆனால் இவை குறித்து சட்டபூர்வமாக வரையறுக்காமல் காவல்துறை மற்றும் அதிகார வர்க்கத்தின் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தும் வகையில் உள்ளதுதான் பிரச்சினை.

அதாவது மேற்கூறிய நடவடிக்கைகளுக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் “உணர்வுகளை தட்டி எழுப்புவது” என்ற தெளிவற்ற வரையறையைக் கொண்டிருப்பதால்,  அரசாங்கம் விரும்பியபடி எவரையும் இலக்காக வைத்து, ஜனநாயக மற்றும் வன்முறையற்ற கருத்துக்களையும் கூட நசுக்க முடியும். வெறுப்பு, அவமதிப்பு, அதிருப்தி, விசுவாசமின்மை மற்றும் பகைமை போன்ற அரசாங்கத்துக்கு எதிரான அணுகுமுறைகள் போன்றவை ஏற்கனவே 124 A வில் இருந்தது. இப்போது இத்தகைய மனப்பான்மையிலிருந்து எழும் பரந்த அளவிலான செயல்பாடுகள் அனைத்துமே குற்றம் ஆகிறது. சுருக்கமாக சொன்னால் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் தேசத்துக்கு எதிரானதாக பார்க்கப்படும். அந்த வகையில் மோசமான, கொடூர அவதாரமாக தேசத் துரோகச் சட்டம் பிறப்பெடுக்கிறது.

உண்ணாவிரதம் இருப்பது கூட சட்டவிரோதமாம்!

உண்ணாவிரதப் போராட்டத்தை அரசியல் எதிர்ப்பாக காண்பிக்கும் ஜனநாயக உரிமை இந்தப் புதிய சட்டத்தால் நிராகரிக்கப்படுகிறது. வலுவான ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக எளிய மக்களின் போராட்ட வடிவமான உண்ணாவிரதம் என்பது தற்கொலை முயற்சி என்பதாக BNS சொல்கிறது. எந்த ஒரு அரசு ஊழியரையும் கட்டாயப்படுத்த அல்லது கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் உண்ணாவிரதம் (தற்கொலை) இருக்க முயற்சிப்பவருக்கு, அபராதத்துடன் ஒரு ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க சட்டம் வகை செய்கிறது. உண்ணாவிரதத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதை தடை செய்வது மட்டுமே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது.

சங்கப் பரிவாரங்களுக்கு கொலை செய்யவும் கூட சட்டப்பாதுகாப்பு!

ஜனநாயகத்திற்கு எதிராக சங்பரிவார் கும்பல் செயல்படும் வகையில் அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது. BNS வரையறைப்படி அரசியல் அமைப்பு கட்டமைப்பை அழிக்கும் அல்லது சீர்குலைக்கும் செயல் பயங்கரவாத செயலல்ல. மாறாக, இந்தியாவின் சமூகக் கட்டமைப்பை (வர்ண சாதி அமைப்பு உள்ளிட்ட) அழிக்க அல்லது சீர்குலைக்க முயலும் செயல் பயங்கரவாதமாகும்.

இதன் மூலம் இந்துராஷ்டிர அரசியலுக்கான நிகழ்ச்சி நிரலைத் தொடர சங்பரிவாரத்தை சட்டம் அனுமதிக்கிறது. மறுபுறம் பாரம்பரிய, நிலப்பரப்புத்துவ, சாதிய சமூகக் கட்டமைப்பை ஒழிக்க முயலும் அனைத்து செயல்களையும் பயங்கரவாத சட்டத்தின்படி தடுக்கிறது. ஏற்கனவே உள்ள சட்டத்தின் ஊர்வலமாக செல்லும்போது ஆயுதம் ஏந்துவதற்குத் தடை இருந்த போதிலும், அது சங்பரிவார்களைப் பொறுத்தவரை இதுவரை அமலுக்கு வரவில்லை. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்தக் கும்பல் சலுகையுடன் சக்தி வாய்ந்ததாகத்தான் வலம் வந்து கொண்டுள்ளது.

இப்போது இந்த சட்டப்பிரிவையே நீக்கப் போகிறார்கள். அடுத்ததாக ஆட்களை அடித்து கொல்வதற்கான தண்டனையில் இனம், சாதி, பாலினம், மொழி, தனிப்பட்ட நம்பிக்கை போன்றவைதான் அடங்கியுள்ளன. திட்டமிட்டே “மதம்” என்பது வசதியாக நீக்கப்பட்டுள்ளது. எனவே சிறுபான்மை மதத்தவரை அடித்து கொல்லவும் கூட இந்தக் கும்பலுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது.

காவல்துறைக்கு கட்டற்ற அதிகாரம்!

BNS பிரிவு 172 – ன் படி, அனைத்து நபர்களும் ஒரு போலீஸ் அதிகாரியின் சட்டபூர்வ வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும். இதை எதிர்த்தால், சிறிய வழக்குகளில் கைது செய்து நீதித்துறை நடுவர் முன் நிறுத்தலாம். கைது செய்வதற்கான அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ தேவை இல்லாத போதும் கூட தடுப்பு காவலில் வைக்கலாம். ஏற்கனவே சட்டத்தையே மதிக்காமல் எல்லை மீறிய அதிகாரத்தில் திளைக்கும் காவல்துறைக்கு, மேலும் கூடுதலான அதிகாரத்தையும் சட்டரீதியான பாதுகாப்பையும் இந்த சட்டப்பிரிவு உருவாக்கிக் கொடுக்கிறது. ஒரு போலீசு ராஜ்யத்தை உருவாக்க துடிக்கிறது இந்தக் காவிப் பாசிச கும்பல்.

மேற்கூறியவை தவிர தனிப்பட்ட அல்லது பொதுப் பிரச்சினையை ஒட்டி மக்கள்  ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதை தடுக்கும் வகையிலும், அதிகபட்ச போலீஸ்காவல் 15 நாட்கள் என்பதை, விசாரணைக் காலம் முடியும் வரை 90 நாட்கள் வரை கூட நீடிக்கலாம் என்பதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகக் குற்றம் இழைத்து குறைந்தது 7 ஆண்டுகள் தண்டனை பெற்றவர்களுக்கு பயோமெட்ரிக் எனப்படும் அந்தரங்க அடையாளங்களை பதிவு செய்ய முடியும் என தற்போது உள்ள சட்டத்தை மாற்றி, கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படும் எல்லோருக்குமே எடுக்கலாம் என்பதாகவும் சட்டப் பிரிவுகளை மாற்றியுள்ளது.

சட்டமாக மாறும் மனுதர்மம்!

இப்படியாக மாற்றப்படப் போகும் சட்ட விதிகளின் நெறிமுறைகள் நமது மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு அரசமைப்பிலிருந்தும் சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களிடமிருந்து பெறப்படும் அதிகாரம் பற்றிய சிந்தனையில் இருந்தும் வகுக்கப்படவில்லை என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது. அதற்குப் பதிலாக இந்து மதத்தின் மனுதர்ம நெறிமுறைகளில் இருந்து வகுக்கப்பட்டுள்ளது. இதில் கடவுளால் வகுக்கப்பட்டதாக சொல்லப்படும் தர்மம்தான் சட்டத்தின் ஆதாரமாக உள்ளது. மக்கள் இதை கேள்விக்கு உட்படுத்தாமல் கீழ்ப்படிய வேண்டும்.

ஐபிசி எனும் சட்டத் தொகுப்பில் ஜனநாயக உரிமைகளுக்கு ஓரளவாவது இடம் கிடைத்த நிலையில், புதியத் தொகுப்பில் இவை முற்றிலும் புறந்தள்ளப்பட்டுள்ளன. இந்தப் புதிய மூன்று சன்ஹீதாக்கள் (சனாதன தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட சட்டத் தொகுப்பு) மதம், இனம், மொழி, பிறப்பிடம் மற்றும் வசிப்பிடம்  ஆகியவற்றின் அடிப்படையில் வாழும் பல்வேறு தரப்பட்ட மக்களிடையே பகைமையைத் தூண்டும் வகையிலும், நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு எதிராகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாதகமாகவும், மதச் சிறுபான்மையினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்குடனும்தான் வடிவமைக்கப் பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:

 குற்றவியல் நடைமுறை (அடையாள சேகரிப்பு) சட்டம்!
 பொது சிவில் சட்டம்: இந்துத்துவ நிகழ்ச்சி நிரலின் அங்கம்!

தனிநபர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மாறாக அரசு அதிகாரத்தையும், அதிகார வர்க்கத்தின் செல்வத்தையும் பாதுகாக்கும் வகையில் தான் இவை அமைந்துள்ளன. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த சட்ட சீர்திருத்தங்களின் நோக்கமானது குற்றவியல் சட்டத்தை “காலனித்துவ நீக்கம்” செய்து இந்திய ஆன்மாவுடன் இணைந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதே என்கிறார். இது முற்றிலும் வடிகட்டிய பொய்யாகும்.

உண்மையில் ஏற்கனவே இருந்த சட்டத்தில் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு ஓரளவுக்கு இடமிருந்தது.  சர்வாதிகாரத்திற்கான கூறுகள் அதில் சிறிதளவே உள்ளன. எனவே இவர் காலனித்துவ நீக்கம் எனச் சொல்வது ஏற்கனவே இருந்த குறைந்தபட்ச ஜனநாயகக் கூறுகளைத்தான்.

ஏற்கனவே இருக்கும் சட்டங்களையே மதிக்காமல் சட்டவிரோதமான முறையில், அரசை விமர்சிக்கும் அறிவுத் துறையினரையும், சமூக செயற்பாட்டாளர்களையும், ஜனநாயக சக்திகளையும் கடுமையாக ஒடுக்கி வரும் நிலையில் இந்தப் புதிய சட்டங்களை நிறைவேற்றி விட்டால் இவற்றையெல்லாம் சட்டப்பூர்வமாகவே செய்ய முடியும் என்பது தான் காவி பாசிஸ்டுகளின் நோக்கமாக உள்ளது. பாசிச ஆட்சிக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக்கூடிய இந்த மசோதாக்களை நிறைவேற்ற விடாமல் முறியடிப்பது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமையாகும்!

மூலம்:

https://thewire.in/law/the-three-criminal-law-bills-using-criminal-law-to-establish-permanent-extra-constitutional-emergency-powers

தமிழில் ஆக்கம் : குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here