டந்த டிசம்பர் 13 – ல் இந்திய பாராளுமன்றத்துக்குள் இருவர் நுழைந்து வண்ணப் புகை போட்டு சர்வாதிகாரத்துக்கு எதிராக முழக்கம் எழுப்பியுள்ளனர்.  2001 இல் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அதே நாளில் இதை திட்டமிட்டு செய்துள்ளனர்.

மக்களவையின் குளிர்கால கூட்டத்தின் பூஜ்ஜிய நேரத்தின்போது பார்வையாளராக வந்திருந்த சாகர் சர்மாவும் மனோரஞ்சனும் அவை உறுப்பினர்களின் பக்கம் தாவிக்குதித்து மேஜைமேல் ஓடிச்சென்று, முழக்கமிட்டுள்ளனர். கொண்டாட்டங்களில் மேடைகளில் வண்ணப்புகை போடுவதை ஷூவுக்குள் மறைத்து எடுத்து வந்து மஞ்சள் நிற புகையும் போட்டனர்.  இதேபோல் பாராளுமன்ற கட்டிடத்துக்கு வெளியில் நீலம் தேவி, அமுல் ஷிண்டேவும் வண்ணப்புகை போட்டுள்ளனர்.

சாகர்சர்மா – உபி., மனோரஞ்சன் – கர்நாடகா, நீலம் தேவி – ஹரியானா,  அமுல் ஷிண்டே – மஹராஷ்டிரா என கைதாகியுள்ள நால்வரும் வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள்.  பாஜக MP பிரதாப் சிம்ஹாவின் மூலம் நுழைவு அனுமதியை பெற்றுள்ளனர்.

பாஸ் எடுத்து கொடுத்த பாஜக MP மீது எந்த விசாரணையும் இல்லை.  வட இந்திய ஊடகங்களும் இதில் மவுனமாக உள்ளது. இதுவே, அது எதிர்கட்சி எம்.பி அல்லது இஸ்லாமிய எம்.பி பாஸில் வந்திருந்தவர்கள் எனில் என்ன நடந்திருக்கும்? பெரும் கலவரத்தையல்லவா நாடு முழுவதும் நடத்தியிருப்பார்கள்.

மைசூர் விவசாயியின் மகனும் பொறியியல் பட்டதாரியுமான மனோரஞ்ஜன்  விவேகானந்தரின் புத்தகங்களை விரும்பி படிப்பவர் என்ற தகவல் வந்துள்ளது. கைதான மற்றவர்கள் விவசாயிகளின் டெல்லி முற்றுகை, பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான மல்யுத்த வீராங்கனைகளின் நீதி கேட்கும் போராட்டம் போன்றவற்றில் பங்கெடுத்தவர்களாக உள்ளனர். குறிப்பாக, நீலம்தேவி M Ed முடித்து நெட்(NET) தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளவர் என தெரிகிறது.

ஒட்டு மொத்த ஊடகங்களின் பேசுபொருளாகியுள்ள இவர்களின் நோக்கம் என்ன என்பது இன்னும் தெளிவாகவில்லை. சர்வாதிகாரத்தை எதிர்ப்பது என்றால் அதற்கு  அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்த நாளும், இந்த கலகமும் பொருத்தமானதல்ல.


இதையும் படிக்க: 

மஹூவா மொய்த்ரா எம்பி பதவி பறிப்பு! பாசிஸ்டுகளால் தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சிநிரல்!

2024 நாடாளுமன்ற தேர்தல் பாசிச BJPயை தோற்கடிப்போம்! INDIAயை ஆதரிப்போம்!


ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக பகத்சிங் இப்படித்தான் அத்துமீறி வெடிகுண்டு வீசினார். அதன்பின் அதை விவாதப் பொருளாக்கினார். காந்தியின் சத்யாகிரக அகிம்சை போராட்டத்தின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்தினார். அவரின் ஹிந்துஸ்தான் சோசலிச குடியரசுக் கழகம் இவற்றை திட்டமிட்டு செயல்படுத்தியது.

பகத்சிங்கின் HSRA போன்ற ஒரு திட்டமிட்ட அமைப்பு ரீதியான செயலாக பாராளுமன்ற மக்களவையில் நடந்துள்ள வண்ணப்புகை கலகம் இல்லை. டெல்லி குருகிராமில் தங்கி, முன்னேற்பாடுகளுடன் வந்து கலகம் செய்து, அதை முகநூலில் நேரலையும் செய்துவிட்டு தப்பியுள்ள ஒருவர் மற்றும் கைதாகியுள்ளவர்களுக்கு திட்டம் எதுவும் உள்ளதா? இவர்கள் அமைப்பாக செயல்படுகிறார்களா? இது குறித்த விவரம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

செய்தித்தாள்களில் எழுதியுள்ளபடி கைதானவர்கள் மோடி அரசின் அடக்குமுறையை கண்டித்து முழக்கமிட்டிருந்தாலும்,  மோடியை எதிர்ப்பதாக நினைத்து வண்ணப்புகை போட்டிருந்தாலும்கூட, அவரின் பாசிச அடக்குமுறைகளுக்கு வலுசேர்ப்பதாக இத்தகைய கலகங்கள் மாறக்கூடும். அல்லது காவிகளே திட்டமிட்டு தூண்டி, உள்ளே வர பாஸ் எடுத்து தந்து உதவிகள் செய்ததன் மூலம், இக்கலவரத்தின் சூத்திரதாரிகளாக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

பாசிஸ்ட்டுகளின் ஆட்சியில், டில்லி காவல்துறையினர் நேர்மையான விசாரணை நடத்துவார்கள்  என்றோ, நீதிமன்றத்தில் உண்மை வெளியே வரும் என்றோ நம்ப முடியாதுதான். காத்திருப்போம்!

 

இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here