மோடி தன்னை ஊழல் எதிர்ப்பு நாயகனாக ஒருபுறம் விளம்பரம் செய்துக் கொண்டிருந்தாலும் மற்றொரு புறம் இவர்களின் உண்மை முகம் வெளிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அதானியின் பங்குச்சந்தை முறைக்கேட்டை ஹிண்டன்பர்க் அறிக்கை அம்பலப்படுத்தியது. சில நாட்களுக்கு முன் மீடியா பார்ட் இணையதளம் ரஃபேல் ஊழலை அம்பலப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மீடியாபார்ட் அறிக்கை பாசிஸ்டுகள் மோடியும், இம்மானுவேல் மேக்ரானும் இணைந்து ரஃபேல் ஊழல் குறித்த விசாரணையை முடக்கியது பற்றி அம்பலப்படுத்தியுள்ளது.

ஆனால் இந்திய ஊடகங்களோ(Godi media) பாசிஸ்டுகளின் எலும்புத்துண்டுக்கு வாலாட்டிக் கொண்டு இது பற்றி பேசாமல் மறைக்க முயற்சிக்கின்றன. ஆனால் தி வயர் இணையதளம் இது குறித்த கட்டுரையை வெளியிட்டுள்ளது. இதன் அவசியம் கருதி கட்டுரையை மொழியாக்கம் செய்து வெளியிடுகிறோம்.

(இதில் குறிப்பிடப்படும் தொடர்பு நீதிபதி எனப்படுபவர் இந்த ஊழல் விசாரணையில் ஒத்துழைப்பதற்காக இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்படுபவர்.)

000

2016-ம் ஆண்டு 7.8 பில்லியன் யூரோவுக்கு டசால்ட் நிறுவனம் தயாரித்த 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்தது.‌ அதில் நடந்த ஊழல் தொடர்பான விசாரணைக்கு இந்தியாவிடம் பிரான்ஸ் நீதிபதிகள் இந்திய ஒன்றிய அரசிடம் உதவ கோரினர். அதற்கு நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு ஒத்துழைக்க மறுக்கிறது என மீடியாபார்ட் என்ற (பாரிஸை தளமாகக் கொண்ட) புலனாய்வு இணையதளம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜூலை 25, 2023 தேதியிட்ட தூதரகக் குறிப்பில், இந்தியாவிற்கான பிரெஞ்சு தூதர் இம்மானுவேல் லெனைன், குற்ற வழக்குகளில் விசாரணைக்கு இந்தியா முறையாக ஒத்துழைப்பதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும்  “பல வழக்குகளை எங்கள் இந்திய கூட்டாளிகள் மிகுந்த காலம் கடத்தும் நோக்குடனும், அரைகுறையான வகையிலும் கையாளுகின்றனர்”. என்று  தனது தூதரகக் குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீடியாபார்ட்டின் தகவலின்படி, “ஊழல்”, “செல்வாக்கு செலுத்துதல்”,”சாதகவாதம்” உள்ளிட்ட குற்றவியல் விசாரணைக்கு பொறுப்பான இரண்டு பிரெஞ்சு நீதிபதிகளால் கொடுக்கப்பட்ட  சர்வதேச ஒத்துழைப்புக்கான கோரிக்கையை இந்திய அரசாங்கம்  ஏற்க மறுத்துவிட்டது.

இந்திய அமைச்சகம் “எட்டு மாதங்களாக பிரஞ்சு தூதரகத்தின் அலைகழித்து விட்டு, அதன் பின்னர் எல்லா தகவல்தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டது” என்று அறிக்கை கூறுகிறது.

எனவே, இந்தியாவுக்கான முன்னாள் பிரெஞ்சு தூதர் லெனைன் (தற்போது பிரேசிலுக்கான பிரான்சின் தூதராக இருக்கிறார்), இந்த பிரச்சினையில் ஒரு இராஜதந்திர ரீதியான தூதரகக் குறிப்பை எழுத வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆகஸ்ட் 11 மற்றும் 12 தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஜி20 ஊழல் எதிர்ப்பு உச்சி மாநாட்டினை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி பிரெஞ்சு அரசாங்கம் “சில வழக்குகளை முன்னகர்த்த” முயற்சித்தது என்றும் தனது தூதரகக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதம மந்திரி நரேந்திர மோடி, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரான்ஸின் முன்னாள் அதிபர் ஹாலண்டே ஆகிய மூன்று  தலைவர்களை சிக்கவைக்கக்கூடிய மிக முக்கியமான விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் பிரெஞ்சு மற்றும் இந்திய அரசாங்கங்கள் எவ்வாறு ஒன்றிணைந்துள்ளன என்பதை மீடியாபார்ட் முன்பு தெரிவித்திருந்தது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் ஹொலண்டே

2018 அக்டோபரில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் அமலாக்கத் துறை இயக்குனரகத்தால் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் சுஷேன் குப்தா மற்றும் டசால்ட்  நிறுவனம் சம்பந்தப்பட்ட நீதித்துறை ஆவணங்களை தங்களுக்கு அனுப்புமாறு பிரான்ஸ் விசாரணை நீதிபதிகள் இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

சுஷேன் குப்தா ரஃபேல் ஒப்பந்த முகவராகவும் இருந்தார், அவர் “பல மில்லியன் கமிஷன்” பெற்றார் என்று மீடியாபார்ட் ஏப்ரல் 2021 இல் செய்தி வெளியிட்டது.

ரஃபேல் ஒப்பந்தத்தை காப்பாற்றுவதற்காக கடந்த இருபது ஆண்டுகளாக பாதுகாப்பு துறையில் நடந்த ஊழலை மோடி அரசு எப்படி மறைக்கிறது என்றும் கேரவன் செய்தி வெளியிட்டிருந்தது. மோடியின் கீழ் உள்ள அமலாக்க துறை மற்றும் மத்திய புலனாய்வு துறை ஆகிய  அமைப்புகள்  15 முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களில் சட்டத்திற்கு புறம்பான பணப் பரிவர்த்தனைகள் செய்ததற்கான ஆதாரங்களை வைத்திருந்ததையும் அதனை மூடி மறைத்ததை பற்றியும் எழுதியிருந்தது.

பிரான்சில், விசாரணை நீதிபதிகள் இரகசிய ஆவணங்களை வெளிப்படையானதாக மாற்றும் வேலைகளில்  பல இடர்களை எதிர்கொண்டனர், அவற்றில்   பிரெஞ்சு பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்து நிறுவனமான டசால்ட்டை பற்றிய ஆவணங்களை வெளிப்படையாக்க முயன்றபோது கடுமையான தடைகளை எதிர்கொண்டதாக மீடியாபார்ட் தனது சமீபத்திய விசாரணையில் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: 

முன்பு குறிப்பிட்டபடி, அக்டோபர் 2018 இல், பிரெஞ்சு விசாரணை நீதிபதிகள் டசால்ட் மற்றும் குப்தா தொடர்பான நீதித்துறை ஆவணங்களை தங்களுக்கு அனுப்புமாறு இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

இரண்டாவதாக, பிரெஞ்சு நீதிபதிகள் Dassault Reliance Aerospace Limited (DRAL) தலைமையகம் மற்றும் குப்தாவின் அலுவலகம் ஆகிய  இரண்டு இடங்களில் தங்களை உள்ளடக்கிய குழுவுடன் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.

இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினர்களின் முந்தைய ஆட்சேபனைகளை மீறி, 2019 பிப்ரவரியில், இறுதி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு சற்று முன்பு, மோடி அரசாங்கம் ரஃபேல் ஒப்பந்தத்தில் இருந்து “ஊழல் எதிர்ப்பு ஷரத்துகளை” நீக்கியதாக பிப்ரவரி 2019 இல் தி இந்து செய்தி வெளியிட்டது.

இந்தியா ரஃபேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அக்டோபர் 3, 2016 அன்று டசால்ட் மற்றும் ரிலையன்ஸ்  நிறுவனங்கள் தங்கள் கூட்டுமுயற்சியில்  DRAL நிறுவனம் தொடங்கப்பட்டதாக அறிவித்தன. மீடியாபார்ட் 2015 இல் பிரான்சிடம் இருந்து அம்பானி எவ்வாறு வரிச்சலுகை பெற்றார் என்பதைப் பற்றியும் செய்தி வெளியிட்டிருந்தது.

டசால்ட் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தால் உருவாக்கப்பட்ட கூட்டு நிறுவனமான இது இந்தியாவின் மிக பணக்கார குடும்பத்தை சேர்ந்தவரான அனில் அம்பானியால் நடத்தப்படுகிறது.

கூட்டு நிறுவனத்தில் பிரெஞ்சு நிறுவனம் 49% பங்குகளை வைத்திருந்தாலும், 51% ரிலையன்ஸ் டிஃபென்ஸ் வசம் உள்ளது. ஜூலை 2023 இல், பிரெஞ்சு ஏவியேஷன் நிறுவனமான டசால்ட்   தங்கள் கூட்டு நிறுவனமான DRAL இல் அம்பானியின் பங்குகளை வாங்க விரும்புவதாக தி பிரிண்ட் தெரிவித்துள்ளது.

புதுதில்லியில் உள்ள பிரான்ஸ் தூதர் தனது சமீபத்திய அறிக்கையில், நீதித்துறை தொடர்பான கோரிக்கைகளுக்கு ஒத்துழைப்பதில் இந்திய அதிகாரிகள் காலதாமதம் செய்வது குறித்து தீவிர கவலை தெரிவித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:

“நவம்பர் 28, 2022 அன்று, தூதரகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரி, உள்துறை அமைச்சகத்திற்கு நேரில் சென்று,  சர்வதேச ஒத்துழைப்புக்கு பொறுப்பான தொடர்பு நீதிபதியை சந்தித்து பிரெஞ்சு நீதிபதிகளின் கோரிக்கையை ஒப்படைத்தார்.  சில நாட்களுக்குப் பிறகு கூரியர் மூலமும் அந்த கோரிக்கை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரண்டு மாதமாக இது குறித்து எந்த பதிலும் கிடைக்கப்பெறாத நிலையில் பிப்-6, 2023 பிரெஞ்சு அதிகாரிகளை தொடர்பு கொண்ட அந்த நீதிபதி, தான் வேறு பொறுப்பிற்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் அந்த இடத்திற்கு உடனடியாக யாரும் இன்னும் நியமிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இதனை கண்டு பொறுமையிழந்த பிரெஞ்சு தூதர் இம்மானுவேல் லெனைன், ஏப்ரல் 6 ம் தேதி தனக்கு அடுத்த நிலையில் இருக்கும் தூதரக அதிகாரியையும், உள்நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரியையும்  அனுப்பி இந்திய உள்துறை அமைச்சகத்தின் சர்வதேச விவகாரங்கள் துறை இயக்குநரையும், பிரெஞ்சு – இந்திய உறவுகளுக்கான இந்திய பொறுப்பாளரையும் சந்தித்து நிலைமைகளை எடுத்துரைத்தார். பிரெஞ்சு நீதிபதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வேலைகளை கூடிய விரைவில் செய்வதாக அவர்கள் உறுதியளித்ததாக அறிக்கை குறிப்பிடுகிறது.

கிரிமினல் வழக்குகளில் ஒத்துழைப்பதற்கான கோரிக்கைகளை கையாள்வதற்காக உள்துறை அமைச்சகம் இறுதியாக ஒரு புதிய தொடர்பு நீதிபதியை நியமித்துள்ளது என பிரெஞ்சு தூதரகம் ஏப்ரல் 24 அன்றே கண்டறிந்து அந்த தொடர்பு நீதிபதியை தொடர்பு கொண்டாலும் எந்த பதிலும் கிடைக்கப்பெறவில்லை. அதே சமயம்   இந்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிகுந்த அலட்சியத்துடன் காலதாமதாக மின்னஞ்சல் மூலமாக ஜூலை 20.2023 கிடைக்கப்பெற்றதாக தனது தூதரக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ரஃபேல் ஜெட் விமானங்கள் விற்பனையில் நடந்த ஊழல் தொடர்பான பிரான்ஸ் நீதித்துறை விசாரணை எந்த முடிவையும் எட்டக்கூடாது என்பதில் மோடி அரசாங்கம் உறுதியாக இருந்தது தூதரக அறிக்கையின் மூலம் பாரிசில் எதிரொலித்திருக்கிறது. இதன் விளைவாக, விசாரணை நீதிபதிகள், இரகசியமாக கமிஷன் பணம் வழங்கியதை நிரூபிக்கும் இரகசிய பிரெஞ்சு ஆவணங்கள் மற்றும் இந்திய நீதித்துறை ஆவணங்கள் இரண்டும் இல்லாததால், பெரும் தடையை எதிர்கொள்கின்றனர். பிரான்சிலும் இந்த வழக்கை விசாரிப்பதில் நீதிபதிகள் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டில், பிரான்சின் நிதிக் குற்றவியல் வழக்குப் பிரிவின் தலைவரான எலியான் ஹவுலெட், “பிரான்ஸின் நலன்களைப் பாதுகாக்க” தனது பிரதிநிதிகளில் ஒருவரின் ஆலோசனைக்கு எதிராக, ஊழல் எதிர்ப்பு NGO ஷெர்பாவின் புகாரை நிராகரித்தார். மீடியாபார்ட்டின் ‘ரஃபேல் பேப்பர்ஸ்’ விசாரணை அறிக்கை வெளியீட்டின் அடிப்படையில் ஷெர்பாவிடமிருந்து இரண்டாவது புகார் பெறப்பட்டு, ஜூன் 2021 க்கு பிறகு நீதிபதி தலைமையிலான விசாரணை தொடங்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுக்கு இந்திய அரசாங்கத்தின் தகவல் தொடர்பு சேவை மற்றும் இந்திய உள்துறை அமைச்சகம் இதுவரை பதிலளிக்கவில்லை.

இதிலிருந்தே இந்த ஊழலை ஊத்தி மூடுவதற்க்கு பாசிச மோடி அரசு முயல்வது கண்கூடாக தெரிகிறது. இதனை ஊடகங்கள் அம்பலப்படுத்தாவிட்டாலும் மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.

நன்றி: திவயர்

மொழிப்பெயர்ப்பு

  • தாமோதரன்

மூலம்: Modi Govt Stonewalls Rafale Deal Corruption Probe By French Judges: Report (thewire.in)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here