பாகம் 2

பொதுவாக பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதாக கூறிக் கொள்கின்ற இடதுசாரி அமைப்புகள், திருத்தல்வாத மார்க்சிய லெனினிய அமைப்புகள், பல்வேறு ஜனநாயக சக்திகள் அனைவரும் அரசியல் மேல்கட்டுமான தளத்தில் உள்ள ஆட்சி வடிவங்களில் ஒன்றாக பாசிச ஆட்சியை புரிந்து கொள்கின்றனர். எனவே மேற்கட்டுமானத்தில் பாசிச ஆட்சிக்கு பதிலாக வேறொரு ஆட்சி ஒன்றை கொண்டு வருவது ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர்.

இந்தியாவில் முதலாளித்துவ வடிவிலான பாராளுமன்ற அமைப்பை எப்படி குறிப்பிட்ட தருணங்களில் பயன்படுத்துவது அல்லது புறக்கணிப்பது என்பதை பற்றி மார்க்சிய – லெனினிய புரிதல் இல்லாத அரசியல் தற்குறிகள் அல்லது இடது சந்தர்ப்பவாதிகள் அனைவரும் தங்களுக்கு புரிந்த வகையில் ஜனநாயக குடியரசு, மக்கள் ஜனநாயக அரசு என்று பல்வேறு பெயர்களில் மாற்று ஒன்றை முன் வைக்கின்றனர் .

வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் அல்லது ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் பாசிசத்தை வீழ்த்துவதற்கு, கம்யூனிஸ்டுகள் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினருடன் ஐக்கிய முன்னணி அமைத்து நிதி மூலதனத்தின் ஆகக் கேடான, ஆக பிற்போக்கான, ஆக இன வெறி பிடித்த, கடிவாளம் ஒன்று இல்லாத பாசிச பயங்கரவாதத்தை எதிர்த்து முறியடிக்க வேலை செய்தனர்.

முதலாளித்துவ வளர்ச்சி பெறாத காலனி, அரைக் காலனி, மறு காலனிய நாடுகளில் நிதி மூலதனத்தின் வெறிபிடித்த பாசிச பயங்கரவாதத்தை எதிர்த்து முறியடிப்பதற்கு பாசிசத்தை எதிர்த்து போராடுகின்ற அல்லது போராட முன் வருகின்ற அல்லது பாசிசத்தை பற்றி எதிர் கருத்து பேசுகின்ற அனைவரையும் ஒரு ஐக்கிய முன்னணியின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: பாசிசமும், நவீன பாசிசமும்!

ஏனென்றால் ‘பாசிசம் என்பது பொருளாதார உற்பத்தி முறைகளை உள்ளடக்கிய அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது’ என்ற  கோட்பாட்டு புரிதல் ஓரளவுக்கு கூட, போலியாக பாசிச எதிர்ப்பு பேசுபவர்களிடம் இல்லாத காரணத்தினால், மேல்கட்டுமான தளத்தில் ஆட்சி வடிவம் ஒன்றை கைப்பற்றுவதை பற்றி மட்டுமே சிந்திக்கின்றனர்.

தற்போது உலகம் முழுவதும் ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் தோல்வியில் இருந்து பிறந்துள்ள பாசிசமானது 30-களில் உலகை அச்சுறுத்திய பாசிசத்தை போன்றது அல்ல! அன்று பாசிசத்திற்கு எதிராக சோசலிச கட்டமைப்பு ஒன்று உலக மக்களை பாதுகாத்து வந்தது.. தோழர் ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு ரஷ்யாவில் நிலவிய போலி சோசலிச அமைப்பானது, தன்னை முழுமையான முதலாளித்துவ வகைப்பட்ட நாடுகளில் ஒன்றாக அறிவித்து மாற்றிக் கொண்டது.

தனது நிதி மூலதன ஏகபோகத்திற்காக, உலக மேலாதிக்க வெறிபிடித்து அலைகின்ற ஏகாதிபத்தியங்கள் முதலாளித்துவத்தின் முழக்கமான ஜனநாயகம் என்பதை கிஞ்சித்தும் அமல்படுத்தப் போவதில்லை என்பதை ஏற்கனவே நாம் வரையறுத்துக் கூறியுள்ளோம்.

எனவேதான் காலனி,  அரைக்காலனி,. மறு காலனிய நாடுகளில் உற்பத்தி முறையில் முதலாளித்துவ வகைப்பட்ட மாற்றத்தை கம்யூனிஸ்டுகள் புதிய ஜனநாயக புரட்சி என்ற வடிவத்தில் முன்வைக்கின்றனர். புதிய ஜனநாயக புரட்சி ஒன்றை முன்வைத்து மக்களை அணி திரட்டுகின்ற காலகட்டத்தில் திடீரென்று இடை மதிப்பு என்ற முறையில் ஏகாதிபத்திய போர்கள், ஏகாதிபத்திய நேரடி ஆக்கிரமிப்பு போன்ற நிலைமைகளில் புதிய ஜனநாயக புரட்சிக்கு முன்பாக ஒரு இடைநிலை வடிவத்தை ஜனநாயக கூட்டரசு என்ற முறையில் முன்வைத்து மக்களை பாசிசத்திற்கு எதிராக போராடுவதற்கு அரவணைத்து,  அணி திரட்டி கொண்டு செல்ல வேண்டி உள்ளது.

இத்தகைய மாற்று ஒன்றையே மார்க்சிய-லெனினிய புரட்சியாளர்கள் இந்தியாவில் முன்வைக்கின்றார்கள். மேற்கட்டுமானத்தில் ஆட்சி மாற்றம் என்பது மட்டும் இன்றி அடித்தளத்தில் நிலவுகின்ற அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளில் மாற்றத்தை உருவாக்குகின்ற, அரசியல், பொருளாதார கட்டுமானம் ஒன்றை முன்வைத்து பிரச்சாரம் செய்கின்றனர்.

இத்தகையதொரு பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணியை கட்டியமைப்பதற்கு; பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், தனிநபர்களிடம் கொள்கை ரீதியான ஐக்கியத்தை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி சாத்தியம் இல்லை மாறாக மக்கள் முன்னணி ஒன்றை கட்டுவது தற்போதைக்கு சாத்தியம் என்று பாசிசத்திற்கு எதிராக இரு முனைகளிலும் போராடுகின்ற மார்க்சிய- லெனினிய வழிமுறையை மறுத்து அகநிலைவாதத்திலும், அரசியல் தற்குறித்தனமாகவும் செயல்படுகின்ற சிறு குழுக்கள் மற்றும் 50 அல்லது 100 பேரை திரட்டுகின்ற ஆற்றல் கொண்ட அமைப்புகள் மனம் போன போக்கில் ஐக்கிய முன்னணிக்கு எதிராக கண்டபடி உளறிக் கொட்டுவதால் பாசிச சக்திகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ துணை போகின்றனர்.

இந்த வகையில் தான் அவர்களது செயல்பாடு உள்ளது என்பதற்கு  அவர்கள் முன்வைக்கின்ற ஒவ்வொரு அரசியல் நிலைப்பாடுகளும் சாட்சியங்களாக வெளிப்படுகிறது.

  • வைத்தீஸ்வரன்.

(தொடரும்)

முந்தைய பதிவு: 

பாசிசமும், நவீன பாசிசமும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here