“பரம்பரை வரி (inheritance tax )” இது கடந்த 20 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இப்பொழுது இந்தியர்களால் கூகுளில் தேடப்பட்டு வரும் சொல். நாட்டின் செல்வங்கள் ஒரு சிலரிடம் குவிவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பணக்காரர்கள் மீது விதிக்கப்படும் வரி தான் இந்த பரம்பரை வரி.

வெளிநாட்டு இந்தியர்களின் காங்கிரஸ் தலைவர்(Indian overseas Congress President)’சாம் பிட்ரோடா’ அவர்கள் ஒரு நேர்காணலின் போது, அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் பரம்பரை வரி தொடர்பான தனது கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

வாசகர்கள் இந்த இடத்தில் சில விசயங்களை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளவும். சாம் பிட்ரோடா இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அல்ல. அவரது கருத்து காங்கிரஸ் கட்சியின் கருத்தும் அல்ல. மேலும் இந்தியாவில் பரம்பரை வரியை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறவில்லை.

அப்படி இருந்தும் கூட பரம்பரை வரியை குறித்த தகவல்களை, கூகுளில், இந்தியர்கள் ஏன் இப்பொழுது தேடிக் கொண்டிருக்கிறார்கள்? இந்த விசயத்திற்குள் செல்லும் முன்பாக பரம்பரை வரி குறித்து சுருக்கமாக நாம் பார்த்து விடலாம்.

ஒருவர் இறக்கும் பொழுது அவரது சொத்துக்கள் அவரது வாரிசுகளுக்கு செல்கின்றன. அப்படி வாரிசுகளுக்கு சொத்து கைமாறும் பொழுது விதிக்கப்படுவது தான் பரம்பரை வரி.

அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்கள் உள்ளன. அவற்றில் ஆறு மாநிலங்களில் மட்டுமே பரம்பரை வரி அமலில் உள்ளது. அந்தப் பரம்பரை வரி விகிதம் கூட மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.

குறிப்பிட்ட அளவிற்கு மேல் உள்ள சொத்துக்கு மட்டுமே பரம்பரை வரி விதிக்கப்படுகிறது. ஒருவர் வைத்துள்ள சொத்துக்கு ஏற்ப பரம்பரை வரி ஒற்றை இலக்கத்தில் கூட விதிக்கப்படுகிறது. எல்லோரிடமும் 55 சதவீத வரி வசூலிக்கப்படுவது இல்லை.

பரம்பரை வரி என்பது அமெரிக்காவில் மட்டும் விதிக்கப்படுவது அல்ல. மாறாக உலகில் உள்ள பல்வேறு வளர்ந்த நாடுகளிலும் இந்த வரி விதிக்கப்படுகிறது.

உதாரணமாக,
அமெரிக்காவில் 55 சதவீத வரியும்
இங்கிலாந்து 40 சதவீத வரியும்
ஜப்பானில் 55 சதவீத வரியும்
தென்கொரியாவில் 50 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.

இந்தியாவிலும் கூட 1985 க்கு முன்பு வரை பரம்பரை வரி (Estate duty act) இருந்தது. இந்த எஸ்டேட் டியூட்டி சட்டம் 1953ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

1978 79 ஆம் ஆண்டில் பரம்பரை வரியாக 10.75 கோடி ரூபாய் வசூல் ஆனது. 1984 -85 ஆம் ஆண்டில் பரம்பரை வரியாக 20 கோடி ரூபாய் வசூல் ஆனது.

பொதுவாக பார்த்தால், இந்திய அரசின் மொத்த வரிவருவாயில் 0.1%சதவீதம் அளவிற்கு தான் எஸ்டேட் வரி வருவாய் இருந்தது. ஆனால் எஸ்டேட் வரியில் வந்த வருவாயை விட அந்த வரியை வசூலிப்பதற்கு இந்திய அரசு அதிகமாக செலவிட வேண்டி இருந்தது. எப்படி என்றால், இந்த வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து ஏராளமான பணக்காரர்கள் நீதிமன்றத்திற்கு சென்று வாதாடியதால் அதற்கான செலவுகள் அதிகரித்தது மற்றும் வரியை கணக்கிடுவதில் இருந்த சிக்கலான நடைமுறை போன்ற காரணங்களால் செலவு மிக அதிகமாக இருந்தது.

இதையும் படியுங்கள்:

மேலும், எஸ்டேட் வரி வசூலில் இருந்த ஓட்டைகளை பயன்படுத்தி பணக்காரர்கள் இந்த வரியை கட்டாமல் அரசை ஏமாற்றினர்.

மேற்கண்ட காரணங்களை கூறி 1985 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது எஸ்டேட் டியூட்டி சட்டம் (அதாவது பரம்பரை வரி) இந்தியாவில் ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவில் 1985 ஆம் ஆண்டிலேயே ரத்து செய்யப்பட்டுவிட்ட பரம்பரை வரி இப்பொழுது இந்தியர்களிடையே பேசு பொருளாக காரணம் என்ன?

பதவி வெறி தலைக்கேறிய பாசிஸ்ட் மோடி தற்போது தோல்வி பயத்தில், நாட்டில் இந்து இஸ்லாமிய மதவெறியைத் தூண்டி மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று முயற்சிக்கிறார்.

காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் இந்துக்களின் சொத்தைப் பறித்து அதுவும் இந்து பெண்களின் தாலியில் உள்ள தங்கத்தைக் கூட பறித்து ஊடுருவல் காரர்களுக்கு, அதிக பிள்ளைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு, அதாவது இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள் என்று ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி விசத்தை கக்கி இருந்தார்.

அதற்கு ஆதாரமாக காங்கிரசின் முன்னாள் பிரதமர் பத்தாண்டுகளுக்கு முன்பு கூறியிருந்த கருத்தை மோடி அயோக்கியத்தனமாக திரித்துக் மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.

மோடியின் இந்த பேச்சுக்கு வலு சேர்க்கும் விதமாக சாம் பிட்ரோடாவின்
பேட்டியில் அவர் சொல்லாததை சொன்னதாக கூறி அதுதான் காங்கிரசின் கருத்து என்றும் காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதும் மன்மோகன் சிங்கின் பேச்சும் சாம் பிட்ரோடாவின் பேச்சும் ஒரே விசயத்தைத் தான் கூறுகின்றன. அதாவது இந்துக்களின் சொத்தைப் பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுப்பதை பற்றி தான் கூறுகின்றன என்று ஆர் எஸ் எஸ் – பாஜக வின் பிரச்சாரப்படை ஊடகங்களிலும் பொதுவெளியிலும் பிரச்சாரம் செய்து வருகிறது.

இது எப்பேர்பட்ட அயோக்கியத்தனம் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here