ரம்பரை வரி (inheritance tax) குறித்தான தேடல்கள் இந்தியாவில் தற்போது அதிகரித்துள்ளது குறித்தும் பரம்பரை வரி குறித்தும் சென்ற பதிவில் பார்த்தோம்.

பரம்பரை வரி என்ற விசயத்தை பயன்படுத்தி, இந்து – முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி தேர்தலில் வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அயோக்கியத்தனமாக, மோடி கூறும் பொய்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பாசிச மோடி, “காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று பேசினார்கள். உங்களிடம் உள்ள தங்கம் உள்ளிட்ட சொத்துக்களை பறித்து அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களிடம் கொடுத்து விடுவார்கள். சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஊடுருவியவர்களிடம் உங்கள் சொத்துக்களை கொடுத்து விடுவார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை அவர்களிடம் கொடுக்க வேண்டுமா? இதை நீங்கள் ஏற்பீர்களா?” என்றும்

“இதை செய்வோம் என்றுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறார்கள். தாய்மார்கள், சகோதரிகளின் தங்க நகைகளை கணக்கெடுத்து அவற்றை உங்களிடமிருந்து பறித்து அவர்களிடம் கொடுத்துவிடுவார்கள். மன்மோகன் சிங் என்ன சொன்னார் தெரியுமா? நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் எனக் கூறினார். சகோதர சகோதரிகளே இதுதான் நகர்ப்புற நக்சல்களின் சிந்தனை. என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியை பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை” என்றும் பேசியிருக்கிறார்.

மோடியின் பேச்சில் உள்ள பொய்கள் எத்தனை, எத்தனை?

  • முஸ்லிம்கள் இந்திய நாட்டின் குடிமக்கள். ஆனால் அவர்களை இந்திய நாட்டிற்குள் ஊடுருவியவர்கள் என்று மோடி அயோக்கியத்தனமாக பொய் கூறுகிறார்.
  • இந்து மக்களின் சொத்தை எடுத்து முஸ்லிம்களுக்கு கொடுப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக மோடி கூறியுள்ளது ஒரு அப்பட்டமான பொய். காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் என்ற வார்த்தையே இல்லை.
  • முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கு முதல் அதிகாரம் என்று கூறியதாக மோடி பொய் கூறியுள்ளார்.
  • மக்களின் சொத்தைப் பறித்து இஸ்லாமியர்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் கூறியதாக மோடி அப்பட்டமாக பொய் உரைக்கிறார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உண்மையில் என்ன சொன்னார் என்பதைப் பார்ப்போம்.

டிசம்பர் 9, 2006 அன்று தேசிய வளர்ச்சிக் கவுன்சிலில் மன்மோகன் சிங் உரை ஆற்றும் போது, “பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான திட்டங்கள் புத்துயிர் பெறவேண்டும். சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினர், வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் அதிகாரம் பெறுவதை உறுதிசெய்ய, புதுமையான திட்டங்களை நாம் வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்” என்று கூறினார்.

மன்மோகன் சிங்கின் மேற்கண்ட கூற்றில் “வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்” என்று குறிப்பிடுவதில் யாருக்கெல்லாம் வளங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்? பட்டியலிடப்பட்ட சாதியினர், பழங்குடியினர், சிறுபான்மையினர்(குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினர்) என்ற அனைவரையும் உள்ளடக்கித் தான் அவ்வாறு கூறியுள்ளார். இதில் இந்துக்கள் இல்லையா?

மன்மோகன் சிங்கின் மொத்த பேச்சின் சாரம் என்ன? பட்டியலிடப்பட்ட சாதியினர், பழங்குடியினர், சிறுபான்மையினருக்கு நாட்டு வளர்ச்சியின் பலன்கள் சென்று சேர்வதில்லை என்பதால் “அவர்கள் நாட்டு வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் அதிகாரம் பெறுவதை உறுதிசெய்ய, புதுமையான திட்டங்களை நாம் வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்” அப்பொழுதுதான் நாட்டு வளங்களைப் பெறுவதில் மற்ற மக்களைப் போல இவர்கள் வாய்ப்பைத் பெற முடியும் என்னும் பொருளில்தான் மன்மோகன் சிங் அவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது வெளிப்படையாகத் தெரியும் ஒன்று.

மன்மோகன் சிங்கின் பேச்சிலிருந்து ஒரு வரியை மட்டும், மோடி, அயோக்கியத்தனமாக பிரித்தெடுத்து மக்களிடம் தவறாக வியாக்கியானம் செய்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் “ஜாதிகள் மற்றும் துணை ஜாதிகள் மற்றும் அவர்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை கணக்கிடுவதற்காக நாடு தழுவிய சமூக-பொருளாதார மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் நடத்தும். தரவுகளின் அடிப்படையில், உறுதியான நடவடிக்கைக்கான நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்துவோம்” என்றும்

“நில உச்சவரம்பு தொடர்பான சட்டத்தின் கீழ் அரசு நிலம் மற்றும் உபரி நிலங்களை ஏழைகளுக்கு விநியோகம் செய்வதைக் கண்காணிக்க காங்கிரஸ் ஒரு அதிகாரத்தை நிறுவும்” என்றும் “கொள்கைகளில் பொருத்தமான மாற்றங்கள் செய்வது மூலம் நாட்டின் வளம் மற்றும் வருமானத்தில் பெருகிவரும் சமத்துவமின்மையை நாங்கள் நிவர்த்தி செய்வோம்” என்றும் கூறியுள்ளது.

இதையும் படியுங்கள்:

இவையெல்லாம் வரவேற்கத்தக்கவைகள் தான். ஆனால் பாஜகவிற்கோ இதைப் பார்த்தால் ஆத்திரம் வருகிறது. காரணம் என்ன?ஆதிக்க சாதியினர் மற்றும் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ள கட்சிதான் பாஜக என்பது உலகறிந்த ஒன்று.

நாட்டின் மொத்த வளங்களையும் மேற்கண்டவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விடவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் பாஜகவிற்கு காங்கிரசின் தேர்தல் அறிக்கையை பார்த்தால் ஆத்திரம் வராமல் என்ன செய்யும்? அந்த வாக்குறுதிகள் மக்களிடையே செல்வாக்கு பெற்று பாஜகவின் தோல்வி உறுதியாகிவிடும் என்ற நிலையை எதிர்கொள்ளும் போது பதவி வெறி இந்த பாசிஸ்ட் மோடியின் தலைக்கு ஏறிவிட்டதன் வெளிப்பாடு தான் இந்த மதவெறிப் பேச்சு.

மோடியின் பேச்சில் உண்மை இருப்பதாகவும்,அதை கட்டமைப்பதற்காக
சாம் பிட்ரோடா (1980ஆம் ஆண்டுகளில் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியின் ஆலோசகராக செயல்பட்டவர். இப்பொழுது, வெளிநாட்டு இந்தியர்களின் காங்கிரஸ் தலைவர்(Indian overseas Congress President)) கொடுத்த
பேட்டியில் அவர் சொல்லாததை சொன்னதாக கூறி அதுதான் காங்கிரசின் கருத்து என்றும் காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதும், மன்மோகன் சிங்கின் பேச்சும், சாம் பிட்ரோடாவின் பேச்சும் ஒரே விசயத்தைத் தான் கூறுகின்றன. அதாவது இந்துக்களின் சொத்தைப் பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுப்பதை பற்றி தான் கூறுகின்றன என்று ஆர் எஸ் எஸ் – பாஜக வினர் ஊடகங்களிலும் பொதுவெளியிலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ராஜஸ்தானில் பேசிய மோடியின் மதவெறி பேச்சை கண்டித்து, இந்தியா முழுவதிலும் இருந்து, 17 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளனர். மோடியின் மதவெறிப் பேச்சைக் குறித்து உலகமே காரி துப்பி விட்ட நிலையிலும் கூட தேர்தல் ஆணையம் மோடியின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை – நடவடிக்கை எடுக்காது என்பது அனைவரும் அறிந்தது தான்.

தேர்தலில் பாஜகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் (மோடியின் எடுபிடிகளான) தேர்தல் ஆணையர்கள் மோடி மீது நியாயமாக நடவடிக்கை எடுத்தால் என்ன ஆகும்? நகைச்சுவையாக கூறுவது என்றால்… உலகமே அழிந்து விடும்.

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here