டலூரில் வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என் ரவி வழக்கம்போல நஞ்சைக் கக்கியுள்ளார்.

வள்ளலார் ஓர் ஆர்.எஸ்.எஸ்காரர், என்பதுபோல் பிதற்றியிருக்கிறார். ‘10,000 வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்’ என்று உளறுகிறார்.

‘வள்ளலார் நூல்களை நான் வாசித்திருக்கிறேன்’ என்கிறார். என்னத்தைப் படித்துக் கிழித்தாரோ?

ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துமத அடிப்படைவாத இயக்கங்கள் வேதமரபையே இந்தியாவின் ஆன்மீகம் என நிறுவப் பார்க்கிறது.

ஆனால், வேதமறுப்பு என்பதுதான் இந்திய ஆன்மீகமாக இருந்திருக்கிறது.

இதை வடக்கே புத்தரும் ,தெற்கே வள்ளலாரும் செய்தார்கள். இதனால்தான் வருணக் கோட்பாட்டை எதிர்த்த அம்பேத்கருக்கு பௌத்தம் மீதும் , திராவிட இயக்கங்களுக்கு சன்மார்க்கம் மீதும் கரிசனம் இருந்தது.

“சாதியிலே மதங்களிலே
சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே
கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்
தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து
வீணேநீர் அழிதல்
அழ கலவே!”

என வருண மதத்தின் மீது அனல் கக்கியவர் வள்ளலார்.

அவரைதான் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் என்கிறார் கவர்னர்.

சத்யஞான சபையை கொடியேற்றி தொடங்கி வைக்கும் போது,

‘கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல்சமயக் கூட்டமும் அக்கூட்டத்தே கூவுகின்ற கலையும் கள்ளமுறு அக்கலைகள் நாட்டியபல் கதியும் காட்சிகளும் காட்சிதரும் கடவுளரும் எல்லாம் பிள்ளை விளையாட்டே’

‘நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்ற கலைச்சரிதம் எல்லாம் பிள்ளைவிளையாட்டே’ 

மனிதர்களுடைய இருப்பை, மாண்பை, சுயமரியாதையைக் குலைக்கும் நால் வருண மரபை பிள்ளை விளையாட்டு என்றார் வள்லார்.

‘இயல் வேதாகமங்கள் புராணங்கள் இதிகாசம் இவை முதலா இந்திரசாலங் கடையா உரைப்பர்!’ 

வேதங்கள் , இதிகாசங்களை சாலங்கள் என்கிறார் . இதனால்தான் ‘ராமகிருஷ்ணரை வியந்தோதும் தமிழர்களே வள்ளலாரிடம் வாருங்கள்!’ என்றார் பெரியார்.

வடலூரில் பேசிய கவர்னர், ‘வெளியிலிருந்து புதியதாக வந்த மதங்கள் என்னுடைய மதம் பெரிது என்று கூறிய போதுதான், பிரச்னை உருவானது. பிஷப் போப், கால்டுவெல் போன்றவர்கள் நமது அடையாளத்தை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள்’ என்கிறார் .

எது நமது அடையாளம்?
பள்ளு, பறையர் என்பதா?
அதைத்தானே அழித்தன
கிறித்துவமும், இசுலாமும்.

சாதி இடைவெளிகளையும், தீண்டாமையும், பெண்ணடிமைத் தனத்தையும், இழிந்த சடங்குகளையும், வைத்துக் கொண்டே , மதம் வளர்க்கப் பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ்.

தீண்டாமை இழிவை , மாற்று மதத்தின் மீதான வெறுப்பைச் சுமந்து, மதம் வளர்க்க முடியாது என்பதை அறிந்து, சன்மார்க்க நெறியை உருவாக்கியவர் வள்ளலார்.

ஆங்கிலேயர் காலத்தில் மக்கள் ஏன் மதம் மாறுகிறார்கள்? என்பதை ஆராய்ந்தார் வள்ளலார். அதற்கு மாற்று என்ன? என்றும் சிந்தித்தார்.

விளைவாக , மக்களிடையே ஆன்மீக எழுச்சி உரையை ஆற்றினார்.

அதுவே பேருபதேசம். அந்த பேருபதேசத்தின் சாறு இதுதான்.

‘இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக் கொண்டிராதீர்கள்.

இதையும் படியுங்கள்:

வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்.

சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்!’ என்றார்.

வள்ளலார் ஒரு புரட்சியாளர் மட்டுமல்லர். அருளாளர்.

அன்பின் கனிந்த நிலை அருள். திருமூலரைவிட சிவவாக்கியரைவிட ஒரு படி முன்னேறிச் சென்றவர் வள்ளலார். அதன் பொருட்டே காவியை விடுத்து வெள்ளை அணிந்தார்.

அவருக்கு காவி உடை மாட்ட நினைக்கிறார் கவர்னர்.

என் மண்ணின் கவி, தமிழ் மக்களின் கவி, வள்ளலாரை இழிவுபடுத்தும் கவர்னரை வன்மையாகக் கண்டிப்போம்.

நன்றி

  • கரிகாலன்

முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here