ரபிக் கடலில் உருவான பிபர்ஜாய் புயலின் விளைவாக குஜராத், ராஜஸ்தானில் கனமழை கொட்டி தீர்த்தது. அதேபோல், சென்னையில் வரலாறு காணாத மழைப்பொழிவாக ஜூன் மாதத்தில் மீனம்பாக்கத்தில் 16 செ.மீ. பதிவானது . இப்படி தாறுமாறாக மழை பெய்து வரும் போது இமயமலையை ஆய்வு செய்பவர்கள் கவலை தரும் விஷயத்தை முன் வைக்கின்றனர்.

காணாமல் போகப் போகும் பனிப்பாளங்கள்!

தற்போது பனி உருகி வரும் வேகத்தை கணக்கில் எடுத்தால் , இந்த நூற்றாண்டின் முடிவில் இமயமலையின் மேல் உள்ள பனிப்பாளங்களில் 75 சதவீதம் உருகி மறைந்து விட்டிருக்கும் என்கின்றது ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் ஆய்வு அறிக்கை. (செய்தி ஆதாரம் Aljazeera)

இதனால் என்ன விளைவுகள் ஏற்படப் போகிறது என்பதையும் அந்த அறிக்கை விவரிக்கிறது.

பனி உருகும்போது அதனுடன் சேர்ந்து பசுமை குடில் வாயுக்களும் வெளியேறப் போகிறது. அது தனது பங்கிற்கு புவி வெப்பத்தை கூட்டப் போகிறது. இதன் விளைவாக, சங்கிலித் தொடர் விளைவுகளாக பேரழிவுகள் உருவாக்கப் போகின்றன. முதன்மையாக பெருவெள்ளமும்  , அதைத் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட உள்ளது. அதாவது, சுமார் 200 கோடி பேர் பாதிக்கப்பட உள்ளனர். இம்மலையில் இருந்து 12 ஆறுகள் உருவாகி கடலை நோக்கி பாய்கிறது. அதுவும் வறண்டு போகும் .

குறிப்பாக ஆய்வுக்குழுவின் பார்வையில் பட்ட கவலை தரக்கூடிய விஷயம் என்னவென்றால் எவரெஸ்ட் காணாமல் போகும்.  மனிதர்களின் பேராசையினால், அதிகரித்துவரும் புவி வெப்பத்தால் , சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உருவான பனிப்பாளங்கள் வெறும் 30 ஆண்டுகளில் கரைந்து மறைந்து விடும்.

உருகும் பனி மலைகள் நெருங்கி வரும் பேரபாயம்!

நாம் பார்த்து வரும் இந்துகுஷ் இமயமலை தொடர்கள் சுமார் 3500 கிலோமீட்டர் வரை நீண்டுள்ளது. இம்மலைத்தொடர் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் , பூட்டான் , சீனா , இந்தியா , மியான்மர் ,  நேபாளம் , பாகிஸ்தான் என பல நாடுகளில் பரவியுள்ளது.

புவி வெப்பமயமாதலால் நம் நாட்டில் உள்ள இந்த மலைத்தொடர் மட்டும் பாதிக்கப்பட போவதில்லை . உலகில் உள்ள அனைத்து பனிமலைகளுமே பாதிப்பை எதிர்கொண்டு நிற்கின்றன . இதில் ஐரோப்பாவில் உள்ள ஆல்ப்ஸ் மலை தொடரும் , வட அமெரிக்காவின் ராக்கி மலைகளும் இதே விளைவை – அதாவது பனிச் சிகரங்கள் உருகி பனிப் பரப்பு சுருங்குவதையே எதிர்கொண்டு நிற்கின்றன.

இது மனிதர்களை மட்டுமா பாதிப்புக்குள்ளாகும்?

இல்லை. இமயமலைகளில் உள்ள 200 ஏரிகள் காணாமல் போகப்போவதால் நேரடியாக பனி மலைகளில் வாழும் விலங்குகள் , பறவைகள் , பூச்சிகள்  , தாவரங்கள் என அனைத்தையும் அது நிலைகுலையச் செய்யும் . அதைத் தொடர்ந்து பனி உருகி ஆறுகளாக ஓடிவரும் பாதையில் இருக்கக்கூடிய – அதாவது சமவெளி பகுதிகளில் இருக்கக்கூடிய  பல்லுயிர்ச் சூழல்களையும் நாசமாக்கும். இறுதியாக ஆறுகள் கடலில் கலக்கும் கழிமுகங்களில், நன்னீரும் கடலின் உப்பு நீரும் சங்கமிக்கும் இடத்தில் இனப்பெருக்கம் செய்யும் பல்வேறு வகையான மீன் இனங்கள் உள்ளிட்டவற்றை கடுமையாக பாதிக்கும் . இமயமலையின் சிகரத்தில் ஏற்படும் மாற்றம் வங்காள விரிகுடாவின் மீன்வளத்தையே கேள்விக்கு உள்ளாக்கும்.

ஆறுகள் வறண்டால் , கங்கைச் சமவெளியில் முப்போகம் விளையும் விளைச்சல் இல்லாமல் போனால் , அது நம் நாட்டு மக்களை எப்படி வதைக்கப் போகிறது? ஏற்கனவே வாழ வழி இன்றி தொழில் நகரங்களை தேடி , நாடோடிகளாக ஓடிவரும் வட மாநிலத்தவர்களை கூண்டோடு ஒழித்துக் கட்டி விடாதா?

வற்றாத ஜீவநதிகள் பாயும் போதே ஒரு பாட்டில் தண்ணீரின் விலையை 20 ரூபாய்க்கு மேல் வைத்துக்கொள்ளை அடிக்கும் தண்ணீர் கொள்ளையர்கள் எதிர்காலத்தில் எப்படியெல்லாம் காசு பார்ப்பார்கள்! யாரால் காசு கொடுத்து தாகத்தை தீர்த்துக் கொள்ள முடியும் என்பதை எண்ணிப் பார்க்கும் போது மனம் பதை பதைக்கிறதல்லவா!

நம்மால் இதை தடுக்க முடியுமா?

தடுத்தே தீர வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அதாவது தொழில் புரட்சிக்கு முந்தைய கால உலகின் வெப்பநிலையை எடுத்துக் கொண்டால், அதிலிருந்து 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் உயர்ந்தாலே பூமி தாங்காது . அப்படி உயர விடாமல் தடுத்தால் மட்டுமே பேரழிவையும் தடுக்க முடியும். இதற்கு முதலில் கார்ப்பரேட்டுகளின் லாப வெறியை தடுத்தாக வேண்டும்.

பல நூற்றாண்டுகளாக மனித குலம் காப்பாற்றி வந்த பூமியை முதலாளித்துவம் இரு நூற்றாண்டில் நாசமாக்கி விட்டது. இனி இந்த பூமியை காக்க சோசலிச பாதை தவிர மாற்று இல்லைஇதையும் படியுங்கள்: அழிகிறது சுற்றுச்சூழல்! எரிகிறது வனக்காடுகள்!! இதுவே பூமியின் இறுதிக்காலம்!!

புகை படிவ எரிபொருள்களான நிலக்கரி கச்சா எண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பெட்ரோல் டீசல் இயற்கை எரிவாயு என அனைத்தையும் தொடாமல் மண்ணுக்கடியிலேயே புதைந்திருக்க விட்டு வைக்க வேண்டும்.

மின்சாரம் விற்று கொள்ளையடிக்க களம் இறங்கியுள்ள அதானி குழுமம் இதற்கு ஒத்துக் கொள்ளுமா? அனல் மின் நிலையங்களை அமைத்துள்ள கார்ப்பரேட் முதலாளிகள் நிலக்கரியை எரிக்காமல் கம்பெனியை மூடிவிட்டு போகவா போகிறார்கள் ?

வகை தொகை இல்லாமல் புதை படிவ எரிபொருள்களை எரித்து தள்ளும் நிலையில் நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் இமயமலையின் பனிப் பாளங்களை, எவரெஸ்ட் சிகரத்தை காப்பாற்ற முடியாது. கோடிக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் முடியாது. கார்ப்பரேட்டுகளை ஒழிக்க களத்தில் இறங்குவது தான் கண்முன் இருக்கும் ஒரே தீர்வு . கார்ப்பரேட்டுகள் இதை உணர்ந்து தான் தமது சுரண்டலை பாதுகாக்க மோடி போன்ற பாசிஸ்டுகளை வெளிப்படையாக ஆதரிக்கின்றனர். இந்த பூமி யாருக்கு சொந்தம் என நாம் முடிவு செய்ய வேண்டிய தருணமும் இதுதான்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here