இந்து ராஷ்டிரம் எனும் பார்ப்பன பேரரசு
காட்டுமிராண்டிகள் முன் வைக்கும்
அடிமை சாம்ராஜ்ஜியம்!


ந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்குள் இந்து-இந்தி-இந்தியா என்ற பார்ப்பன பேரரசை அமைக்கும் இலக்குடன் வெறியுடன் அலைகிறது ஆர்.எஸ்.எஸ் பாஜக கும்பல். ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் லாப வேட்டைக்கு நாட்டை மறுகாலனியாக்கும் இந்த தேசத் துரோக கும்பல் சுயசார்பு என்று பித்தலாட்டம் புரிகிறது. மண்ணின் மைந்தர்களான பெரும்பான்மை மக்களை ’இந்து’ என்ற பெயரில் ஒன்றிணைப்பதும், அவர்களை 2,000 ஆண்டு கால இழிவான சானாதன, வருண-சாதி அமைப்பை தலையில் தூக்கி சுமக்க செய்வதும் தான் இவர்களின் ’இந்து ராஷ்டிர’ கொள்கையாகும்.

1990-களில் இந்தியாவின் பிரதான அரசியல் நிகழ்ச்சிப் போக்காக “நாடு மீண்டும் காலனியாவதும், பார்ப்பன (இந்து) மதவெறி பாசிசம் மிகவும் அபாயமான சக்தியாக வளரும் தன்மையில் உள்ளது” என்பதனை சரியாக அவதானித்து அரசியல் செயல்தந்திரமாக வகுத்துக் கொண்டு செயல்பட்டோம்.

இதன் அனுபவத்தை 2010 ஆண்டு வரை தொகுத்து, “மறுகாலனியாக்க எதிர்ப்பு, பார்ப்பன பாசிச எதிர்ப்பு என்ற நமது செயல்தந்திர முழக்கங்களின் சரியான தன்மையை அரசியல் நிலைமைகளும், நம்முடைய நடைமுறை அனுபவமும் மீண்டும் உறுதி செய்திருக்கின்றன. இம்முழக்கங்களின் கீழ் மக்களைப் போராட்டத்திற்கு அணிதிரட்டுவதுதான் நாம் எதிர்கொண்டிருக்கும் சவால். இதனை நிறைவேற்றி, போர்க்குணமிக்க மக்கள்திரள் வழியை நிலைநாட்டிக் காட்டுவதன் மூலமாகத்தான் மா-லெ இயக்கத்தின் வலது-இடது விலகல்களை முறியடிப்பதும் ஒன்றுபட்ட புரட்சிகர இயக்கத்தைக் கட்டுவதும் சாத்தியம்.” என்ற முடிவுக்கு வந்தோம்.

மேற்கண்ட அபாயகரமான போக்கை நாடு தழுவிய அளவில் முன் வைத்து பல்வேறு இயக்கங்களை கட்டியமைத்து அரசியல் ரீதியாக மக்களை அணிதிரட்டும் மா.லெ அமைப்பு இதுதான் என்பதினை நிலை நாட்டினோம். 2014 ஆம் ஆண்டு திருச்சி மற்றும் சென்னையில் பாசிச மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, மோடி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி என்று தமிழகத்தையும் இந்திய மக்களையும் எச்சரிக்கை செய்தோம்.

2019 மற்றும் 2020 இல் திருச்சியில் ’கார்ப்பரேட்-காவி பாசிசம் எதிர்த்து நில்!’ என்றும், ’கார்ப்பரேட்-காவி பாசிசம், அஞ்சாதே போராடு’ என்றும் இரு மாநாடுகளை நடத்தி இந்திய அளவில் மோடியின் கார்ப்பரேட் கைக்கூலித்தனங்களையும், நாட்டை பார்ப்பன சாம்ராஜ்ஜியமாக்குகின்ற அபாயத்தையும் எதிர்த்து போராடும் எழுத்தாளர்கள், நீதிபதிகள் அனைவரையும் ஒன்றிணைத்தோம்.

இடதுசாரிகள் என்றால் வெறும் பொருளாதார கோரிக்கைகளுக்காக மட்டுமே தொழிற்சங்ககளை நடத்துகின்ற அமைப்பு என்ற அவதூறுகளை முறியடித்து, நாட்டிலேயே முன்னணியாக அரசியல் போராட்டங்கள், அரசியல் மாநாடுகள், அரசியல் ரீதியான கிளர்ச்சிகளுக்கு மக்களை திரட்டி மார்க்சியத்தின் அரசியல் மேலாண்மையை நிறுவினோம்.

தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற பெயரில் நாட்டை மறுகாலனியாக்கும் இந்த கொடூரமானது, “உழைக்கும் சாதியினர் மீது மனுதர்மம் கொண்டிருக்கும் வன்மமும், உழைக்கும் வர்க்கத்தின் மீது மறுகாலனியாக்கம் கொண்டிருக்கும் வெறுப்பும் ஒன்றிணைந்து உருவான துவேசத்தின் அரசியல் வடிவம் தான் இந்துராஷ்டிரம்; தமிழில் சொன்னால், பார்ப்ப­­­­னப் பேரரசு” என்பதினை வரையறுத்து முன் வைத்தோம்.

“அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்தியப் பன்னாட்டுக் கம்பெனி முதலாளிகள், டாட்டா – பிர்லா – அம்பானி போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகள் -நிலப்பிரபுக்களின் தீவிரமாகி வரும் சுரண்டலையும் அடக்குமுறையையும் பாதுகாத்து, நம்மிடையே அதற்கு நியாயம் கற்பித்து, நம்மை அதற்குப் பணிந்து ஏற்றுக்கொள்ளச் செய்வதும்; ஆண்டவனால் அருளப்பட்ட வேதங்கள், சாஸ்திரங்களின்படி நமது பிறப்பு முதல் இறப்புவரை எந்தவொரு நல்லது கெட்டதற்கும் சடங்குகள், பரிகாரங்கள், விழாக்கள் ஆகியவற்றைச் செய்ய வைத்து அவற்றின் மூலம் பார்ப்பனர்கள் தானங்கள், தட்சிணைகளைப் பெற்று உழைக்காமலேயே உல்லாசமாக வாழவும்; சமூகத்தின் சித்தாந்தக் குருமார்கள் என்ற மேன்நிலையை நிலைநாட்டிக் கொண்டு பார்ப்பனர்கள் ஆதிக்கம் புரியவுமான நிலையைச் செப்பனிட்டு உறுதிப்படுத்திக் கொள்ளவுமான, பாசிசப் பயங்கரவாத ஆட்சிக்கான அபாயம் மிகவும் நெருங்கிவந்து கொண்டிருக்கிறது” என்று நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து அரசியல் ரீதியான பிரச்சார இயக்கங்களை கொண்டு சென்றோம்.

“பார்ப்பனப் பாசிசம் ஒரு மலைப்பாம்பு. தன்னுடைய இரையை வளைத்து இறுக்கி நெரித்துக் கொல்லும் பாம்பின் உடல் தான் பாசிசம். அதை விழுங்கக் காத்திருக்கும் மலைப்பாம்பின் தலைதான் பார்ப்பனியம். வர்க்க ஒடுக்குமுறையும் சாதி ஒடுக்குமுறையும் ஒன்றிணைந்து உருவான எதிரியின் அவதாரம் இது”. என்ற உண்மையை உணர்த்தி அரசியல் பிரச்சாரங்களை மேற்கொண்டபோது இது செயற்கையான ஒப்புமை என்று புறம் தள்ளினார்கள். ஆனால் வரலாறு அவர்கள் அனைவரையும் ஒரு புறம் தள்ளிக் கொண்டுள்ளது.

படிக்க:

♦  பார்ப்பன மேலாதிக்கமே காவி பாசிசம்!
  ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தின் ஆரிய – பார்ப்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

தேர்தல், பாராளுமன்றம், சட்டமன்றம் உள்ளிட்ட அரசின் உறுப்புகள் மூலம் பாசிசத்தை வீழ்த்தி விடவும் முடியாது, அதற்காக அவர்கள் அந்த வடிவத்தில் புகுந்து கொண்டு மக்களை ஏய்க்கவும், அனைத்தையும் சட்ட பூர்வமாகவே கொண்டு வந்து விட துடிக்கும் நய வஞ்சகத்தை அனுமதிக்கவும் கூடாது. இதனையே “இந்து தர்மம் என்று பார்ப்பனர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் வருண தருமம் ஜனநாயகத்தை அனுமதிப்பதில்லை. ஆர்.எஸ்.எஸ்-இலும் அதன் பரிவார அமைப்புக்களிலும் கூட தேர்தலோ, கருத்துச்சுதந்திரமோ, ஜனநாயகமோ கிடையாது. கட்டளை, கீழ்ப்படிதல் என்பவைதான் ஆர்.எஸ்.எஸ்-இன் அமைப்பு விதிகள். எனவே, பார்ப்பன நாடு ஜனநாயகத்தையோ, கருத்துரிமையையோ எள்ளளவும் அனுமதிக்காது. இன்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகத் தேர்தல் ஜனநாயகத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் இந்தக் கும்பல், தனது ஆட்சி நிலைநாட்டப்பட்டு விட்டால் பாசிச சர்வாதிகாரத்தைப் பிரகடனம் செய்யும்.” என்று பாசிசத்தின் வளர்ச்சிப் போக்கை தெளிவு படுத்தினோம்.

ஆனால் இன்றளவும் ஆர்.எஸ்.எஸ்- பாஜக கொண்டு வரத் துடிக்கும் பார்ப்பன பேரரசின் உள்ளக் கிடக்கையை, உண்மை முகத்தை அறிய முடியாமல் நிழல் சண்டை போடுகின்றனர் சிலர். “நாம் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் நலனைப் பேசுகிறோம், பேணுகிறோம், அதற்காகப் போராடுகிறோம். நமது இலட்சியம் சமத்துவம், ஜனநாயகம், சோசலிசம்! எதிரியின் நோக்கமோ பார்ப்பனியம், மறுகாலனியம், பாசிசம்!” இந்த புரிதலின் அடிப்படையில் பார்ப்பனியம் என்று நாம் எதைச் சொல்கிறோம்?

  1. “வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், மனுதர்மம் ஆகியவை ஆண்டவனால் உருவாக்கப்பட்டவை; அனாதிகாலம் தொட்டு அவை இருப்பவை: சாசுவதமானவை. அவற்றைப் பற்றிச் சந்தேகப்படக்கூடாது; கேள்வி கேட்கக் கூடாது; அப்படிக் கேட்பது ஆண்டவனையே கேள்வி கேட்பதாகும்; ஐயுறுவதாகும். அவற்றை அப்படியே பின்பற்றி நடக்க வேண்டும்; கடவுளைக்கூட மறுக்கலாம்; ஆனால், இவற்றை மறுக்க அனுமதிக்கக் கூடாது. இவற்றை மறுப்பவர்கள் நாஸ்திகர்கள்; இந்து விரோதிகள்; விதண்டாவாதிகள்; அவர்களை ஊரை விட்டே விரட்ட வேண்டும்; அல்லது கொன்று ஒழிக்கப்பட வேண்டும்; அவர்களது நாக்கை அறுக்க வேண்டும்; நூல்களை அழிக்க வேண்டும்.
  2. வேதங்கள், சாஸ்திரங்களின்படியும் கடவுளின் வாக்குப்படியும் பார்ப்பனர்களுக்குள் எல்லாத் தெய்வங்களும் அடக்கம். எனவே, அவர்கள் பூதேவர்கள்; பூசுரர்கள்; அரசன் உட்பட எல்லோரும் அவர்களுக்கு மண்டியிட்டு அடங்கி நடக்க வேண்டும்; பார்ப்பனர்களின் ஆசியில்லாத அரசு தெய்வ விரோத, சாஸ்திர விரோத அரசு; எனவே, அது அழிந்து விடும். பார்ப்பனர்கள், அரசு – சமூகசட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்; அவர்களைத் தண்டிக்க முடியாது; கூடாது. எந்தச் சூழ்நிலையும் பார்ப்பனர்களையும் பசுக்களையும் பாதுகாக்க வேண்டும்.
  3. கோயில் கருவறைக்குள் நுழையவும், சாமி சிலைகளைத் தொடவும் அருகதை – தகுதி பார்ப்பனர்களுக்கு மட்டுமே உண்டு. மற்றவர்கள் நுழைந்தால், தொட்டால் சாமி தீட்டாகிவிடும்.
  4. பிறப்பு முதல் இறப்புவரை எல்லா நல்ல, கெட்ட நிகழ்வுகளின் போது பார்ப்பனர்களைக் கொண்டு சடங்கு செய்ய வேண்டும்; அப்போது பார்ப்பன சமூகத்திற்கு தானங்கள் வழங்க வேண்டும். அவர்களைப் பராமரிக்க வேண்டும்.
  5. வர்ண, சாதிப் பாகுபாட்டின் அடிப்படையில் சமூகம் இயங்க வேண்டும்.
  6. சமஸ்கிருதம் தேவ பாஷை; மற்றமொழிகள் எல்லாம் நீசபாஷைகள். சமஸ்கிருதம் அனைத்து மொழிகளுக்கும் தந்தை. ஆண்டவனை சமஸ்கிருதத்தில் மட்டுமே அர்ச்சிக்க வேண்டும். மற்ற மொழிகளில் அர்ச்சித்தால் தீட்டு.
  7. பாகிஸ்தான், நேபாளம், பூடான், பர்மா, இலங்கை உட்பட பாரத வர்ஷம், ஆரிய வர்த்தம் தொன்று தொட்டு நிலவி வருவது. பல்வேறு மொழிகள், பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் இருப்பினும் அவை எல்லாவற்றிற்கும் அடிநாதமாக இருப்பது ஆரிய மேன்மையை அடிப்படையாகக் கொண்டதும் வேதங்கள், இதிகாசங்களின் அடிப்படையிலானதுமான இந்து நாகரிகமும் வாழ்க்கை முறையும் ஆகும்; இதுவே இந்தியாவின் (பாரதத்தின்) தேசிய கலாச்சாரம்; இந்து என்றாலும் இந்தியா என்றாலும் ஒன்றே; எனவே, எல்லா இந்தியர்களும் இந்துக்களே! எனவே, மொழி, தேசிய இன அடிப்படையில் இந்தியாவைப் பிளக்க, பிரிக்க நினைப்பவர்கள் இந்தியத் தேசத் துரோகிகள்; இந்து விரோதிகள். அவர்களைக் கடுமையாக ஒடுக்கி நசுக்க வேண்டும்.”

 

இதுவே பார்ப்பனியம். இந்த அடிப்படையில் புரிந்துக் கொண்டு பாசிசத்தை வீழ்த்தும் பரந்த அய்க்கிய முன்னணிக்கு அறைகூவல் விடுத்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணியை கட்டுவோம்! ஆரிய பார்ப்பனக் கும்பலின் சாம்ராஜ்ஜிய கனவை தகத்தெறிவோம். ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம்.

  • இரா.கபிலன்.

ஆதாரம்:

ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தின் ஆரிய-பார்ப்பன சாம்ராஜ்யக் கனவை தகர்த்தெறிவோம்!

மார்ச் 2004, ம.க.இ.க. வெளியீடு,

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here