டந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் மிசோராம் தவிர்த்த நான்கு மாநில தேர்தல் முடிவுகள் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் INDIA கூட்டணிக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவாலை உறுதிப்படுத்தியுள்ளது. இராஜஸ்தான், சத்தீஸ்கரில் தனது ஆட்சியை பா.ஜ.க.-விடம் பறிகொடுத்தும், மத்தியப்பிரதேசத்தில் 20 வருடங்களாக ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க.-விடம் மீண்டும் ஒருமுறை தோற்றுமுள்ளது காங்கிரஸ். நாடாளுமன்றத் தேர்தலில் காத்திருக்கும் இந்த சவால் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.-விடமிருந்து மட்டுமல்ல காங்கிரசின் மூத்த இரண்டாம் கட்டதலைவர்களிடமிருந்தும்தான். நான்குசுவர் நாட்டாமைகளாக ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.-வின் ஸ்லீப்பர்செல்களாக காங்கிரசில் காலம் ஓட்டிக்கொண்டிருக்கும் அவர்களின் மிதவாத இந்துத்துவாவும், தலைமைக்குக்கட்டுப்படா ஆணவமும் இந்தத் தேர்தல் தோல்விகளுக்கு காரணமாக விமர்ச்சிக்கப்படுகிறது. அவற்றில் உண்மையும் உள்ளது.

குறிப்பாக, இராஜஸ்தானில் அசோக் கெலோட், சட்டிஸ்கரில் புபேஷ் பாகெல், மற்றும் மத்தியப்பிரதேசத்தில் கமல்நாத் ஆகியோரின் தனிப்பட்ட செயல்பாடுகளும், இந்துத்துவா ஆதரவு வாக்குறுதிகளும், ராகுல் காந்தி பேசுபொருளாக்கிய சாதிவாரி கணக்கெடுப்பு, அதனால் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு கிடைக்கப்போகும் நன்மைகளைப்பற்றிய பிரச்சாரத்தை மக்களிடையே சரியான முறையில் கொண்டுபோகாதது, புதியவர்களுக்கு, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காதது ஆகியவையும் முக்கியக்காரணங்களாக உள்ளன.

சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பலரும் சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசியபோதிலும் தி.மு.க.-வின் உதயநிதி ஸ்டாலின்   INDIA கூட்டணிக்கு எதிராகப் பிரதமர் மோடி திரித்துக்கூறி ஓட்டுக்களைக்கவர முற்பட்டபோது அதற்கு எதிராக சனாதனத்தை அம்பலப்படுத்தி நாட்டின் பெருவாரியான மக்களை இழிவுபடுத்தும் இப்படிப்பட்ட சனாதனத்தை ஒழிப்பதில் என்ன தவறு என்று எதிர்த்தாக்குதல் தொடுத்து இருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ “நாங்கள் எல்லா மதத்தையும் சமமாக மதிக்கிறோம்” என்ற சால்ஜாப்பு.

இதையும் படியுங்கள்: ஐந்து மாநில தேர்தல்கள்: தேவை கவர்ச்சி திட்டமா? குறைந்தபட்ச செயல்திட்டமா?

தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.-வுக்கு சாதகமாக வந்தவுடன் தமிழ்நாட்டிலுள்ள சூத்திர சங்கிகளும், தற்குறித் தம்பிகளும் காங்கிரசின் தோல்விக்கு சனாதனத்தை ஒழிப்பேன் என்று உதயநிதி பேசியதுதான் காரணம் என்று தாண்டிக்குதிக்கின்றனர். அவர்களை போன்றே சில நடுநிலை பத்திரிக்கையாளர்களும் பல யூடியூப் சானல்களில் பேசிவருகின்றனர். உதயநிதியின் பேச்சை கொண்டு INDIA கூட்டணியை இந்துவிரோதிகளின் கூடாரம் என சித்தரிக்க முயன்றது உண்மைதான். ஆனால், அதுதான் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் எனக் கூறுவதன் நோக்கம் சனாதனத்துக்கு எதிராக திமுக, விசிக உள்ளிட்டவை பேசுவதை தடுப்பதும், INDIA கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்துவதுமே ஆகும்.

இன்னொருபுறம், மாநில தேர்தலிலும் கூட்டணிக்காக முயன்ற சமாஜ்வாடி, ஆம் ஆத்மி கட்சிகளைக் கண்டுகொள்ளாத காங்கிரஸின் பெரியண்ணன் நடைமுறையும் இந்தத் தோல்விக்கு  முக்கியமான காரணம். தென் மாநிலமான கர்நாடகாவில் கூட்டணி இல்லாமல் வென்றது போல் பாஜக பலம் வாய்ந்த வட மாநிலங்களிலும் முயற்சித்தது எந்த விதத்திலும் சரியான அணுகுமுறை இல்லை.

மத்தியபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே கமல்நாத் தன்னிச்சையாக அனைத்துத் தொகுதிகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்தது, இராஜஸ்தானில் கூட்டணிக்கு முயன்ற ஆம் ஆத்மி கட்சியைக் கண்டுகொள்ளாத ஆணவம் என்று INDIA கூட்டணிக்குள்ளாகவே புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது காங்கிரஸ். சமயத்தில் தேர்தலில் வெற்றிபெறவேண்டுமானால் கழுதையின் காலில்கூட விழத்தயாராக பாஜக இருப்பதையும் நாம் அறிவோம்.

மத்தியப்பிரதேசத்தில் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் அயோத்தியில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் இராமர் கோயிலுக்கு இலவச தரிசனம் என்று அமித்ஷா வாக்குறுதி கூறினார். அந்த இலவச தரிசனத்தால் எரிபொருள் விலை குறைந்துவிடுமா, மக்களின் பொருளாதார வாழ்வு ஏற்றம்பெறுமா என்று முற்போக்காளர்கள் கேட்டுக்கொண்டிருக்க, காங்கிரசின் கமல்நாத் மத்தியப்பிரதேசத்தில் நாங்களும் அனுமாருக்கு கோவில் காட்டுவோம் என்றார். ஏற்கனவே 20 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆள்வதால் இந்துத்துவாமயமாகிவிட்ட மக்களிடம் வெறுமனே அனுமாருக்கு கோயில் கட்டுவேன் எனும் காங்கிரஸ், மசூதிகளை இடித்துவிட்டு கோவில்களைக் கட்டுவேன் எனும் பா.ஜ.க. என்று தெரிவுகளை வைத்தால் எதை அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்பது அறியமுடியாததா?. சாமானியர்களின் மருத்துவர் கனவை சிதைத்திட்ட வியாபம் ஊழல், சமீபத்தில் அடித்தே கொல்லப்பட்ட இரண்டு பழங்குடியின இளைஞர்கள் விவகாரம், இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் கொலைவெறித் தாக்குதல், பா.ஜ.க.-வின் 20 வருட ஆட்சியில் கீழே சரியும் வாழ்க்கைத்தரம், வேலைவாய்ப்புகள், அதிகரிக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை பேசுபொருளாக்கி பா.ஜ.க.-வின் இலட்சணத்தை மக்கள் மத்தியில் தோலுரித்திருக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு மிதவாத இந்துத்துவாவை கையிலெடுத்த கமல்நாத்  கனவு பலிக்கவில்லை. அம்மாநிலத்தில் காங்கிரஸிற்கு வெற்றியை கொடுக்கவில்லை.  ராஜஸ்தானில் இதே நிலைமைகளுடன்  முதல்வரான அசோக் கேலோட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே நடந்த பதவிச்சண்டையும் சேர்ந்து காங்கிரசின் கைவசமிருந்த ஆட்சியதிகாரம் பா.ஜ.க.-விற்குப் போயிருக்கிறது.

ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலிலும், உத்திரபிரதேச சட்டமன்றத் தேர்தலிலும் மிதவாத இந்துத்துவாவை கையிலெடுத்து தோல்வியை தழுவிய போதும் காங்கிரசில் ராகுலைத் தவிர வேறு யாரும் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளாதது பரிதாபம்தான். மக்களுக்கான எந்தவிதமான உருப்படியான திட்டங்களை யோசிக்காமலும் செயல்படுத்தாதபோதிலும் அடிமட்ட அளவில் மக்களிடம் சென்று களப்பணி ஆற்றுவதிலும் பாஜக காங்கிரசை பின்னுக்குத் தள்ளியுள்ளது. வரவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள்ளாவது மேற்கண்ட விசயங்களைக் குறித்து சுயபரிசீலனை செய்துகொள்வதும், கூட்டணியில் இருக்கும் கட்சிகளை அங்கீகரித்து அரவணைப்பதும், தனித்து இயங்கும் கட்சிகளைக் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சிப்பதும் முக்கியம். இவையெல்லாவற்றையும்விட காங்கிரசுக்குள்ளிருந்தே குழிதோண்டிக்கொண்டிருக்கும் மூத்த, பார்ப்பன பெருச்சாளிகளைக் கண்டறிந்து களையெடுப்பதும் மிகமிக அவசியம்.

ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here