தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் சென்ற மாதம் அறிவித்தது. அதில், சத்தீஸ்கரில் மட்டும் இரண்டு கட்டமாகவும் மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்டமாக நவம்பர் 7-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக நவம்பர் 17-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மிசோரம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ஆம் தேதியும், ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23-ஆம் தேதியும், தெலங்கானாவில் நவம்பர் 30-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெற்று, அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸும், மத்திய பிரதேசத்தில் பாஜகவும், தெலங்கானாவில் பாரதிய ராஷ்ட்ர சமிதியும், மிசோராமில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சி செய்து வருகின்றன. அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஐந்து மாநில தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கடுமையாக காங்கிரஸ் முயற்சிகள் செய்து வந்தாலும் பாசிச பாஜகவை தோற்கடிப்பதற்கான தெளிவான திட்டமில்லாமல் ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலை எதிர்கொள்கிறது.

தெலங்கானா: வளர்ந்து வரும் பாஜக!
கவனிக்க மறுக்கும் காங்கிரஸ்!

தெலங்கானாவில் பாரதிய ராஷ்ட்ர சமிதி, காங்கிரஸ், பாஜக கட்சிகளிடையே மும்முனைப் போட்டியாக இருக்கும் எனவும், இதில், பாரதிய ராஷ்ட்ர சமிதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டி என்றும் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது எனவும் ஊடகங்கள் எழுதி வருகின்றன.

இம்மாநிலத்தில் பாஜக முன்பைவிட தற்போது வலுவடைந்துள்ளது என்பது முக்கியமானது. இதனை பாரதிய ராஷ்ட்ர சமிதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பார்க்கத் தவறுகின்றன.

ஊடகங்கள் எழுதுவது போன்று ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ் கட்சிகள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் குறிவைத்து வேலைசெய்து வருகின்றன. மேற்கண்ட இரு கட்சிகளிடமும் பொது எதிரியான பாசிச பாஜகவை தேர்தல் அரங்கில் இருந்து வெளியேற்றுவதற்கான எந்த திட்டமும் இல்லை.

ஆனால், பாசிச பாஜக எப்போதும் போல் தனது மதவாத அரசியல் அறிவிப்புகளை செய்து வருகிறது. முதல்வர் வேட்பாளர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் எனவும், கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் இஸ்லாமியர்களுக்கு தரப்படும் 4% இட ஒதுக்கீடு ரத்து செய்து அதனை ஓபிசி மற்றும் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு தருவோம் எனவும் அறிவித்து கட்சியை வளர்க்கும் வேலையை செய்து வருகிறது.

ராஜஸ்தான்: மக்கள் பிரச்சினைகளுக்கு
மாற்றுத் திட்டங்கள் இல்லை!

ராஜஸ்தானில் 1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த எந்த ஒரு தேர்தலிலுமே மாநிலத்தில் ஆளும் கட்சி மீண்டும் வெற்றி பெறவில்லை என்பதே வரலாறு‌. இதனை மாற்றுவோம் என காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 என்றும், 1.05 கோடி குடும்பங்களுக்கு ரூ. 500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்றும் பல்வேறு கவர்ச்சிகர வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.

ஆனால், மக்களைப் பாதித்துள்ள வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு – சட்டம்
ஒழுங்கு பிரச்சினை, ஊழல், இந்துத்துவா, தேசியவாதம் போன்றவற்றில் மாற்றுத் திட்டங்கள் ஏதும் இல்லை. அதேபோல், பாசிச பாஜகவை தோற்கடிப்பதற்கான செயல் திட்டங்களும் ஏதுமின்றி உள்ளது.

பாஜக தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு மாநிலத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை கொண்டு ஊழல் அரசு என்றும், தனது ஊடக பலத்தைக்கொண்டு கருத்துக்கணிப்பு நடத்தி, பாஜக தான் வெற்றி பெறும் என்ற கருத்தையும் மக்களிடம் உருவாக்கி வருகின்றது.

சத்தீஸ்கர்: வளர்ச்சி என பிதற்றும் பாஜக!
வலுவான அணியின்றி காங்கிரஸ்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற கடுமையாக முயற்சி செய்கிறது. காங்கிரஸ்தான் வெற்றி பெறும் என ஊடகங்கள் எழுதுகின்றன என்றாலும், மற்ற கட்சிகளுடன் இணைந்து பாஜகவிற்கு எதிரான ஒரு வலுவான அணியை உருவாக்கி பாஜகவை முற்றிலுமாக துடைத்தெறிய வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் காங்கிரஸ் செயல்படவில்லை.

பாஜக வளர்ச்சி-சாதி அரசியல் நோக்கி நகர்கிறது. சத்தீஸ்கரின் அடையாளத்தை வலுப்படுத்துவது; பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளைப் பாதுகாப்பது; சத்தீஸ்கரை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றுவது ஆகியவையே
பாஜகவின் நோக்கம்‌ என பிரச்சாரம் செய்து வருகிறது.

ஜனதா காங்கிரஸ் சத்தீஷ்கர் (ஜே.சி.சி.-ஜே) கட்சி, 84 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 49 தொகுதிகளிலும், சமாஜ்வாடி கட்சி 26 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இதுபோக, ஆம் ஆத்மி, அரவிந்த் நெதம் தலைமையிலான சர்வ ஆதிவாசி தளம், சந்த்ராம் நெதம் தலைமையிலான கோண்ட்வானா கணதந்திரி கட்சி போன்றவையும் களத்தில் உள்ளன. இப்படி பல்வேறு கட்சிகள் களமாடி, பலமுனைப் போட்டி ஏற்பட்டால் அது பாரதிய ஜனதாவுக்கே வாய்ப்பாக மாறும்.

மத்தியப் பிரதேசம்: இருக்கும் ஆட்சியை
இறுக்கிப் பிடிக்கும் பாஜக!

கடந்த 2018-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், இரண்டே ஆண்டுகளில் ஆபரேசன் தாமரையை வைத்து அந்த ஆட்சியைக் கவிழ்த்து மீண்டும் ஆட்சியைப் பிடித்தது பாஜக. காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளாக 100 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.1,500 மாதாந்திர உதவித்தொகை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் நடைமுறைப்படுத்துதல், 500 ரூபாய் மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்தல், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தல் போன்றவை அறிவித்திருந்தாலும் மக்களிடம் ஊறிப்போய் இருக்கும் இந்துத்துவக் கொள்கைக்கு மாற்றாக எதுவும் முன்வைக்கவில்லை. ஆனால், இந்துத்துவா எனும் மதவெறி மூலம் மக்களிடம்
செல்வாக்குப் பெற முயற்சிக்கிறது பாஜக.

மிசோரம்: மணிப்பூருக்குப் பின்
மிச்சமிருக்கும் நம்பிக்கை!

மிசோரமில் தற்போது மிசோ தேசிய முன்னணி ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று முயன்று வருகிறது. ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF) மற்றும் எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) மற்றும் காங்கிரஸ் ஆகியவை 40 தொகுதிகளிலும், பாஜக 23 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி முதன் முறையாக 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மணிப்பூர் கலவரத்திற்குப் பிறகு பாஜகவின் மீது பெரிய அளவில் மக்களுக்கு நம்பிக்கை இல்லாதபோதும் இதனை சரியாகப் பயன்படுத்தத் தவறுகிறது காங்கிரஸ்.

ஆனால், பாஜக மணிப்பூர் கலவரத்துக்குப்பின் மிசோ மக்கள் அதிகம் வாழும் தொகுதிகளைவிட பிரு, சக்மா, லாய், மாரா இன மக்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. மேலும், எதிர்க்கட்சியான மிசோரம் மக்கள் இயக்கத்துடன் புதிய கூட்டணி அமைக்கவும் தயாராக உள்ளது. கூட்டணி அரசு என்பதிலும் உறுதியாக உள்ளது பா.ஜ.க.

ஐந்து மாநிலங்களில் மூன்று மாநிலங்களிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற திட்டத்துடன் களமிறங்கியுள்ளது பாசிச பாஜக. இதற்காக பல்வேறு தகிடுதத்தங்களையும் செய்து வருகிறது. பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் என்ற கருத்தை காங்கிரஸ் கட்சி மக்களிடம் உருவாக்க முடியவில்லை. ஆனால்,
மக்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகள் அளித்து மக்களின் ஓட்டுகளைப் பெறுவதற்கு முயற்சி செய்கிறது. பாஜக-வை தேர்தலில் தோற்கடிப்பற்கு தேர்தல் வாக்குறுதிகள் மட்டும் போதாது என்பதை புரிந்துகொள்ளவும் இல்லை காங்கிரஸ்.

ஒவ்வொரு மாநிலத்திலும் பாசிச பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகளை ஒன்றிணைப்பது அவர்கள் மூலம் காவி பாசிசத்திற்கு எதிரான கருத்துப் பிரச்சாரத்தை மக்களிடம் உருவாக்குவது என்ற கண்ணோட்டமும் காங்கிரஸ் கட்சியிடம் இல்லை.

தேர்தல் வாக்குறுதியா?
குறைந்தபட்ச செயல் திட்டத்துடன் ஐக்கிய முன்னணியா?

பாசிச பாஜகவை தோற்கடிக்க தேர்தல் வாக்குறுதிகள் மட்டும் போதாது. ஏனெனில், பாஜக வெறும் தேர்தல் கட்சி மட்டுமல்ல கீழிருந்து கட்டியமைக்கப்பட்ட பாசிசத்தன்மை கொண்ட ஒரு பாசிச கட்சியாகும்.

பாசிச பாஜக-வை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் எனில் மக்கள் ஆதரவு பெறுவதற்கு மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை அறிவிப்பதும், அதன் மூலம் ஓட்டுகளைப் பெறுவதும் அவசியம் தான் என்றாலும், பாஜக-வை தேர்தல் அரங்கில் இருந்து விரட்டுவதற்கு ஒரு குறைந்தபட்ச செயல் திட்டம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.


இதையும் படியுங்கள்: கர்நாடகா: தேர்தல் அரசியலில் வீழ்த்தியது மட்டுமின்றி நிரந்தரமாக ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கு முடிவு கட்டுவோம்!


பாஜக-விற்கு எதிராக தேர்தலில் வெற்றி பெற்றாலும் மீண்டும் மத்திய பிரதேசத்தில் செய்தது போல் ஆப்பரேஷன் தாமரை என்ற பெயரில் ஆட்சி பிடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்த வெற்றிகள் அவசியம் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்து ஆட்சியைப் பிடித்தே தீருவது என வெறிபிடித்து அலைகிறது. எனவே, இந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாசிச பாஜகவை தோற்கடிப்பது என்பதைத் தாண்டி தேர்தல் அரசியலில் இருந்து
பாஜகவை ஒட்டுமொத்தமாக துடைத்தெறிய வேண்டும் என்பதும் அவசியம். அதற்கான ஒரு குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் வலுவான ஐக்கிய முன்னணி அமைப்பதும், அந்த செயல் திட்டத்தில் பாசிச பாஜக மீண்டும் தலையெடுக்க முடியாத வகையில் திட்டங்களை முன்வைத்து வேலைகளைக் கொண்டு செல்வதும் முக்கியம்.

மேலும், இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக உள்ளது. இந்த மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றால் மீண்டும் புதிய பலத்துடன் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும். ஒருவேளை பாஜக தோல்வியுற்றால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனது தேர்தல் யுத்தியை மாற்றும். கலவரங்களோ அல்லது மதவாத வெறியோ மீண்டும் அதிக அளவில் தூண்டும். எனவே, வளர்ச்சி, இலவசங்கள், கவர்ச்சித் திட்டங்கள் என்ற வழமையான தேர்தல்கால வாக்குறுதிகள் மூலம் பாஜக-வை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவது கடினம். ஒருவேளை வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியை அடுத்த ஐந்தாண்டு ஆட்சி காலத்திற்கு தக்கவைத்துக் கொள்வதும் சிரமம்.

எனவே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நோக்கம் பாசிச பாஜகவை தேர்தலில் தோற்கடிப்பதோடு, தேர்தல் அரங்கில் இருந்தே பா.ஜ.க.வை வெளியேற்றுவதை முதன்மை நோக்கமாகக் கொண்ட குறைந்தபட்ச செயல் திட்டம்தான் இன்றைய அவசியமான தேவையாக இருக்க வேண்டும். இருக்கவும் முடியும்.

  • தயாளன்

புதிய ஜனநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here