இந்திய சமூக அமைப்பில் சுமார் 25 கோடி முதல் 27 கோடி வரை உள்ள பட்டியலின மக்கள் மீது பார்ப்பன (இந்து) மதத்தின் வெறுப்புணர்ச்சி அதன் சித்தாந்தத்திலேயே உள்ளது. பட்டியலின மக்களை நான்கு வருணத்திற்குள் ஏற்றுக்கொள்ளாத பார்ப்பன மதம் அவர்களை ’அவர்னர்கள்’ என்று இழிவுபடுத்துகிறது.
ஆதிக்க சாதியினருக்கு வெட்டிமைத் தொழில் செய்கின்ற அடிமைகளாக இழிவுபடுத்தப்படும் பட்டியலின மக்கள் மீது, வர்க்க ரீதியாக நிலமற்ற கூலி விவசாயிகள் என்ற ஒடுக்குமுறையும், சாதி ரீதியாக தீண்டத்தகாதவர்கள் என்ற ஒடுக்குமுறையும் ஒரே நேரத்தில் திணிக்கப்படுகிறது.
பாசிச பாஜக கும்பலின் பத்தாண்டு கால ஆட்சியில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதற்கு முக்கியமான ஒரு காரணம் பார்ப்பனர்கள் புனிதமாக கருதுகின்ற பசுவை பட்டியலின மக்கள் உணவாக உட்கொள்கின்றனர் என்ற சனாதனக் கொள்கை.
இரண்டாவதாக பார்ப்பனர் மற்றும் பிற மேல் சாதியினர் செய்ய விரும்பாத மலம் அள்ளுவது, பிணத்தை எரிப்பது அல்லது புதைப்பது, சொத்த மாடுகளை சுத்தம் செய்வது, துணி வெளுப்பது, முடி வெட்டுவது போன்றவற்றை செய்வதற்கென்று பட்டியலின மக்கள் தேவைப்படுகின்றனர்.
இந்த வெட்டிமை தொழில்களை செய்வதிலிருந்து விடுபட நினைக்கின்ற பட்டியலின மக்கள் மீது ஆதிக்க சாதிகளின் கொலை வெறி தாக்குதல்கள் பாஜகவின் ஆட்சியில் அதிகரித்துள்ளது. நாட்டின் பூர்வகுடி மக்களான பட்டியலின மக்களின் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல் பார்ப்பன பாசிச பயங்கரவாதமாக உருவெடுத்துள்ளது.
பார்ப்பன (இந்து) மதக் கொடுங்கோன்மையின் கீழ் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் பட்டியலின மக்கள்!
”நாங்கள் எப்போது வேலைக்கு கூப்பிட்டாலும் பறையர்கள் வேலைக்கு வரவேண்டும் வேலைக்கு வர மறுத்தாலோ அல்லது எங்களை எதிர்த்தாலோ, அவர்களை வீட்டை விட்டு துரத்துவோம் என்னும் பயம் அவர்களுக்கு இருந்தால் மட்டும்தான் எங்களுக்கு அடிபணிந்து நடப்பார்கள்.” என்கின்றனர் ஆதிக்க சாதி வெறியர்கள். இந்த நிலைமை சமூக நீதி பேசும் தமிழகத்தின் ஏதோவொரு மூலைமுடுக்கில் மட்டும் இருக்கவில்லை. இந்தியாவின் நகரங்கள் துவங்கி கிராமம் வரை பட்டியலின மக்களின் எதார்த்த நிலையாக ஒட்டுமொத்த இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் இருக்கிறது.
விவசாய நிலத்தை மையமாக கொண்டு கூலிகளாக பிழைத்து வரும் பட்டியலின கூலிகளுக்கு, அரசு கொண்டு வரும் எந்தவொரு திட்டத்தினாலும் நேரடியாக எந்த பயனும் கிடையாது. பொது புத்தியில் விவசாயி என்றால் நிலம் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் தெரிகிறார்கள். விவசாயம் பாதிக்கப்படும்போது அந்த ஒட்டுமொத்த சுமையையும் காலம் காலமாக சுமந்து வருவது இந்த நிலமற்ற கூலிகள்தான். நிலம் இல்லாத விவசாய கூலிகள் கோடிக்கணக்கில் வாழ்கின்றனர். விவசாயம் நலியும் காலக்கட்டத்தில் விவசாயிகளை விட இந்த விவசாயக் கூலிகள்தான் அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். விவசாயிகளின் தற்கொலை, நாடு தழுவிய பிரச்சனையாகப் பார்க்கப்படும் அதேவேளையில், பெரும்பான்மை விவசாயக் கூலிகளான பட்டியலின மக்களின் தற்கொலை பார்க்கப்படுவதில்லை.
ஒவ்வொரு ஐந்து ஆண்டும் இந்திய வேளாண்துறை கணக்கெடுப்பு நடத்தும். 2010 -11 ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்திய அளவில் நிலம் வைத்திருக்கும் பட்டியலின மக்களின் எண்ணிக்கை 12.36 % இருந்தது. இந்த எண்ணிக்கை 2015 -16 ஆண்டு கணக்கெடுப்பின்படி 11.84% அளவு குறைந்து விட்டது. படிப்படியாக பட்டியலின நிலம் பறிபோவதற்கு யார் காரணம்? ஏன் பட்டியலின மக்கள் வைத்திருக்கும் நிலம் குறைந்தது? ஒரு பக்கம் நிலம் வைத்திருக்கும் பட்டியலின மக்கள் தங்கள் நிலத்தை படிப்படியாக இழந்து வருகின்றனர்.புதிதாக எதையும் பெறாமல் இருப்பதையும் இழந்து நிற்கின்றனர் பட்டியலின மக்கள்.
நிலமற்ற பட்டியலின கூலி விவசாயிகள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து வருகின்றனர். காலம்காலமாக ஒரு சிறு துண்டுத் துக்காணி நிலம் கூட வைத்திருக்க உரிமையில்லாத மக்கள் தான் இவர்கள். நிலம் வைத்திருக்கும் ஆதிக்க சாதி இந்துக்களிடம் பண்ணை கூலிகளாக வேலை செய்யும் இவர்களின் வாழ்க்கை கற்பனைக்கு எட்டமுடியாத துயரத்தைக் கொண்டது. மழை பொய்த்துப்போய் சாகுபடி இல்லாமல் போனால், பசி பட்டினியால் இந்த விவசாய கூலிகள் வாடி வதங்கி உயிரை விடுகிறார்கள்.
சுதந்திரத்திற்குப் பிறகு ஏறத்தாழ கடந்த 75 ஆண்டுகளாக நிலம் வைத்திருக்கும் உயர் சாதியினர்கள், அரசு கொடுக்கும் இலவச மின்சாரம், உர மானியம், குறைந்த வட்டிக்கு கூட்டுறவு கடன் போன்ற பல்வேறு சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். பல சமயங்களில் பல லட்சம் கோடி மதிப்பிலான விவசாயக் கடன்கள் ரத்து செய்யப் பட்டதில் நிலம் வைத்திருக்கும் உயர்சாதி விவசாயிகள்தான் பயன்பெற்றவர்கள். விவசாயக் கூலிகளான பட்டியலின மக்களுக்கு ஒன்றும் இல்லை.
இந்த விவசாயக் கூலிகளுக்கு அரசு குறைந்தபட்ச கூலித்திட்டத்தை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டும். இதுவும் முறையாக செய்யப்படுவதில்லை. தமிழ்நாடு அரசு கடந்த 2021 ஜுன் மாதம் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. ஆனால் நடைமுறையில் விவசாயக் கூலிகளுக்கான அடிப்படைக் கூலியை நிலம் வைத்திருப்பவர்களே முடிவு செய்கின்றனர். இதனால் பெரும்பாலான விவசாயக் கூலிகள் நிலக்கிழார்களிடம் இருந்து கடன் வாங்கி தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். எனவே பட்டியலின மக்கள் பெரும் கடனாளிகளாக மாறுவதற்கு அடிப்படை காரணமாக இருப்பது அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கூலி இல்லாமையே.
பாசிச பாஜகவினர் பட்டியலின மக்களையும், ’இந்துக்கள்’ என்று கூறிக்கொண்டே பார்ப்பன மதத்தின் அடிமை வேலைகளுக்கும், அடியாள் வேலைகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர். இன்றளவும் பட்டியலின மக்கள் ஆகமவிதிகளின் படி இயங்கும் ஆலயங்களில் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் நுழைய முடியாது, சாதாரண கோவில்களில் சமமாக வழிபடும் உரிமை கிடையாது என்பதே நாடு தழுவியல் நிலைமை. இந்த நிலைமை அப்படியே நீடிக்க வேண்டுமென விரும்பும் ஆர்.எஸ்.எஸ், சாதி அமைப்பை ஒரு போதும் எதிர்க்கவில்லை. சாதி அமைப்பு தொடர வேண்டும் என்பது தான் அதன் பார்ப்பன பாசிசக் கொள்கைகளில் ஒன்று.
குஜராத் மாநில உனாவில் ‘பசுக்காவலர்கள்’ பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியது, சங்கப் பரிவாரத்தின் கொள்கை மீது பட்டியலின மக்களுக்கு கசப்புணர்வை உண்டாக்கியது. உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களின்போதும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா தலைவர்கள் ஒடுக்குபவர்களுக்கு ஆதரவாகவே இருந்தனர்.
பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவர் ஆக்கியதன் மூலம் ஒரு குறியீட்டு அளவிலான முன்னுரிமையை நிறுவ பாரதிய ஜனதா முயன்று தோற்றுப்போனது. அதாவது ஒடுக்கப்பட்டவர்களின் அடிப்படை பிரச்சினையை தீர்ப்பதற்கு மாற்றாக, தனது ஒடுக்குமுறை சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட அதிலிருக்கும் ஒருவரை உயர் பதவியில் அமர்த்துவதால் அனைவரின் மீதான ஒடுக்கு முறையையும் போக்கிவிட்டதாக பொய்ப்பிம்பத்தை உருவாக்குகிறது.
ஆனால் உண்மையில் கடந்த பத்தாண்டுகளாக பட்டியலின மக்கள் மீதான் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. 2013 முதல் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 46.11% அதிகரித்துள்ளது.
மூன்றாம்தர குடிமக்களாக நடத்தப்படும் இஸ்லாமியர்கள்
2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்றது முதலே இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளும், நடவடிக்கைகளும் இஸ்லாமியர்களை ’ஜெய் ஸ்ரீராம்’ சொல்ல சொல்வது, இஸ்லாமியர்களுக்கு எதிராக குடியுரிமைச் சட்டத்தை பாஜக அரசு 2019-ஆம் ஆண்டு கொண்டு வந்தது. கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது. என இஸ்லாமியர்கள் மீதான அடக்குமுறைகளின் பட்டியல் நீள்கிறது.
மாட்டுக்கறி உண்ணத் தடை என்பதில் துவங்கி மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று கொல்லப்பட்ட அக்லாக் முதல் ஜஹாங்கீர்புரியில் வீடு இடிக்கப்பட்டு நடுத்தெருவில் வீசப்பட்ட இஸ்லாமியர்கள் ஈறாக தனக்கு எதிராக அரசியல் பேசினார் என்ற ஒரே காரணத்திற்காக வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்ட ஆப்ரின் பாத்திமா வரை இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்களை எதிரிகளாக சித்தரித்து இனவெறித் தாக்குதல்கள், இனப்படுகொலை செய்வது அதிகரித்து கொண்டே வருகிறது.
படிக்க: இஸ்லாமிய வெறுப்பு, தலித் வெறுப்பில் ஊறி திளைக்கும் பி.ஜே.பி. கட்சி எம்.எல்.ஏ !!
இஸ்லாமியர்களின் இறை தூதரான முகம்மது நபிகள் குறித்து பாஜக கட்சியின் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிக்கும் அளவிற்கு அவர்கள் மீதான வெறுப்புகள் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. அவரை கைது செய்ய வலியுறுத்தி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. அரபு நாடுகள் பலவும் இவ்விவகாரத்தில் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்ததோடு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லிய பிறகு பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.
2019 மே மாதம் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மோடி தலைமையிலான அரசு முதலில் பாராளுமன்றத்தில் முத்தலாக் சட்டத்தை இயற்றியது. அதைத்தொடர்ந்து பாபர் மசூதி – ராம் ஜன்ம பூமி தகராறு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இடித்தவர்களுக்கே இடம் சொந்தம். ’இன்று உன்னுடையது. நாளை வேறொருவருடையது.’ என கீதை வழி இந்து ராஷ்டிரத்திற்கு அகண்ட வழியை தந்தது. பல தசாப்தங்களாக நீடித்து வந்த பிரச்சனைக்கு தற்போது முடிவு கிடைத்துள்ளதாக நீதிமன்றங்களும், இந்து – இஸ்லாமிய சகோதரர்களிடையே இந்த விவகாரம் மிகப்பெரிய இணக்கத்தை ஏற்படுத்தும் என இந்துத்துவத்தை ஆதரிக்கும் நடுநிலையாளர்களும் கருத்து கூறுகின்றனர். உண்மை அதுவல்ல.
படிக்க: அம்பேத்கர், தலித்துகளை இழிவுபடுத்திய பல்கலைகழக மாணவர்கள், முதல்வர் கைது!
தனது எதிரிகள் அனைவரையும் ஒழித்துக் கட்டுவதற்கு concentration camp என்ற பெயரில் நிரந்தர சிறைக் கூடங்களை நிறுவினான் அடால்ப் ஹிட்லர். அதுபோல தனது எதிரிகள் அனைவரையும் ஒழித்துக் கட்டுவதற்கு திறந்தவெளி சிறைகளை கட்டிக் கொண்டிருக்கிறார் மோடி.
நிதி மூலதனத்தின் ஆகக் கேடான, இனவெறி பிடித்த கடிவாளமற்ற குதிரையாக வெறி பிடித்து அலைகிறது பாசிசம். ஜெர்மனியில் அது கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளாக யூதர்களுக்கு எதிரான பாசிச இனவெறியை முன்னிறுத்தி வளர்ந்தது. இந்தியாவிலோ கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளாக முதல் சுற்றில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பாசிச மதவெறியை முன்வைத்து வளர்ந்து கொண்டிருக்கிறது.
ஜெர்மனியில் பாசிச கொடுங்கோலன் ஹிட்லர் யாரை வெறுத்தாலும் அவர்கள் அத்தனை பேரையும் சிறப்பு சேவை மூலம், அனைத்து பிரிவினரையும் சிறைக் கொட்டடியில் கொண்டுவந்து ஒழித்துக் கட்டுவது அவனது வழிமுறை!
கம்யூனிஸ்டுகள், யூதர்கள், தொழிற்சங்கவாதிகள், சோசலிஸ்டுகள், பாதிரியார்கள் என்று அனைவரையும் ஒவ்வொருவராய் அடையாளப்படுத்தி சிறப்பு சிறையில் சித்திரவதை செய்து கொலை செய்தல் அவனது வாடிக்கை. அந்த வழியில் பாசிஸ்ட் ஜெர்மனியின் ஹிட்லரையும் மிஞ்சிக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சியின் இன அழிப்பு அரசியல். இது இந்திய பாசிசத்தின் முகமாகும்.
பாபர்மசூதி இடிப்பை ஒட்டி 1992 மற்றும் 93 ஆம் ஆண்டுகளில் எழுந்த வன்முறை வெறியாட்டங்களில் மும்பையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் உடமை பறிக்கப்பட்டு உயிர் கொலை செய்யப்பட்டனர். இந்துத்துவத்தின் சோதனைச்சாலையான குஜராத்தில் 2002ஆம் ஆண்டு ஒரே நாள் இரவில் 2000 இஸ்லாமியர்களை படுகொலை செய்து அவர்களின் பிணங்களின் மீது ஏறி பிரதமர் பதவியில் அமர்ந்தார் மோடி.
“இனி ஜெர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று பகிரங்கமாக அறிவித்த ஹிட்லர் யூதர்களை அடியோடு அழிக்கவேண்டும் என்று முடிவு செய்து தினமும் சராசரியாக 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் விஷவாயு கொடுத்து கொல்லப்பட்டனர்.
ஹிட்லரின் இன சுத்திகரிப்பு மற்றும் இன அழிப்பு அரசியலில் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் 60 லட்சம் பேர். ஹிட்லரின் படைப்பிரிவில் யூதர்களை கொள்வதற்கென்றே தனியாக ஒரு இலாகாவை உருவாக்கி ஐக்மன் என்ற கொலைவெறியனை நியமித்ததைப்போல், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இன அழிப்பு யுத்தத்தை நடத்த பாசிச கும்பாலான அமித் ஷா மற்றும் ஆதித்யநாத் வகையறாக்கள் நியமிக்கப்பட்டு அந்த வேலையை கச்சிதமாக செய்து வருகிறார்கள்..
நாட்டில் 18 கோடி மக்கள் தொகை கொண்ட இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாகவும், தேச பக்தி இல்லாதவர்களாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரித்து பொது சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தி இனஅழிப்புக்கு தயாராகிவருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைகளில் பச்சையாகவே ஆர் எஸ் எஸ் பாஜக பிரச்சாரகர்கள் முதல் பிரதமரான பாசிச மோடி வரை மிக மோசமாக வெறுப்புணர்ச்சியையும், பாசிச வெறியையும் கக்கினர்.
பாசிச பயங்கரவாதம் ஒரே நேரத்தில் அனைவர் மீதும் பாய்வது கிடையாது. வரலாற்றில் பல்வேறு அனுபவங்களை பெற்று நிலையாக தன்னை வளர்த்துக் கொண்டு வரும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் கேடுகெட்ட இனவெறி பிடித்த, ஆக பிற்போக்கான பாசிசம் கம்யூனிஸ்டுகளையும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சிறுபான்மை மதத்தவர் மற்றும் இனத்தவரை எதிரிகளாக சித்தரித்து ஒழித்துக் கட்டுவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது.
அந்த வகையில் இந்தியாவில் கம்யூனிஸ்டுகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் நாத்திகர்கள், பார்ப்பன இந்திய தேசியத்தை எதிர்த்துப் போராடும் பல்வேறு தேசிய இனங்களைச் சார்ந்த மக்கள் அனைவரும் அவர்களது அழிப்பு பட்டியலில் வருகிறார்கள்.
பார்ப்பன (இந்து) மதத்தில் பார்ப்பன கும்பலின் மேலாதிக்கத்தை நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்ள மறுக்கும் சூத்திரர்கள், பஞ்சமர்கள் மற்றும் பல்வேறு இந்துமத சீர்திருத்தவாதிகள் வழியை கடைபிடிக்கும் அனைவரையும் அடுத்தடுத்து பட்டியலில் வரிசைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
(தொடரும்…)
நன்னிலம் சுப்புராயன்.
முந்தைய பதிவுகள்:
- ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமும், காங்கிரசின் அவசரநிலை பாசிசமும்
- ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமும், காங்கிரசின் அவசரநிலை பாசிசமும். பாகம்-2
- ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமும், காங்கிரசின் அவசரநிலை பாசிசமும். பாகம் 3
- ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமும், காங்கிரசின் அவசரநிலை பாசிசமும். பாகம்-4.
- ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமும், காங்கிரசின் அவசரநிலை பாசிசமும். பாகம்-5.
- ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமும், காங்கிரசின் அவசரநிலை பாசிசமும். பாகம்-6.






