“அன்றைய அவசர நிலைக்காலத்தை இன்றைய மோடி அரசோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். அன்று ஊடகங்கள் ஒடுக்கப்பட்டன. இன்று பெரும்பாலானவை சரணடைந்து விட்டன. நீதித்துறையும் அவ்வாறே. மாநிலங்களின் உரிமை பறிப்பு, அதிகார மையப்படுத்துதல், எல்லா அரசு அதிகாரப் பதவிகளிலும் பார்ப்பன பாசிஸ்டுகள் அமர்த்தப்படுதல், அரசியல் எதிரிகள் தேசவிரோதி என்று குற்றம் சாட்டப்படுதல்… என ஒவ்வொரு அம்சத்திலும் அன்றைய காலத்தை இன்றைய நிலை விஞ்சிக்கொண்டிருக்கிறது. இந்த 43 ஆண்டுகளில் இந்திய அரசமைப்பின் எல்லா உறுப்புகளும் தமது பெயரளவிலான ஜனநாயகத் தன்மையையும் இழந்து, பாசிசத்துக்கு இணக்கமானவையாக மாறியிருக்கின்றன.
அன்று சிறை வைக்கப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகள் இன்று அதிகாரத்தில் இருக்கிறார்கள். சட்டபூர்வமான அதிகாரத்தில் இருப்பது மட்டுமல்ல, அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஆயுதம் தாங்கிய அதிகாரமாகவும் நிலைபெற்றிருக்கிறார்கள்.” என்று புதிய ஜனநாயகம் 2018 செப்டம்பர் இதழில் எழுதியிருந்தோம். 2008 மீள முடியாத ஏகாதிபத்திய முதலாளித்துவ நெருக்கடி படிப்படியாக வளர்ந்து கொண்டே வந்தது., 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகான பத்தாண்டுகளில் நிதி மூலதனத்தின் நெருக்கடி இந்தியாவில் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதமாக உருவெடுத்துள்ளது.
எனினும் ஆர்எஸ்எஸ் மோடி கும்பல் தான் நடத்துகின்ற ஆட்சி பெரும்பான்மை மக்களுக்கானது என்ற முழக்கத்தை தொடர்ந்து முன்வைக்கின்றது. 1930 களில் உலக பெருமந்தத்தின் மூலம் உருவான பாசிச ஆட்சிகளும் ஐரோப்பாவில் இதே போன்ற முழக்கங்களை தான் முன் வைத்தது என்பது நாம் கவனிக்கத்தக்கதாகும்.
ஜெர்மனியில், ”தனி நபர்களின் நலன்களை காட்டிலும் பொது நலன்கள் உயர்ந்தவை முக்கியமானவை” என்னும் ஏமாற்று கோஷத்தை முன் வைத்தது: இத்தாலியில், “நமது அரசு முதலாளித்துவ அரசு அல்ல. ஆனால் ஒன்றிணைக்கப்பட்ட கூட்டு அரசாங்கம்” என்று கூறினார்கள். ஜப்பானில், “சுரண்டலற்ற ஜப்பான்” என்றும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில், “செல்வத்தை பங்கு போட்டுக் கொள்வது” என்றும் இவ்வாறாக வாய்ப்பந்தல் அடிக்கின்றனர் என்கிறார் தோழர் டிமிட்ரோவ்.
கடந்த 10 ஆண்டுகளில் தனது ஆட்சியின் கீழ் நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை முன்னேறுவதற்கு எந்த விதமான உத்தரவாதங்களையும் வழங்காத போதிலும் தனது ஆட்சியை ‘மோடியின் உத்தரவாதம்’ என்று பெருமை பீற்றிக் கொண்டது. அது மட்டுமின்றி ’உத்தரவாதத்திற்கே உத்தரவாதம் அளிக்கின்ற ஆட்சி’ என்றும் தற்பெருமையுடன் குதித்தது.
அவர்கள் கொடுத்த உத்தரவாதங்கள் பெரும்பான்மை மக்களுக்கானது அல்ல, ’சனாதன தர்மம்’ என்று அழைக்கப்படும் கடைந்தெடுத்த பிற்போக்குத்தனமான, பார்ப்பன பாசிசத்தை பாதுகாப்பதும், பார்ப்பன (இந்து) மதத்தின் ஆதிக்க சக்திகளான பார்ப்பன மற்றும் மேல் சாதிகளின் மனங்குளிர வைக்கின்ற வகையில் கொடுக்கப்பட்டுள்ள உத்தரவாதங்களேயாகும்.
அயோத்தியில் 464 ஆண்டுகால பழமை வாய்ந்த பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டுவோம் என்ற வாக்குறுதி அளித்து அதனை நிறைவேற்றியதும்; காஷ்மீரில் ஏற்கனவே அந்த மக்களுடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தை காலில் போட்டு மிதிக்கும் வகையில் சுதந்திரமான வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு பதிலாக, அதனை சட்டப்படி வழங்குகின்ற அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவை ரத்து செய்ததும்; நாட்டிலுள்ள பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் மத்தியில் குடியுரிமை பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் யார் என்ற அச்சுறுத்தலையும், அவர்களின் மீது பயங்கரவாத தாக்குதலை நியாயப்படுத்தவதற்கு குடியுரிமை சட்ட திருத்தம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்டதும், தனது சாதனைகளாக நியாயப்படுத்துகிறது. இந்த அடித்தளத்தில் அமர்ந்து கொண்டு தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் பொது சிவில் சட்டத்தையும் நிறைவேற்றி விடுவோம் இதன் மூலம், ‘சேதமில்லா ஹிந்துஸ்தானம்’ ஒன்றை உருவாக்குவதற்கு துடித்துக் கொண்டுள்ளார்கள்.
இவர்கள் நிறைவேற்றியதாக கூறியுள்ள சட்டத் திருத்தங்கள் மற்றும் அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு ரத்து போன்றவையும், இனிமேல் அவர்கள் நிறைவேற்ற போவதாக கூறியுள்ள பொது சிவில் சட்டம் போன்றவை அனைத்தும் பெரும்பான்மை மக்கள், அவர்கள் இந்துக்களாக இருந்தாலும் சரி! வேறு மதத்தவர்களாக இருந்தாலும் சரி! அவர்களின் வாழ்வாதாரத்திற்கு சிறிதும் தொடர்புடையது இல்லை. ஆனால் காவி பாசிச பயங்கரவாதத்துடன் தொடர்புடையது.
கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் மக்களிடம் வறுமை, பட்டினிக் கொடுமை பல மடங்கு பெருகியுள்ளது குறிப்பாக 2023 ஆம் ஆண்டின் உலக பட்டினி குறியீடு தரவரிசை பட்டியலின்படி அவர்கள் ஆய்வு செய்த 125 நாடுகளில் இந்தியா 111 இடத்தை பிடித்துள்ளது. இது 2014க்கு முன்பு நடந்த காங்கிரஸ் ஆட்சியில் அப்போது ஆய்வு செய்யப்பட்ட 120 நாடுகளில் 55வது இடத்தில் இருந்து தற்போது ஒரு மடங்கு முன்னே சென்றுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளான, குறிப்பாக சார்க் நாடுகளில் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா பின்தங்கியுள்ளது என்பது மட்டுமின்றி, ஆப்பிரிக்க நாடுகளில் கொடும் வறட்சி பட்டினி தலைவிரித்தாடுகின்ற சோமாலியா, சூடான், நைஜீரியா, ஹெய்தி போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் ஒன்றாக மாறிவிட்டது.
இந்திய மக்களில் சுமார் 28.7 சதவீதம் பேர் (20.5 கோடி) உணவு பற்றாக்குறையில் வாடிக் கொண்டுள்ளனர். அரசின் தகவல்படியே சுமார் 95 கோடி மக்கள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
மக்கள் தொகை பட்டியலில் உலகில் முதலாவது இடத்தை பிடித்துள்ள இந்தியாவில் பிறக்கும் மூன்று குழந்தையில் ஒன்று கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடன் பிறந்து கொண்டுள்ளது. அதாவது 35.5 சதவீதம் குழந்தைகள் அவ்வாறு உள்ளனர். ஐந்தில் ஒரு குழந்தை அதாவது 19.3 சதவீதம் உள்ள குழந்தைகள் மெலிந்து போய் தாய்ப்பால் இல்லாமல் சத்தான உணவு இல்லாமல் மரணமடைந்துக் கொண்டுள்ளனர். பிறந்து போதிய சத்துணவு இன்றி வறுமை கொடுமையால் இறந்து போகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை 1000 பேருக்கு 42 என்று தேசிய சராசரி குறிப்பிடுகிறது.
தொடர்ந்து கடுமையாக ஏறும் விலைவாசி உயர்வின் காரணமாக மக்கள் தனது வயிற்றை சுருக்கிக்கொள்ள நிர்பந்தப்படுத்தப்படுகின்றனர். எமர்ஜென்சிக்கு முன்பு அதாவது 73-74 நிதியாண்டில் திட்டக் கமிஷன் ஒருவருக்கு ஒரு நாளைக்கு தேவையான குறைந்தபட்ச உணவு கிராமப்புறங்களில் 2020 கிலோ கலோரிகள் என்றும், நகர்ப்புறங்களில் 2,500 கலோரிகள் என்றும் தீர்மானித்தது.
ஒரு கணக்கீட்டின்படி பார்த்தால் ஒரு விவசாயக் கூலித் தொழிலாளி தனது உழைப்பில் எட்டு மணி நேரம் ஈடுபடும்போது சுமார் 4500 கலோரிகளை இழக்கின்றார். கட்டுமான தொழிலாளி சுமார் 4000 கலோரிகளை இழக்கின்றார் எனும் போது பெரும்பான்மை மக்கள் இதனை ஈடு செய்வதற்கு பொருத்தமான உணவு இன்றி வாழ்கின்றனர்.
73-74 கணக்கீட்டின்படி கிராமப்புறங்களில் 56%< நகர்ப்புறங்களில் சுமார் 60% மக்களும் பட்டினிக் கொடுமையால் தேவையான அளவிற்க கலோரி உணவை எடுத்துக் கொள்ள முடியாமல் இருந்தனர். அதுவே புதிய தாராளவாதக் கொள்கை என்று அழைக்கப்படுகின்ற மறு காலனியாக்க கொள்கைகள் அமுல்படுத்த துவங்கியவுடன் இந்த உணவின் அளவு கிராமப்புறங்களில் 58 %< நகர்ப்புறங்களில் 57% ஆகவும் மாறியது.
அதன் பிறகு 2011 தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இந்த அளவு மேலும் முன்னேறி கிராமபுறங்களில் 68% பேரும், நகர்புறங்களில் சுமார் 65% பேரும் உணவு பற்றாக்குறையுடன் இருந்துள்ளனர் என்பதும் குறிப்பாக கொரோனாவுக்கு முந்திய தரவுகளின் படி கிராமப்புறங்களில் 80% சதவீதம் பேரும்< நகர்புறங்களில் 60% பேரும் போதிய உணவு இல்லாமல் தவிக்கின்றனர். இந்த கணக்கை பின்பற்றி பார்த்தால் நாட்டில் உள்ள 143 கோடி மக்களில் சுமார் 75% பேர் தங்களுக்கு தேவையான உணவில் சரி பாதி அளவிற்கு கூட எடுத்துக் கொள்ளாமல் அரை வயிறு பட்டினியுடன் வாழ்கின்றனர் என்பது நிரூபணம் ஆகின்றது. இதுதான் பாசிச மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் மக்களின் மீது நடத்தப்பட்ட பாசிச தாக்குதல் ஆகும்.
இதே காலகட்டத்தில் கார்ப்பரேட்டுகள் இந்தியாவின் சொத்தை பல மடங்கு சூறையாடி கொண்டு சென்றனர். அதானி, அம்பானி போன்ற தேசங்கடந்த தரகு முதலாளிகள் வாங்கிய வங்கிக் கடன் சுமார் 25 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்றவர்கள் நாட்டை விட்டு எந்தவிதமான சேதாரமும் இன்றி தப்பி ஓடுவதற்கு பாசிச மோடி கும்பல் வழி வகுத்தது.
இவ்வாறு சொந்த நாட்டு மக்களின் மீது பட்டினி, வறுமைக் கொடுமைகளை பாசிச தாக்குதலாக தொடுத்துள்ளார் மோடி. கார்ப்பரேட் கும்பலுக்கு நிபந்தனையின்றி சேவை செய்வது மட்டுமின்றி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டுவது போல மோடியே ஒரு ’கார்ப்பரேட் முதலாளி தான்’ என்பதை நிரூபிக்கின்ற வகையில் தான் அவரது நடவடிக்கைகள் அனைத்தும் உள்ளது.
ஆடம்பரமான உல்லாச ஊதாரி வாழ்க்கை, அன்றாடம் அவர் செலவு செய்யும் தொகை, பயணப்படிகள், உண்ணும் உணவு, தங்குமிடங்கள் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளின் வாழ்க்கையை ஒத்தது அல்லது குறைந்த பட்சம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்கின்ற CEO-க்களின் வாழ்க்கைத் தரத்தை போன்ற தன்மையுடையது.
ஆனால் இவரின் குருபீடமான ஆர்எஸ்எஸ் கும்பலோ தங்களது சித்தாந்தம் முன்வைக்கின்ற படிதான் மோடி வாழ்ந்து வருவதாகவும், தேசத்தின் நலனுக்காக தன்னை ’அர்ப்பணித்துக் கொண்ட சேவகர்’ என்பது போலவும் சித்தரிக்கின்றனர். அதையும் தாண்டி ”பரமாத்மா என்னை ஒரு நோக்கத்திற்காக அனுப்பினார். நான் கடவுளுக்கு என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு விட்டேன்” என்று கார்ப்பரேட் சாமியார்களே திணறும் அளவிற்கு மோடி பிதற்றத் துவங்கி விட்டார்.
”பாசிசம் மக்களை கவர முடிவதற்கான காரணம் அது மக்களுடைய ஆக அவசரமான அவசியமான தேவைகளையும், கோரிக்கைகளையும் பற்றி ஆவேசமாக வாய்சவால் அடித்து பேசி வேண்டுகோள் விடுகிறது. பாசிசம் மக்களுடைய உள்ளங்களிலே ஊறிப் போய் இருக்கின்ற வெறுப்புகளையும், தப்பெண்ணங்களையும் கிளறித்தூண்டி கிளப்பி விடுவது மட்டுமல்ல, மக்களுடைய நல்லுணர்வையும், நியாய உணர்வையும் சில சமயங்களில் புரட்சிகரமான பாரம்பரியங்களையும் கூட பயன்படுத்திக் கொள்கிறது” என்கிறார் தோழர் டிமிட்ரோவ். இப்படிதான் பாசிச ஆர் எஸ் எஸ் –பாஜக கும்பல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
(தொடரும்…)
நன்னிலம் சுப்பராயன்
முந்தைய பதிவுகள்: