பாசிச மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பின் ரஷ்யாவில் நடைபெற்ற 21 வது இந்திய-ரஷ்ய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார்.
கருப்பு பண மதிப்பிழப்ப நடவடிக்கையின் போது ஆர்எஸ்எஸ் சன்னியாசியும், பாஜகவின் முக்கிய பிரமுகருமான உமா பாரதி, ’இந்த நடவடிக்கை காரல் மார்க்ஸ் முன்வைத்த சமத்துவ பொருளாதாரத்தை கடைபிடிப்பதாக உள்ளதால், உலகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்டுகள் மோடியை ஆதரிக்க வேண்டும்” என்று திருவாய் மலர்ந்தார். அதற்கு அடுத்தக் கட்ட பாய்ச்சலாக தற்போது ரஷ்ய பயணம் மேற்கொண்டுள்ளார் என்பதால் ’திருடனுக்கு தேள் கொட்டியதைப் போல’ இந்தியாவில் உள்ள போலி மார்க்சிஸ்டுகள் ரஷ்யாவுடன் இந்தியா நெருங்குவது பற்றி எதுவும் அறியாதவர்கள் போல தனது பத்திரிகைககளில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவும் ரஷ்யாவும் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடத்தி வர்த்தக ஒப்பந்தங்களை போட்டுக் கொள்வது தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிகழ்வுதான் என்ற போதிலும், இடையில் நின்று போன இந்த மாநாடு இந்த ஆண்டு நடந்துள்ளது. அது மட்டுமல்ல உக்ரைன் போர் துவங்கிய பிறகு ரஷ்யாவிற்கு மோடி சென்றது பற்றி, ”ஐரோப்பிய ஊடகங்களும், அமெரிக்க மேல்நிலை வல்லரசும் பொறாமை கொள்கின்ற அளவிற்கு இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும், வரலாற்றின் விளையாட்டு திருப்புமுனை என்றும்” ரஷ்யா பீற்றிக்கொள்கிறது. மற்றொருபுறம் சங்பரிவார கும்பலோ திடீரென்று ரஷ்யாவுடன் மோடி நடத்தும் இந்த நாடகத்தைக் கண்டு திக்கு முக்காடிக் கொண்டுள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நேட்டோக்கு எதிரான போர் என்று உளறிக் கொண்டிருந்தார்கள் சிலர். அமெரிக்க மேல்நிலை வல்லரசு நேட்டோ மூலம் ரஷ்யாவை தொடர்ந்து பலவீனப்படுத்தி வருவதால் ரஷ்யா இனிமேலும் அமைதி காக்க முடியாது என்ற முறையிலேயே இந்த போரில் இறங்கியுள்ளது என்று அதற்கு வியாக்கியானம் கூறினர்.
உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் இரண்டாண்டுகளுக்கு மேலாக நடக்கின்ற போர் பற்றி இந்தியா ’கல்லூளி மங்கனைப் போல’ இருந்து வந்தது. நடுநிலை என்ற பெயரில் நாடகமாடியது. சமீபத்தில் ஜி 7 நாடுகளின் கூட்டத்தில் பார்வையாளராக கலந்து கொள்வதற்கு இத்தாலி சென்ற பாசிச மோடி ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு 50 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியும், ஆயுத தளவாட உதவியும் செய்யப் போவதாக ஜி 7 கூட்டமைப்பு அறிவித்ததை எதிர்க்கவில்லை.
மாறாக, தற்போது ரஷ்யாவிற்கு சென்றபோது, ”அப்பாவி குழந்தைகள் மீது ரஷ்ய ஏவுகணை நடத்தும் தாக்குதலில் குழந்தைகள் கொல்லப்படுவது குறித்து தான் மனம் உடைந்து போவதாகவும், தோட்டாக்கள் தீர்வல்ல, பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும்” என்று ’சமாதான சிற்பி’ போலவும், போரின் அழிவுகள் குறித்து அரிய கண்டுபிடிப்பையும் மோடி முன் வைத்தார்.
ரஷ்யாவில் மோடி மேற்கொண்ட இரண்டு நாள் பயணம் குறித்து அமெரிக்காவின் பென்டகன் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் வாட் ரைடர், ”ரஷ்ய இந்திய ஒப்பந்தங்கள் பற்றியும்< அவ்வப்போது நடக்கின்ற கூட்டுகள் பற்றியும் நாங்கள் அறிந்து கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் இந்தியா ரஷ்யாவிற்கு பல அம்சங்களை எடுத்துக் கூறும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என்று கூறினார்.
அமெரிக்காவின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், ”ரஷ்யாவிற்கு சென்றுள்ள மோடியின் பயணத்தை பற்றி நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றோம். நேட்டோ உச்சி மாநாடு இந்த வாரத்தில் நடக்க உள்ளது என்பதால் இந்தியா மேற்கொண்டுள்ள ரஷ்ய பயணம் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று மறைமுகமாக மிரட்டும் தொனியில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆனால் ரஷ்யாவின் போர் வெறியால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் அதிபரான ஜெலின்ஸ்கி, ”உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் மோடி, உலகின் இரத்த வெறி பிடித்த, போர்க் குற்றவாளி புடினைக் கட்டிப் பிடிக்கும் புகைப்படங்கள் பெரும் ஏமாற்றத்தை தருகிறது” என்று எதிர்ப்புக் காட்டியுள்ளார்.
’சோழியன் குடுமி சும்மா ஆடாது’ என்பதைப் போல ரஷ்யாவிற்கு பயணம் செய்துள்ள பாசிச மோடி மீண்டும் உலக மேலாதிக்கப் போட்டியில் குதித்துள்ள ரஷ்ய வல்லரசை இந்தியாவிற்கு அழைத்து பட்டுக்கம்பளம் விரிக்கின்ற வகையில் பல்வேறு ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டது மட்டுமின்றி, 2030-க்குள் நூறு பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக மற்றும் ஏற்றுமதி ஒப்பந்தத்தை பெற்றுள்ளார்.
விவசாயம் மற்றும் தொழில் துறை ஆகிய இரு முக்கிய துறைகளில் ரஷ்யாவின் முதலீடுகளை அதிகரிப்பதற்கு பொருத்தமாக பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
நரேந்திர மோடி மற்றும் விளாடிமிர் புடின் சந்திப்பில் வர்த்தகம், தேசிய நாணயங்களைப் பயன்படுத்தி வர்த்தகக் கணக்குகளைத் தீர்த்தல், வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் போன்ற புதிய வழிகளின் மூலம் சரக்கு போக்குவரத்தை அதிகரித்தல், வேளாண்மை பொருட்கள், உணவு மற்றும் உரங்கள் ஆகியவற்றின் வர்த்தகத்தை அதிகரித்தல், அணுசக்தி உட்பட எனர்ஜி துறையில் ஆழமான ஒத்துழைப்பு, உட்கட்டமைப்பு மேம்பாட்டில் ரஷ்யாவின் பங்கீடு அதிகரித்தல், டிஜிட்டல் பொருளாதார முதலீடுகள், மருந்து விநியோகம் மற்றும் மனிதாபிமான பணிகளில் ஒத்துழைப்பு ஆகிய ஒன்பது முக்கிய துறைகளில் இரு தரப்பும் ஒத்துழைக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலைக்கு தேவையான அணு உலைகளை இறக்குமதி செய்வதற்கு ரஷ்ய நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு அதன் மாதிரியும் மோடிக்கு காண்பிக்கப்பட்டது.
படிக்க: அமெரிக்காவின் பதிலிப் போர் உத்தி! ரஷ்யாவுக்கு உக்ரைன்; சீனாவுக்கு தைவான்!
அதுமட்டுமன்றி ரஷ்யா, பெலாரஸ், கசகஸ்தான் கிர்கிஸ்தான், ஆர்மேனியா போன்ற நாடுகளின் ஒன்றியமான யூரேசிய பொருளாதார ஒன்றியத்துடன்(EAEU) தனது வர்த்தக ஒப்பந்தங்களை போட்டுக் கொள்வதற்கு தடைகளை நீக்குவதற்கும், தாராளவாத ஒப்பந்தங்களை போடுவதற்கும் இந்த பேச்சு வார்த்தைகள் உதவியது.
ரஷ்யாவில் கசான் மற்றும் எக்டெரின்பர்க் ஆகிய பகுதிகளில் இந்தியாவின் துணை தூதரகங்களை அமைப்பதற்கும் இந்தியா ஏற்றுக்கொண்டது. உக்ரைன் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் உலக நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ள சூழலில் இந்தியா ரஷ்யாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் 33 சதவீதம் இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தம் அதிகரித்து வருகிறது 2022-க்கு பிறகு இந்தியாவின் அம்பானியின் ஜியோ, அதானி எண்ணெய் கார்ப்பரேட்டுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணையை இறக்குமதி செய்து பல்லாயிரம் கோடி லாபமாக கொள்ளையடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாசிச மோடியின் இரட்டை வேடத்தையும், நயவஞ்சகத்தையும் போற்றுகின்ற வகையில் ரஷ்யாவின் உயர்ந்த விருதான, ’ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ அப்போஸ்டல்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல பாசிச மோடி, பாசிச புடினின் பண்ணை வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து தேநீர் குடித்ததும், கோல்ப் வண்டியில் ஏறி ஊர் சுற்றி வந்ததும், அனைத்திலும் உச்சமாக இரண்டாம் உலகப் போரில் பாசிச ஹிட்லரின் படையால் கொல்லப்பட்ட சோவியத் வீரர்களின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தியதும் சம காலத்தில் நடந்த வரலாற்றுக் கொடுமைகளாகும்.
போலி மார்க்சிஸ்டுகள் இனிமேல் என்ன செய்வது? ’பாசிசமாவது மண்ணாங்கட்டியாவது’ என்று தனது முன்னாள் குருபீடமான ரஷ்யாவுடன் இணைந்துள்ள மோடியை வாழ்த்தி பாராட்டுகள் தெரிவிப்பதும், காங்கிரசுக்கு கல்தா கொடுப்பதற்கும் தயாராக வேண்டியது தான்.
முகம்மது அலி.






