நாடு மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளது. நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய நமது குடும்பத்தின் வருமானம் சுருங்கிக் கொண்டே போகிறது. இதற்கு நேர் மாறாக விலைவாசி பல மடங்கு உயர்ந்து கொண்டே போகிறது. அன்றாட தேவைகளை ஈடு கட்ட முடியாமல் போதிய மருத்துவம், சுகாதார வசதி இல்லாமல், விரும்பிய கல்வியை படிக்க முடியாமல், கிடைத்த வேலையை செய்து வயிற்றைக் கழுவி வருகின்ற மிகப்பெரும் எண்ணிக்கையில் உள்ள மாணவர்கள், இளைஞர்களே இனியும் பொருத்திருக்காமல் எழுந்து நில்லுங்கள். நாட்டு நடப்புகளை புரிந்து கொண்டு புரட்சிகர ஜனநாயக சக்திகளுடன் இணைந்து போராடத் துணியுங்கள்
பாசிச மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியாவின் ஏற்றத்தாழ்வு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று இந்தியாவில் உள்ள ஒரு சதவீத மிகப்பெரும் பணக்காரர்களான உயர்தர மக்கள் ஆண்டுக்கு சராசரியாக 53 லட்சம் ரூபாயை வருமானமாக பெறுகின்றனர். அதற்கு அடுத்தபடியாக உள்ள 10% மேட்டுக்குடிகள் ஆண்டுக்கு 13.5 லட்சம் ரூபாயை வருமானமாக பெறுகின்றனர். அதற்கு அடுத்த படிநிலையில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் சுமார் 40% பேர் ஆண்டுக்கு 1.65 லட்சம் ரூபாயை வருவாயாக பெறுகின்றனர். கிராமப்புறங்களில், நகர்ப்புறங்களில் வசிக்கின்ற ஏழை, எளிய மக்கள் அதாவது 49 சதவீதம் பேர் ஆண்டுக்கு 71,163 ரூபாய் மட்டுமே வருவாயாக பெறுகின்றனர்.
இதை இப்படியும் விவரிக்கலாம். ஒரு சதவீதமே உள்ள மீப்பெரும் பணக்கார கும்பல் நாட்டில் வருமானத்தில் 22.6% கொள்ளையிட்டு வருகிறது. அதே சமயத்தில் நாட்டின் பெரும்பான்மை மக்கள் 49 சதவீதத்தினர் வெறும் 15 சதவீதத்தை மட்டுமே பெறுகின்றனர் எனும் போது இதை பொறுத்து தான் நாட்டின் பொருளாதாரம் குறிப்பாக வாங்கும் சக்தி இயங்குகின்றது.
நாடெங்கிலும் புதிது புதிதாக திறக்கப்படும் நான்கு சக்கர வாகன ஷோரூம்கள், மொபைல் விற்பனைக் கடைகள், ஷாப்பிங் மால்கள், டி மார்ட் போன்ற பெரும் வணிக வளாகங்கள் போன்றவை இந்தியா வளர்ச்சி அடைந்து வருவதாக ஒரு மாயத் தோற்றத்தை காட்டி வருகிறது.
ஆனால் இத்தகைய நிறுவனங்களுக்கு சென்று பன்றி தீனியை தின்று செரித்து, புதிது புதிதாக சந்தையில் குவிக்கப்படும் பொருட்களை வாங்கி அனுபவிக்கின்ற மீப்பெரும் பணக்காரர்கள் மற்றும் மேட்டுக்குடிகள் 11 சதவீதம் பேர் நாட்டில் 76.3% வருவாயை இந்த இடத்தில் செலவு செய்து உல்லாச ஊதாரி வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.
49 சதவீத மக்களோ அன்றாட செலவுகளுக்கு கடுமையாக திண்டாடுவதும், அடிப்படை தேவைகளான உணவுப் பொருட்கள், மருத்துவ வசதி, கல்வி போன்ற தேவைகளுக்கு செலவழிக்க முடியாமல் வயிற்றை சுருக்கி கொண்டு பட்டினி கிடக்கின்றனர்.
ஆனால் இதற்கு நேர் மாறாக ஆளும் வர்க்கத்தினால் திட்டமிட்டு ஊட்டப்படும் கிரிக்கெட், போன்ற கேளிக்கை விளையாட்டுகள், சினிமா, போதை பழக்கங்கள் பெரும்பான்மை மக்களின் குழந்தைகளான மாணவர்களையும், இளைஞர்களையும் சிந்தனை ரீதியாகவே சீரழித்து வருகிறது.
நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களில் இந்தியாவில் உள்ள மாணவர்கள் இளைஞர்கள் பங்கெடுக்கவில்லை. மணிப்பூரில் மக்கள் கொல்லப்பட்டபோது வீதிகளில் திரளவில்லை; பாலஸ்தீன மக்கள் குண்டுகளுக்கு இரையாகி செத்து மடியும் போது எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை; மாறாக சமீபத்தில் நடந்த T20 கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றவுடன் லட்சக்கணக்கான மாணவர்கள் இளைஞர்கள் இரண்டு கிரிக்கெட் வீரர்களை வரவேற்கின்றனர்.
சினிமா நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் முதல் காட்சிக்கு முண்டியடித்துக் கொண்டு ஏறி விழுவதும், சினிமா நடிகர்களின் கட்டவுட்களுக்கு ஆராதனை செய்வது முதல் அபிஷேகம் செய்வது வரை சீரழிந்து கிடப்பதும் இத்தகைய மாணவர், இளைஞர்கள்தான்.
படிக்க: சீரழிக்கப்படும் இளைய தலைமுறை? (சமூகத்தைப் பற்றி சிந்திக்காத பெரும்பான்மையினருக்கு)
இந்த இளைஞர்கள் பட்டாளம் தான், திடீரென்று அரசியலில் குதித்து முதலமைச்சராக துடிக்கின்ற விஜய் போன்ற நடிகர்களை ஆதரிக்கின்றார்கள்; அரசியல் அடிப்படையற்ற வெட்டிச் சவடால் பேச்சுகளை பேசுகின்ற சீமான் போன்றவர்களை ஆதரிக்கின்றார்கள். நாட்டின் எதிர்காலம் மிகவும் மோசமாகி கொண்டு வருவதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கிறார்கள். கார்ப்பரேட் காவி பாசிச சக்திகள் பயங்கரவாத பீதியின் கீழ் அச்சுறுத்தலை மேற்கொண்டு நாட்டின் செல்வவளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடித்து செல்வதற்கு தெரிந்தோ தெரியாமலோ அனுமதிக்கிறார்கள்.
இதனை இப்படியே நாம் அனுமதிக்கப் போகிறோமா? கூடாது.
நாட்டின் பெரும்பான்மை உழைப்பாளி மக்களை குறைந்த வருவாய் ஈட்டும் வகையில் ஏழ்மையில் ஆழ்த்தி வருவதை எதிர்த்து போராடுவதற்கு மீண்டும் விடுதலைப் போராட்ட காலத்தில் பிரிட்டன் காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடிய மாவீரர்களின் போராட்ட மரபுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம்.
விராட் கோலி, டெண்டுல்கர், ரோஹித் சர்மா, விஜய், சீமான் என்ற பெயர்களை சிந்தனையில் இருந்து போக்கி ராஜகுரு, சுகதேவ், பகத்சிங், அப்பு, பாலன் போன்ற போராளிகளின் பெயர்களை பதிய வைப்போம். போராட்டக் களத்தில் இறங்குவோம்.
- ஆல்பர்ட்