நிதி ஆயோக் முதல் முறையாக வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான முதலீட்டுக்கு உகந்த மாநிலங்களின் குறியீட்டு பட்டியலில் குஜராத் மாநிலம் முதலிடத்தையும், தமிழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளன.
முதலீட்டுக்கு உகந்த சூழல் நாட்டின் 17 முக்கிய மாநிலங்களில் விரிவாக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் குஜராத் மாநிலம் 56.6 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா 53. 7 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், தமிழகம் 53.3 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளன.
குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் படேலின் தலைமையின்கீழ் வெளிப்படையான திறமையான மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த வணிகச் சூழலை உருவாக்குவதில் குஜராத் அரசு கொண்டுள்ள தொடர் அர்ப்பணிப்பை இந்தத் தரவரிசை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ஆயோக்கின் இந்த முதலீட்டு இணக்கக் குறியீடுயானது, மாநிலங்களின் தொழில் வளர்ச்சிக்கான கொள்கை மற்றும் நிர்வாகம், உள்கட்டமைப்பு வசதிகள், வணிக வசதி, நிதி மேலாண்மை உள்ளிட்ட முதலீட்டுச் சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் உள்ளடக்கிய எட்டு முக்கிய தூண்களின்கீழ், 84 குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு, இந்த 17 மாநிலங்களையும் மதிப்பீடு செய்துள்ளது. குஜராத் மாநிலத்தின் கொள்கை ஸ்திரத்தன்மை மற்றும் முதலீட்டாளர்களை மையமாகக் கொண்ட நிர்வாகமே அதன் மிகப்பெரிய பலம் என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. (இந்து நாளிதழில் செய்தி 20.07.2026)
குஜராத் எப்படி முதலீட்டை ஈர்த்தது!
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள ரமோல் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் 2026 ஜூலை 18-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 6-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உரிய பாதுகாப்பு அனுமதியின்றி செயல்பட்ட இந்த ஆலை உரிமையாளர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
படிக்க:
🔴 வெளியேறும் அன்னிய முதலீடு! வீழ்ச்சியில் பங்குசந்தை? திவால் நிலையை நோக்கி இந்திய பொருளாதாரம்!
🔴 இந்தியப் பொருளாதாரம் திவாலாகிறது! வர்க்கமாய் திரள்வோம்! நாட்டைக் காப்போம்!
ஒரு சிறிய முதலாளியே சட்டப்படி அனுமதி வாங்காமல் சட்டவிரோதமாக ஆலையை இயக்குவதை கண்டு காணாமல் இருக்கிறது குஜராத் அரசு என்றால், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இதை விட பல மடங்கு சலுகைகள் கொடுத்து, தொழிலாளர்களுடைய உரிமைகளை நசுக்கி கொத்தடிமைகளாக நடத்தவும், நாட்டினுடைய இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகள் தாராளமாக சூறையாடுவதற்கு அனுமதி வழங்குவதன் மூலம்தான் குஜராத் மாநிலம் முதலீட்டாளர்களை ஈர்த்து முதலிடம் பிடித்துள்ளது.
முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகத்தின் நிலை!
தமிழகம் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இந்த சூழல் என்பது கடந்த ஒன்றிரண்டு மாதங்களில் உருவாக்கப்பட்டதா என்றால் நிச்சயமாக இல்லை. 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற மு க ஸ்டாலின், ‘ஒரு ட்ரில்லியன் டாலர்’ என்ற இலக்குடன் ஊன்றிய விதியே இதற்கு அடித்தளம் அமைத்தது என்பது இங்கே மறைக்கவும், மறுக்கவும் முடியாத ஒன்று.
இந்தியாவின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு உகந்த இரண்டு மாநிலங்களில் குஜராத், மகாராஷ்டிரா இடம் பெற்றுள்ளது. ஒன்றியத்தை ஆளும் பாஜக வசமுள்ள இந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்பது தாராளமாக கிடைத்தது. ஆனால் சமூகநீதிக் கொள்கையோடு நடந்த திராவிட மாடல் ஆட்சியில் நிதிபாரபட்சம் உள்ளிட்ட பல்வேறு அஸ்திரங்களை ஏவியது ஒன்றிய அரசு. ஆனாலும் சிரமங்களைக் கடந்து சிகரம் தொட வழி வகுத்துள்ளார், அன்றைய முதல்வர் என்பதும் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம். தற்போது தொழில் முதலீடுகளைப் பெருக்கி, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு அனைத்து மாநிலங்களும் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றன. தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவை வருகிறது. இதில் சமீப காலமாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாட்டை ஆந்திரா பின்னுக்குத் தள்ளி வருகிறது என்ற சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. இதை உணர்ந்து இன்றைய அரசு விழிப்புடனும் துடிப்புடனும் செயல்பட்டு, பெருமையை வரும் ஆண்டுகளில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு (தினகரன் ஜூலை 19, 2026 திராவிட மாடல் விதை என்ற தலைப்பில் வெளிவந்த செய்தி)
படிக்க:
🔴 தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே செல்வது ஏன்? இதற்கும் பொருளாதாரத்திற்கும் என்ன தொடர்பு?
🔴 ஜி எஸ் டி ஏற்றம் : பொருளாதாரம், ஏழை வீட்டை எரிக்குது மோடிவரி!
குஜராத்தும் சரி, தமிழ்நாடும் சரி போட்டிபோட்டு முதலீடுகளை ஈர்க்க பலவிதமாக சலுகைகளை அறிவிக்கிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் கார்ப்பரேட் கம்பெனி தொழில் தொடங்க எத்தனை ஏக்கர் நிலம் தேவையோ, அதை விவசாயிகளிடமிருந்து பிடிங்கி, குறைந்த விலையில் 99 ஆண்டுகள் வரை குத்தகைக்கு கொடுக்கிறார்கள். தடையில்லா மின்சாரம் மானிய விலையில் கொடுப்பது. நிறுவனத்திற்கு தேவையான தண்ணீர் தாராளமாக வழங்குவது.
தொழில் தொடங்க கடன்கள் கொடுப்பது, வரி உள்ளிட்ட சலுகைகள் கொடுப்பது. முதல் 5 ஆண்டுகளுக்கு லாப உத்தரவாதம் கொடுப்பது. பிரச்சனை என்றால் முதலாளிகளின் சொத்துக்களை பாதுகாப்பது. தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்குவது ஆகியவற்றின் வழியாகதான் தமிழ்நாடும் முதலீடுகளை ஈர்க்கிறது. இத்தகைய உத்தரவாதம் இல்லையென்றால் முதலீட்டார்கள் வரமாட்டாரகள்.
தொழிலாளர்களின் நிலை!
கடந்த திராவிட மாடல் ஆட்சியில் சாம்சங் நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை பதிவு செய்வதற்கு போராட்டம் நடத்த வேண்டிய அவலமான நிலை ஏற்பட்டது. அதற்காக போராடிய தொழிலாளர்களை போலீசு கொண்டு அடக்குமுறையை ஏவியது, திராவிட மாடல் அரசு. கார்ப்பரேட்களின் நலனுக்காக 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக அறிவித்தது, கடந்த திமுக அரசு. தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுசாரி, முற்போக்கு அமைப்புகளின் போராட்டத்தின் காரணமாக திரும்ப பெற்றுகொண்டது.
தற்போது த.வெ.க. ஆட்சி அமைத்து இரண்டு மாதங்களை கடந்தது. இந்த இரண்டு மாதங்களில் மட்டும் சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டுமே 5-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் விபத்துகள் ஏற்ப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகிலுள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் செயிண்ட் பீட்டர் & பால் கடல் உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் எவ்வித பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காததின் விளைவு அமோனியா விஷவாயு கசிந்து 18 பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு இறந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இருப்பினும் இவர்களுக்கு மட்டுமல்ல, அமோனியா வாயு சுவாசித்த அனைவருக்கும் பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் என எச்சரித்தனர். ஆனால் முதலாளிகள் மீது, உரிய பாதுகாப்பது விதிமுறைகளை மீறியது மற்றும் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. பாதுகாப்பு விதிகளை மீறியதன் மூலம் 18 உயிர்கள் பறிபோய் உள்ளது. இது திட்டமிட்ட படுகொலை என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யாமல், அலட்சியமாக செயல்பட்டது என வழக்கு பதிவு செய்வதன் மூலம் முதலாளிகளை காப்பாற்றுகிறது, த.வெ.க. அரசு.
கடந்த ஜூலை 14-ம் தேதி கும்மிடிபூண்டியில் உள்ள ஜெயின் ரிசோசர்ஸ் ரீசைக்லிங் ஆலையில் பாய்லர் வெடித்தது. இந்த விபத்தில் ஒருவர் பலி, 4 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதே பகுதியில் துல்சியான் இரும்பு உருக்காலையில் ஜூலை 18-ம் தேதி விபத்து ஏற்பட்டு ஒருவர் பலியாகியுள்ளார். ஆலை விபத்துகள் தொடர்கதையாகி வருகிறது. எந்த அதிகாரியும் ஆலைகளை ஆய்வு செய்வதில்லை. அப்படி செய்தாலும் பெயரளவுக்கான ஆய்வாகதான் உள்ளது. முதலாளிகள் எந்த பாதுகாப்பு விதிகளையும் மதிப்பில்லை. விஜய் தலைமையிலான த.வெ.க அரசும் இதை கண்டுகொள்வதில்லை.
முதலாளிக்கு சலுகை! தொழிலாளிக்கு உரிமை பறிப்பு!
முதலாளிகள் தொழில் தொடங்க நிலம் 99 வருடங்களுக்கு மலிவு விலையில் குத்தகைக்கு கொடுப்பது. மின்சாரம் மானியவிலையில் தடையில்லாமல் கொடுப்பது. தண்ணீர் வசதி செய்து கொடுப்பது. 5 வருடத்திற்கான லாப உத்தரவாதம் கொடுப்பது. 44 தொழிலாளர்கள் சட்டங்களை 4 சட்டத் தொகுப்புகளாக திருத்தியது. தொழிலாளர்கள் உரிமை கேட்டால் போலீசை கொண்டு அடக்குமுறை ஏவுவது. தொழிலாளர்துறையே முதலாளிகளின் ஏடுபிடி துறையாக செயல்பட்டு தொழிலாளர்களின் போராட்டத்தை நீர்த்துபோக செய்வது. காண்ட்ராக்ட், ட்ரெயினி, நீம், FTE என்ற பெயரில் ஒரிரு ஆண்டுகள் மட்டுமே பணிக்கு அமர்த்தி, தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி தூக்கி வீசிக்கிறது. இனி தொழிலாளர்களுக்கு பணி நிரந்திரம் என்பது இல்லாமல் ஒழித்துக்கட்டுகிறது. இப்படி பல்வேறு வகையில் முதலாளிகளுக்கு சலுகைகளை வழங்குகிறது, தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்குகிறது, ஒன்றிய – மாநில அரசுகள்.
நாம் என்ன செய்வது!
நமது மாநிலத்தில் தொழில் தொடங்க நம்முடைய நிலம் 99 வருடங்களுக்கு தேவை. நம் மக்கள் உருவாக்கிய மின்சாரம் தேவை. நம்முடைய தண்ணீர் தேவை. ஆனால் உள்ளூர் மக்களை வேலைக்கு எடுக்கமாட்டார்கள். வெளி மாவட்ட தொழிலாளிகளை மற்றும் வெளி மாநில தொழிலாளிகளை வேலைக்கு எடுப்பார்கள். அவர்களையும் பணி நிரந்தரம் செய்ய மாட்டார்கள். ஓரிரு வருடங்கள் தொழிலாளியின் உழைப்பை சுரண்டி துரத்தி விடுவார்கள். இது அயோக்கியத்தனம் இல்லையா?
99 வருடங்களுக்கு நிலம் தேவை என்றால் 99 வருடங்கள் கண்டிப்பாக இங்கே தொழில் நடத்துவார்கள். அப்படியானால் தொழிலாளிகளைப் பணி நிரந்தரம் செய்து 58 வயது வரை ஏன் வேலைக்கு அமர்த்துவது இல்லை? திரும்பத் திரும்ப படித்து முடித்து வரும் இளம் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி ஒரிரு வருடங்கள் கழித்து வேலையை விட்டு துரத்தி அடிப்பார்கள். இதுதான் தொழிலாளர்களின் அவல நிலை.
இந்த அரசை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்கள் நாம் தான். ஆனால் நாம் சொல்வதை அரசு கேட்பதில்லை. முதலாளிகள் சொல்வதை அரசு கேட்டு, அவர்களுக்கு ஏற்ப வசதிகளை செய்து கொடுத்து, மக்களின் உரிமைகளை நசுக்குகிறது என்றால், நாம் தேர்ந்தெடுத்த அரசு அது ஒன்றிய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, நமக்கான அரசா? முதலாளிகளுக்கான அரசா? என்பதை தொழிலாளர்களாகிய நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நாம் தான் மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று புதிதாக நடிகர் விஜய் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்பட்டது. இந்த அரசும் ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்ததா என்றால், முதலாளிகளுக்கு ஆதரவாக தான் செயல்படுகிறதே தவிர, தொழிலாளர்களுடைய நிலைமையில் விவசாயிகளுடைய நிலைமையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.
முதலாளிகள் இரண்டு வருடங்கள் தான் நமக்கு வேலை வழங்குவார் என்றால், அதன்படி அதிகாரிகளுக்கும், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர், பிரதமர், அமைச்சர்கள் என அனைவருக்கும் இரண்டு வருடங்கள் மட்டுமே உங்களது பதவி அதன் பிறகு நீங்களும் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும். தொழிலாளிக்கு பொருந்தக்கூடிய விசயம் இவர்களுக்கும் பொருந்த வேண்டும். இப்படிப்பட்ட கேள்விகளை ஆட்சியாளர்கள் அதிகாரிகளை பார்த்து நாம் எழுப்ப வேண்டும். முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ள இந்த அரசுக்கு எதிரான பல்வேறு ஆலைகளில் இருக்ககூடிய தொழிலாளர்கள் அனைவரும் மக்கள் முன்னணி கட்டமைத்து போராடுவதன் மூலமே ஜனநாயகக் கூட்டரசை உருவாக்க முடியும். அதன் மூலமாக நம்முடைய பிரச்சனைகளை தீர்க்க முடியும். நமது உரிமைகளை பெற முடியும்.
- ஆனந்தன்







